Monday, July 28, 2014

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 21 --25

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 21

இலங்கையை விட்டுக் கிளம்பும் முன் ராமர், சீதைக்கு லங்காபுரியை சுற்றிக்காட்டுகிறார்.

""சீதா! இந்த இடத்தில் தான் கும்பகர்ணன் அழிந்தான், இங்கு தான் ராவணனைக் கொன்றேன், இங்கே தான், இந்திரஜித்தைலட்சுமணன் முடித்தான்...'' என்றவர், ""சரி...இந்த லங்கையை ஒருமுறை உன் கண்களால் பார்,'' என்றார்.

""அதைத்தானே இத்தனை நாளும் செய்து கொண்டிருந்தேன். இவ்வளவு காலமும் இங்கே தானே இருந்தேன்,'' என்றாள் பிராட்டி.

""நீ இங்கே இருந்ததும் உண்மை, பார்த்ததும் உண்மை. ஆனால், அது கோபப்பார்வை. இப்போது குளிரப் பார். ஏனெனில், நம் பிள்ளை விபீஷணன், இனி இந்த தேசத்தை ஆளப்போகிறான். உன் கடாட்சம் இருந்தால் தான், அவனால் சிறப்பாக ராஜ்யத்தை நடத்த முடியும்,'' என்றார்.

உடனே பிராட்டி, தனது மனதிலுள்ள மங்கள எண்ணங்களையெல்லாம் ஒன்றுசேர்த்து, லங்கையை குளிரக் கடாட்சித்தாள் என்கிறது வால்மீகி ராமாயணம்.

சுக்ரீவன் விஷயத்தில், பிராட்டி கடாட்சித்தது போலவே தெரியவில்லையே என்று சந்தேகப் படுவோர் உண்டு. இந்த சந்தேகம் பிராட்டிக்கே வந்து விட்டதாம். அவள் அனுமானிடம், ""குரங்குகளுக்கும் மனுஷர்களுக்கும் எப்படி நட்பு ஏற்பட்டது?'' என்று கேட்டாளாம். அதாவது, தனது அனுக்கிரகம் இல்லாமல், ராமபிரானின் அனுக்கிரகத்தை அவர்கள் எப்படி பெற்றார்கள் என்பது அவளது சந்தேகத்திற்கான காரணம்.

அனுமான் சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

""தாயே! தங்கள் அனுக்கிரகம் இல்லாமல், நாங்கள் எப்படி பெருமானின் கடாட்சத்தை அடைய முடியும். தாங்கள், ராவணனால் ஆகாச மார்க்கமாக கடத்தப்பட்ட போது, உங்கள் ஆபரணங்களை மூடையாகக் கட்டி கீழே போட்டீர்கள் இல்லையா? நாங்கள் ரிஷ்யசிருங்க மலையில் இருந்த போது, எங்கள் கையில் தானே அவை கிடைத்தன. அந்த ஆபரணங்கள் வழியாக தங்கள் கடாட்சம் கிடைத்த பிறகு தானே, ராமபிரானின் அனுக்கிகரம் கிடைத்தது. தங்கள் சம்பந்தமின்றி, அவர் அனுக்கிரகம் எங்களுக்கு எப்படி கிடைக்க முடியும்?'' என்று பதிலளித்தார். சீதாபிராட்டி கடத்தப்பட்டதில் இன்னொரு ஆனந்தமான விஷயம்.

எல்லாரும் ராமனைச் சரணடைந்தார்கள். ஒரு ராட்சதனையும் சரணாகதம் ஆக்கத்தான் ராமனே லங்கை வந்தார். அதற்காகத் தான் சீதாபிராட்டியும் லங்கை சென்றதே!

பிள்ளை லோகாச்சாரியார் என்ன சாதிக்கிறார் (சொல்கிறார்) தெரியுமா? பிராட்டியின் சக்தி என்னவென்று தெரியாதவர்கள் தான், ராவண பலாத்காரத்தால் தான், சீதாபிராட்டி கடத்தப்பட்டாள் என நினைப்பார்கள். ஆனால், ராட்சதனையும் சரணாகதி அடையச்செய்ய, சீதாபிராட்டி உருவாக்கிக் கொண்ட சந்தர்ப்பமே அது,'' என்கிறார்.

பிராட்டியின் சக்தி அபரிமிதமானது. அவள் தான் ராவணனையும் கட்டி தூக்கிச்சென்றாளே தவிர, அவன் அவளைத் தூக்கிச் செல்லவில்லை. அவள் ஏன் சிறைப்பட்டாள்? தான் உள்ளே போனால் தான் மற்றவர்களுடைய சிறையை அறுத்து விட முடியும் என்பதால் தான்! அவள் சிறைப்பட்டால் தான், தேவஸ்திரீகளின் சிறையை வெட்டி விட முடியும்! அது மட்டுமா! சம்சாரிகள் இந்த ராவணனால் படும் துன்பத்தில் இருந்து தீர்த்து விட முடியும். அதற்காகத்தான் சீதை வலியப் போனாள். 

ஒருவன் கிணற்றில் விழுந்து விட்டான். அவனைத் தூக்கிவிட, ஓரளவு ஆழத்துக்கு வேண்டுமானால் கயிறைக் கட்டி தூக்க முயற்சிக்கலாம். ஆழம் அதிகமென்றால், உள்ளே குதித்து தான், கிணற்றுக்குள் கிடப்பவனை மீட்டு வர முடியும். சீதாதேவி அதைத் தான் செய்தாள். அவளைப் பற்றினால் தான் பிறகு அவனைப் பற்ற முடியும்.

பெருமானின் குணங்கள் பல. அதை எண்ணி முடிக்க முடியாது. அவரது கல்யாண குணங்கள் பற்றி, நான் ஒன்றரை மணி நேரம் பேசுகிறேன் என்றால், அவரது குணங்கள் அவ்வளவு தான் என்றில்லை. அவரது குணங்கள் பற்றி என் நாக்கிற்கு அந்தளவு தான் பேசும் சக்தி இருக்கிறது! நம்மாழ்வார் பெருமானைப் பற்றி 1202 பாடல்கள் பாடினார். அதற்காக அவர் பாடிய அளவுக்கு தான் அவரது குணங்கள் என்றில்லை! அவருக்கு அந்தளவு தான் சக்திஇருக்கிறது.

பெருமாளை "பராபரன்' என்பார்கள். "பர' என்றால் "மேன்மைக்கெல்லாம் எல்லை'. "அபர' என்றால் "எளிமைக்கெல்லாம் எல்லை'. அவரது குணங்களை மேன்மை, எளிமை என்று இரண்டு கோஷ்டிகளாகப் பிரிக்கலாம். ஆனால், இதில் "பரத்வம்' எனப்படும் மேன்மை குணம் தான் அவரிடம் அநேகமாக பிரகாசிக்கும். 

எளிமையை அவரது ஸ்வாதந்திரமும் (சுதந்திரம்) கோபமும் அநேகமாக மூடியிருக்கும். இதை "நெருப்பு கிளர்ந்தாற் போல்' என்பர். 

தணல் "தக தக' என எரியும். ஆனால், மேலே சாம்பல் மூடியிருக்கும். சாம்பலைத் தட்டினால் தான் தணலின் தகதகப்பு தெரியும். அதுபோல, பெருமாளிடம் நிறைய குணங்கள் உண்டு. பக்தனை ரட்சிக்க அபரிமிதமான குணங்கள் உண்டு. ஆனால், அது சாம்பல் மூடிய தணல் போல காணப்படும். 
தாய்மார்களிடம் கேட்டால் தெரியும். சின்னகோலைவைத்து சாம்பலைத் தட்டினால் தணலின் தகதகப்பைத் தெரிந்து கொள்ளலாம். (இப்போது இது மாதிரி தணல் விஷயங்கள், நம் ஸ்திரீகளுக்கு தெரியுமா தெரியாதா என்று கேட்டு விட வேண்டாம்).

பெரியவர்கள் தங்கள் நாளில் பார்த்ததை வைத்து தான் இதையெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். பிராட்டி அந்த சாம்பலைத் தட்டுகிறாள். உடனே பெருமானின் கல்யாண குணங்கள் பொத்துக்கொண்டு வெளியே கிளம்புகின்றன. இதுவரையும் நீங்கள் பெருமானைச் சேவித்தீர்கள். பிராட்டியை சேவித்தபிறகு பெருமானிடம் போனால், இன்னும் அதிகமாக அவரது குணம் பிரகாசிக்கும். "மாமாயன் மாதவன் வைகுந்தன்' என்று பாடுகிறாள் ஆண்டாள். இதில் மாமாயனும் வைகுந்தனும் பெருமாள். நடுவில் இருக்கும் மாதவத்துவமே பிராட்டி. 

அதனால் தான், இதை நடுவில் போட்டு எழுதினாள் ஆண்டாள். பிராட்டியின் சம்பந்தம் இருந்தால் தான் அவனே மாமாயன், வைகுந்தனாக முடியும். 





ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 22

அயோத்தியில் வாழ்ந்த காலத்தில் ராமனிடம் சீதை பேசியதே இல்லை. இதழோரம் சிறுபுன்னகை மட்டுமே செய்வாள். தசரதரின் 360 மனைவியரும் அரண்மனையில் இருந்ததால், சீதைக்கு மாமியார்கள் பயம். அதனால், ராமனிடம் கூட பேச மாட்டாள். ஆனால், காட்டிற்குச் சென்றதும், ராமனிடம் கலகலப்பாகப் பேசி சிரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. விளையாட்டே போட்டியாக மாறியது. யார் முதலில் கோதாவரி நதியில் நீந்தி கரையை தொடுகிறார்கள் என்பது தான் போட்டி. நடுவராக லட்சுமணன், நதிக்கரையில் இருந்த பாறையில் அமர்ந்து கொண்டார். ராமன் கணப்பொழுதில் கரையை தொட்டுவிட வந்து விட்டார். 

இருந்தாலும், தொடுவதற்குள் சீதையைத் திரும்பிப் பார்த்தார். சீதை ஆரம்பித்த இடத்திலேயே நீந்திக் கொண்டிருந்தாள். ராமன் மனைவி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மூச்சடக்கி தண்ணீருக்குள் தலையை மறைத்துக் கொண்டார். சீதையும் அக்கரையைத் தொட்டு விட்டு மீண்டும் கரைசேர்ந்தாள். 

லட்சுமணனிடம், ""பார்த்தாயா? உன் அண்ணனை! இது தான் வசிஷ்டரிடம் கற்ற லட்சணமா?'' என்று கேலி செய்தாள். ஆனால், ராமனுக்கோ மனைவியிடம் தோற்றுப் போனதில் அவ்வளவு சந்தோஷம். இந்த விஷயத்தை சீதையைப் பிரிந்த நேரத்தில் ராமன் எண்ணிப் பார்க்கிறான். அதாவது, பிராட்டி சம்பந்தம் இல்லாமல் அவன் இல்லை. ராமபட்டாபிஷேக நேரத்திலும், வசிஷ்டர் அதை சாதாரண ராஜ பட்டாபிஷேகமாகக் காணவில்லை. 

"கல்யாண குண சாம்ராஜ்ய பட்டாபிஷேகம்' என்று சொன்னார். அதனால் தான், சீதையை ராமனின் அருகில் இருக்கச் செய்தார். ராமனுக்கும் அப்படித்தான்..அயோத்தி என்பது அவனுக்கு சிறிய வஸ்து. பக்கத்தில் சீதை இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அவன் குணத்தையே காட்டுகிறான்.
வாலி வதம் விஷயத்திலும் இதை நாம் கண்கூடாகக் காணலாம். ராமபாணம் பட்டு வாலி அடிபட்டு விழுந்ததும், ""ராமா...இம்மைக்கு மட்டுமல்ல, ஏழ்பிறப்புக்கும் ராம என்ற மந்திரமே உயர்ந்தது என்கிறார்கள். இத்தனை பெருமை பெற்ற நீ, என்னை மறைந்திருந்து கொன்றாய். இதன்மூலம், நீ என்னைக் கொன்றதாக நினைக்காதே. இக்ஷ்வாகு குலத்தின் பெருமையைக் கொன்றிருக்கிறாய். சக்கரவர்த்தி தசரதரின் பெருமையைக் கொன்றிருக்கிறாய்,'' என்று கடுமையாகச் சொன்னான்.
ராமன் அவனுக்கு பல சமாதானங்களைச் சொன்னார். ஆனால், வாலி அவற்றை ஏற்க மறுத்துவிட்டான்.
""நீ என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்கமாட்டேன். ஆனால், நீ இவ்வாறு செய்ததற்கான காரணம் எனக்குத் தெரியும். சீதையைப் பிரிந்த பிறகு, நீ என்ன செய்கிறாய் என்பது உனக்கே தெரியவில்லை. ஆவியாய் வந்த சீதையை (உன் உயிர் போன்ற சீதையை) அமிழ்தம் போன்ற சீதையை, ஜனகன் பெற்ற அன்னமாகிய சீதையை நீ பிரிந்த பிறகு, நீ திகைத்துப் போய் இருக்கிறாய்! என்ன செய்கிறாய் என்பது உனக்கே தெரியவில்லை. அதனால் தான் இப்படி செய்தாயோ?'' என்று பதில் சொல்கிறான்.
உண்மையும் அதுதான். 

பிராட்டியைப் பிரிந்தது முதல், தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே ராமன் தப்பு செய்தார். அப்படி தப்பு தப்பாக செய்ததில் ஒரு தப்பு தான் மறைந்து நின்று வாலியைக் கொன்றது. 
சரி...வாலி சொல்லித்தான் நமக்கெல்லாம் இந்த உண்மை தெரிய வேண்டுமா! ராமனே இதை ஒத்துக்கொண்டிருக்கலாமே! சீதையைப் பிரிந்து குழம்பியிருக்கும் நேரத்தில் இந்தக்குழப்பம் நேர்ந்து விட்டதாகச் சொல்லியிருக்கலாமே என்றால் அதற்கும் காரணம் இருக்கிறது.

பத்தினி பிறந்த வீடு போயிருக்கிறாய் பர்த்தா என்ன செய்கிறான்? பால்காரன் யார் என்று கூட அவனுக்கு தெரியாது என்றாலும், அதை அவன் ஒத்துக்கொள்வானா? அதுபோலத்தான் இதுவும்! நாம் சின்ன விஷயத்தில் மயங்குகிறோம். பகவான் சரணாகதம் செய்யும் விஷயத்தில் மயங்கிப் போகிறான். இதிலிருந்தே புரியவில்லையா! பிராட்டி தான், அவனது மயக்கத்தைத் தீர்த்து வைக்கிறாள் என்று! ஆகவே, அவள் அருகாமையில் இருந்தால் தான், ராமன் எதையும் செய்வான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மாமல்லபுரத்தில் திருவிடந்தை வராகப்பெருமான் கோயில் இருக்கிறது. இவர் மீது திருமங்கையாழ்வார் நாயகி பாவத்தில் (தன்னை இறைவனின் காதலியாக நினைத்தல்) பாசுரம் பாடுகிறார். இந்தப் பெருமான் மீது அவருக்கு காதல். என்னை ஏற்றுக்கொள் என்கிறார். இதை ஆழ்வாரின் தாயார் கேட்கிறாள்.

""மகனே! அந்தப் பெருமானுக்கு திருமணம் ஆகிவிட்டதென்ற விஷயம் உனக்குத் தெரியாதா? எற்கனவே, திருமணமான ஒருவன், உன்னை எப்படி ஏற்பான்? நீ வேண்டுமானால் திருவிடந்தை போய் பார். அவன் தாயாருடன் சேவை சாதிப்பான். இடதுமடியிலே தாயார் வீற்றிருப்பாள், நன்றாகப் போய்பார்த்து வா,'' என்றாள்.

திருமங்கையாழ்வாரும் திருவிடவிந்தை வந்தார். பெருமாளை சேவித்தார். அர்ச்சகரிடம் "தாயார் இங்கே இருக்கிறாளா?' என்றார்.

""ஆம்...பெருமாள் தாயாருடன் தான் சேவை சாதிக்கிறார். அவரது இடதுமடியிலே வீற்றிருப்பதை தாங்கள் சேவிக்கலாமே!'' என்று பதில் சொன்னார் அர்ச்சகர்.

அவசரமாக வீடு திரும்பினார் திருமங்கையாழ்வார்.

அம்மாவிடம் போனார். 

""நான் அந்தப் பெருமானை இப்போது முன்பை விடத் தீவிரமாக இரண்டு மடங்கு காதலிக்கிறேன்,'' என்றார். 

""என்னடா இது! இவன் அனர்த்தமாகப் பேசுகிறானே! தாயாருடன் பெருமாளைப் பார்த்து வா! அவன் ஏற்கனவே திருமணமானவன் என்று சொல்லி அனுப்பினால், தாயாருடன் சேவித்த பிறகும், இப்படி பேசுகிறானே!'' என்று தவித்த வேளையில், ""பிராட்டியின் கடாட்சம் இருந்தால் தானே அவனையே அடைய முடியும் என்ற அர்த்தத்தில் அவர் சொன்னது அந்த தாய்க்கு தெரியவந்தது. அலைகடலைக் கடைந்த போது வெளிவந்த சாதாரண அமுதத்தை பெருமான் தேவர்களுக்கு கொடுத்து விட்டார். ஆனால், நிஜமான அமுதமான பிராட்டியை ஏற்றார். அவள் அன்று அவர் மார்பில் ஏறி அமர்ந்தது தான்! இன்றுவரை அவரோடு இருக்கிறாள். எனவே பிராட்டியால் மட்டுமல்ல! நாம் எல்லாருமே பெருமானை ஆலிங்கனம் (தழுவுதல்) செய்து ஆனந்தமாக இருக்க முடியும். அதாவது, அவனை அடைய முடியும். அதற்கு அவனை சரணாகதி அடைய வேண்டும்







ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 23

ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளிடம் பிராட்டி, ""ஸ்வாமி! தெற்கு நோக்கி ஏன் சயனத்திருக்கிறீர்கள்?'' என்று கேட்டாள். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின் பிராட்டிக்கு ஏன் இந்த சந்தேகம் என்று பெருமாளுக்கு ஆச்சரியம். 

""விபீஷணனோடு நாம் இலங்கைக்கு சென்றிருக்க வேண்டும்,'' என்றார் அவர். பெருமாள் வீபிஷணனுக்காக தெற்கு நோக்கி சயனம் கொண்டிருப்பதாக பெரியாழ்வார் பாசுரத்தில் கூறுகிறார். ஆனால், "இதெல்லாம் கட்டுக்கதை' என்கிறார் வேதாந்த தேசிகன்.

""கோதைநாச்சியாரான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளைக் காணவே பெருமாள் தெற்கு நோக்கி சயனம் கொண்டிருக்கிறார். பெருமாளுக்கு பெண் கொடுத்த மாமனாரான பெரியாழ்வாருக்கு இந்த உண்மையைச் சொல்ல வெட்கம். அதனால், சொல்ல மறுத்து விட்டார்,'' என்கிறார்.

""ரங்கநாதரை கண்குளிர தரிசித்து விட்டபின், எப்படி உங்களால் "போயிட்டு வர்ரேன்' என்று சொல்லி விட்டு கிளம்ப முடிகிறது. ரங்கனை சேவித்தால் அங்கேயே இருந்து விட வேண்டும்,'' என்பதே ஆழ்வார்களின் முடிவு.

""என்னை அவமானப்படுத்தியவன் விபீஷணன். அவனுக்காகவா சயனத்திருக்கிறீர்?'' என்று கேட்கிறாள் பிராட்டி. பெருமாளும் வியப்புடன், ""உம்மை யார் அவமானப்படுத்தியது?'' என்றார்.

அவரைப் பார்த்து தாயார், "" வானுலகில் பிரம்மா, குபேரன், இந்திரன் போன்றவர்கள் எல்லாம் என் தயவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ஆனால், நான் யாரும் கூப்பிடாமலே இலங்கைக்குப் போனேன். ஆனால், விபீஷணனோ ராவணனிடம், ""ராம பாணம் இலங்கையில் இருக்கும் ராட்சஷர்கள் அனைவரையும் அழித்துவிடும். சீதை இங்கு வந்ததிலிருந்து இங்கு ரத்த ஆறு ஓடுகிறது. நரி ஊளையிடுகிறது. கொள்ளிக்கட்டைகள் கீழே விழுகிறது. இவளுக்கும் மங்கலத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று என்னைப் பழித்தவன் அவன். அவனுக்காக தெற்கு நோக்கி சயனத்திருக்கிறீரே?'' என்றாள்.

இந்த உரையாடல் வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது. 

""விபீஷணன் நல்லதுக்காக ஒன்றைச் சொல்வானே தவிர, தீமைக்காக எதுவும் சொல்ல மாட்டான். அப்படி சொல்லி இருந்தாலும், அதுவும் நன்மை கருதித் தான்,'' என்றார் பெருமாள்.

பிராட்டிக்கு பெருமாளின் பதிலைக் கேட்டு ஒரே ஆனந்தம். பிராட்டியின் நோக்கமும், விபீஷணன் மீது குறை சொல்வது அல்ல.

வீடு கட்டும் பெரிய கொத்தனார் போல பிராட்டி இங்கு செயல்படுகிறாள். கட்டிடம் கட்டும்போது, கட்டுமானம் உறுதியாக இருக்கிறதா? என்று அவ்வப்போது அவர் சோதித்துப் பார்ப்பார். பக்தர்களுக்காக பெருமாளை அவள் சோதித்துப் பார்க்கிறாள். அவர்கள் பெருமாளிடம் நிலையாக சேர்ந்து விட்டார்களா என்று சோதிக்கிறாள். இதுவும் அவளுடைய புருஷகாரம் என்னும் கருணையே. 

பிராட்டி கருணையே உருவான கடலாக விளங்குகிறாள். நம் குற்றத்தை அவள் ஒருபோதும் பொருட்படுத்தவில்லை. நம்மை பெருமாளோடு சேர்த்து வைப்பதே அவளுடைய லட்சியம். பிராட்டி என்னும் கருணைக் கடலில், நாம் இன்னும் பிராயாணம் செய்யவில்லை. ""இதோ கடல்! என்று கரையில் நின்று பார்த்து ஆனந்திக்கிறோம்! அவ்வளவு தான். அவளின் வைபவத்தைக் கண்டு பெருமாளே ஆனந்தப்படுகிறார். தயாசதகத்தில் வேதாந்ததேசிகன் பிராட்டியின் கருணையை வியந்து பாடியுள்ளார். 

""திருவேங்கடமுடையானுக்கு ஞானம், பலம், ஐஸ்வர்யம் என எத்தனையோ நல்ல குணங்கள் இருக்கின்றன. ஆனால், பிராட்டியின் தயை அவருடன் சேராவிட்டால், அத்தனையும் தோஷமாகி விடும். பிராட்டியின் சம்பந்தத்தால் தான் பெருமாளுக்கே ஏற்றம் உண்டானது. அதனால் தான் பிராட்டியை லட்சுமி, மாதா என்றெல்லாம் போற்றி வணங்குகிறோம்,'' என்கிறார் தேசிகன். 

அவளது கருணையைப் பெற ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்ய வேண்டியதில்லை. தெருவில் செல்லும்போது, தாயார் சந்நிதியைப் பார்த்து, கீழே கிடக்கும் கைகளை உயர்த்தி, ""தாயே வணக்கம்'' என்று கைகூப்பினால் போதும். அவள் நம்மை தலையாலேயே சுமக்கத் தயாராகி விடுவாள்.

காஞ்சிபுரம் தேவபெருமாள் அபயஹஸ்தத்தோடு(மேல்நோக்கிய கரம்) காட்சி தருகிறார். ஆனால், அவரை வரதன் என்று அழைக்கிறோம். அவருக்கு ஏன் அப்படி பெயர் வந்தது? ஊருக்குள் பேரும் புகழும் மிக்க பிராமணர் ஒருவர் இருக்கிறார். அவர் ஆற்றில் நீராடுகிறார். அவர் மார்பில் அணிந்திருக்கும் யக்ஞோபவிதம்(பூணூல்) காணாமல் போனது. ஊரில் பார்ப்பவர்கள் அவரை பிராமணர் கிடையாது என்று மறுத்து விடுவார்களா என்ன? அதுபோலத்தான், தேவபெருமாள் அபய ஹஸ்தம் காட்டினாலும், பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை வாரி வழங்குவதால், வரதப்பெருமாள் என்றே அழைக்கப்படுகிறார். அப்படி வாரி வழங்கும் பெருமாளுக்கு, பாவாத்மாவான நம்மைக் கண்டால் சிலநேரத்தில் கோபம் வந்துவிடும். அதுவும் கூட நம் நன்மைக்காகத் தான். சம்சார சாகரத்தில், எவ்வளவு காலம் தான் இவர்கள் கிடக்கப் போகிறார்கள். மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து இறக்கப் போகிறார்கள்? தர்மத்தைக் கடைபிடித்து எப்போது மோட்சகதியை அடைவார்கள்? என்ற கோபம் தான். 

அப்போதும் தாயாரே நம் சார்பாக பெருமாளிடம் பேசத் தொடங்குகிறாள். ""எதை வேண்டுமானாலும் போனால் போகட்டும் என்று வாழ்வில் மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால், பேரை விட்டு விட்டால் அதைப் பெற முடியாது. உபநிஷதங்கள் உம்மை,"புருஷோத்தமன்' "நாராயணன்' என்று போற்றுகின்றன. வாரி வழங்கும் இயல்பை விடக் கூடாது. அவர்களைக் காத்தருள வேண்டும்,'' என்று வேண்டுகிறாள். 

பரீட்சையில் வினாத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு இருவித இயல்பு உண்டு. வழிமுறை சரியாக இருந்தாலே மதிப்பெண் என்று ஒரு ரகம், முடிவு சரியாக இருந்தால் தான் மதிப்பெண் என்று ஒரு ரகம். இரக்கமுள்ள தாயாரின் வழிகாட்டுதலால், பெருமாள் நாம் எந்த ரகமாக இருந்தாலும், மதிப்பெண் வழங்க காத்திருக்கிறார். 
தொண்டரடிப் பொடியாழ்வார் தன் பாசுரத்தில், ""வெட்டி வெட்டிக் கொண்டு பெருமாளை விலகிக் கொண்டே சென்றேன். ஆனால், பெருமாளே என்மீது அன்பு கொண்டு விட்டுக் கொடுக்காமல் என்னை ஒட்டிக் கொண்டு வந்தார். இப்போதோ அவரின் வடிவழகைக் கண்டு மயங்கி நின்றேன். என்னை அவரோடு சேர்த்துக் கொண்டார்,'' என்று பாடுகிறார்.

எப்படியாவது நம்மை காத்து ரட்சிக்க வேண்டும் என்பதே அவரின் எண்ணம். அந்த கைங்கர்யத்தைச் செய்து பெருமாளின் திருவடிகளில் நம்மைச் சேர்த்து வைப்பவள் பிராட்டியே





ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 24

திருமாலின் இடப்புறத்தில் வீற்றிருக்கும் பூமிபிராட்டியாரின் வைபவத்தை இனி கேளுங்கள். வைணவ சம்பிரதாயத்தில் பூமிபிராட்டியின் அவதாரமாகப் போற்றப்படுபவள் ஆண்டாள். அவளின் திருவடித்தாமரையின் பெருமையை சுவாமிதேசிகன் கோதாஸ்துதியில் போற்றிப் பாடுகிறார். பெரியாழ்வாரின் திருமகளாக ஸ்ரீவில்லிபுத்தூரிலே அவதரித்தவள் இவள். அவள் ஏன் இப்படி ஒரு மானிடராக மண்ணில் அவதரிக்க வேண்டும்?

வைகுண்டத்திற்கு "நலம் அந்தமில்லதோர் நாடு' என்று பெயருண்டு. அங்கு பெறும் நன்மைக்கு முடிவே கிடையாது. அப்படிப்பட்ட வைகுண்டத்தை விட்டு பூலோகத்தில் பிராட்டி ஏன் அவதரிக்க வேண்டும்? உயிர்களான நம் மீது கொண்ட கருணையால் தான். விஷ்வக்சேனர், ஆதிசேஷன் போன்ற நித்யசூரிகள் எப்போதும் பெருமாளுக்கும், பிராட்டிக்கும் கைங்கர்யம் செய்தபடி இருப்பர். அந்த வளமான, ஆனந்த வாழ்வை விட்டு லீலாவிபூதியான பூலோகம் வந்தாள். மணவாள மாமுனிகள், நித்யவாழ்வான வைகுண்டத்தை இகழ்ந்து நமக்காக ஆண்டாள் பூமிக்கு வந்ததாக குறிப்பிடுகிறார்.

தாழ்வான ஒன்றை இகழ்வது தானே உலக வழக்கம். ஆனால், பிராட்டியார் ஏன் வளமான வைகுண்டத்தை இகழ்ந்தாள்? 

ஒரு பணக்கார பெண் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தாள். அவளுக்கு தன் பிள்ளை மீது அன்பு அதிகம். குழந்தை உடல்நலமில்லாமல் சிரமப்பட்டது. அதை குணப்படுத்த வைத்தியரின் குடிசை வீட்டில் ஒருமாதம் தங்க வேண்டியிருந்தது. அதற்காக தாய், தன் வசதியான வாழ்வைத் துறந்து விட்டாள். தன் சவுகர்யத்தை விட பிள்ளையின் நலத்தை பெரிதாக மதிக்கும் தாய் போல, பிராட்டியும் உயிர்களின் உஜ்ஜீவனத்திற்காக (உய்வுக்காக) பூலோகம் வந்தாள். 

ஸ்ரீதேவி, நீளாதேவிக்கு இல்லாத ஏற்றம் பூமிதேவிக்கு. திருமால் எடுத்த தசாவதாரத்திற்கும், அவர் அர்ச்சாவதாரமாக எழுந்தருளியிருக்கும் 108 திவ்ய தேசங்களுக்கும் ஆதாரமாக இடம் கொடுத்தவளே பூமி பிராட்டி தான். இதுவும் அவளுக்குரிய தனிச்சிறப்பு. திருமகள் ராமனோடு சீதையாக வந்தபோதும், கண்ணனோடு ருக்மணியாக வந்தபோதும் அவளுக்கு இடம் கொடுத்தவளும் இந்த பூமிபிராட்டியே. இவள் மட்டுமே பன்னிரு ஆழ்வார்களில் ஒருத்தியாகும் பாக்கியம் பெற்றவள். மற்ற ஆழ்வார்கள் ஆண்கள் என்பதால், "நாயிகாபாவத்தில்' தன்னை பெண்ணாகவும், திருமாலை நாயகனாகவும் பக்தி செலுத்தி வந்தனர். ஆனால், ஆண்டாள் இயல்பிலேயே பெண் என்பதால், பெருமாளை இன்னும் விசேஷமாக அனுபவிக்கும் பாக்கியம் பெற்றாள். ஆழ்வார்கள் ஒரு அடி பாய்ந்தால், இவள் 16 அடி பாய்ந்தாள் என்றே சொல்லலாம். 

ஸ்ரீதேவியான திருமகள், பெருமாளை விட்டுப் பிரியாமல் அவனுடைய மார்பில் நித்யவாசம் செய்கிறாள். அதனால் அவளுக்கு "நித்ய அனபாயினீம்' என்றும் பெயருண்டு. முக்தி பெற்ற உயிர்களே நித்யசூரிகளாக பெருமாளை விட்டுப் பிரிவதில்லை. ஆனால், ஸ்ரீதேவிக்கு எப்போதும் பெருமாளின் திருமார்பில் எப்போதும் "தங்கி இருக்கணுமே' என்ற கவலை இருந்து கொண்டே இருக்குமாம். ஆனால்,பெருமாள், ஸ்ரீதேவி மட்டுமில்லாமல் அனைவரையும் சேர்த்து தாங்குபவளாக பூமிபிராட்டி விளங்குகிறாள். ஆதரவு படைத்தவளாக ஸ்ரீதேவி இருக்க, பூமிதேவியோ ஆதாரமாக இருக்கிறாள் என்பதும் அவளுக்குரிய சிறப்புகளில் ஒன்று.

ஹிரண்யாட்சன் என்ற அசுரன், பூமிபிராட்டியைக் கடலுக்கடியில் சென்று ஒளித்து வைத்தான். நீரில் நீண்டகாலம் எந்த பொருள் கிடந்தாலும், அதில் பாசி படர்ந்து விடும். பூமியிலும் பாசி படர்ந்து போனது. பாசி பிடித்தால் அழுகின துர்நாற்றம் உண்டாகி விடும். தனக்கே உரிய பொறுமை என்னும் பண்பினால் பிராட்டி இதை தாங்கிக் கொள்கிறாள். "பாசி தூர்த்துக் கிடந்த பார்மகள்' என்று இதைக் குறிப்பிடுவர். அப்போது பெருமாள் பூமியைக் காப்பாற்றும் நோக்கத்துடன், பன்றி முகத்துடன் வராக அவதாரமாக புறப்பட்டார். அப்போது, அவரின் மேனி முழுவதும் அழுக்கு நீர் சொட்டத் தொடங்கியது. துர்நாற்றம் வரத் தொடங்கியது. வாசனைப் பொருள் எதுவாக இருந்தாலும், அதற்குரிய சுகந்தத்தை அளிப்பவர் பெருமாள் தான். ஒளி வீசும் பொருள் எதுவானாலும், அது ஒளி கொடுப்பதும் அவரே. ஆனால், அவரே இப்படி துர்கந்தமாக அழுக்குமேனியாக ஏன் செல்ல வேண்டும்? அது தான் மனைவி மீது கொண்ட உண்மையான அன்பின் அடையாளம். மனைவி தன்னை அழகுபடுத்திக் கொள்ளும்போது, தானும் அலங்காரம் செய்து கொள்வதும், அவளுக்கு உடல்நலம் இல்லாத சமயத்தில் தானும் எளியவனாக இருப்பதும் நல்ல கணவனுக்குரிய இலக்கணம். இதை தான் நமக்கு இதன் மூலம் உணர்த்துகிறார். 

சத்தியம், நேர்மை, பணிவு இப்படியான நற்பண்புகளின் ஒட்டுமொத்தம் தான் ராமன். ஆனால், கண்ணனோ இந்த குணங்களுக்கு நேர்மாறானவன். கபடம், தந்திரம், பொய், திருட்டு இப்படி தோஷமான குணங்களெல்லாம் கொண்டவன். உலகத்திலும் இப்படி இருவிதமான மனிதர்கள் தான் இருக்கிறார்கள். குணத்தாலே ஜெயித்தவன் ராமன். தோஷத்தாலே ஜெயித்தவன் கண்ணன். அதைப் போல, ஸ்ரீதேவி ஒளியாலே ஏற்றம் படைத்தவள். ஆனால், பூமிபிராட்டியோ அழுக்காலே ஏற்றம் படைத்தவள். 

பெற்ற தாய் குழந்தையாக இருக்கும் போது, நம்மைப் பாலூட்டி சீராட்டி வளர்க்கிறாள். பூமித்தாயோ நாம் வாழும் காலம் வரைக்கும் தேவையான எல்லாவற்றையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறாள். தங்கம், வெள்ளி என விலையுயர்ந்த உலோகங்கள், அரிசி, பருப்பு என தேவையான உணவு வகைகள் எல்லாம் அவளின் கொடையே. 

பூமிபிராட்டிக்கு பிருது என்ற மன்னனின் பெயரால் "பிருத்வி' என்று பெயருண்டு. அவன் செங்கோல் ஆட்சி நடத்திய மன்னன். ஆனால், அவன் காலத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது. என்ன செய்வதென ஒன்றும் புரியாமல், தன் வில்லை எடுத்துக் கொண்டு பூமியையே விரட்டத் தொடங்கினான். ஓரிடத்தில் பூமியைக் கொல்லத் தலைப்பட்டான். பூமியில்லாவிட்டால், உயிர்கள் அழிந்து போகும் என்ற உண்மையை அவனுக்கு உணர்த்தினாள் பிராட்டி. தான் ஒரு பசுவாக மாறி நின்றாள். 

அவளுடைய மடியில் அத்தனை செல்வங்களும் பால் போல பொங்கியது. பிருதுவும் ஒரு அதைப் பெற்று மகிழ்ந்தான். பிருதுவுக்கு வாழ்வு தந்ததால் "பிருத்வி' என போற்றப்பட்டாள். கருணை என்று வந்து விட்டால், பூமியும் பெரிய பிராட்டியான ஸ்ரீதேவிக்கு இணையானவள். பொறுமை என்றால் இவளுக்கு நிகர் இவள் மட்டும் தான். வராகபுராணத்தில் பூமிபிராட்டியின் வைபவம் விரிவாகப் பேசப்படுகிறது. சம்சாரக்கடலில் இருந்து நாம் தப்பவேண்டுமானால், பூமிதேவியோடு வீற்றிருக்கும் வராகப்பெருமானின் திருவடியைப் பிடித்துக் கொள்வது ஒன்றே வழி. 









ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 25

பெருமாளிடம் பூமிபிராட்டி, ""நம் குழந்தைகளாகிய பூலோகத்து உயிர்கள் வாழ்வில் உய்வடைய ஏதாவது வழிகாட்டுங்கள்,'' என்று வேண்டினாள். பெருமாளும் அவளுக்கு உபதேசம் செய்யத் தொடங்கினார்.

மனம், வாக்கு, காயம் என்று மூன்றாலும் கடவுளைச் சிந்திக்க வேண்டும். இதையே எண்ணம், சொல், செயல் என்றும் குறிப்பிடுவர். மனதால் கடவுளின் திருவடிகளைச் சரணாகதியாக பற்றிக் கொள்ள வேண்டும். வாக்கால் அவன் திருநாமத்தை பாட வேண்டும். கையால் பூக்களை அவன் திருவடியில் வைத்து வணங்க வேண்டும். இந்த மூன்றையும் செய்யும் உயிர்கள் சம்சாரக்கடலில் இருந்து கரையேறி மோட்சத்தை அடையலாம் என்று பூமிபிராட்டிக்கு வராகப்பெருமான் உபதேசம் செய்தார். இதனை "சூகரம் சொன்ன சுகர உபாயம்' என்பர்.

சூகரம் என்றால் "பன்றிமுகம் கொண்ட வராகப்பெருமான்'. "சுகரஉபாயம்' என்றால் "எளிமையான வழி'. 

இந்த மூன்றையும் செய்வதற்கு ஏற்றது இளமைக்காலம். "கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் வளரொளி மாயன் வீற்றிருக்கும் அழகர்கோவிலுக்கு வாருங்கள்' என நம்மை அழைக்கிறார் நம்மாழ்வார். 
திருமாலிருஞ்சோலை மலையில் இளமையில் ஏறி சேவியுங்கள்.

தவறினால் முதுமையில் இரண்டு கால்களால் ஏற முடியாமல் அல்லல்படுவோம். அப்போது மூன்றாவது காலாக தடி (ஊன்றுகோல்) தேவைப்படும். முதுமையில் மரணப்படுக்கையில் ஞாபகம் தப்பிவிடும். என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்று நமக்குத் தெரியாது. கடைசி நிமிஷம் வரை எம்பெருமானின் திருநாமத்தை சொல்ல முடியாது என்பதால், "அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் நாராயண நாமம்' என்று பெரியாழ்வார் நமக்கு வழிகாட்டுகிறார்.

""மனம், வாக்கு, காயத்தால் தன்னிடம் சரணடைந்தவர்களை மோட்சத்திற்கு அழைத்துச் சொல்வது என் பொறுப்பு,'' என்று பூமிபிராட்டியிடம் வாக்கு கொடுத்தவர் பூவராகர். ஆனால், அதை செயல்படுத்துவர் திருமோகூரில் வீற்றிருக்கும் காளமேகப்பெருமாள் தான். வழித்துணையாக நமக்கு வந்து கைகொடுப்பவர் என்பதால் அவரை "ஆப்தன்' என்கிறார்கள். இதற்கு "நல்ல நண்பன்' என்று பொருள்.

வராகமூர்த்தி சொன்ன உபதேசத்தை நமக்கு எடுத்துச் சொல்ல பூமிபிராட்டி எண்ணம் கொண்டாள். ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் திவ்யதேசத்தில் கோதை ஆண்டாளாக அவதரித்து நமக்காக வாழ்ந்து காட்டினாள். "திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே' என்று அவளின் ஏற்றத்தைப் போற்றுவர். பிரணவம் என்பது அகாரம், உகாரம், மகாரம் என்னும் மூன்று அக்ஷரங்களின் சேர்க்கை. இந்த மூன்றும் ஓரே கருவறையில் இருப்பது ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டுமே. அகாரமாக ரங்கமன்னாரும், உகாரமாக ஆண்டாளும், மகாரமாக கருடாழ்வாரும் ஏக சிம்மாசனத்தில் இங்கு வீற்றிருக்கின்றனர். சீதை, ருக்மணி, பாமா என தேவியர் பூமியில் அவதரித்தபோது, பிறந்த வீடும், புகுந்த வீடும் வேறுவேறாகவே இருந்தது. ஆனால், பூமிபிராட்டியான ஆண்டாளுக்கு பிறந்ததும், புகுந்ததும் பெரியாழ்வாரின் வீடு தான்.

கல்யாணம் முடிந்து, "வீட்டோடு மாப்பிள்ளை' என்ற சம்பிரதாயத்தை உலகில் முதன் முதலில் ஏற்படுத்தி வைத்தவர் பெருமாள் தான். பெரியாழ்வார் வாழ்ந்த இல்லமே இப்போது கோயிலாக விளங்குகிறது. இதற்கு "நாச்சியார் திருமாளிகை' என்று பெயர். பெரிய வீட்டில் இருப்பதைப் போன்ற ஜன்னல்களை ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பார்க்கலாம். 

மாயனை மன்னுவட மதுரை மைந்தனை ....என்று தொடங்கும் திருப்பாவையின் ஐந்தாவது பாசுரத்தில், "தூயோமாய் வந்து தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க' என்று வராகமூர்த்தி சொன்ன உபாயத்தை ஆண்டாள் குறிப்பிடுகிறாள். 

இப்படி யார் பக்தி செய்தாலும், செய்த பாவம் அத்தனையும் தீயில் தூசு போலாகி விடும். கிடந்து, இருந்து, நின்று, அளந்து, இடந்து, உண்டு, உமிழ்ந்து என எத்தனையோ விதங்களில் பெருமாள் சேவை சாதிக்கிறார். பாம்பணையில் கிடப்பதும், அமர்ந்து இருப்பதும், தனித்து நிற்பதும், திரிவிக்ரமனாய் உலகை அளப்பதும், வராகராக வந்து பூமியை இடப்பதும்(தாங்குவது), பிரளய காலத்தில் பூமியை உண்பதும்(விழுங்குவதும்), மீண்டும் சிருஷ்டிக் காலத்தில் உமிழ்வதும்(பூமியை வெளிப்படுத்துவது) பூமிபிராட்டியை முன்னிட்டு தான். முதல் மனைவி இருக்க, இரண்டாவது திருமணம் செய்தால் மூத்த மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுப்பது வழக்கம். அதுபோல, ஸ்ரீதேவிக்கு மார்பில் மட்டும் சின்ன இடத்தைக் கொடுத்து விட்டு, பூமிதேவிக்கு தன்னையே கொடுத்து விட்டார். 

இதுவும் பெருமாள் பூமிபிராட்டிக்கு கொடுத்த ஏற்றம்தான். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பொய்கையாழ்வாரின், முதல் திருவந்தாதி என்னும் பாசுரத்தில், பூமிதேவி திருமாலைப் பிரிந்ததால் அழுவதாகப் பாடியுள்ளார். இதற்கு ஸ்ரீரங்க நிர்வாகத்தில் ஈடுபட்ட ஆளவந்தார் காலத்திற்கு முந்தியவர்களும், ஆளவந்தாரும், பராசரபட்டரும் ஒவ்வொரு விதமான காரணத்தைச் சொல்வார்கள். காலத்தால் முந்திய நிர்வாகத்தினர், நிலையான பூமியை விட்டு, ஸ்ரீதேவி பாற்கடலுக்கு பெருமாளை அழைத்துச் சென்ற வருத்தத்தால் பூமிதேவி அழுவதாகக் குறிப்பிடுவர்.

ஆனால், ஆளவந்தாரோ, ""பூமி எப்போதும் ஆடாமல் அசையாமல் நிலையாக இருக்கிறது. ஆனால், கடலோ எப்போதும் ஆடிக் கொண்டிருக்கும். அதனால், ஸ்ரீதேவியோடு இருப்பதில் பெருமாளுக்கு சிரமமே,'' என அன்பின் காரணமாக பூமிதேவி அழுவதாக விளக்கம் அளித்தார்.

ஆனால், பராசரபட்டரோ வேறுவகையில் விளக்கம் அளித்தார். ஒரு காதலன் பொருள் தேடி விட்டு மழைக்காலத்தில் திரும்பி வருவதாகச் சொல்லி விட்டுப் புறப்பட்டான். ஆனால், வரவில்லை. மழை பெய்யத் தொடங்கியது. காதலி பிரிவுத்துயரம் தாங்காமல் அழுதாள். அவளுடைய தோழி, "இதுநிஜமான மழையில்லை. பாற்கடலில் திருமால் திருமகளோடு தங்கியிருப்பதால், பூமிதேவி அன்பால் விடும் கண்ணீர் துளிகளே' என்று சொன்னதாக விளக்கம் கொடுத்தார்.

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கம் சொன்னாலும், ரங்கநாதர் என்னும் குளத்தைச் சுற்றி வரும் அன்னம் போல, ஸ்ரீதேவி பெருமாளையே வலம் வந்து கொண்டிருக்கிறாள். அவளின் நிழல் போல பூமிதேவி எப்போதும் இருந்து கொண்டிருக்கிறாள். நிழலோடு யாரும் சண்டை போடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், நிஜத்தை விட நிழல் வளர்ந்து கொண்டே போவதை பார்க்கலாம். அதனால், தேவியருக்குள் ஒருபோதும் சண்டை உண்டாவதில்லை.































No comments:

Post a Comment