Wednesday, June 25, 2014

எள் தானம் வாங்குபவர், கொடுப்பவரைப் பார்க்கக்கூடாது என்பது சாஸ்திரம்

சொந்த உழைப்பினால் கிடைக்கும்

ராவண சம்ஹாரம் முடிந்து, ஸ்ரீராம பட்டாபிஷேகம் நடக்கும் நேரம்... அப்போது, 'பீடைகள் நீங்கட்டும்' என்பதற்காகச் செய்யப்படும், 'பீடா பரிஹார தானம்' செய்ய, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், 'தில தானம்' எனப்படும், எள்தானமும் ஒன்று. விவரம் அறிந்தவர்கள், அத்தானத்தை வாங்க மாட்டார்கள்.
மிகவும் தரித்திர நிலையில் இருப்பவர்களும், பண்பாட்டை உதாசீனம் செய்பவர்களும் தான், இத்தானத்தை வாங்குவர். அதனால், அத்தானத்தை வாங்க வைப்பதற்காக, 'எள்ளைக் கையேந்தி வாங்க முன்வருவோருக்கு, ஒரு தங்க கட்டி வழங்கப்படும்...' என, அறிவித்தார் வசிஷ்டர். அப்போதும் யாரும் வரவில்லை.
சில காலம் ஆயிற்று; அயோத்தி எல்லையில், உயர்ந்த தவசீலரான சிங்கார முனி என்பவர், தன் மனைவியுடன் வசித்து வந்தார். இவர்கள் மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து வந்ததால், அவரின் மனைவி, எள் தானத்தை வாங்க தூண்டினாள்.
முனிவரோ, 'பெண்ணே... தங்கத்தின் மீது ஆசைப்பட்டு, அத்தானத்தை நான் வாங்கினால், என் தவம் முழுவதும் போய் விடும்....' என்று கூறி மறுத்தார்.

அதற்கு அவர் மனைவி, 'ஏன் கவலைப் படுகிறீர்... தானம் வாங்கியவுடன், அதைக் கொடுக்கும், ஸ்ரீ ராமரை உடனே நிமிர்ந்து பார்த்து விடுங்கள்; தோஷம் ஒன்றும் ஏற்படாது...' என்றாள். இதனால், மனச் சமாதானம் அடைந்த சிங்கார முனி, தானம் வாங்க அரண்மனைக்கு வந்தார். இந்த விவரத்தை அறிந்த வசிஷ்டர், சிங்கார முனி தானம் வாங்கியதும், ஸ்ரீராமரைப் பார்க்க முடியாதவாறு, திரை போட்டு மறைத்து விட்டார்.

எள் தானம் வாங்குபவர், கொடுப்பவரைப் பார்க்கக்கூடாது என்பது சாஸ்திரம்; அதனால் தான், வசிஷ்டர் அவ்வாறு செய்தார்.
தானம் வாங்கிய சிங்கார முனி, தன் எண்ணம் ஈடேறாமல், தவத்தையும், ஞான ஒளியையும் இழந்து, வீடு திரும்பினார்.

நடந்ததை அறிந்த அவரின் மனைவி, 'கவலைப்படாதீர்கள்...விழாவின் கடைசி நாளன்று, ஸ்ரீராமர் ஊர்வலம் வருவார். நம் குடிலின் அருகில் தான் ஊர்வலம் திரும்பும். அப்போது நீங்கள், இங்கேயே ஸ்ரீராம தரிசனம் செய்யுங்கள்; பாவம் போய், இழந்த தவ வலிமையை பெற்று விடுவீர்கள்...' என்றாள்.

சிங்கார முனியும் அப்படியே செய்து, தன் பாவத்தைத் தீர்த்துக் கொண்டார். அரண்மனையில் இருந்து வந்த தங்கத்தை, அதன் பின், அவர் தொடவே இல்லை.

சொந்த உழைப்பினால் கிடைக்கும் செல்வமே நிலைத்து நிற்பதுடன், 

மனதிற்கு சந்தோஷத்தையும் தரும். 

No comments:

Post a Comment