Thursday, May 29, 2014

சித்ர குப்தரை வணங்குவது எப்படி?

சித்ர குப்தரை வேண்டிப் பெரும்பாலும் பெண்களே விரதம் மேற்கொள்கின்றனர். சித்ரா பவுர்ணமி தினத்தில் இல்லத்தில் மாக்கோலம் போடுவார்கள். அதன் ஒரு பகுதியில் சித்ர குப்தனைப் போலவே கோலம் போடுவார்கள். அருகில் ஏடும் எழுத்தாணியும் வைப்பார்கள். விளக்கு ஏற்றி வைத்துப் பூஜை செய்வார்கள்.

வெண் பொங்கல் இடுவதும் உண்டு. பொங்கலுடன் இனிப்புக் கொழுக்கட்டை, மாங்காய், தட்டப்பயறு கொழம்பு, நீர் மோர், பழங்கள், கண் திறந்த இளநீர், பானகம் இவைகளை வைத்துப் படைப்பார்கள். பலகாரங்களும் செய்து வைக்கலாம். இவைகளை வைத்துப் படைத்து மதியத்திற்கு விரதம் இருப்பவர்கள் இவ்வுணவையே உட்கொள்வார்கள்.

சித்திர புத்திர நாயனார் கதை புராணம் ஆகியவற்றைப் படிப்பார்கள். காலையில் கோவிலுக்குச் சென்று பிள்ளையார், நந்தி, சிவபெருமான் மூன்று தெய்வங்களுக்கும் அர்ச்சனை செய்வார்கள். விரதம் இருப்பவர்கள் காலையில் குளித்தவுடன் பசுவுக்கு வெல்லம் கலந்த பச்சரிசி வைப்பார்கள். ஒருவேளைதான் உணவு உட்கொள்ள வேண்டும்.

சித்திர புத்திர நாயனார் நம் கணக்குகளை வைத்திருக்கும் கணக்குப்பிள்ளை என கருதப்படுகிறார். இவ்விரதத்தால் அவர் மனம் மகிழ்ந்து நம் பாவக் கணக்குகளைக் குறைப்பார். நமக்கு நற்கதி கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். சித்ரா பவுர்ணமியில் சித்ரகுப்தருக்கு விரதம் இருந்தால் விசேஷம்.

அன்று சித்ர குப்தரை தரிசித்து அருள் பெறுவது வெகு சிறப்பாகும். 7 தீபம் ஏற்றி 7 பிரதட்சணம் செய்து வழிபடுவது சிறப்பாகும். மேலும் 200 கிராம் கொள்ளு, 200 கிராம் உளுந்து, 1 மீட்டர் பூ போட்ட பல வர்ண சீட்டி துணி சித்ர குப்தருக்கு சாற்றி அர்ச்சனை செய்து கொள்ளு, உளுந்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் பால் கறக்கும் பசுவிற்கு தானம் கொடுக்க அனைத்து தோஷங்களும் நீங்கும்.

No comments:

Post a Comment