Friday, June 20, 2014

மன்னனைத் தடுமாற வைத்த வழக்கு.

மன்னனைத் தடுமாற வைத்த வழக்கு.

அரியணையில் அமர்ந்திருந்தான் மன்னன். சபை கூடி இருந்தது. வாதிகளாக, அந்தணர்கள் ஒருபுறம். பிரதிவாதியாக எட்டு வயதுச் சிறுவன் மறு புறம். சிறுவனைக் கண்ட மன்னன் யோசனையில் ஆழ்ந்தான்… ‘மழலை மாறா முகத்துடன் விளங்கும் இந்தச் சிறுவனா குற்றவாளி?’

‘‘மன்னா! இந்த அந்தணர்கள், என் தாத்தாவை அடித்துத் துன்புறுத்தியதால், அவர் படுத்த படுக்கையாக இருக்கிறார். முதியவரான அவர் இந்த நிலையில் அரச சபைக்கு வர முடியவில்லை. எனவே, அவர் பேரனாகிய நான் இதற்கு நீதி கேட்டு வந்துள் ளேன்!’’ என்று மிடுக்காகப் பேசினான் சிறுவன்.

மன்னர் முகத்தில் வியப்பு. ‘‘குழந்தாய், நீயும் உன் தாத்தாவும் சேர்ந்து, இந்த அந்தணர்களை அடித்துத் துன்புறுத்தியதாக அல்லவா புகார் வந்துள்ளது?’’ என்று மன்னன் கேட்டான்.

‘‘மன்னா, பொய்! நடந்தது இதுதான். இன்று காலையில் செல்வந்தர் ஒருவரது வீட்டில் நடந்த சமாராதனைக்குப் பின் உணவருந்த தாத்தா மற்றும் சகோதர& சகோதரிகளுடன் நானும் பந்தியில் அமர்ந்தேன். அப்போது இந்த அந்தணர்கள் எங்களை அடித்துத் துன்புறுத்தினர். தாத்தா மயங்கிக் கீழே விழுந்தார். எங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக நான் தடியால் இவர்களைத் தாக்கி னேன்!’’

மன்னன், ‘‘அந்தணர்களே… இவன் சொல்வது உண்மையா? சாப்பிட அமர்ந்தவர்களைத் துன்புறுத் தியது மாபெரும் குற்றம் அல்லவா?’’ என்று கேட் டான்.

‘‘மன்னா! அவர்களை அடித்தது உண்மைதான். இவர்கள் சமபந்தி போஜனத்துக்குத் தகுதியற்றவர்கள்! இவன் தந்தை விடோபா, துறவறம் பூண்டவன். துறவிக் கோலத்தில் ஆசாரம் கெட்டுப் பலரது வீட்டிலும் உணவு உண்டவன். அதனாலேயேதான் பந்தியிலிருந்து அவர்களை வெளியேற்றினோம்!’’

சிறுவன் துடித்துப் போனான். ‘‘மன்னா, இவர்கள் வேதத்தின் பொருள் புரியாமல் பேசுகிறார்கள்! ‘பவதி பிக்ஷ£ம்தேஹி’ என்று உஞ்சவிருத்தி எடுத்து உண்ணும் ஒரு சந்நியாசியைப் பந்தியில் அமர வைத்து, அவருடன் உணவு உண்பது உத்தமம் என்கிறது வேதம். என் தந்தை ஒரு பிரம்ம ஞானி! ஸ்ரீபாத சுவாமிகளிடம் தீட்சை பெற்ற அவர், பின்னர் அவரது ஆணைப்படி இல்லறம் மேற்கொண்டார். ஞானியான அவரை இல்லற வாழ்வு மாற்றி விடுமா என்ன? சந்நியாசி, சம்சாரி ஆகக் கூடாது என்று எந்த வேதத்தில் சொல்லி இருக்கிறது?

பல ஆண்டுகள் சந்நியாசியாகத் திரிந்த கும்பயோகீசர் அரசகுமாரியை மணம் புரியவில்லையா? கலைக்கோட்டு முனிவர் துறவறத்தைத் துறந்து மணம் புரியவில்லையா? வசிஷ்டர், அருந்ததியை மணம் புரியவில்லையா? மச்சகந்தி வயிற்றில் வியாசர் பிறக்கவில்லையா? பிறப்பு, உயர்வு தருமா… ஞானம், உயர்வு தருமா? கூறுங்கள் பெரி யோர்களே!’’ _ பளிச் பளிச்சென்ற சிறுவனின் வார்த்தைகளைக் கேட்டு மெய்ம்மறந்தனர் மன்ன னும் அவையோரும்.

‘‘குழந்தாய், உன் வார்த்தைகள் நியாயமே! அந்தணர்களே, உண்ண உட்கார்ந்தவர்களை எழுப்புவது பாவம். அதர்மம். அமைச்சரே! இவர்களை உடனே வெளியேற்றுங்கள்!’’ என்று ஆணையிட்ட மன்னன், சிறுவனை வாஞ்சையுடன் வாரியணைத்தான்.

துணிச்சலும் ஞானமும் மிக்க அந்தச் சிறுவனே, பின்னாளில் ஸ்ரீஞானேஸ்வரர் என்ற மகானாகப் போற்றப்பட்டவர்! அவரையும், அவரது நூலான ஞானேஸ்வரியைப் பற்றியும் அறியாதோர் மகாராஷ்டிர மாநிலத்தில் இல்லை! பத்தாயிரம் குறட்பாக்கள் கொண்ட இந்த நூல், பகவத் கீதையை ஒட்டி எழுதப்பட்டது. இது தவிர, 28 அபங்கங்கள் கொண்ட ஹரிபாட் எனும் ஞான நூலையும், அம்குதானுபவ எனும் அத்வைத சித்தாந்த காவியத்தையும் அவர் எழுதியுள்ளார்.

பூவுலகில் ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சமாக அவதரித்த இந்த மகான், மக்களிடையே பக்தி& ஞான& கர்ம மார்க்கங்களை போதித்தார். பட்டினத் தடிகளைப் போலவே இவரும் தியான நிலையில் மகா சமாதி அடைந்தார்.

பூனா நகருக்கு அருகில் ‘தேவானா ஆனந்தி’ என்ற இடத்தில் இவரது சமாதி அமைந்துள்ளது. மகா ராஷ்டிர மக்கள் இந்தச் சந்நிதியில் திருமணங்கள் மற்றும் உபநயனங்களை ஒரு பிரார்த்தனையாகவே நடத்துகின்றனர்.

No comments:

Post a Comment