Monday, September 22, 2014

மஹாபாரதம் - விரிவாக பகுதி - 3

91-வியாசர் அறிவுரை அசைக்க முடியாத தருமரின் மனதை மாற்ற வியாசர் கூறுகிறார்..

'தருமா..இல்லற தருமமே சிறந்த தருமமாகும் என சாத்திரங்கள் கூறுகின்றன.சாத்திரப்படி நீ நடந்துக் கொள்ள வேண்டும்.இல்லறம் துறந்து காடு செல்ல உனக்குச் சாத்திர அனுமதியில்லை.தேவரும்,விருந்தினரும்,மற்றவரும் இல்லறத்தாரையே சார்ந்திருக்கின்றனர்.அவர்களைக் காப்பது உன் கடமையாகும்.விலங்குகளும்,பறவைகளும் கூட இல்லறத்தாராலேயே காப்பாற்றப்படுகின்றன.உனக்கு நான்கு வருண தருமமும் தெரியும்.க்ஷத்திரிய தருமத்தை நீ நன்கு உணர்ந்திருந்தாலும் உனக்கு நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.முயற்சியும்,தானமும்,யாகமும் மக்களைப் பாதுகாப்பதும்,நடு நிலைமையோடு நடந்து கொள்வதும். பகயை அழிப்பதும் அரசருக்கான கடமையாகும்.செங்கோன்மைதான் அரசருக்கு உரிய மிக உயர்ந்த தருமமாகும்.அரசன் குற்றவாளிகளை தண்டித்து நாட்டில் குற்றங்கள் பெருகாமல் தடுக்க வேண்டும்.இதுவும் அரச தருமம் என்பதை புரிந்து கொள்.சுத்யும்னன் என்னும் ராஜரிஷி ஒழுங்காக செங்கோல் செலுத்தியதால் முக்தியடைந்தார் என்பதைத் தெரிந்து கொள்' என்றார்.தருமர் சுத்யும்னன் எப்படி முக்தியடைந்தார் என வியாசரைக் கேட்டார்.

வியாசர் சொல்லத் தொடங்கினார்...முன்னொரு காலத்தில் சங்கர்,லிகிதர் என இரு சகோதரர்கள் இருந்தனர்.இருவரும் தவத்தில் சிறந்தவர்கள்.அவர்களுக்கு பாகுதை என்னும் நதிக்கரையில் மரங்களால் சூழப்பட்ட ஆசிரமங்கள் தனித் தனியாக இருந்தன.ஒரு சமயல் லிகிதர் சங்கரின் ஆசிரமத்திற்கு வந்தார். சங்கர் அப்போது வெளியே சென்றிருந்தார்.லிகிதர் மரத்தில் நன்கு பழுத்திருந்த கனிகள் சிலவற்றை பறித்து உண்ணத் தொடங்கினார்.திரும்பி வந்த சங்கர் தம்பியின் செயல் கண்டு கோபமுற்றார்.'என் அனுமதியின்றி பழங்களைப் பறித்தது திருட்டுக் குற்றம்.இக் குற்றத்திற்கான தண்டனையை இந்நாட்டு மன்னனிடம் பெற்று அத் தண்டனையை அனுபவிப்பாயாக' என்றார்.

அதன்படி லிகிதர் மன்னன் சுத்யும்னனிடம் சென்று தண்டனை வழங்கும்படிக் கேட்டுக் கொண்டார்.அதைக் கேட்ட மன்னன் 'தண்டனை வழங்குவது அரச நீதிதான்..என்றாலும் மன்னிப்பு வழங்குவதும் அரச தருமம்..ஆதலால் உம்மை குற்றத்திலிருந்து விடுவிக்கிறேன்..நீர் போகலாம்' என்றார்.ஆனால் லிகிதர் தாம் செய்த குற்றத்திற்கு தண்டனை வழங்குமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்.அதனால்..திருட்டுக் குற்றத்திற்காக அவரது கைகள் துண்டிக்கப் பட்டன.

அறுபட்ட கைகளுடன் சங்கரைக் கண்ட லிகிதர்..'அரச நீதி கிடைத்து விட்டது..தாங்களும் சினம் தணிந்து என்னை மன்னிக்கவும்' என்றார்.

அதற்கு சங்கர் 'எனக்கு உன் மீது சினம் இல்லை.ஆனால் குற்றத்திற்கான தண்டனையை யாரானாலும் அனுபவித்தேத் தீர வேண்டும்.குற்றத்திற்கேற்ற தண்டனை விதித்தல் மன்னன் கடமையாகும்.அதுவே அரச நீதியாம்.இனி உன் பாவம் விலகும்.நீ பாகுதி நதிக் கரையில் தியானம் செய்வாயாக' என்றார்.

அவ்வாறே..லிகிதர் தியானம் இருக்க..தியான முடிவில் கைகள் தாமரை மலர்கள் போல் தோன்றின.அவர் தம் சகோதரரிடம் சென்று விவரத்தைச் சொன்னார்.உடன் சங்கர் 'இது என் தவ வலிமையால் நடந்தது.' என்றார்.

அவ்வாறாயின் இதை நீங்கள் முன்னமேயே செய்திருக்கலாமே என்றார் லிகிதர்.

'உண்மை..இதை என்னால் முன்னரே செய்திருக்க முடியும்..ஆனாலும் தண்டனை வழங்கும் தகுதி அரசனுக்கே உண்டு.உனக்கு தண்டனை வழங்கியதால் அரசன் தூயவனாக ஆகி..இறுதியில் முக்தியடைந்தான்.குற்றத்திற்கான தண்டனை அனுபவித்ததால் உன் பாவமும் கழிந்தது' என்றார் சங்கர்.

இக்கதையை எடுத்துரைத்த வியாசர் 'தருமா..நீயும் அரசாட்சியை ஏற்றுச் செங்கோல் செலுத்தி நற்கதி அடைவாயாக' என்றார்.

92-வியாசர் ராஜநீதி பற்றி கூறல்

'தருமா...தம்பியர் பன்னிரெண்டு ஆண்டுகள் கானகத்தில் இருந்த போது என்னென்ன கனவுகள் கண்டனரோ,..அந்தக் கனவுகள் நிறைவேற நீ உதவ வேண்டும்.அவர்கள் காட்டில் பட்ட துன்பத்தின் முடிவு காலமான தற்போது இன்பம் அடைய வேண்டாமா..நீயும்,உன் தம்பியரும் அறம்,பொருள் இன்பங்களை நல்வழியில் அனுபவித்த பிறகு நீ காட்டை நோக்கிச் சென்று தவம் புரியலாம்.போர்க்களத்தில் பெற்ற வெற்றியின் பயனை நீ அலட்சியம் செய்யாதே..ராஜநீதி தெரிந்தவர்கள் இந்த வெற்றியை ஒழுங்குபடுத்தி நாட்டை நன்முறையில் பரிபாலிக்க வேண்டாமா?அரச நீதியை நன்கு உணர்ந்து இடத்திற்கும், காலத்திற்கும் ஏற்பக் குற்றவாளிக்கு தண்டனை வழங்க வேண்டும்..இதில் பாபம் ஏதும் இல்லை..குடிமக்களிடம் ஆறில் ஒரு பங்கு வசூலித்து..நாட்டை நன்கு ஆளவில்லையெனின்..அந்த அரசனுக்கு குடிமக்களின் பாபத்தில் நாலில் ஒரு பங்கு வந்து சேரும்.

யுதிஷ்டிரா..அரச நீதி பற்றி மேலும் சொல்கிறேன்..தரும நூல் படி தண்டனை வழங்க வேண்டும்.இதில் தயக்கம் கூடாது.சினத்தை விலக்க வேண்டும்.குடிமக்களிடம் அன்பு காட்டித் தந்தை போல் நடந்துக் கொள்ள வேண்டும்.அரசரின் முயற்சி விதி வசத்தால் பழுது பட்டாலும் உலகம் அவ்வரசனை குறை கூறாது.நாடாளும் மன்னன் பகைவரை ஒடுக்குவதில் விழிப்பாக இருக்க வேண்டும்.அடிக்கடி படையெடுப்புக்கு உள்ளாகும் நாட்டின் அரசன் எந்த ஒரு நல்ல செயலையும் நிறைவாக செய்ய முடியாது.ஆகவே பகை சிறிது என்று எண்ணக்கூடாது.அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

கல்வியிற் சிறந்த சான்றோர்களையும்..போர் வீரர்களையும் கண்ணெனப் போற்ற வேண்டும்..நாட்டின் மேன்மைக்கு வணிகரும் காரணமாவர்.ஆதலால் அவர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் மன்னன் திகழ வேண்டும்.உயர் அதிகாரிகளின் தகுதி அறிந்து தக்க காரியங்களில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்..தனக்கு ஆலோசனை கூறத் தக்க அறிவார்ந்த குழுவை அரசன் அமர்த்திக் கொள்ள வேண்டும்..தரும சாத்திரத்திலும்..நீதி சாத்திரத்திலும் தேர்ச்சி உள்ளவர்கள் எடுக்கும் முடிவு மூவுலகிலும் பாராட்டப் படும்.அறிவின் எல்லையைக் கண்டவராயினும் ஒருவரையே நம்பியிருக்கக் கூடாது.

தருமா...அடக்கம் இல்லாமல் ஆணவத்துடன் நடக்கும் அரசனை மக்கள் பழிப்பர்.அத்தகைய மன்னனிடம் பாவமும் வந்து சேரும்.நன்றாக ஆராய்ந்து வழங்கும் தண்ட நீதியால் பாவம் ஏதுமில்லை.எவ்வளவுதான் முயன்றாலும் சில விஷயங்கள் விதி வசத்தால் பயனற்றவனாக முடிவதுண்டு.அதனால் மன்னனைப் பழிக்க மாட்டார்கள் மக்கள்.இத்தகைய நற்பண்புகளுடன் கூடிய அரசனை வரலாறு பாராட்டும்.ஆகவே..யுதிஷ்டிரா..அரசாட்சியை மேற்கொண்டு புகழுடன் பொலிக' என்றார் வியாசர்.
93- உண்ணா நோன்பு இருப்பேன் எனல்
வியாசரின் எந்த விளக்கமும் தருமரின் மனதை மாற்றவில்லை.பலரும் மாறி..மாறி கூறியும் பயன் இல்லை.அவர் வைராக்கியத்துடன் தன் நிலைமையை எடுத்துரைத்தார்.

'போரில் நாட்டாசை காரணமாகச் சகோதரர்களைக் கொன்றேன்..யாரின் மடி மீதிருந்து உற்சாகமாக விளையாடினேனோ அந்த பீஷ்மரை யுத்த களத்தில் இழந்தேன்.அந்தப் பிதாமகர் ரத்த வெள்ளத்தில் மலை போல் சாய்ந்த போதே பாவியாகிய நான் சோகத்தின் மடியில் வீழ்ந்தேன்..பரசுராமருடன் பல நாள் போர் புரிந்த வீரராகிய அந்தப் பீஷ்மர் யுத்த களத்தில் என்னால் வீழ்த்தப்பட்டார்.இளமைப் பருவம் தொடங்கி வளர்த்து எங்களையெல்லாம் ஆளாக்கிய அந்த உத்தமரைக் கேவலம் பேராசை காரணமாக இந்த நிலைக்கு ஆளாக்கினேன்.

ஒரு பொய்யைச் சொல்லி துரோணரைச் சாகடித்தேன்.இதைவிட வேறென்ன பாவம் இருக்க முடியும்? சத்தியம் தவறாதவன் என்ற பெயர் எனக்கு எப்படி பொருந்தும்? பொய்யனாகிய நான் இந்தப் பூமண்டலத்தை ஆண்டு பெறப்போவது என்ன?

புறங் கொடாப் போர் வீரனான் என் தமையனைக் கொன்றேனே..இதைவிட வேறு எது பாவம்?

ஒரு சிங்கக் குட்டியென வலம் வந்த அபிமன்யூவைத் துரோணரின் சக்கர வியூகத்தில் தள்ளிக் கொலை செய்தேனே..பாவியல்லவா நான்? இனி உலகில் அத்தகைய வீரன் பிறப்பானா? என் பொருட்டு திரௌபதியின் ஐந்து பிள்ளைகளும் கொல்லப் பட்டனரே..திருஷ்டத்துய்மனும்..விராடனும்..எண்ணற்ற வீரர்களும் என்னால் அல்லவா மாண்டார்கள்?

இவர்கள் அனைவரையும் இழந்த பிறகு நான் மட்டும் ஏன் உயிர் வாழ வேண்டும்? நான் உண்ணா நோன்புடன் உயிர் துறக்கத் தயாராகி விட்டேன்..அனுமதி கொடுங்கள்' என மனம் நொந்து வியாசர் முதலான மகரிஷிகளிடம் கேட்டுக் கொண்டார் தருமர்.

94-கண்ணன் தருமருக்கு உரைத்தல்

இப்போது கண்ணன் தருமரை நோக்கி..'நீ கவலைப்படுவதில் அர்த்தம் ஒன்றுமில்லை.மனதைக் கொன்றழிக்கும் கவலையிலிருந்து மீள்வாயாக.போர்க்களத்தில் மாண்டவர் அனைவரும் வீரப்போர் புரிந்து மாண்டவரே! யாரும் கோழைகளாக புறமுதுகு காட்டி ஓடுகையில் கொல்லப் படவில்லை.அவர்கள் தங்கள் கடமைகளை முடித்துக் கொண்டு சுவர்க்கம் சென்றனர்.அவர்களைக் குறித்து நீ புலம்புவதில் நியாயம் இல்லை.

புத்திரனை இழந்த சோகத்தால் பீடிக்கப்பட்ட சிருஞ்சிய மன்னனுக்கு நாரதர் சொன்ன ஒரு வரலாற்றை உனக்கு நான் சொல்கிறேன்.சிருஞ்சியனை நோக்கி நாரதர் 'வேந்தே...இறந்து போன மாமன்னர்களின் வரலாற்றைக் கேட்டபின் உனது துன்பம் தொலையும் என எண்ணுகிறேன்.முன்னொரு காலத்தில் மருத்தன் என்னும் மன்னன் ஒருவன் இருந்தான்..இந்திரன்,வருணன்,பிரகஸ்பதி முதலானோர் வந்து சிறப்புச் செய்யும் அளவிற்கு யாகம் செய்த பெருமை மிக்கவன் அவன்.அம்மருத்தனது ஆட்சியில் வித்தின்றியே விளைவு மிகுந்திருந்தது.உழவு முதலியன இன்றியே தானியங்கள் எங்கும் குவிந்து கிடந்தன.தேவர்களுக்கும்..கந்தர்வர்களுக்கும் அவன் அளித்த அளவிற்கு வேறு யாரும் தானம் அளித்ததில்லை.உன்னையும், உன் மகனையும் விட அம்மருத்தன் ஞானம்,தருமம்,செல்வம்,வைராக்கியம் ஆகிய நான்கினும் சிறந்து விளங்கினான்.அத்தகையவனே இறந்து விட்டான் எனில்..உன் மகன் இறந்து போனது குறித்து நீ ஏன் கவலைப்படுகிறாய்?

சுகோத்திரன் என்னும் மன்னனும் இறந்து விட்டான்..அவன் என்ன சாதாரண மன்னனா? அவனது மேன்மையை அறிந்த இந்திரன் அவன் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு வருடம் பொன் மாரி பெய்வித்தான்.ஆறுகளில் பொன்னீர் ஓடிற்று.அவற்றில் மீன்,நண்டு,ஆமை கூட பொன்னிறமாய்க் காட்சி அளித்தது.பல யாகங்களில் பொன்னையும், பொருளையும் அனைவருக்கும் வாரி வாரி வழங்கினான்.அத்தகைய மன்னனும் மாண்டு விட்டான் எனில்..ஒரு யாகமும் செய்யா உன் மகன் இறந்ததற்கு ஏன் அழுகிராய்.

அங்க தேசத்து அரசன் பிரகத்ரதன்..அவன் செய்த யாகத்தின் போது லட்சக்கணக்கான யானைகளையும்,குதிரைகளையும்,பசுக்களையும்,காளைகளையும் பிராமணர்களுக்குத் தானமாக அளித்தான்.அளவற்ற செல்வங்களை வாரி வாரி வழங்கினான்.கொடை வள்ளலான அந்த பிரகத்ரதனும் இறந்து போனான்

சிபி என்னும் அரசன் உலகம் அனைத்தும் ஒரே குடையின் கீழ் ஆண்டவன்.அவன் தன் நாட்டில் உள்ள பசுக்களை மட்டுமின்றி..காட்டில் உள்ள பசுக்களையும் யாகத்தின் போது தானம் செய்து உயர்ந்திருந்தான்.பிரம தேவரே அவனது பெருமையைக் கண்டு பெருமிதம் அடைந்தார்.அத்தகைய பெருமை மிக்கவனும் இறந்து விட்டான்.

செல்வங்களைக் குவியல்..குவியலாய் பெற்றவன் பரதன் என்னும் மன்னன்.ஆயிரம் அசுவமேத யாகங்களையும்..நூறு ராஜசூய யாகங்களையும் செய்த பெருமை மிக்கவன்.அந்த பரதன் செய்த செயற்கரிய செயல்களை தம்மால் செய்ய முடியவில்லையே என அக்கால மன்னர் எல்லாம் ஏங்கினர்.யாகத்தின் போது அம்மாமன்னன் கோடிக்கணக்கான பசுக்களை தானம் செய்தான்.உன்னையும்..உன் மகனையும் விட சிறந்தவன் இறந்து விட்டான்.

ராமரைவிட சிறந்தவரை காணமுடியுமா?உலக உயிர்களில் அவர் காட்டிய அன்பிற்கு ஈடு உண்டா..அந்தப் புண்ணியரின் ஆட்சியில் மக்கள் நோய்த் துன்பமின்றி வாழ்ந்தனர். மாதம் மும்மாரி பெய்தது.மக்கள் பயமின்றி மகிழ்வுடன் வாழ்ந்தனர்.பதினாங்கு ஆண்டு கால வனவாசத்திற்குப் பிறகு பல அசுவமேத யாகங்களைச் செய்தார்.அயோத்தியில் ராம ராஜ்யம் நீடித்திருந்தது,..அந்த ராமனும் மரணமடைந்தான்.

பகீரதன் பற்றி அறியாதார் இல்லை..அவன் ஆயிரம்..ஆயிரம் குதிரைகளையும்,யானைகளையும்,தேர்களையும்,பசுக்களையும்,ஆடுகளையும் தானம் செய்தவன்.அவன் மடியில் கங்கை ஒரு குழந்தைப் போல அமர்ந்திருந்தாள்.அதனால் கங்கை அவனுக்கு மகளானாள்...உம்மையும்..உம் மகனையும் விட சிறந்த அந்த பகீரதனும் மரணம் அடைந்தான்..

(கண்ணன் மேலும் கூறுவது தொடரும்)
95-கண்ணன் தருமருக்கு உரைத்தல் (2)
(தருமருக்கு..கண்ணன் மேலும் நாரதர் சொன்னதைச் சொல்கிறார்)

திலீபன் என்னும் மன்னன் புகழை உலகம் போற்றுகிறது.அவன் யாகத்தின் போது பொன்னாலான யானைகளைத் தானமாக அளித்தான்.இந்திரன் முதலான தேவர்கள் அவனை வழிபட்டனர்.அவன் முன்னால் ஆயிரம்..ஆயிரம்..தேவர்களும்..கந்தர்வர்களும் நடனம் ஆடினர்.அவன் அவையில் வசு என்னும் கந்தர்வன் வீணை வாசித்தான்..அந்த வீணையிலிருந்து எழும் இனிய ஒலி கேட்டு உயிரினங்கள் மகிழ்ச்சி அடைந்தன.அவனது நாட்டில் தங்கக் கவசம் பூண்ட யானைகள் மதம் பிடித்து எங்கும் திரிந்தன.அந்தத் திலீபனும் இறந்து விட்டான் எனில்..உன் மகன் இறந்ததற்கு ஏன் அழுகிறாய்.

மூன்று உலகங்களையும் வெற்றி கொண்ட மாந்தாதா என்னும் மன்னனும் மாண்டு போனான்.குழந்தையாக தேவ வடிவத்தில் தன் தந்தையின் மடியில் படுத்திருந்த போது..இந்திரன் 'இந்தக் குழந்தைக்கு நான் பால் தருவேன்' என தன் கை விரலை அதன் வாயில் வைத்தி பால் பெருகச் செய்தான்.அந்தப் பாலின் சக்தியால் மாந்தாதா பன்னிரெண்டு நாட்களிலேயே வளர்ந்து வாலிபன் ஆனான்.ஆற்றல் மிக்க அவன் பூமி முழுதும் வென்று தனதாக்கிக் கொண்டான்.அவன் அங்காரகன் என்னும் அரசனை எதிர்த்துப் போர் செய்கையில் எழுந்த நாண் ஒலியால் தேவலோகம் இடிந்து விழுமோ எனத் தேவர்கள் நடுங்கினர். அவன் நூற்றுக்கும் மேலான அசுவ மேத யாகங்களையும்..ராஜசூய யாகங்களையும் செய்தான்.அவன் ஆயுளும் ஒரு நாள் முடிந்தது

நகுஷன் மகன் யயாதி புகழ் வாய்ந்தவன்..பூமி முழுதும் யாகசாலையாக மாற்றியவன் அவன்.அவன் தங்க மலைகளைத் தானம் செய்த பெருமை மிக்கவன்.அவன் காட்டை அடைந்து தவம் இயற்றி மாண்டு போனான்.

நாபகன் என்னும் மன்னனின் மகன் அம்பரீஷன்.அவன் இயற்றிய யாகத்தில் பத்து லட்சம் அரசர் பணி புரிந்தனர்.அவனைப் போன்ற சிறந்த மன்னன் மூவுலகிலும் இல்லை என மக்கள் புகழ்ந்தனர்.அவனுக்கு பணி புரிந்தோர் அனைவரும் புண்ணிய உலகம் அடைந்தனர்.கடைசியில் அந்த மன்னனும் மாண்டான்.

சித்திரதன் என்னும் மன்னனின் மகன் சசபிந்து..நூறு நூறு யானைகளையும்.ஒவ்வொரு யானைக்கும் நூறு நூறு தேர்களையும்..ஒவ்வொரு தேருக்கும் நூறு நூறு குதிரைகளையும்..ஒவ்வொரு குதிரைக்கும் நூறு நூறு பசுக்களையும்..ஒவ்வொரு பசுவிற்கும் நூறு நூறு வெள்ளாடுகளையும் ஒவ்வொரு வெள்ளாட்டுக்கும் நூறு நூறு செம்மறியாடுகளையும் கொண்ட அளவற்ற செல்வத்தை யாகத்தின் போது தானமாக அளித்தான்..அத்தகைய தான திலகனான சசபிந்துவும் மாண்டான்.

அதூர்த்தரஜஸ் என்னும் மன்னனின் மகன் கயன்.அவன் ஆட்சியில் நாடெங்கும் அமைதி நிலவியது.அவன் பல யாகங்களைச் செய்தான்..யாகத்தின் போது நூறாயிரம் பசுக்களையும்..பதினாறாயிரம் குதிரைகளையும் தானமாக அளித்தான்.அசுவமேதம் என்னும் பெரும் யாகத்தின் முடிவில் ஐம்பது முழ அகலமும் நூறு முழ நீளமும் கொண்ட பொன் விளையும் பூமியைத் தானமாகக் கொடுத்தான் பொன்னும், பொருளும்,போகமும் பெற்றிருந்த அந்தக் கயனும் மாண்டு விட்டான்

ரத்தி தேவன் என்னும் மன்னன்சங்கிருதியின் மகன் ஆவான்..புகழ் வாய்ந்த அவன் வேள்விச் சாலையில் இருந்த குடங்கள், தோண்டிகள், அண்டாக்கள், அனைத்தும் பொன்னாலானவை.அவன் செய்
த, தர்மங்களுக்கு அளவே இல்லை.'எங்களை நல்ல செயலுக்கு பயன் படுத்திக் கொள்ளுங்கள்' என்றுக் கேட்டுக் கொண்டு நாட்டிலும்,காட்டிலும் இருந்த பசுக்கள் அம்மன்னனை வந்தடைந்தன.அத்தகைய பெருமை மிக்க மன்னனும் மடிந்தான்.

இட்சுவாகு குல அரசன் சகரன்..அவனுக்கு அறுபதினாயிரம் மைந்தர்கள்.அந்தச் சகர புத்திரர்களால் தோண்டப்பட்டதால் கடல் சாகரம் எனப் பெயர் பெற்றது.சகரன் ஆயிர அசுவமேத யாகங்களைச் செய்து தேவர்களை மகிழ்வித்தான்.பூமி முழுதும் ஒரே குடைக் கீழ் ஆண்ட அந்தச் சகரனும் மாண்டான்

வேனனின் மகன் பிருது என்னும் அரசன், மகரிஷிகள் ஒன்று கூடி..'நாட்டைப் பெருகச் செய்வான் இவன்' எனக் கருதி பிருது எனப் பெயரிட்டு முடிசூட்டினர்.அவன் உலகத்தை ஆபத்திலிருந்து காத்ததால் க்ஷத்திரியன் என்றும் அழைக்கப் பட்டான்.அவன் கடல் மீது செல்கையில் கடல் நீர் கல்லைப்போல் உறுதியாக இருந்து வழி அமைத்துத் தரும்.அவன் செய்த அசுவமேத யாகத்தின் போது மூன்று ஆள் உயரமுள்ள இருபத்தொரு தங்க மாலைகளை வேதியர்க்கு தானம் செய்தான்.அத்தகைய வள்ளலும் இறந்தான்

'சிருஞ்சயனே..இவ்வாறு பதினாறு மாமன்னர்களும் மாண்டார்கள் என்றால்..உனது சிறு பாலகன் இறந்ததற்கு வருந்தலாமா?' என நாரதர் ஆறுதல் கூறினார்.

இந்த வரலாற்றைக் கூறிய நாரதரும் இங்கு வீற்றிருக்கிறார்.ஆதலால்..தருமரே..உலக இயல்பு இதுதான் எனத் தெளிந்து மனக்கவலை விலக்கி மண்ணாள் செல்வத்தை ஏற்றுச் சிறப்பாக ஆட்சி புரிவாயாக!' எனக் கண்ணன் கூறி முடித்தார்.

கண்ணனைத் தொடர்ந்து வியாசர் பல அறங்களை எடுத்துரைத்தார்.தருமரை அசுவமேத யாகம் புரிய வற்புறுத்தினர்.

96-தருமரின் முடி சூட்டு விழா

பீமன்,அர்ச்சுனன்,நகுலன்,சகாதேவன்,திரௌபதி,வியாசர்,கண்ணன் ஆகியோரின் இடைவிடா அறிவுரைகளால் தருமர் துக்கத்திலிருந்து விடுபட்டார்.தருமரின் முகத்தில் சோகம் அகன்று சாந்தம் தவழ்ந்தது.அவர் அஸ்தினாபுரம் செல்லப் புறப்பட்டார்,பதினாறு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஏறினார்.பீமன் தேரைச் செலுத்தினான்.அர்ச்சுனன் வெண் கொற்றக் குடை பிடித்தான்.நகுல,சகாதேவன் இருவரும் வெண் சாமரம் வீசினர்.சகோதரர்கள் ஐவரும் ஒரு தேரில் செல்லும் காட்சி பஞ்ச பூதங்களையும் ஒரு சேரக் காண்பது போல இருந்தது.கண்ணனும், சாத்யகியும் ஒரு தேரில் சென்றனர்.திருதிராட்டிரன்..காந்தாரியுடன் ஒரு தேரில் ஏறிப் பின் தொடர்ந்தான்.குந்தி,திரௌபதி,சுபத்திரை முதலானோர் விதுரரைத் தொடர்ந்து பலவித வாகனங்களில் சென்றனர்.அலங்கரிக்கப்பட்ட யானைகளும்,குதிரைகளும் தொடர்ந்து சென்றன.அலை அலையாகத் தொடர்ந்து சென்ற மக்கள் கூட்டம் கடலே எழுந்தது போல இருந்தது.

அஸ்தினாபுரத்து மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.நகரை நன்கு அலங்கரித்தனர்.நகரம் கோலாகலமாகத் திகழ்ந்தது.தெருவெங்கும் மாலைகளும்,தோரணங்களும் காட்சியளித்தன.சந்தனமும்,கஸ்தூரியும் மலர் மாலைகளும் மணம் வீசி அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தின.'எங்கள் மாமன்னர் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்க' என்னும் வாழ்த்தொலிகளுக்கிடையே தருமர் அஸ்தினாபுரம் அடைந்தார்.

தருமர் உயர்ந்த பொற் பீடத்தில் கிழக்கு முகமாக அமர்ந்தார்.அவருக்கு எதிரே அழகு மிக்க பொற் பீடத்தில் கண்ணன் அமர்ந்தார்.தருமர் நடுவில் இருக்க..பின்புறம் இருந்த பீடங்களில் பீமனும்,அர்ச்சுனனும் அமர்ந்தனர்.அழகான இருக்கையில் நகுலன்,சகாதேவன் ,குந்தி ஆகியோர் அமர்ந்தனர்.திருதிராட்டிரன் முதலான மற்றவர்கள் அவரவர் இருக்கையில் அமர்ந்தனர்.தருமர் அருகில் திரௌபதியை அமரவைத்துத் தௌமியர் விதிப்படி ஓமம் செய்தார்.கண்ணன் புனித கங்கை நீரால் தருமருக்கு அபிஷேகம் செய்து முடி சூட்டினார்.எங்கும் துந்துபி முதலான மங்கள வாத்தியங்கள் முழங்கின.அந்தணர்கள் வாழ்த்தினர்.

தருமர் அவையினரை நோக்கி' அவையோரே, எங்களது பெரிய தந்தை திருதிராட்டிர மாமன்னர் எங்களுக்கு தெய்வம் போன்றவர்..என் நன்மையை விரும்பும் அனைவரும் அவரையும் போற்றுதல் வேண்டும்.உங்களுக்கும், எங்களுக்கும் அவரே அரசர்.நீங்கள் அவருக்குச் செய்யும் நன்மையே எனக்குச் செய்யும் நன்மையாகும்.எனது இந்த விருப்பத்தை நீங்கள் எப்போதும் மனதில் கொள்ளவேண்டும்.' என்று கூறினார்.பிறகு அனைவரையும் அவரவர் இடத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

பின்னர் அரசியல் காரியம் தொடங்கியது.தருமர், பீமனுக்கு இளவரசு பட்டம் சூட்டினார்.விதுரரை ஆலோசனைக் குழுத் தலைவராக நியமித்தார்.சஞ்சயனை வரவு..செலவுகளைக் கவனிக்கும் பதவியில் அமர்த்தினார்.அர்ச்சுனனை படைத் தளபதியாக இருக்கச் செய்தார்.நகுலனை படைகளைக் கவனிக்குமாறு கட்டளையிட்டார்.சகாதேவனை எப்போதும் தன் அருகில் இருக்கப் பணித்தார்.அரச புரோகிதராகத் தௌமியர் நியமிக்கப் பட்டார்.பெரிய தந்தையைக் கண்ணும் கருத்துமாக அனைவரும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் வற்புறுத்தினார்.

தருமர் குருக்ஷேத்திர வெற்றிக்குக் காரணமாக இருந்த கண்ணனைக் கை கூப்பித் தொழுதார்.கண்ணனை நூறு நாமங்களால் போற்றிப் புகழ்ந்தார்.'யதுகுலத் திலகமே..உம் அருளால் இந்த அரசு எனக்குக் கிடைத்தது.உலகம் உம் அருள் பார்வையால் நிலை பெற்றுள்ளது. உமக்குப் பலகோடி வணக்கம்' எனப் பணிவுடன் வணங்கினார்.

பின்..துரியோதனின் மாளிகையைப் பீமனுக்கு வழங்கினார்.துச்சாதனனின் மாளிகையை அர்ச்சுனனுக்கு அளித்தார்.துர்மர்ஷனுடைய மாளிகையை நகுலனுக்கும்,துர்முகனுடைய மாளிகையைச் சகாதேவனுக்கும் கொடுத்தார்.'என் அன்புத் தம்பிகளே! என் பொருட்டு நீங்கள் இதுவரை எல்லையற்ற துன்பத்தை ஏற்றீர்.இனி இன்பத்துடன் வாழ்வீர் ' என்றார்.

பின் ,குடிமக்களை அழைத்து அறநெறியில் உறுதியாய் இருக்குமாறு கூறினார்.

97-அனைவரும் பீஷ்மரிடம் செல்லுதல்

அரசாட்சியை ஏற்ற தருமர்..பின்..கண்ணன் உறையும் இடம் சென்றார்.கண்ணன் அப்போது தியானத்தில் இருந்தார்..அது கண்டு வியந்த தருமர்..'மூவுலக நாயகனே..உலக உயிர் அனைத்தும் உம்மை நோக்கி தியானம் செய்கையில்..நீர் மட்டும் யாரை எண்ணி தியானிக்கிறீர்..' என வினவினார்.

'யுதிஷ்டிரா! அம்புப் படுக்கையில் இருக்கும் பீஷ்மர் என்னை நோக்கி தியானம் செய்துக் கொண்டிருக்கிறார்.ஆகவே, எனது உள்ளமும் அவரிடம் சென்றிருந்தது.எவரது நாணொலிக் கேட்டு..இந்திரனும் நடுங்குவானோ..அந்த பீஷ்மரிடம் என் மனம் சென்றிருந்தது.முன்னொரு சமயம்..மூன்று கன்னியர் பொருட்டு அரசர்கள் அனைவரையும் வீழ்த்தி வெற்றி கண்ட அந்த்ப் பீஷ்மரிடம் மனம் சென்றிருந்தது.தெய்வ மங்கை கங்கையின் மைந்தரும்..வசிஷ்டரின் சீடருமான பீஷ்மரிடம் என் மனம் சென்றிருந்தது.எவர் வேத வேதாங்கங்களையும் முக்காலங்களையும் உணர்ந்தவரோ அந்தப் பீஷ்மரிடம் என் மனம் சென்றிருந்தது.எவர் தேவகுருவிடம் அரச நீதியையும், பிரம புத்திரரான சனத்குமாரரிடம் ஆத்ம வித்தைகளையும், மார்க்கண்டேயரிடம் சந்நியாச தர்மத்தையும் அறிந்தவரோ, அந்தப் பீஷ்மரிடம் என் மனம் சென்றிருந்தது.எவர் தனது மரணத்தைத் தடுத்து நிறுத்தும் தவ மேன்மை மிக்கவரோ, எவர் புதல்வனின்றியும் புண்ணியம் பெறத் தக்கவரோ அந்தப் பீஷ்மரிடம் என் மனம் சென்றிருந்தது.யுதிஷ்டிரா..அந்தப் பீஷ்மர் மறைந்தால் நல்லறங்களும் மறைந்து விடும்.ஆகவே அவர் மரணம் அடைவதற்குள் அவரிடம் உள்ள ஞான நல்லறிவை அறிந்து கொள்வாயாக" என்றார் கண்ணன்.

பீஷ்மப் பிதாமகரின் பெருமையைக் கண்ணன் வாயால் சொல்லக் கேட்ட தருமர் கண்ணீர் விட்டார்.'வஞ்சனையால் அவரை வதைக்கச் செய்த நான் எந்த முகத்துடன் அவரைக் காண்பேன்..'என நா தழுதழுக்க வினவினார்.

பின்னர்..கண்ணனும், பாண்டவர்களும்..பீஷ்மரைக் காணத் தேரேறிக் குருக்ஷேத்திரம் சென்றனர்.
98-நெஞ்சை உருக்கும் சந்திப்பு
குருக்ஷேத்திரம் நோக்கிச் சென்றவர்கள் ஓகவதி என்னும் நதிக் கரையில் அம்புப் படுக்கையில் மாலை நேர சூரியன் போல இருந்த பீஷ்மரைக் கண்டனர்.கண்ணனும்,பாண்டவர்களும்,கிருபரும் சிறிது தூரத்திலேயே பீஷ்மரைக் கண்டதும் வாகனங்களிலிருந்து இறங்கி நடந்து அவரை நோக்கிச் சென்றனர்.அணையும் தீபம் போல் இருந்த பீஷ்மரைப் பார்த்து கண்ணன் வருத்தத்தோடு சொல்லத் தொடங்கினார்.

'அறிவின் சிகரமே..அம்புகளால் தாக்கப்பட்ட உங்கள் உடம்பு வலியின்றி இருக்கிறதா?உமது அறிவு தெளிவாக உள்ளதா?உம் தந்தையாகிய சந்தனு கொடுத்த வரத்தால் உங்கள் மரணத்தைத் தள்ளிப் போடும் ஆற்றல் பெற்றுள்ளீர்..நீர் அனைத்தும் அறிந்தவர்.சத்தியத்திலும், தவத்திலும், தானத்திலும் தனுர் வேதத்திலும் அறம் பொருள் இன்பங்களை உணர்ந்த மேன்மையிலும் உம்மைப் போன்ற ஒருவரை நான் மூவுலகிலும் காணவில்லை.தேவாசுரர்கள் அனைவரையும் நீர் ஒருவரே வெல்ல வல்லீர்.எட்டு வசுக்களின் அம்சங்களும் ஒன்று சேர்ந்த ஒன்பதாம் வசு என உலகம் உம்மைப் போற்றுவதை நான் அறிவேன்.பூமியில் உள்ள மனிதர்களில் உமக்கு ஒப்பான ஒரு மாமனிதன் யாரும் இல்லை.இதிகாச புராணங்களில் உள்ள தரும சாத்திரங்கள் அனைத்தும் உம் உள்ளத்தில் நிலைப் பெற்றுள்ளன.இவ்வுலகில் தோன்றும் சந்தேகம் அனைத்தையும் உம்மால் தான் போக்க முடியும்.மனித குல மாணிக்கமே..தருமரின் மனதில் உதித்த சோகத்தையும், சந்தேகத்தையும் விலக்க வேண்டும்"

கண்ணனின் உரையைக் கேட்ட பீஷ்மர் கை கூப்பித் தொழுதார்.மெல்லத் தலையை உயர்த்திச் சொன்னார்..'உலக உயிர்களின் பிறப்புக்கும், இறப்புக்கும் காரணமான நாயகரே..உம்மை நான் சரணடைந்தேன்..உமது அருளால் உமது விசுவரூபத்தை நான் காணும் பேறு பெற்றேன்..உமது திருமுடி ஆகாயத்தை அளாவியிருக்கிறது.உமது திருப்பாதங்கள் பூமியில் தங்கியிருக்கின்றன.திக்குகள் உமது கைகளாக விளங்குகின்றன.சூரியன் உமது கண் ஆவான்.காயாம்பூ மேனி உடையவரே..மின்னல் போல் ஒளி வீசும் உமது மேனியைக் கண்டு வியப்படைகிறேன்..தாமரைக்கண்ணனே..பக்தியுடன் உம்மைச் சரண் அடைந்த எனக்கு நற்கதியை அருள வேண்டும்' எனத் துதிச் செய்தார்.

கண்ணபிரான் .,'எம்மிடத்தில் உமக்கு மேலான பக்தி இருப்பதால் எனது விசுவரூபத்தைக் காட்டினேன்.இன்று முதல் மேலும் 30 நாட்கள் நீங்கள் உயிருடன் இருக்கப் போகிறீர்கள்.இந்த முப்பது நாட்களும் நூறு நாட்களுக்கு நிகரானவை.சூரியன் வடக்கு நோக்கிச் செல்லும் (உத்தராயணம்) காலத்தை எதிர்ப்பார்க்கும் உம்மைத் தேவர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.உமக்கு உயர்ந்த கதி கிடைக்கும்.நீர் அழிவற்ற உலகத்தை அடையப் போகிறீர்..பீஷ்மரே..நீர் மேலுலகம் சென்றதும் இந்த உலகத்தில் உள்ள ஞானங்கள் எல்லாம் குறைந்து போகும்.அதனால் யாவரும் தருமத்தை அறிந்துக் கொள்ள உம்மைச் சூழ்ந்து இருக்கின்றனர்.தருமரின் சோகம் போக..அவர் சந்தேகம் அகல..சகல ஞானத்தையும் அவருக்கு உபதேசம் செய்வீராக..தருமர் உம்மிடம் பெறும் ஞானச் செல்வத்தை உலகுக்கு வாரி வழங்குவார்' என்று கூறினார்.
99-கண்ணனிடம் பீஷ்மரின் பணிவான வினா
கண்ணன் கூறியதைக் கேட்ட பீஷ்மர் மகிழ்ந்தார்..பின் கண்ணனை நோக்கி.."கண்ணா..உமது சந்நிதானத்தில் நான் என்ன சொல்வேன்..உமது வாக்கன்றோ வேத வாக்கு..என் அங்கமெல்லாம் அம்புகளால் துளைக்கப்பட்டு வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறேன்..எனது உள்ளத்திலும் தெளிவு இல்லை..இந்நிலையில் தருமங்களை என்னால் எப்படி எடுத்துரைக்க முடியும்? மன்னிக்க வேண்டும்..உம் எதிரே நின்று பேசும் ஆற்றல் வியாழ பகவானுக்குக்கூடக் கிடையாதே..எனவே வேதங்களுக்கு வேதமாக விளங்கும் நீரே எல்லாத் தருமங்களையும் யுதிஷ்டருக்கு அருளவேண்டும்' என உரைத்தார்.

அது கேட்டு கண்ணன் 'கௌரவர்களில் சிறந்தவரே..உமது தகுதிக்கு ஏற்ப நீர் பேசினீர்..அம்புகளால் தாக்கப்பட்டு வேதனைப்படுவதாக உரைத்தீர்..இதோ நான் அருள் புரிகிறேன்..உமது உடலில் உள்ள எரிச்சலும்..சோர்வும்,தளர்வும் உடனே நீங்கிவிடும்.உம்மிடம் உள்ள மயக்கமும் தொலையும்..இனி நீர் தெளிந்த சிந்தனையுடன் அறநெறிகளை தருமருக்கு எடுத்துரைக்கலாம்..உமக்கு ஞானவழியையும் காட்டுகிறேன்..' என்றார்.

அப்போது அவரை வியாசர் முதலான மகரிஷிகள் துதித்தனர்..தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர்.வனம் தூய்மையாக காட்சி அளித்தது..எங்கும் சாந்தி நிலவியது..சூரியன் மறைந்தான்..அனைவரும் 'நாளை வருகிறோம்' என்று பீஷ்மரிடம் விடை பெற்றுத் திரும்பினர்.

மறுநாள்..கண்ணன்,நாரதர் உட்பட அனைவரும் தருமத்தின் இருப்பிடமான குருக்ஷேத்திரம் வந்தனர்.அனைவரும் அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மரிடம் சென்றனர்.தருமர் பீஷ்மரை கையெடுத்துக் கும்பிட்டார்.பீமன்,அர்ச்சுனன்,நகுலன், சகாதேவன் ஆகியோர்களும்..மற்றவர்களும் சிரம் தாழ்த்தி அவரை வணங்கினர்.

அப்போது நாரதர் அனைவரையும் நோக்கி..'கங்கை மைந்தரிடம் அறிய வேண்டிய அனைத்து தர்மங்களையும் கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள்.இந்தப் பீஷ்மர் சூரியன் போல மறைய இருக்கிறார்.ஆகவே அவரிடம் நெருங்கிச் சென்று வேண்டியதைக் கேளுங்கள் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளுங்கள்' என்றார்.நாரதர் சொன்ன மொழிகளைக் கேட்டதும் அனைவரும் பீஷ்மரை நெருங்கினர்.ஆனால் வாய் திறந்து பேச அஞ்சினர்..அப்போது..

தருமர் கண்ணனிடம் "கண்ணா..உம்மைத் தவிரப் பாட்டனாரிடம் பேசும் சக்தி இங்கு யாருக்கும் இல்லை..ஆதலால் நீரே பேசும்' என்று வேண்டிக் கொண்டார்.பின் கண்ணனே தன் பேச்சை ஆரம்பித்தார்..'கங்கை மைந்தரே..இரவு நேரம் நன்கு கழிந்ததா? சோர்வு போனதா? ஞானங்கள் அனைத்தும் தோன்றுகிறதா?' என்று வினவினார்.

உடன் பீஷ்மர்..

"கண்ணா..உம் அருளால் என் உடல் எரிச்சல்கள் தொலைந்தன..மயக்கம் விலகியது.இப்போது தெளிந்த சிந்தனையுடன் உள்ளேன்..கண்ணா..நீவரம் அளித்தபடி..எல்லாத் தருமங்களும் மனதில் ஒளிவிடுகின்றன.ராஜ தருமம்,ஆபத்துத் தருமம்,மோட்ச தருமம் ஆகிய அனைத்துத் தருமங்களையும் அறிகின்றேன்.எந்தத் தருமத்தில் எப் பிரைவைக் கேட்டாலும் விளக்கமாகச் சொல்கிறேன்..கண்ணா..உன் புண்ணியத்தால்..நான் திரும்பவும் இளைஞன் போல உணருகிறேன்..நற்கதிக்குச் செல்லவிருக்கும் நான் அக்கதியை அடையும் வழியை எடுத்துக் கூறும் வல்லமை பெற்றவனாக உள்ளேன்..ஆயினும்..உம்மிடம் மண்டியிட்டுக் கேட்டுக் கொள்கிறேன்..இந்தத் தரும உபதேசங்களை நீரே தருமருக்குக் கூறாதது ஏன்?' என்றார்.
100-உபதேசிக்க பீஷ்மர் சம்மதம்

கண்ணன் பீஷ்மரின் வினாவிற்கு பதிலளித்தார்..

'வேதம் உள்ள அளவும் உம் புகழ் மேன் மேலும் விரிவடைய வேண்டும்..இந்தப் பூமி உள்ள காலம் வரை உம் புகழ் அழிவற்றதாக இருக்க வேண்டும்..அதற்காகவே இவ்வுபதேசத்தை நீரே அருளுமாறு கூறினேன்..நீர் தருமருக்குச் சொல்லப்போகும் உபதேச மொழிகள் வேதப் பொருளாக உறுதி பெறப் போகின்றன.உமது தெய்வீக உரையைக் கேட்கும் மக்கள் உயிர் துறந்த பின் புண்ணியங்களின் பயனை அடையப் போகின்றனர்.

கங்கை மைந்தரே! இவ்வாறு உம் புகழ் மிகப் பேசப்பட வேண்டும் என்பதற்காகவே உமக்கு மேலான ஞானத்தை அருளினேன்..போரில் கொல்லப்படாமல் இருக்கும் அரசர்கள் யாவரும்..பல தருமங்களையும் கேட்க விருப்பத்துடன் உம்மைச் சூழ்ந்து அமர்ந்திருக்கின்றனர். தர்மங்களை உம்மைவிட அறிந்தவர் எவருமில்லை..உலகில் குறை இல்லாதவரைக் காண முடியாது.ஆனால் உமது பிறப்பு முதல் பாவம் என்பதை உம்மிடம் சிறிதுக் கூடக் காணவில்லை.குறையொன்றும் இல்லாதவரே..ஒரு தந்தை மகற்கு உரைப்பது போல நீர் உபதேசம் புரிவீராக..தர்மம் தெரிந்தவர்கள் அதைத் தெரியாதவர்களுக்கு அதைத் தெரிவிக்க வேண்டும்..அவ்வாறு உபதேசிக்காவிடின் பாவம் வந்து சேரும்..ஆதலால் ஞானக்கடலே..உமது உபதேசம் ஆரம்பமாகட்டும்..' என்றார்.

அது கேட்டு பீஷ்மர்..'கண்ணா..உமது அருளால் நான் பெற்ற ஞான நல்லறத்தை..தருமத்தை உமது தாள் பணிந்து இப்போது சொல்லத் தொடங்குகிறேன்..தருமத்தை விரும்பும் தருமர் என்னிடம் அனைத்து தருமங்களையும் கேட்க விரும்பினால்..நான் மகிழ்ச்சியுடன் சொல்கிறேன்..தருமத்தைப் போற்றும் யார் அரசராக இருப்பதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்களோ அந்தத் தருமர் என்னைக் கேட்கட்டும்..துணிவும், பொறுமையும், தருமமும், வீரமும், பெருமையும் ஆகிய இக்குணங்கள் எப்போதும் எவரிடம் நிலை பெற்றிருக்கின்றனவோ அந்தத் தருமர் என்னைக் கேட்கட்டும்..சத்தியம், தானம், தவம், சுறுசுறுப்பு, பரபரப்பின்மை ஆகிய நற்குணங்கள்..எவரிடம் குடி கொண்டிருக்கின்றனவோ அந்தத் தருமர் என்னைக் கேட்கட்டும்..ஆசையாலோ..அவசரத்தாலோ,பயத்தாலோ, பொருள் கிடைக்கும் என்னும் காரணத்தாலோ..அத் தருமத்திடம் அணுகா தரும சிந்தையுள்ளவர் எவரோ அந்தத் தருமர் என்னைக் கேட்கட்டும்..நான் தருமங்களை தருமருக்குக் கூறுகிறேன்' என்றார் பீஷ்மர்.

அதற்குக் கண்ணன் ' தருமர்..வெட்கத்தாலும்..சாபம் வருமோ என்னும் அச்சத்தாலும் நடுங்குகிறார்.வழிபடத்தக்க பெரியோர்களைப் போர்க் களத்தில் கொன்றதற்காகச் சோகமும், வெட்கமும் கொண்டுள்ளார்.சகோதரர்கள் கொல்லப்பட்டதற்காகப் பெரிதும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளார்.தாம் செய்த தீங்கிற்காக என்ன நேருமோ என பயந்து உமது அருகில் வராது இருக்கிறார்' என்றார்.

அதனை உணர்ந்த பீஷ்மர்..'கண்ணா, போர்க்களத்தில் உயிர் துறத்தல் க்ஷத்திரியர் கடமையாகும்..தந்தையும், பாட்டனும், ஆசாரியரும் உறவினரும் கெட்ட எண்ணத்துடன் போரிட வருவார்களேயாயின் அவர்களைக் கொல்லுதல் க்ஷத்திரிய தர்மம்தான்.க்ஷத்திரியனுக்கு உரிய இத்தகைய போர்த் தருமம் என்றும் மண்ணுலகம் விண்ணுலகம் இரண்டிலும் நற்கதிக்குக் காரணம் என மனு கூறியுள்ளார்' என்றார்.

பிதாமகரின் இவ்வுரையைக் கேட்டதும், தருமர் மிகவும் பணிவுடன் அவரை நெருங்கி அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினார்.வில்லாற்றல் மிக்க பீஷ்மர் மிகவும் மகிழ்ந்து தருமரை அமருமாறு பணித்தார்.பின்னர் சந்தேகங்களைக் கேட்குமாறு பணித்தார்.

(இதுவரை மகாபாரதம் 100 இடுகைகள் முடிந்துவிட்டன..இவ்வலைப்பூவிற்கு வருபவர் எண்ணிக்கைக்கான விட்ஜிட்டை நான் இணைக்கவில்லை..காரணம்..படிப்பவர் எண்ணிக்கை குறைவு எனில்..தொடரை தொடரும் எண்ணம் வராது என்பதால்...இருப்பினும்..இத் தொடரை படிப்பவர் அனைவருக்கும் நன்றி..பீஷ்மரின் உபதேசம்..கிட்டத்தட்ட 100 இடுகைகள் வரலாம்..உங்கள் ஒத்துழைப்புடன் இவை தொடரும்..நன்றி)
101- பீஷ்மர் தருமங்களைச் சொல்லுதல்

தருமர்..கண்ணனையும்..பீஷ்மரையும் வணங்கிவிட்டுத் தம் சந்தேகங்களைக் கேட்கத் தொடங்கினார்..

'ராஜநீதியில் எல்லாத் தருமங்களும் அடங்கியுள்ளன.ராஜநீீதி தவறுமானால் உலகம் துன்புறும்..ஆகவே இந்த ராஜதருமங்களை எனக்கு விரிவாக எடுத்துரைக்க வேண்டும்' என்றார்.

பீஷ்மர்..அதன்படி ராஜதருமங்களைக் கூறத் தொடங்கினார்..

'நாடாளும் மன்னன் எப்போதும் முயற்சியுடன் இருக்க வேண்டும்..முயற்சி இல்லாதவனுக்குத் தெய்வத்தின் உதவி கிடைக்காது.வண்டிக்கு இரு சக்கரங்களைப் போல வாழ்க்கைக்கு இவ்விரண்டும் தேவை.இவ்விரண்டில் முயற்சியே மேலானது.ஒருவேளை உன் முயற்சி வீணாய்ப்போனாலும் அது குறித்து வருந்தக்கூடாது.எப்போதும் விடாமுயற்சி என்பது அரசர்களின் மிகப் பெரிய நீதியாகும்."முயற்சியற்ற மன்னனையும்..வேதம் ஓத வெளியே செல்லாத வேதியனையும் பாம்பு எலிகளை விழுங்குவது போல இப்பூமி விழுங்கிவிடும்" என்று சுக்கிராச்சாரியார் கூறியிருக்கிறார்.

ராஜ தருமத்தில் இரட்சண தருமம் என ஒன்றை அரசன் கவனிக்க வேண்டும்..இந்த இரட்சண தருமத்தை அரச தருமங்களுள் வெண்ணெய் போன்றது எனப் பிரகஸ்பதியும், சுக்கிரரும்,விசாலாட்சாரும், பரத்வாஜரும், கௌரசிரசும், இந்திரனும் போற்றியுள்ளனர்.இந்த இரட்சண தருமம் நிறைவேறும் வகையைக் கூறுகிறேன்...

பொறாமையின்மை,யுக்தியால் வரி வசூலித்தல், உபாயமின்றி வரி வாங்காமை,நல்லவர்களை அணைத்துச் செல்வது ,சூரத்தனம்,சுறுசுறுப்பு,உண்மை,குடிமக்களின் நன்மை,நேராகவும்..கபடமாகவும் பகைவர் பலம் பெறாமல் பார்த்துக் கொள்வது,பழுதான கட்டிடங்களைப் பழுது பார்ப்பது, காலத்திற்கேற்ப உடல் தண்டனை..பொருள் தண்டனை விதிப்பது, படைகளை மகிழ்விப்பது,செயலில் சோர்வின்மை,கருவூலத்தைப் பெருகச் செய்வது,நகரைப் பாதுகாப்பது,காவற்காரரிடம் நம்பிக்கை வைக்காமலிருத்தல்,நண்பர்..பகைவர்..ந்டுநிலையாளர் இவர்களைப் பகுத்தறிதல், வேலைக்காரரைப் பகைவரிடம் சேராதிருக்குமாறு செய்தல்,நகரை வலம் வந்து நேராகப் பார்வையிடுவது, துன்புற்றோர்க்கு ஆறுதல் கூறுவது, பகைவரை அலட்சியப் படுத்தாமை, இழிந்த செயல்களை விலக்குதல், நியாயத்துடன் பொருந்திய விடாமுயற்சி ஆகிய இக்குணங்கள் இரட்சண தருமங்களாகும்.

இந்திரன் விடாமுயற்சியால்தான் அமுதத்தைப் பெற்று அசுரர்களைக் கொன்று இவ்வுலகிலும்..தேவர் உலகிலும் பெரும் புகழ் பெற்றான்..முயற்சியால் சிறந்தவன் கல்வியில் சிறந்த பண்டிதனை விட மேலானவன்.அரசன் அறிவுடையவனாக இருந்தாலும்..அவனிடம் முயற்சியில்லை எனில் அவன் பகைவரால் வெல்லப்படுவான்..அரசன் மிக்க பலமுடையவனாக இருந்தாலும்..பகை சிறிதென்று அலட்சியமாக இருக்கக் கூடாது.நெருப்புச் சிறிதாயினும் சுடும்..நஞ்சு கொஞ்சமாக இருந்தாலும் கொல்லும்..இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு ஆளும் அரசன் இறந்த பிறகும் புகழப்படுவான்.

உன் செயல் அனைத்தும் சத்தியத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்..தவத்தோர்க்கு எப்படிச் சத்தியம் முதற் பொருளாக இருக்கிறதோ அப்படி அதுவே அரசர்க்கும் முதற் பொருளாகும்..நற்குணமும், நல்லொழுக்கமும்,புலனடக்கமும், தெளிவும்,தானமும் உள்ள அரசனை விட்டு ராஜ்யலட்சுமி விலக மாட்டாள்.. (தொடரும்)
102- பீஷ்மர் தருமங்களைச் சொல்லுதல் (2)
தருமரே! வெளியிடத்தகாத அரசாங்க ரகசியங்களைத் தவிர மற்றவற்றில் உண்மை பேச வேண்டும்..எப்போதும் அரசன் சாந்த குணம் கொண்டவனாக இருக்கக் கூடாது.எப்போதும் சாந்த குணம் கொண்ட அரசனை உலகம் மதிக்காது மீறி நடக்கும்..யானையின் தலையில் மாவுத்தன் ஏறுவது போலத் தாழ்ந்த மனிதனும் பொறுமை உள்ள அரசனை அவமதிக்கும் செயலில் ஈடுபடுவான்.அதற்காக அரசன் எப்போதும் கடுமையாகவும் நடந்து கொள்ளக் கூடாது.கடுமையான அரசனிடம் மக்கள் அன்பு பாராட்ட மாட்டார்கள்.ஆதலால் அரசன் எந்தெந்த நேரத்தில் எப்படி எப்படி நடக்க வேண்டுமோ..அந்தந்த நேரத்தில் அப்படி அப்படி நடந்து கொள்ள வேண்டும்.அதாவது அதிகத் தட்பமும் அதிக வெப்பமும் இல்லா வசந்த காலத்துச் சூரியனிப் போல இருக்க வேண்டும்.

மேலோரிடம் பணிவுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.இது பொது விதி..ஆயினும் மேலோர் தவறிழைத்தால் அவர்களையும் தண்டிக்கத் தயங்கக் கூடாது.மகரிஷி சுக்கிராச்சாரியார் இது சம்மந்தமாகச் சொன்னதை நினைவில் கொள்ள வேண்டும்..போர்க்களத்தில் தனது தருமத்தை மீறி அந்தணன் ஆயுதம் ஏந்திப் போர் புரிவானாயின் அரசன் அந்த அந்தணனை ஆயுதத்தால் தண்டிக்க வேண்டும்.. அரச தருமம் அனைத்துத் தருமத்தை விடச் சிறந்தது..அரசாங்கத்திற்குத் தீங்கு இழைப்போர் நண்பராக இருந்தாலும்..குருவாக இருந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும்.

அரசன் பதினெட்டுக் குற்றங்களை விலக்க வேண்டும்..இவற்றில் வேட்டை,சொக்கட்டான்,பகல் உறக்கம்,பிறரை நிந்தித்தல்,பெண் மயக்கம்,மதம், வீண் பாட்டு,கூத்து, வாத்தியங்கள்,குடி ஆகிய இப் பத்தும் காமத்தால் உண்டாவன.தெரியாத குற்றத்தை வெளிப்படுத்துவது,குற்றமற்றவனைத் தண்டிப்பது,வஞ்சனையாக ஒருவனைக் கொலை செய்வது,பிறர் புகழ் கண்டு பொறாமை கொள்வது,பிறர் குணங்களைக் குற்றமாகக் கூறுவது,பிறர் பொருளைக் கவர்ந்து கொள்வது ,கடுஞ்சொல் கூறுவது,கடுமையான தண்டனை வழங்குவது..ஆகிய எட்டும் சினத்தால் வருவன.அரசன் இவற்றை அறவே விலக்க வேண்டும்.

அரசன் எப்போதும் கர்ப்பிணியின் தருமத்தில் இருக்க வேண்டும்..கர்ப்பிணி தன் மனதிற்கும், நாவிற்கும் சுவையான உணவு உண்ணாமல்..கர்ப்பத்தை வளர்க்கத் தக்க வழியில் இருப்பது போல , அரசனும் தனக்கு வேண்டும் என்ற செயலைத் தள்ளிவிட்டு உலகுக்கு நன்மை பயக்கும் தரும வழியில் செல்ல வேண்டும்..தைரியமாக நியாயமான தண்ட நீதியைச் செலுத்த வேண்டும்..அப்படி நடந்துக் கொண்டால் யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.

அரசன் வேலைக்காரருடன் பரிகாசமான வார்த்தைகள் பேசக்கூடாது.பரிகாசமாகப் பேசும் மன்னனை ஏவலர்கள் அவமதிப்பார்கள்.அரசனின் உத்தரவை மீறி நடப்பார்கள்..ரகசியத்தைக் கேட்பார்கள்..அத்துடன் நில்லாது அதனைப் பறை சாற்றுவார்கள்.லஞ்சம் வாங்கி அரச காரியத்தைக் கெடுத்து விடுவார்கள்.அரசன் உத்தரவு எனப் பொய்ச் செய்திகளை பரப்புவர்.அரசன் எதிரில் அநாகரிகமாக நடந்துக் கொள்வர்.நான் சொன்னால் சொன்னபடி அரசன் நடப்பான் என ஆணவத்துடன் உரைப்பர்..ஆகவே வேலைக்காரர்களிடம் விழிப்பாக இருக்க வேண்டும்.

அரசன் எப்போதும் அமைச்சர்களுடன் செய்யும் ஆலோசனைகளைப் பிறர் அறியாவண்ணம் மறைவாகச் செய்ய வேண்டும்.காலையில் அறத்திலும்..மாலையில் பொருளிலும், முன்னிரவில் இன்பத்திலும்,பின்னிரவில் தெய்வ சிந்தனையிலும் ஈடுபட வேண்டும்.அரசன் நான்கு வருணத்தாரின் தர்மங்களையும் காக்க வேண்டும்.எல்லோரையும் நம்பி விடக் கூடாது.நம்பத் தக்கவர்களை மட்டுமே நம்ப வேண்டும்.அவர்களிடமும் அளவு கடந்த நம்பிக்கை கூடாது.

ஓதுவிக்காத ஆசிரியன், ஓதாத ரித்விக், பாதுகாவாத மன்னன், விருப்பம் இல்லாதவற்றைக் கூறும் மனைவி,கிராமத்திலேயே இருக்க விரும்பும் இடையன்,காட்டிலேயே இருக்க விரும்பும் நாவிதன் ஆகிய இந்த அறுவரையும் கடலில் உடைந்த கப்பலைப் போல தள்ளிவிட வேண்டும் என பிராசேதச மனு கூறியுள்ளார்.

நாட்டை நன்கு பாதுகாப்பதை விட மேலான ராஜ தர்மம் வேறேதும் இல்லை.' எனக் கூறி முடித்தார் பீஷ்மர்.அவர் உரையைக் கேட்டுக் கொண்டிருந்த வியாசர்,கண்ணன்,சாத்யகி ஆகியோர் மகிழ்ந்தனர்.

தருமர்..கண்களில் கண்ணீருடன் பீஷ்மரை வணங்கி 'மேலும் ஐயங்களை நாளை கேட்பேன்' என்று விடை பெற்றார்.பின்னர் அனைவரும் அஸ்தினாபுரம் அடைந்தனர்.


103-அரசன் என்பது எப்படித் தோன்றியது
(சில வலையுலகப் பிரச்னையால்..சில நாட்கள் எழுதாமல் இருந்தேன்..அதனால் தான் தாமதமாக பதிவு வந்துள்ளது..இனி வார வாரம் தொடரும்..நன்றி)

மறுநாள் காலையில் பாண்டவர்களும் பிறரும் குருஷேத்திரம் சென்று பீஷ்மரை வணங்கி அருகில் அமர்ந்தனர்.தருமர் பீஷ்மரை..'அரசன் தோன்றிய வரலாற்றை விளக்கும்படிக் கேட்டார்.'இன்பம் துன்பம்,பசி தாகம்,பிறப்பு இறப்பு முதலியவை மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானவை.அப்படி இருக்கையில் எப்படி ஒருவன் மட்டும் அவர்களுக்குத் தலைவனாக இருக்கக்கூடும்?அறிவு ஜீவிகள் பலர் இருக்க அது எப்படி ஒருவன் மட்டும் ஆளத்தக்கவன் ஆவான்? இதற்கான காரணம் சாதாரணமாய் இராது..ஆகவே அது பற்றி விளக்க வேண்டும்' என்றார்.

பீஷ்மர் கூறத் தொடங்கினார்..'ஆதி காலத்தில்..கிருத யுகத்தில் மக்கள் யாவரும் தரும நெறியைப் பின் பற்றி வாழ்ந்தனர்.ஒழுக்கம் தவறாத அக்காலத்தில் மன்னனும் இல்லை, தண்டனையும் இல்லை..காலம் செல்லச் செல்லத் தரும நெறி குன்றியது.அறிவின் குறைவால் ஆசை வயப்பட்ட மனிதர் தம்மிடம் இல்லாது பிறரிடம் உள்ள பொருளைப் பெற விரும்பினர்.அதனால்..திருட்டு,கொலை,சூது,சினம் முதலிய கெட்ட குணங்கள் தலைவிரித்து ஆடத் தொடங்கின.எதைச் செய்வது..எதை செய்யக்கூடாது என வரைமுறை இன்றிப் போயிற்று.காமம் மிகுந்தது..மாதரின் ஒழுக்க நெறியும் குறைந்தது.வேத நெறி பாழ்பட்டது.தரும நெறி சிதைந்தது.இது கண்டு தேவர்கள் கவலையுற்றனர்.பிரம்ம தேவனிடம்சென்று'பகவானே..அருள் புரியுங்கள்..உலகில் தருமம் கெட்டது..அதர்மம் சூழ்ந்துள்ளது.நெறி கெட்ட உலகை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்' என முறையிட்டனர்.

பிரம தேவர் ஒரு லட்சம் அத்தியாயங்கள் கொண்ட நீதி சாத்திரத்தை இயற்றினார்.அதில் அவர் விரிவாக அறம், பொருள், இன்பம் மூன்றையும் விளக்கினார்.இம் மூன்றைக் காட்டிலும் மோட்சம் என்பது வேறானது என்றும்..அதில் கூறப்பட்டுள்ளது.மேலும் அதில் சத்துவம்,ராஜசம்,தாமதம் ஆகியவை பற்றியும்..தேசம்,காலம்,முயற்சியின் பயன்,ஞானம்,கருமம்,மந்திர ஆலோசனை,அரசன்,அமைச்சன்,தூதன்,ஒற்றன் ஆகியோர் இயல்பு பற்றியும்,சந்திவிக்கிரகம்,வெற்றிக்குரிய வழிகள்,நால் வகை படையின் இயல்புகள்,பெற முடியாத பொருளைப் பெறும் உபாயம்,பெற்றதைக் காக்கும் முறை,குற்றங்களுக்கு ஏறபத் தண்டனை ஆகியவை பற்றியும் விரிவாக இந்தத் தண்டனை நூலில் விளக்கப்பட்டுள்ளன.

பிரமதேவர் இயற்றிய இந்த நீதி சாஸ்திரத்தை சிவன் ..மக்கள் ஆயுள் வரவரக் குறைந்து வருவதைக் கண்டு பத்தாயிரம் அத்தியாயங்களாக அமைத்து அதற்கு வைசாலட்சம் என்று பெயரிட்டார்.இந்திரன் இதனை இன்னும் சுருக்கி 'பாஹூதந்தகம்' எனப் பெயரிட்டார்.அதனைப் பிரகஸ்பதி மூவாயிரம் அத்தியாயங்களாக்கி 'பாரஹஸ் பத்தியம்'என்று பெயரிட்டார்.சுக்கிரர் அதனை ஆயிரம் அத்தியாயங்களாகச் சுருக்கினார்.

இவ்விதம் மக்கள் ஆயுள் குறைவைக் கருதி இந்த நீதி சாஸ்திரம் மாமுனிவர்களால் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

104-அரச பரம்பரை தோற்றம்
தேவர்கள் திருமாலிடம் சென்று மக்களை அடக்கி ஆளத்தக்க பெருமை மிக்க ஒருவனை தருமாறு வேண்டினர்.திருமால் 'விஜரஸ்' என்னும் புத்திரனை உண்டாக்கினார்.ஆனால் விஜரஸ் மன்னாக விரும்பவில்லை.துறவியானார்.அவருக்கு மகனாகப் பிறந்த கீர்த்திமான் என்பவரும் துறவுக் கோலம் பூண்டார்.அவருக்கு மகனாகக் கர்த்தமர் என்பவர் பிறந்தார்.அவருக்கு மைந்தனாக அனங்கன் பிறந்தார்.அவர் தண்ட நீதியில் வல்லவராக ஆட்சி புரிந்தார்.அனங்கனுக்குப் புதல்வனாக அதிபலன் என்பவன் பிறந்து சிறந்த முறையில் ஆண்டான்.அவன் தருமதேவரின் மகளான சுந்தியை மணந்து காம வயப்பட்டு அவளிடம் மயங்கிக் கிடந்தான்.

அவர்களுக்கு வேனன் பிறந்தான்.அவன் கொடுங்கோலனாகத் திகழ்ந்தான்.தரும நெறி தவறிய அவனை தவ முனிவர்கள் கொன்றனர்.வேனனுக்குப் பிறந்த முதல் மகன் நிஷதன் ஆவான்.குள்ளமாகவும்,கொடூரனாகவும் காணப்பட்ட அவனிடமிருந்து குரூரமான நிஷாதர்கள் தோன்றினர்.அவர்கள் விந்திய மலையை இருப்பிடமாகக் கொண்டனர்.அவர்கள் மிலேச்சர்கள் எனப்பட்டனர்.

வேனனின் இரண்டாவது மகன் பெயர் பிருது.அவன் இந்திரனுக்கு நிகரானவன்.தனுர் வேதத்தில் சிறந்தவன்.உலகிற்கு நன்மை புரிந்து ஆட்சி செய்ததால் உத்தமன் எனப் போற்றப்பட்டவன்.'ஆசை,கோபம்,ஆணவம் இன்றி விருப்பு,வெறுப்பு இல்லாமல் ஆட்சி புரிய வேண்டும் என்றும் தருமம் தவறியவர்களை தண்டிக்கத் தயங்கக் கூடாது'என்று சான்றோர் அவனுக்கு அறிவுரை கூறினர்.அவனும் அவ்வாறே ஆண்டதால்..ஆட்சி பெருமை மிக்கதாய் இருந்தது.உழவுத்தொழில் சிறந்தது.காட்டைத் திருத்தி நாடாக்கினான்.மலைகளை உடைத்து பூமியை சமமாக்கினான்.

பூமிதேவி ரத்தினங்களை அளித்து பிருது மன்னனை வாழ்த்தினாள்.அவன் காலத்தில் நாடே மகிழ்ச்சியாய் இருந்தது.பஞ்சம் எங்கும் இல்லை.வளம் கொழித்தது.கள்வர் பயம் இல்லை.கொடிய விலங்குகள் பற்றிய அச்சமும் மக்களிடம் இல்லை.விஷ்ணு,விரஜஸ்,கீர்த்திமான்,கர்த்தமன்,அனங்கன்,அதிபலன்,வேனன்,பிருது என்ற வரிசைப் படி விஷ்ணுவின் எட்டாவது சந்ததி பிருது மன்னன்.அவனால் தரும நெறி எங்கும் தழைத்தோங்கியது.இவ்வாறு அரச பரம்பரை தோன்றியது.அவன் திருமாலின் அம்சமாகவே கருதப்பட்டான்.உலக பாலர் உருவாய் நின்று உலகம் காத்தலின் இறைவன் என்றும் அழைக்கப்பட்டான்.

நான்கு குலங்கள்:
தருமர் கேட்டார்..'நான்கு குலங்களுக்கும் உள்ள பொதுவான தர்மங்கள் யாவை? சிறப்பானவை யாவை?'

பீஷ்மர் சொல்கிறார்..'சினம் இன்மையும்,சத்தியமும்,நேர்மையும்,தானமும், ஒழுக்கமும் எல்லாச் சாதிகளுக்கும் உள்ள பொது தர்மங்களாகும்..அடக்கம்,வேதம் ஓதுதல்,ஓதுவித்தல்,வேள்வி செய்தல்,செய்வித்தல்,தானத்தையும், யாகத்தையும் செய்வதுடன் கிடைத்ததைக் கொண்டு வாழ்தல்,தனக்கென வாழாது..நாளைக்கு என சேமித்து வைக்காது இருத்தல் ஆகியவை அந்தணர்க்குரிய தருமங்கள் ஆகும்.

யாகம் செய்தல்,வேதம் ஓதுதல்,ஈதல்,திருடர்களை ஒழித்தல்,விடா முயற்சி,போர்க்களத்தில் வீரத்துடன் போர் புரிதல்,தீயவர்களைத் தண்டித்தல்,நல்லவர்களைக் காத்தல் ஆகியவை க்ஷத்திரியர்களின் தருமங்கள் ஆகும்.

நாணயமான முறையில் பொருள் சேர்த்தல்,தானம் புரிதல்,பசுக்களைப் பாதுகாத்தல் முதலியவை வைசியரின் தருமங்களாகும்

மேற்கூறிய மூவகை வருணத்தார்க்கும் தொண்டு செய்வது நான்காம் வருணத்தாரின் தருமமாகும்' என்றார்..

105-சிறந்தது அரச தருமம்
(பீஷ்மர் தருமருக்கு உரைத்தல்)
பிரமசர்யம் - குருவின் கட்டளைக்கு அடங்கி நடக்க வேண்டும்.அவருக்கு பணிவிடை செய்ய வேண்டும்.வேதம் ஓத வேண்டும்.அடக்கம்,சுறுசுறுப்பு ஆகைய இவை பிரமசர்யம் ஆகும்

கிரகஸ்தம்- இல்லற தருமத்தில் தலையாயது விருந்தோம்பல்.மனைவியுடன் கூடித் தான தருமத்துடன் வாழ்தல் இல்லற தருமமாகும்.

சந்யாசம்-துறவு மேற்கொண்டு பற்றற்று இருப்பது சந்யாசம்.உயிர் வாழ சிறிதே உண்பர் துறவிகள்.ஒரு நாளைக்கு ஒரு வேளை..அதுவும் எட்டுக் கவளமே உண்பர்.ஒரு நாள் தங்கிய ஊரில் மறுநாள் தங்குவதில்லை.புலன் ஐந்தும் அடங்கும் வகையில் தியானம்,தவம் ஆகியவற்றில் ஈடுபட்டிருப்பது சந்யாச தர்மமாகும்.

யாவற்றினும் சிறந்தது அரச தருமம்- யானையின் அடியில் மற்ற விலங்குகளின் அடிகள் அடங்கி விடுவது போல அரச தருமத்தில் அனைத்து தருமங்களும் அடக்கம்.எந்த நாட்டில் அரச தருமம் குன்றுகிறதோ அந்த நாட்டில் அனைத்துத் தருமங்களும் சிதைந்து போகும்.வேதம் ஓதுதல்,ஓதுவித்தல்,தானம்,தருமம் ஆகிய அனைத்துத் தருமங்களும் அரச தருமத்தையே ஆதாரமாகக் கொண்டுள்ளன.ஆதலால் அரச தருமத்தை விட மேலானதாக எந்தத் தருமமும் இல்லை.

மாந்தாதா என்ற மன்னன் அரச தருமங்களை விளக்குமாறு திருமாலிடம் முறையிட வேள்வி செய்தான்.திருமால் இந்திரன் வடிவில் வந்து அரச தருமங்களை விளக்கினார். 'நல்லாட்சி நடத்தும் அரசர்களைத் தேவர்களும் பாராட்டுவர்.உலகில் நடைபெறும் நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனித்து நாடாளும் மன்னன் எல்லோராலும் போற்றப்படுவான்.' என்றார்.'எனவே அரச தருமத்திற்கு மேலான தருமம் எங்கும் , எக்காலத்தும் கிடையாது.எனவே..தருமா..நீயும் அரச தருமத்தில் உறுதியோடு இருப்பாயாக'

தருமா..பகை நட்பு இன்றி அனைவரையும் சம நிலமையில் வைத்து அரசாளும் அரசன் துறவிகள் பெறும் மேலான கதியை அடைவான்.போர்க்களத்தில் வெற்றி அல்லது வீர மரணம் என கடைசி வரை போராடும் மன்னன் துறவிக்கு நிகரானவன்.நீதி தவறாது நாடாளும் அரசனை நாட்டில் இருக்கும் மக்கள் செய்யும் தருமங்களின் புண்ணியப் பலனில் நான்கில் ஒரு பாகம் வந்தடையும்.அதேபோன்று கொடுங்கோல் ஆட்சி புரியும் மன்னனை..நாட்டில் வாழும் மக்கள் செய்யும் பாவத்தில் நான்கில் ஒரு பாகம் வந்து சேரும்.கானகம் சென்று கடுந்தவம் செய்யும் முனிவர்களை விட நாட்டை நன்கு பரிபாலிக்கும் அரசன் நூறு மடங்கு தருமத்தை அடைவான்.நாட்டில் நல்லாட்சி இல்லையெனில் நீர் நிலைகளில் பெரிய மீன் சிறு மீன்களை விழுங்குவதைப்போல வலியோர் மெலியோரை விழுங்கி விடுவர்.

முற்காலத்தில் நாட்டில் அரசன் இல்லாததால் எங்கும் அராஜகம் நிலவியது.மக்கள் பிரமனிடம் சென்று 'நாட்டில் எங்கும் குழப்பம் நிலவுகிறது.நாட்டை நல்வழிப் படுத்தி நல்லாட்சி அமைய ஒரு அரசரை அளித்தால்..அவரை வழிப்படுவோம்' என முறையிட்டனர்.பிரம தேவர் மனுவை அரசனாக இருக்கச் சொன்னார்.நாட்டாட்சி என்பது கடினமான செயல் என மனு தயங்க..மக்கள் ஒத்துழைப்பதாக வாக்களித்தனர்.நல்லாட்சியை மக்களுக்கு மனு வழங்கி, யாவரும் போற்றத்தக்க மேலான கதியை அடைந்தான்.

முன்னொரு சமயம் வசுமனஸ் என்னும் அரசன் தேவ குருவான பிரகஸ்பதியிடம் சென்று தனக்கு ராஜநீதியை அருளும்படிக் கேட்டான்.அவர்'உலகில் தருமம் நிலைத்திருக்க வேண்டுமானால் நல்ல அரசன் இருக்க வேண்டும்.அரசனிடம் கொண்ட அச்சம் காரணமாகத்தான் மக்கள் ஒருவரை ஒருவர் வஞ்சிக்காமல் இருக்கின்றனர்.சூரியனும், சந்திரனும் இல்லையெனில் உலகம் இருளில் மூழ்கிவிடும்.அது போல அரசன் இல்லா நாடும் கெடும்.ஒழுங்காக நாட்டை ஆளும் அரசன் இல்லையெனில் மேய்ப்பவன் இல்லா..பசு மந்தைப் போல நாடு சிதறிப் போகும்.தண்ட நீதியில்லை எனில் நாட்டில் திருடர் பயம் அதிகரிக்கும்.அப்பாவிகள், தருமவான்கள் ஆகியோரை அடித்துத் துன்புறுத்திப் பொருளைக் கவர்ந்து செல்வர்.உத்தமர் ஆட்சியில் மக்கள் கதவைத் திறந்து வைத்து உறங்குவர்.விலை உயர்ந்த அணிகளை அணிந்து மகளிர்..ஆடவர் துணையின்றி அச்சமின்றி வெளியில் சென்று வருவர்.ஒரு நாட்டில் பெண்கள் பயமின்றி வாழ்கிறார்கள் எனில் அது அந்த நாட்டில் நல்லாட்சி நிலவுகிறது என்பதற்கான அடையாளமாகும்.

மன்னன் முறையே அக்கினி,சூரியன்,மிருத்யு,குபேரன்,யமன் ஆகிய ஐந்து தேவர்களின் வடிவமாவான்.எனவே அரசனைப் பெருந் தெய்வமாக வணங்க வேண்டும்.உடன் பிறந்தவனாயினும் ,மகனாயினும்,நண்பனாகினும் அரசனுக்கு துரோகம் இழைத்தால் கடுமையாக தண்டிக்கப்படுவான்.அரசனின் சினத் தீயிலிருந்து யாரும் தப்ப முடியாது.நாடாளும் மன்னன் போஜன்,விராட்,சாம்ராட்.க்ஷத்திரியன்,பூபதி என்றெல்லா, புகழப்படுகிறான்.அரசன் அறிவு மிக்கவரை அமைச்சராக வைத்துக் கொள்ள வேண்டும்.நாட்டு மக்களைக் காப்பது அவனது தலையாய கடமை'என்று கூறினார் பீஷ்மர்.

106-அரசாட்சி பற்றிப் பீஷ்மர்

தருமர், பிதாமகாரிடம் 'சிறப்பான மன்னன் செய்ய வேண்டிய செயல்கள் எவை? கிராமங்களைக் காப்பதும்,ஒற்றர்களை ஏவுவதும்,குடிமக்களை அன்புடையவர்களாக இருக்குமாறு செய்வதும் எங்ஙனம்? என்று கேட்டார்.

பீஷ்மர் கூறத் தொடங்கினார்..'அரசன் முதலில் தன்னை வெல்ல வேண்டும்.அதாவது ஐம்பல அடக்கம் வேண்டும்.பிறகு பகைவரை வெற்றி கொள்ள வேண்டும்.தன்னை வென்றவனே பகைவனை வென்றவன் ஆவான்.கோட்டைகள்,நாட்டின் எல்லை,மக்கள் கூடும் இடங்கள்,சோலைகள்,ரகசியமான இடங்கள்,அரண்மனை ஆகியவற்றைப் பாதுகாக்கத் தகுதியுள்ள ஆட்களை நியமிக்க வேண்டும்.நன்றாகச் சோதிக்கப்பட்டவர்களும்,அறிவாளிகளும்,பசி,தாகங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்புடையவர்களும்,சமயத்தில் முட்டாளும்,குருடனும்,செவிடனும் போல நடிக்கத் தெரிந்தவர்களும் ஆகியவர்களையே ரகசிய ஒற்றர்களாக நியமிக்க வேண்டும்.அரசன் எல்லா அமைச்சர்களிடத்தும்,மூவகை நண்பர்களிடத்தும்,மைந்தரிடத்திலும் ,நகரத்திலும்,கிராமத்திலும்,பிற மன்னர்களிடத்திலும் ஒருவரை ஒருவர் அறியா வண்ணம் ஒற்றர்களை இருக்கச் செய்ய வேண்டும்.

கடைகள்,விளையாடும் இடங்கள்,மக்கள் கூடும் இடங்கள்,வீதிகள்,தோட்டங்கள்,பூங்காக்கள்,கல்வி நிலையங்கள்,நீதிமன்றங்கள்,வேலைக்காரர்கள் இருக்கும் இடங்கள், செல்வந்தரின் வீடுகள் ஆகிய இடங்களில் பிற அரசர்களால் அனுப்பப்படும் ஒற்றர்களைத் தன் ஒற்றரைக் கொண்டு தேடி அறிந்து தண்டிக்க வேண்டும்.ஒற்றரைத் தடுப்பதன் மூலம் தீமைகள் தடுக்கப் படும்.

பகை அரசன் தன்னை விடப் பலம் உள்ளவனாக இருந்தால் தூது அனுப்பிச் சமாதானம் செய்துக் கொள்ள வேண்டும்.நூல் அறிவு மிக்க அந்தணர்களையும்,க்ஷத்திரியர்களையும்,வைசியர்களையும் அமைச்சர்களாகக் கொள்ள வேண்டும்.பகைவர்களைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.தக்க காலம் வரும்போது அவர்களை விரைந்து கொல்ல வேண்டும்.எப்போதும் மூர்க்கத்தனமாக போரையே நாடக் கூடாது.சாமம்,தானம்,பேதம் ஆகிய மூன்று வழிகளில் பெறக் கூடிய பொருள்களை அடைய வேண்டும்.குடிமக்களைக் காக்க வெண்டி அவர்களிடம் இருந்து ஆறில் ஒரு பங்கு வரி வசூல் செய்ய வேண்டும்.குடிமக்களைத் தான் பெற்ற மக்களைப்போல் கருத வேண்டும்.நீதி செலுத்துகையில் நண்பன் என்று பார்க்கக் கூடாது.நேர்மையும்,நடுவு நிலை தவறாமையும் உள்ளவர்களை நீதிபதிகளாக அமர்த்த வேண்டும்.இந்தக் குணங்கள் யாவும் மன்னனிடத்தில் எப்போதும் குடி கொண்டிருக்க வேண்டும்.

பலதுறை வல்லுநர்களை அரசன் எப்போதும் கலந்து ஆலோசிக்க வேண்டும்.தங்கம்,ரத்தினம் ஆகியவற்றை எடுக்கும் இடங்களிலும்,உப்பளத்திலும்,சுங்கச்சாவடிகளிலும் ,யானைக் கூட்டம் உள்ள இடத்திலும்,அமைச்சர்கள் அல்லது நம்பிக்கை உள்ளவர்களை நியமிக்க வேன்டும்.எப்போதும் தண்டநீதி செலுத்தும் அரசனைத் தருமம் வந்தடையும்.தண்டநீதி என்பது அரசனுக்கு உத்தம தருமமாகும்.அரசன் பகைவரிடத்து எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும்.அவர்கள் வரக்கூடிய பாலங்களை உடைக்க வேண்டும்.வழியை அடைக்க வேண்டும்.வெகு தொலைவில் இருந்து வரும் பகைப் படைகளைக் கண்காணிப்பதற்குப் புற மதில்களில் அமைக்கப் பட்டுள்ள பிரகண்டி என்னும் இடங்களையும் ,மதில்மீது இருந்து அதைப் பற்ற வரும் பகைப்படை மீது அம்பு செலுத்தும் 'அகாசஜநநீ' என்னும் இடங்களையும் நன்கு பாதுகாக்க வேண்டும்.நால்வகைப் படைகளைப் பற்றிய ரகசியங்களைப் பகைவர் அறியாதவாறு பாதுகாக்க வேண்டும்.ஏராளமான முதலைகளும்,திமிங்கலங்களும் அகழியில் இருக்குமாறு செய்ய வேண்டும்.நாடெங்கும் கிணறுகளை வெட்ட வேண்டும்.முன்னோர்களால் வெட்டப்பட்ட கிணறுகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.கற்களாலும்,செங்கற்களாலும் வீடுகளை அமைக்க வேண்டும்.தேவையான இடங்களில் தண்ணீர்ச் சாலைகளையும் கடைகளையும் ஏற்படுத்த வேண்டும்.சந்தர்ப்பவசத்தால் காரணமின்றி ஒருவரைச் சினம் கொண்டு தண்டித்திருந்தால் அவன் மகிழ்ச்சியடையும்படி நல்ல சொற்களைக் கூறிப் பொருளையும் கொடுத்து அவனது வெறுப்புணர்ச்சியை மாற்ற வேண்டும்'

107-முப்பத்தாறு குணங்கள்

'தருமா..அறம்..பொருள்..இன்பம்..இம்மூன்றையும் காலத்திற்கேற்றபடி போற்ற வேண்டும்.காலம் அரசனுக்குக் காரணமா..அல்லது அரசன் காலத்துக்குக் காரணமா என்ற சந்தேகம் உனக்கு வரக்கூடாது.அரசன் தண்ட நீதியை நன்றாகச் செலுத்தி வந்தால்...அச்சமயத்தில் கிருதயுகம் நடைபெறுவதாக உணர வேண்டும்.அப்போது மக்கள் மனதிலும் தருமமே நிலைத்திருக்கும்.அதர்மம் தலை காட்டாது. மக்கள் நோயின்றி நீடு வாழ்வர்.மக்களின் குரலும்,நிறமும்,மனமும் தெளிவாக விளங்கும்.அக்காலத்தில் பெண்கள் விதவைகளாக ஆவதில்லை.கொடிய மனிதர்கள் உண்டாக மாட்டார்கள்.உழவு இன்றியே பூமி பயன் தரும்.இவை கிருதயுக தருமம்.அரசன் தண்ட நீதியின் ஒரு பாகத்தைத் தள்ளிவிட்டு மற்ற மூன்று பாகங்களையும் தொடர்ந்து செய்யும்போது திரேதாயுகம் நடைபெறும்.அக் காலத்தில் தருமத்தில் மூன்று பாகமும் அதருமத்தில் ஒரு பாகமும் கலந்து நிற்கும்.அந்தக் காலத்தில் உழுதால்தா பூமி பயனைத் தரும்.

அரசன் தண்ட நீதியின் பாதி பாகத்தை நீக்கிவிட்டுப் பாதி பாகத்தைத் தொடந்து நின்றால் துவாபாரயுகம் நடைபெறும்.அக்காலத்தில் இரண்டு பாகம் புண்ணியமும், இரண்டு பாகம் பாவமும் கலந்து நடைபெறும்.அப்போது உழுது பயிரிட்டாலும் பூமி பாதி பயனைத்தான் தரும்.அரசன் தண்ட நீதியை முழுவதுமாகக் கைவிடின் கலியுகம் நடைபெறும்.கலியுகத்தில் எங்கும் அதர்மமே தலை விரித்து ஆடும்.தருமத்தை காண முடியாது.நான்கு வருண தருமங்கள் சிதறிப் போகும்.வியாதிகள் பெருகும்.ஆடவர் அகால மரணமடைவர்.மகளிர் விதவை ஆவர்.ஆகவே தருமா, நான்கு யுகங்களுக்கும் காரணன் என உணர்ந்து நாட்டை நன்கு காப்பாயாக' என்றார் பீஷ்மர்.

தருமர்..'இம்மையிலும்..மறுமையிலும் அரசனுக்கு நன்மை தரக்கூடிய குணங்கள் யாவை?'என்று பீஷ்மரிடம் கேட்க..

பீஷ்மர் சொல்கிறார்..'ஒரு மன்னன் 36 குணங்களைக் கடை பிடிக்க வேண்டும்.அவை

1) விருப்பு, வெறுப்பு இன்றித் தர்மங்களைச் செய்தல்
2) பரலோகத்தில் விருப்புடன் நட்புப் பாராட்டுதல்
3)அறவழியில் பொருளை ஈட்டுதல்
4)அறம் பொருள்கட்கு அழிவின்றி இன்பத்தைப் பெறுதல்
5)யாருடனும் அன்புடன் பேசுதல்
6)நல்லவர் அல்லாதார்க்குத் தராத கொடையாளியாக இருத்தல்
7)தற்புகழ்ச்சியின்றி இருத்தல்
8)கருணையுடன் இருத்தல்
9)கெட்டவர்களுடன் சேராது நல்லவர்களுடன் சேர்ந்திருத்தல்
10)பகைவன் எனத் தீர்மானித்துப் போரிடல்
11)நற்குணம் அற்றவரிடம் தூதர்களைச் சேராது இருத்தல்
12)பிறர்க்குத் துன்பம் தராது பணி புரிதல்
13)சான்றோரிடம் பயனை அறிவித்தல்
14)பிறரது குணங்களை மட்டுமே கூறுதல்
15)துறவியர் அல்லாதாரிடம் கப்பம் வாங்குதல்
16)தக்காரைச் சார்ந்திருத்தல்
17)நன்கு ஆராயாமல் தண்டனை தராதிருத்தல்
18)ரகசியத்தை வெளியிடாதிருத்தல்
19)உலோபிகள் அல்லாதார்க்குக் கொடுத்தல்
20)தீங்கு செய்பவரை நம்பாதிருத்தல்
21)அருவருப்படையாமல் மனைவியைக் காத்தல்
22)தூய்மையுடன் இருத்தல்
23)பல பெண்களுடன் சேராதிருத்தல்
24)நலம் பயக்கும் சுவைகளை உண்ணுதல்
25)வழிபடத் தக்கவர்களைக் கர்வம் இன்றி வழிபடல்
26)வஞ்சனையின்றிப் பெரியோர்க்குப் பணிவிடை செய்தல்
27)அடம்பரமின்றித் தெய்வ பூஜை செய்தல்
28)பழிக்கு இடமில்லாப் பொருளை விரும்புதல்
29)பணிவுடன் பணி புரிதல்
30)காலம் அறிந்து செயல் படுவதில் வல்லவனாய் இருத்தல்
31)பயனுள்ளவற்றையே பேசுதல்
32)தடை சொல்லாது உதவி புரிதல்
33)குற்றத்திற்கேற்பத் தண்டித்தல்
34)பகைவரைக் கொன்றபின் வருந்தாதிருத்தல்
35)காரணமின்றிச் சினம் கொள்ளாதிருத்தல்
36)தீங்கு செய்தவரிடம் மென்மையாக இராமை


ஆகியவையாகும்..

108-மனக்கவலை மறைய..

தருமர்..'மனதில் கவலை அற்றிருக்கவும்,அறநெறி பிறழாதிருக்கவும் வழி யாது? என வினவ பீஷ்மர் விடை அளிக்கிறார்..

தருமத்தில் நிலை பெற்றிருப்பவர்களும், சாத்திரங்களை அறிந்தவர்களுமான சான்றோர்களை எங்கும் இருக்குமாறு செய்ய வேண்டும்.மேன்மை மிக்க புரோகிதர்களை எங்கும் நியமிக்க வேண்டும்.

நாணயம் மிக்க அறிவாளிகளிடம் அதிகாரத்தை அளிக்க வேண்டும்.மூர்க்கரிடம் அதிகாரத்தைக் கொடுத்தால் குடிகளை வருத்தி வரி வாங்குவார்கள்.பசுவிடம் பாலை கறக்க விரும்பினால் புல்லும்,நீரும் அளித்து பாலைக் கறக்க வேண்டும்.ஒரேயடியாக மடியை அறுத்தால் பாலைப் பெற முடியாது.அதுபோல தக்க உதவிகளைச் செய்து குடி மக்களிடம் வரி வசூலிக்க வேண்டும்.மக்களிடம் அதிக வரிச் சுமை இல்லாது பார்த்துக் கொள்ள வேண்டும்.வரி வசூலிப்பதில் மாலைக் கட்டுபவனைப் போல் இருக்க வேண்டும்.கரி வியாபாரி போல இருக்கக் கூடாது.(மாலை கட்டும் பூந்தோட்டக்காரன் செடி,கொடிகளைப் பக்குவமாக வளர்த்து இதமாக மலர்களை மட்டும் எடுப்பான்.கரி வியாபாரி மரத்தையே வெட்டிச் சாய்த்து விடுவான்)

குடிகள் ஒவ்வொரு வினாடியும் மகிழ்ச்சியோடு இருக்குமாறு பாதுகாக்க வேண்டும்.குடி மக்கள் ஒரு நாள் பயந்தாலும் அரசன் ஆயிரம் ஆண்டுகள் நரகத்தை அனுபவிக்க வேண்டி வரும்.அறநெறி கெடாமல் குடிமக்களைக் காத்த அரசன் அமரர் உலகில் பதினாயிரம் ஆண்டுகள் அந்தப் புண்ணியப் பயனை இன்பமாக அனுபவிப்பான்.யாகம்,தானம்,தவம் ஆகியவற்றைச் செய்தவன் அடையும் நற்கதிகளை ஒரு கணம் நாட்டை பரிபாலித்த அரசன் அடைவான்.இதனால் மன்னன் கவலை இல்லாதவனாக இருப்பான்.தருமா..இத்தகைய ஆட்சியை மேற்கொண்டு கவலையற்று இரு' என்றார் பீஷ்மர்.

109-நண்பன்..பகைவன்..சுற்றம்..

தருமர், பீஷ்மரிடம் 'கங்கை மைந்தா..மனிதன் பிறரின் உதவியின்றி சிறிய செயலையும் செய்வது அரிதாக இருக்கிறது.அப்படியுள்ள போது பிறர் உதவியின்றி அரசாள்வது எப்படி? அரசனுக்கு உதவி செய்யும் மனிதன் எத்தகைய ஒழுக்கம் உள்ளவனாக இருக்க வேண்டும்? அரசன் எப்படிப்பட்டவனுடன் நம்பிக்கை வைக்கலாம்..எவன் நம்பத்தகாதவன்' என்றெல்லாம் வினவினார்.

பீஷ்மர் சொல்கிறார்..'அரசர்களுக்கு சகார்த்தன் (இந்தச் செயலைச் செய்து இதன் பயனை இருவரும் அடைவோம்..என்று பேசிக்கொண்டு சேர்க்கப் பட்டவன்.)பஜமானன் (தகப்பன், பாட்டன் என பரம்பரை..பரம்பரையாய் உதவி செய்பவன்),சகஜன் (உறவினன்), கிருத்திரிமன் (உதவி செய்து ஏற்படுத்தப்பட்டவன்) என நான்கு வகை நண்பர்களுண்டு.நடுவு நிலைமை குன்றாதவன் ஐந்தாம் நண்பன்.அவன் யார் பக்கமும் சாராமல் அறம் உள்ள இடத்தையே சார்ந்திருப்பான்.தருமத்தை விரும்பும் அரசர் அவனை நாடலாம்.ஆனால் அவனுக்குத் தொடர்பில்லா விஷயத்தை அவனிடம் சொல்லக் கூடாது.அரசன் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக உடையவன்.அவன் சில நேரங்களில் அறம், மறம் இரண்டையுமே கைக் கொள்ள நேரிடும்.நட்பு,பகை என்பவை எப்போதும் ஒருவனிடம் இயற்கையாக அமைந்தவை அல்ல.ஒருவன் உபகாரத்தால் நண்பன் ஆவதும்,அபகாரத்தால் பகைவன் ஆவதும் இயல்பு.மேற்கூறிய நான்கு விதமான நண்பர்களில் இடையில் கூறிய பஜமானனும்,சகஜனும் உத்தமர்கள்.மற்ற இருவரும் சந்தேகத்திற்கு உரியவர்கள்.

அரசன் தானே நேரில் தன் பார்வையிலேயே நடத்தக்கூடிய செயலை மேற்சொன்ன ஐவரை நம்பி ஒப்படைக்கக் கூடாது.நண்பர்களிடம் அரசன் எப்போதும் எச்சரிகையுடன் இருக்க வேண்டும்.கவனக் குறைவாக இருக்கும் அரசனை மக்கள் மதிக்க மாட்டார்கள்.அவமதிப்பார்கள்.மனிதன் எப்போதும் ஒரே குணமுடையவனாக இருக்க மாட்டான்.நல்லவன் கெட்டவன் ஆகலாம்..கெட்டவன் நல்லவனாகலாம்.நண்பன் பகைவன் ஆகலாம்..பகைவன் நண்பன் ஆகலாம்.இது உலக இயல்பு.ஆகவே, அரசன் எப்போதும் யாரிடமும் நம்பிக்கை வைக்கக் கூடாது.முழுமையாக ஒருவனையே நம்பினால் அறம், பொருள்,இன்பம் அனைத்தும் நாசமாகும்.ஆனால் நம்பிக்கை கொள்ளாமலும் இருக்கக் கூடாது.அவநம்பிக்கையும் ஆபத்தைத் தரும்.எனவே நண்பர்கள் இயல்பை அறிந்து அவர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

நல்ல தோற்றமும்,அழகும்,கம்பீரக் குரலும்,பொறுமையும்,நல் ஒழுக்கமும் உடையவன் முதல் அமைச்சனாகும் தகுதியுள்ளவன் ஆவான்.தருமா...அத்தகைய குணங்கள் உள்ளவனையே நீ முதல் அமைச்சனாகக் கொள்ள வேண்டும்.நல்லறிவு படைத்தவர்களையும்,நினைவாற்றல் மிக்கவர்களையும்,நல்ல இயல்பு உள்ளவர்களையும் ,தனக்குரிய மரியாதை கிடைக்காவிட்டாலும் மன வருத்தம் அடையாதவர்களையும் ஆகிய மேலோர்களை நீ உனது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

புகழ் நோக்கம் உடையவனும்,நீதியை விரும்புபவனும்,காமம்,அச்சம்,சினம் இல்லாதவனும்,அதிகம் பேசாதவனும், தன்னைத் தானே புகழ்ந்துக் கொள்ளாதவனும் ஆகிய ஒருவனிடம் அமைச்சுப் பதவியைத் தர வேண்டும்.அறம்,பொருள் சிதறாமல் பாதுகாக்கும் உத்தமனை நீ தேர்ந்தெடுத்து உன் அருகில் அவனை இருக்கச் செய்ய வேண்டும்.ஒரு தந்தை மகனிடம் காட்டும் அன்பை நீ அவனிடம் செலுத்த வேண்டும்.ஆனாலும்..தருமா..ஒரு காரியத்திற்கு இரண்டு அல்லது மூவரை நியமிக்கக் கூடாது.அப்படி நியமித்தால் அவர்களுக்குள் பொறாமை தோன்றும்.ஒற்றுமையுடன் செயல்பட மாட்டார்கள்.அதனால் காரியம் நிறைவேறாது.

மரணத்திற்கு அஞ்சுவதுபோல் சுற்றத்தாரைக் கண்டு பயப்பட வேண்டும்.அரசனின் பெருமைக் கண்டு சுற்றம் மகிழாது.சுற்றத்தாரால் துன்பமும் உண்டு.இன்பமும் உண்டு.சுற்றம் அல்லாதாரும் துன்பம் தருவர்.ஆனால் மன்னனுக்கு அவமதிப்பு நேர்ந்தால், அவனைச் சார்ந்த சுற்றத்தார் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.ஆதலால் சுற்றத்தாரிடம் குணம், குற்றம் இரண்டும் காணப்படுகின்றன.

சுற்றம் இல்லாதவன் மகிழ்ச்சியும், பெருமையும் அடைய மாட்டான்.எனவே, சுற்றத்தாரைச் சொல்லாலும், செயலாலும் எப்போதும் கௌரவப் படுத்த வேண்டும்.அவர்கள் விரும்புவதைச் செய்ய வேண்டுமேயன்றி வெறுப்பதைச் செய்யக் கூடாது.அவர்களிடம் நம் உள்ளத்தில் நம்பிக்கையில்லாதிருந்தாலும் எப்போதும் நம்பிக்கை உள்ளவன் போல நடந்துக் கொள்ள வேண்டும்.குணமோ,குற்றமோ உறுதியாக அவர்களிடம் தீர்மானிக்க முடியாது.இவ்விதம் பகைவர்,நண்பன்,சுற்றத்தார் ஆகியோரிடம் விழிப்புடன் நடந்துக் கொள்ளும் மன்னன் நீடு புகழ் பெற்று திகழ்வான்' என்று உரைத்தார் பீஷ்மர்.

110-குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

தருமர் பீஷ்மரை நோக்கி 'ஒருவரோடொருவர் பொறாமை கொண்டுள்ள சுற்றத்தாரைத் தன் வசமாக்கிக் கொள்ளத்தக்க வழிகள் யாவை' என வினவினார்.

அதற்கு பீஷ்மர், 'இந்த விஷயத்தில் நாரதருக்கும், வாசுதேவருக்கும் நடந்த உரையாடலைக் கூறுகிறேன்..கேள்..

கண்ணபிரான்..நாரதரை நோக்கி..'நாரதரே..பண்டிதன் அல்லாத நண்பனும், பண்டிதனாக இருந்தும் அறிவற்ற பகைவனும் ரகசியத்தை அறியத் தக்கவரல்லர்.ஆதலால் உம் மேன்மையை அறிந்துக் கொண்ட நான் உம்மிடம் என் ரகசியத்தைத் தெரிவித்துச் சில உண்மைகளைத் தெரிந்துக் கொள்ள விரும்புகிறேன்.நான் அரசன் என்ற பெயர் உள்ளவனாக இருந்தும் சகோதரர்களுக்கு அடிமைத் தொண்டு செய்து வருகிறேன்.புசிக்கத் தக்கவற்றுள் பாதியை மட்டும் புசிக்கிறேன்.மற்றொரு பாதியைச் சுற்றத்தாருக்குத் தருகிறேன்.அவர்கள் பேசும் சொற்கள் என்னை சுட்டு எரிக்கின்றன.எனக்குத் துணை செய்வார் யாரும் இல்லை.அச் சுற்றத்தாரோடு சேர்ந்திருக்கவும் முடியவில்லை..விட்டு விலகியிருக்கவும் முடியவில்லை.

தான் பெற்றெடுத்த மகன்கள் இருவரும் சூதாடுகையில் தாய்..எந்த மகனின் வெற்றியை விரும்புவாள்? யாருடைய தோல்வியை அவள் விரும்புவாள்? அந்தத் தாய் இரு மகன்களிடையே செயலற்றுத் துன்புறுவது போல நான் துன்புறுகிறேன்.இந்நிலையில் எனக்கும்,என் சுற்றத்தாருக்கும் நன்மை தரத்தக்க ஒரு வழியைத் தெரிவிக்க வேண்டுகிறேன்' என்று கேட்டுக் கொண்டார் .

நாரதர்.."கண்ணா..ஒருவனுக்கு இரண்டு வகையான துன்பங்கள் உண்டு.ஒன்று உட்பகை.மற்றது வெளிப்பகை.சுற்றத்தாரால் வருவது உட்பகை.மற்றோரால் வருவது வெளிப்பகை.வெளிப்பகையை விடக் கொடியது உட்பகை.நீர் உன் சுற்றத்தாரிடம் கொடுத்துவிட்ட நாட்டைத் திரும்ப பெற எண்ணுகிறீர்.கொடுத்துவிட்ட ஒன்றை திரும்பப் பெறுவது உமிழ்ந்த உணவை மீண்டும் எடுத்து உண்ண வி ரும்புவதைப் போன்றது.ஆகவே அவர்களிடமிருந்து விரும் துன்பத்திலிருந்த் தப்பிக்க வழி இழந்த நாட்டை திரும்பிக் கேட்காமல் இருப்பதே ஆகும்.ஆனாலும் அவர்களின் கெட்ட உள்ளத்தை மாற்றும் ஆயுதம் ஒன்று உள்ளது.அது இரும்பினால் செய்யப்பட்டதல்ல.மென்மையானது..மென்மையானதாயினும் அவர்களை அடக்கி விடும்' என்றார்.

கண்ணன் நாரதரைப் பார்த்து 'இரும்பினால் செய்யப்படாத மென்மையான ஆயுதம் எது?' என்று வினவ, நாரதர்,'கண்ணா, அந்த மென்மையான ஆயுதம்...இன்சொல்..'என்றார்.'இனிய சொற்கள் கூர்மையான அரத்தைப் போன்றவை.இனிய நன்மொழியால் சுற்றத்தாரிடம் இனிமையாகப் பேசி அவர்களை அணைத்துச் செல்ல வேண்டும்.வேண்டிய பொருள்களைக் கொடுத்து அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டும்.

எப்போதும் சுற்றத்தாரைக் காப்பதன் மூலம் ஒருவருடைய பொருளும்,புகழும்,ஆயுளும் பெருகும். எனவே நீர் சுற்றத்தார்க்கு எவ்வித குறையும் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அனைவரும் உன்னச் சார்ந்தே உள்ளனர்.உயிர்கள் அனைத்துக்கும் நாதரே...நீர் அறியாதது ஏதுமில்லை' என்று முடித்தார்.

இதை எடுத்து உரைத்த பீஷ்மர்..சுற்றந் தழுவுதலின் மேன்மையைத் தருமருக்கு உணர்த்தினார்.

இதன் மூலம் குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என உலகிற்கு உணர்த்தப் பட்டது.

No comments:

Post a Comment