Thursday, May 29, 2014

முருகனை விநாயகரின் தம்பி என்றும் சிவனின் மகன் என்றும் சிலர் கூறுவர்



முருகனை விநாயகரின் தம்பி என்றும் சிவனின் மகன் என்றும் சிலர் கூறுவர். உன்மை அதுவல்ல என்பதே சைவத்தின் கொள்கை. உண்மை, அறிவு, இன்பமா...ய் விளங்கும் சிவத்தின் இன்னொரு அருள் வடிவமே தமிழ்க் கடவுள் என்று போற்றப்படும் முருகன். எல்லாவற்றையும் கடந்தும் உள்ளும் இருக்கின்ற சிவம் என்கின்ற பரம்பொருள் தனது சிறப்பு நிலையிலிருந்து பொதுநிலைக்கு உயிர்களுக்கு அருள் புரிவதற்கு எடுத்து வந்த இன்னொரு வடிவமே முருகனின் வடிவம். அச்சிவம் ஓசை வடிவமாக, பிரணவ வடிவமாக, ‘ஓம்’ வடிவமாக வந்தபோது விநாயகர் என்று கூறப்படுகிறது. அதேபோன்று, அச்சிவம் அறிவு வடிவாக, ஒளி வடிவாக வருகின்றபோது அதை முருகன் அல்லது ஞானபண்டிதன் என்கிறோம். எனவேதான் முருகனுக்கு அருவுருவமாக ஆழ்ந்து அகன்று நுண்ணியதாக இருக்கின்ற வேலைச் சமமாகச் சொல்கின்றோம்.
உலகைத் தோற்றுவித்து உயிர்களுக்கு அருள்புரிய இறைவன் முதலில் ஓசையாகவும் பின்பு ஒளியாகவும் தன் திருவருளை வெளிப்படுத்தியதாகச் சைவம் குறிப்பிடும். எனவேதான் ஓசையாக இருக்கின்ற விநாயகர் வடிவத்தை அண்ணன் என்றும் அடுத்து வந்த ஒளிவடிவத்தை முருகனாகக் கூறி தம்பி என்றும் அழைக்கும் வழக்கு வந்தது. முருகனும் சிவமும் வேறு அல்ல என்று பாமர மக்களுக்குப் புராணம் மூலம் கூற வந்ததே கச்சியப்ப முனிவரின் கந்த புராணம். முருகனும் சிவமும் வேறு அல்ல என்பதை, இப்படிக் கூறுவர்.
‘அருவமும் உருவுமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பது ஓர் மேனியாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே
ஒருதிருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய ‘
- கந்தபுராணம்

No comments:

Post a Comment