Monday, June 16, 2014

ஹரி கதை கேளுங்கள்'

கங்கை பாயும் காசி அருகிலுள்ள சத்தியவிரதம் கிராமத்தில், பிருஹத்தபா என்ற தவசி தினமும் ஹரிகதை (தெய்வகதைகள்) சொல்வது வழக்கம். புண்ணிய தாமா என்பவர் ஒருநாளும் தவறாமல் வந்து விடுவார். பகலில் அதிதியாக வீடு தேடி வரும் விருந்தினருக்கு அன்னம் இடுவதும், மாலையில் ஹரிகதை கேட்பதும் தான் அவரின் அன்றாடப்பணி. வேறு சிந்தனையே இல்லாத அவர், சத்தியவிரதம் கிராமத்தில் இருந்து, நான்கு மைல் தூரத்தில் இருக்கும் கங்கை நதியில் கூட நீராடியதில்லை.
ஒருநாள் கங்கையில் நீராட வந்த இருவர், புண்ணியதாமாவின் வீட்டிற்கு வந்தனர்.
அவர்களை உபசரித்த தாமாவிடம், ""சுவாமி! இங்கிருந்து எவ்வளவு தூரம் போனால் கங்கை நதி வரும்?'' என கேட்டார்.
யோசித்த தாமா, ""நூறு ஆண்டுகளாக இந்த ஊரில் வாழ்ந்தும், உண்மையில் கங்கை எவ்வளவு தூரத்தில் ஓடுகிறது என்பதை நான் பார்த்ததில்லை. ஏனென்றால் ஒருமுறை கூட கங்கையில் நீராடியதில்லை. நாலு மைல் தூரத்தில் கங்கை ஓடுவதாக ஊரார் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்!''என்று பதிலளித்தார்.
இதைக் கேட்ட விருந்தினர்கள் முகம் சுளித்து,""கங்கையில் நீராடாத உம்மைப் போல ஒரு பாவியை பார்க்க முடியாது. இங்கு சாப்பிட்டதே பாவம். ஆயிரம் மைலுக்கு அப்பால் இருந்து கூட "கங்கா' என்று சொன்னாலே பாவம் தீரும் என்பார்கள். நீரோ பக்கத்தில் இருந்தும் ஒருநாள் கூட நீராடாமல் இருப்பது மதியீனம்!'' என்று சொல்லி புறப்பட்டனர்.
செல்லும் வழியில், ""பாவியான புண்ணியதாமாவின் வீட்டில் சாப்பிட்ட பாவமும் தீர கங்கையிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்'' என்று பேசிக் கொண்டனர். கங்கையை அடைந்தனர். அந்த நதியோ பாலை நிலம் போல காட்சியளித்தது. சொட்டுத் தண்ணீர் இல்லை.
என்ன ஆனதென்றே அவர்களுக்குப் புலப்படவில்லை.
"ஏதோ தவறு செய்து விட்டோம்' என மனதிற்குள் உறுத்தியது.
""அம்மா! கங்கா! இது என்ன சோதனை. நாங்கள் செய்த தவறு என்ன என்பதை உணரச் செய்வாயம்மா!'' என்று வேண்டினர்.
அவர்களின் முன் கங்கை காட்சியளித்தாள்.
""பாக்கியசாலியான புண்ணியதாமாவை நிந்தித்த நீங்கள் மகாபாவியாகி விட்டீர்கள். அவரின் புனிதமான பாதம் என் மீது என்று படும் என நான் ஒவ்வொரு நாளும் காத்துக் கொண்டிருக்கிறேன். முன்பின் தெரியாத விருந்தினர்களுக்கு உணவிடுவதையும், ஹரிகதை கேட்பதையும் விட புண்ணியம் உலகில் வேறில்லை. அதன் மூலம் எல்லா புனித நதிகளிலும் நீராடிய புண்ணியம் ஒருவருக்கு உண்டாகும். புண்ணிய தாமாவின் மனதை புண்படுத்திய நீங்கள் இருவரும், அவரிடம் மன்னிப்பு கோரும் வரை உங்கள் கண்களுக்கு தெரிய மாட்டேன்'' என்று விளக்கம் அளித்தாள்.
இருவரும் புண்ணியதாமாவை தேடிச் சென்று காலில் விழுந்தனர். மன்னிக்கும் படி அழுதனர்.
புண்ணிய தாமா அவர்களை மன்னித்ததோடு, "ஹரி கதை கேளுங்கள்' என்று சொல்லி பிருஹத்தபாவிடம் அழைத்துச் சென்றார். அவர்களும் இரண்டு ஆண்டுகள் தங்கி ஹரிகதை கேட்டு பிராயச்சித்தம் தேடினர். பிறகு புண்ணியதாமாவுடன் கங்கையில்
நீராட வந்தனர். புண்ணியதாமாவின் வரவைக் கண்டு மகிழ்ந்த கங்கை பெருக்கெடுத்து ஓடினாள்

No comments:

Post a Comment