Monday, July 21, 2014

பக்தியில் அகந்தைக் கூடாது

பக்தியில் அகந்தைக் கூடாது




பாண்டவர்களின் வனவாச காலம் அது. கொடிய விலங்குகள் திரியும் காட்டில் வசித்து வந்தனர் பாண்டவர்களும், திரவுபதியும். காட்டில் கிடந்த கல்லின் மீது படுத்தும், சுனை நீரை குடித்தும், காய்கனிகளை சாப்பிட்டும், மழை– வெயில்– பனி– காற்றை பொருட்படுத்தாமலும் மன உறுதியுடன் வாழ்க்கையை நடத்தினர்.

பாண்டவர்களின் வலிமை வாய்ந்த பீமனுக்கு, தான் வலிமையில் சிறந்தவன் என்ற எண்ணமும், திரவுபதிக்கு தன்னை விட கிருஷ்ணனின் மீது அன்பு கொள்வோர் எவருமில்லை என்ற எண்ணமும் மேலோங்கி இருந்தது. இந்த எண்ணமே கர்வமும், அகந்தையுமாக தலைதூக்கக் கூடியது. இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

மரமாக வளர்ந்து விட்டால் வெட்டும் கோடரியும் மழுங்கிப் போகும். அனைவரின் உள்ளங்களிலும் அமர்ந்திருக்கும் கண்ணபிரான், பீமன் மற்றும் திரவுபதி இருவரின் செருக்கையும் அகற்றி ஆட்கொள்ள முடிவு செய்தார். ஒரு நாள் துவாரகாபுரியில் இருந்து நடந்தே வந்தார்.

பாண்டவர்களும், திரவுபதியும் தங்கியிருக்கும் இடத்தை அடைந்தார். கிருஷ்ணரைப் பார்த்ததும், அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். அன்பொழுக உபசரித்தனர். திரவுபதியோ, ‘கிருஷ்ணா! தேர்கள், யானைகள், குதிரைகள் முதலிய பல வாகனங்கள் இருந்தும், தாங்கள் நடந்து வந்தது ஏன்?. உங்கள் பாதங்கள் நோகுமே!’ என்று அன்புடன் கேட்டாள்.

காரணம் இல்லாமல் கண்ணன் நடந்து கொள்வானா என்ன?. கண்ணபிரான், ‘சகோதரியே! உங்களை எல்லாம் காண வேண்டும் என்ற ஆவல் காரணமாக, அந்த எண்ணம் தோன்றிய உடனேயே, எதைப் பற்றியும் சிந்திக்காமல் வந்துவிட்டேன். நீ கேட்டதும்தான் எண்ணிப்பார்க்கிறேன்.

கால் கொஞ்சம் வலிக்கத்தான் செய்கின்றது’ என்றார். பதறிப்போனாள் திரவுபதி, ‘அண்ணா! சற்று இளைப்பாறுங்கள். வெந்நீர் தயார் செய்கிறேன். சுடச்சுட வெந்நீர் விட்டால் கால் வலி பறந்து போகும்’ என்றாள். பின்னர் பீமனைப் பார்த்து, ‘ஒரு பாத்திரம் கொண்டு வாருங்கள்’ என்றாள்.

பீமனோ, அந்தக் காட்டில் வசித்த ஒரு முனிவரின் ஆசிரமத்தில் இருந்து அகண்ட பாத்திரம் ஒன்றை எடுத்து வந்தான். அதனை வெறும் பாத்திரமாக கொண்டு வரவில்லை. வலிமை படைத்தவன் அல்லவா? அங்கிருந்த ஆற்றில் அண்டாவை அழுத்தி, அதன் நிறைய தண்ணீர் கொண்டு வந்தான். மூன்று பெரிய குண்டு கற்களை அடுப்பாக அமைத்து அதன் மீது அந்த பாத்திரத்தை வைத்தான்.

பிறகு காட்டில் உலர்ந்து விழுந்து கிடந்த மரத்தை அப்படியே எடுத்து வந்து அடுப்பில் வைத்தான். திரவுபதி தீ மூட்டினாள். தீ மளமளவென்று உயர்ந்து எழுந்து எரிந்தது. சிறிது நேரம் கழித்து திரவுபதி நீர் சூடேறி விட்டதா? என்று விரல் வைத்துப் பார்த்தாள்.

தண்ணீரோ பனிக்கட்டியைக் காட்டிலும் சில்லென்று குளிர்ந்திருந்தது. பீமன் சலிக்காமல் மரங்களை கொண்டு வந்து அடுப்பில் வைத்துக் கொண்டே இருந்தான். திரவுபதியும் தீ மூட்டிக் கொண்டே இருந்தாள். மரங்களை கட்டு கட்டாக கொண்டு வந்து பீமன் வலிமை இழந்து போனான்.

திரவுபதியும் நெருப்பின் அருகில் நின்று வாடிப்போனாள். தண்ணீர் கொஞ்சம் கூட சூடேறவில்லை. இந்தநிலையில் மற்ற பாண்டவர்களுடனும், முனிவர்களுடனும் உரையாடிக்கொண்டிருந்த பரந்தாமன், திரவுபதியை அழைத்து, ‘அன்பு தங்கையே! வெந்நீர் வைத்து தருகிறேன் என்றாயே.

என்ன ஆயிற்று?’ என்று கேட்டார். ‘அண்ணா! என்ன மாயமோ தெரியவில்லை. அதிசயமாக இருக்கிறது. பல மணி நேரம் தீ மூட்டியும் தண்ணீர் சில்லென்று இருக்கிறது’ என்றாள் திரவுபதி. அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். அடுப்படிக்கு அருகில் வந்து நின்றார்கள்.

அப்போது கிருஷ்ணர், ‘பீமா! இந்த அண்டாவை மெல்ல எடுத்து நீரை கீழே கொட்டு’ என்றார். பீமனும் அவ்வாறே செய்தான். அந்த நீரில் ஒரு தவளை இருந்தது. அது ‘கிருஷ்ணா! சூடு பிடித்தால் நான் மாண்டு போவேனே! கிருஷ்ணா! கிருஷ்ணா!’ என்று உள்ளம் உருகி கண்ணபிரானை துதித்துக் கொண்டே இருந்தது.

இந்த தவளையின் கிருஷ்ண பக்தியைக் கண்டு அஞ்சியதன் காரணமாகவே அக்னி, தன் செயல்பாட்டை ஒடுக்கிக்கொண்டான். அதனால்தான் தண்ணீர் சூடு பிடிக்கவில்லை. தவளையின் கிருஷ்ண பக்தியைக் கண்டு திரவுபதி வெட்கினாள். தவளையின் பக்தியின் முன்பு தன் தோள்வலிமை பயன்படாததைக் கண்டு பீமனும் தலைகுனிந்தான்.

No comments:

Post a Comment