Wednesday, October 22, 2014

ஜுரதேவர் வழிபாட்டைப் பற்றிச் சொல்லுங்கள்.

ஜுரதேவர் வழிபாட்டைப் பற்றிச் சொல்லுங்கள்.
சிவபெருமானின் அம்சம் கொண்டவர் ஜுரதேவர். மூன்று தலைகளும், மூன்று கால்களும் கொண்டவர். திருநீற்றையே ஆயுதமாகக் கொண்டு மக்களுக்கு ஏற்படும் நோய்களைப் போக்குபவர். பழமையான சிவாலயங்களில் இவருக்கு சந்நிதி இருக்கும். இவரது திருவடியில் விபூதி வைத்து அர்ச்சித்து பூசிக்கொள்ள மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்கள் வராமல் தீர்வு ஏற்படும். பாலபிஷேகம், தயிர்ச்சாத நைவேத்யம் இவருக்குரிய வழிபாடுகள்

சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடி மரத்திற்கு வெளியே தான் செயய வேண்டும் என்கிறார்களே! ஏன்?

சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடி மரத்திற்கு வெளியே தான் செயய வேண்டும் என்கிறார்களே! ஏன்?
இரண்டு காரணங்களுக்காக இப்படிச் செய்ய வேண்டும் என்பது வழக்கம். ஒன்று நாம் காலை பின்புறமாக நீட்டி நமஸ்காரம் செய்யும் போது, கால்பக்கம் தெய்வ சந்நிதிகள் எதுவும் இருக்க கூடாது. கொடி மரம் இருக்கும் பகுதியில் வேறு சந்நிதிகள் இருக்காது என்பதால் அந்த இடத்தில் நமஸ்காரம் செய்கிறோம். மற்றொன்று கொடி மரத்தின் அருகில் பலிபீடம் இருக்கும். நம் மனதிலுள்ள ஆணவம், பேராசை, பொறாமை போன்ற தீய எண்ணங்களை நமஸ்காரம் செய்யும் போது பலியிடுவதாக அதாவது அகற்றிக் கொள்வதாக நமஸ்காரம் செய்கிறோம். இதனால் சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடிமரத்திற்கு வெளியே தான் செய்ய வேண்டும்.

வழிபாட்டுக்குரிய விக்ரகங்களை கருங்கல்லில் மட்டும் வடிப்பது ஏன்?

வழிபாட்டுக்குரிய விக்ரகங்களை கருங்கல்லில் மட்டும் வடிப்பது ஏன்?
பஞ்சலோக விக்ரகங்களும் கோயிலில் இருக்கிறதே! இன்னும் தங்கம்,வெள்ளி, வெண்கலம் போன்ற உலோகங்களும் வழிபாட்டுக்காக வடிக்கப்பட்டுள்ளன. தெய்வீக சக்தியை ஈர்த்து தன்னுள் வைத்துக் கொள்ளும் தன்மை கருங்கல், உலோகம் என அனைத்திற்குமே இருக்கிறது.

கோபுர தரிசனம் செய்வதால் மட்டுமே கோயிலுக்குச் சென்று வந்த பலனைப் பெற முடியுமா?

கோபுர தரிசனம் செய்வதால் மட்டுமே கோயிலுக்குச் சென்று வந்த பலனைப் பெற முடியுமா?
வேலை நிமித்தமாக கோயிலுக்குச் செல்ல முடியாதவர்களுக்கும், பயணம் செய்பவர்களுக்கும் மட்டுமே கோபுரதரிசனம் பொருந்தும். மற்றவர்கள் கோயிலுக்குள் சென்று கடவுளை வழிபட்டு வருவதே முறை.

மணமக்கள் அருந்ததி நட்சத்திரம் பார்ப்பதன் நோக்கம் என்ன?

மணமக்கள் அருந்ததி நட்சத்திரம் பார்ப்பதன் நோக்கம் என்ன?
வசிஷ்டர் என்னும் மாமுனிவரின் தர்மபத்தினி அருந்ததி. மனைவி என்னும் சொல்லுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். வசிஷ்டர் மனதில் நினைப்பதையே அருந்ததி செயல்படுத்துவார். நீண்ட வம்சவிருத்தி கொண்டவர் இவர். பராசர முனிவருக்குப் பாட்டி. வியாசருக்குக் கொள்ளுப் பாட்டி என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இவரது ஒழுக்கத்தின் மாண்பினால் தீர்க்க சுமங்கலியாக விளங்கும் பாக்கியமும், வானில் நட்சத்திரமாகவும் ஒளிவீசும் பேறும் பெற்றவர். அருந்ததி போல வாழ வேண்டும். குலம் தழைக்க பிள்ளைகள் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்ற அடிப்படையில் இம்மாதரசியை கண்டு வணங்கி ஆசி பெறுவது திருமண வைபவத்தில் முக்கியமான நிகழ்ச்சியாக கருதப்படுகிறது

கோயிலில் கொடிமரம் இருப்பதன் தத்துவம் என்ன?

கோயிலில் கொடிமரம் இருப்பதன் தத்துவம் என்ன?
"ஆலயம் புருஷாகாரம்' என்று ஆகம சாஸ்திரம் கூறுகிறது. "மனித உடலைப் போன்றது கோயில்' என்பது இதன் பொருள். கோயிலில் கருவறையே தலை. மகா மண்டபம் மார்புப் பகுதி, மார்பின் இடப்புறம் இதயம் துடிப்பது போல, நடராஜப் பெருமான் நடனமாடிக் கொண்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து வயிற்றுப் பகுதியில் நாபி எனப்படும் தொப்புள் பகுதியாக இருப்பது கொடிமரம். ராஜகோபுரம் இறைவனின் திருவடி. திருவிழா காலத்தில் தேவர்களை அழைப்பதற்காக கொடிமரத்தில் கொடியேற்றி வழிபாடு நடத்துவர்

கும்பாபிஷேகத்தை தரிசிப்பதால் ஏற்படும் நன்மை

கும்பாபிஷேகத்தை தரிசிப்பதால் ஏற்படும் நன்மையைக் கூறுங்கள்.
 
ஆன்மிகத்தில் நிகழும் அபூர்வமான நிகழ்ச்சி கும்பாபிஷேகம். இதன் மூலம் கண்ணுக்குத் தெரியாத கடவுளை ஒரு குறிப்பிட்ட கோயிலில் குறிப்பிட்ட தெய்வத்தின் பெயரால் வரவழைக்கிறோம். தெய்வீக சக்தி அப்போது நம் உடலில் பதிவதால் இறைச்சக்தியில் மூழ்கி புனிதமடைகிறோம். இதனால், உடலும், மனமும் உறுதி பெற்று வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கிறது

ஆறுபடை வீட்டு தரிசனத்தை முதல் படை வீட்டிலிருந்து தான் தொடங்க வேண்டுமா?

ஆறுபடை வீட்டு தரிசனத்தை முதல் படை வீட்டிலிருந்து தான் தொடங்க வேண்டுமா?
அப்படி ஒன்றும் கிடையாது. அவரவருக்கு ஏற்ற முறையில் படைவீடுகளை விரும்பிய நேரத்தில்
தரிசிக்கலாம்.

பிரதோஷத்தன்று நந்தியின் கொம்புக்கு இடையில் சுவாமியைத் தரிசிக்க வேண்டும் என்பது ஏன்?

பிரதோஷத்தன்று நந்தியின் கொம்புக்கு இடையில் சுவாமியைத் தரிசிக்க வேண்டும் என்பது ஏன்?
பிரதோஷ காலத்தில் நந்தியின் கொம்புக்கு இடையில் சுவாமி நடனம் ஆடுவதாக ஐதீகம். அந்த சமயத்தில் நந்தீஸ்வரரை வழிபட வேண்டுமே தவிர, நந்தியைத் தொட்டு கொம்புக்கு இடையில் தரிசிக்க முயல்வது, காதில் வேண்டுதலைச் சொல்வது போன்றவற்றில் ஈடுபடுவது கூடாது.

குழந்தை இல்லாத தம்பதியரின் குறை தீர பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள்.

குழந்தை இல்லாத தம்பதியரின் குறை தீர பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள்.
சில விஷயங்களைச் செய்வதற்கு புத்திரனுக்கே அதிகாரம் இருக்கிறது. அதனால் ஒருவரை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்கிறது சாஸ்திரம். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். குழந்தை இல்லாத தம்பதியர் போலவே பெற்றோர் இல்லாத குழந்தைகளும் சிரமப்படுகிறார்கள். இருசாராரும் இணையும் முயற்சியை மேற்கொண்டால் எவ்வளவோ பேர் மகிழலாமே!

வாஸ்து தோஷம் நீங்க எளிய பரிகாரம் ஏதாவது சொல்லுங்கள்?

வாஸ்து தோஷம் நீங்க எளிய பரிகாரம் ஏதாவது சொல்லுங்கள்?
"வாஸ்து தோஷம் என்ற ஒன்றே இல்லை, அதனால், நமக்கு எந்த கஷ்டமும் இல்லை' என்னும் இரண்டு வரிகளை முழுமையாக நம்பி, தினமும் 16 முறை ஜபம் செய்யுங்கள். இது தான் எளிய பரிகாரம். க்ஷ

கோயில் பிரசாதமாக கொடுத்த எலுமிச்சம்பழத்தை என்ன செய்ய வேண்டும்?

கோயில் பிரசாதமாக கொடுத்த எலுமிச்சம்பழத்தை என்ன செய்ய வேண்டும்?
மற்றைய நைவேத்ய பிரசாதங்களைச் சாப்பிடுவது போல் இதையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

கோலத்தின் நடுவே மஞ்சள், குங்குமம் வைப்பது சரி தானா?

கோலத்தின் நடுவே மஞ்சள், குங்குமம் வைப்பது சரி தானா?
தவறு. கோலத்தை அரிசிமாவினால் மட்டுமே இட வேண்டும். இதன் மூலம் எறும்பு போன்ற உயிர்களுக்கு உணவளிக்கிறோம். கால்மிதி படும் இடத்தில் வழிபாட்டுக்குரிய பொருட்களான மஞ்சள், குங்குமம் போன்றவற்றை வைப்பது கூடாது.

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என்று சித்தர்கள் பாடுகிறார்களே. சிலை வழிபாட்டை ஏன் சித்தர்கள் மறுக்கிறார்கள்?

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என்று சித்தர்கள் பாடுகிறார்களே. சிலை வழிபாட்டை ஏன் சித்தர்கள் மறுக்கிறார்கள்?
"மனமது செம்மையால் மந்திரம் ஜபிக்க வேண்டாம்' என்பதற்குச் சொன்ன பதிலே இதற்கும் பொருந்தும். எனினும் சற்று விரிவாக்கச் சிந்திப்போம். நாதன் நமக்குள் இருப்பதை உணர்ந்து வாழ்பவர்களுக்கு சிலை வழிபாடு தேவையில்லை என்பது சித்தரின் கருத்து. இறைவன் நம்முள் உயிரில் கலந்து நிற்கிறான் என்பது முதுகலைப்படிப்பு போன்றது. சிலை வழிபாடு என்பது அரிச்சுவடி போன்றது. முதுகலைப்பட்டம் பெற்றவர்களுக்கு அரிச்சுவடி படிக்கத் தேவையில்லை. ஆனால், அரிச்சுவடி இல்லாமல் யாரும் படிக்க முடியாது. "நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்' என்று சொன்னார் திருமூலர். ஒட்டு மொத்த சித்தர்களும் சிலை வழிபாட்டை மறுக்கிறார்கள் என்று கருதுவது தவறு. திருமூலரும் ஒரு சித்தர் தான். அவரே சிவலிங்கத் திருமேனி முதலாகிய பல வடிவங்களைக் குறிப்பிடும் வழிபடும் முறைகளையும் விளக்கியுள்ளனர்.

கர்ப்பிணிக்கு அணிவிக்கும் வளையலால் குழந்தைக்கு உண்டாகும் நன்மை என்ன?

* கர்ப்பிணிக்கு அணிவிக்கும் வளையலால் குழந்தைக்கு உண்டாகும் நன்மை என்ன?
வளையல் காப்புக்கு "கங்கண தாரணம்' என்று பெயர். கருச்சிதைவு ஏற்படாமல் குழந்தையைப் பாதுகாக்க இதைச் செய்ய வேண்டும்.

எல்லாம் கடவுள் செயல் என்று சொல்லும் போது ஒருவர் செய்யும் தீய செயலும் கடவுள் செயலாகி விடுமே.

 எல்லாம் கடவுள் செயல் என்று சொல்லும் போது ஒருவர் செய்யும் தீய செயலும் கடவுள் செயலாகி விடுமே. எத்தனையோ பிறவிகள் எடுக்கிறோம். இதற்கு முன்பான பிறவிகளில் எவ்வளவோ நல்லதும், தீயதும் செய்திருப்போம். அதன் பலனாகவே இன்பதுன்பம் கலந்த வாழ்வை அனுபவிக்கிறோம். அதுபோல, நல்லவர்களாகவும் தீயவர்களாகவும் வாழ்வதும் இப்படித் தான். கடுமையான பாவம் செய்து தண்டனை அனுபவிக்க வேண்டியவர்களையும் இறைவன் கருணையால் ஆட்கொள்கிறார். அதாவது ஒருவர் தவறு செய்தால் தண்டனையை அனுபவித்தபின் பிறகு துன்பம் நீங்கி விடும். நல்லவர்கள் கஷ்டப்படுவதும் கூட இந்த அடிப்படையில் தான். "தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்று புறநானூற்றுச் செய்யுள் குறிப்பிடுவதைக் காணலாம். சூரபத்மனைப் பிறக்கச் செய்ததும், அவன் மூலம் தேவர்கள் துன்பப்பட்டதும் இறைவன் செயல். சூரபத்மனையே மயில் வாகனமாக ஏற்றுக் கொண்டதும் இறைவன் செயல் தான்.

ராஜகாளியம்மனுக்கு செவ்வரளி மாலை வைக்கலாமா?

ராஜகாளியம்மனுக்கு செவ்வரளி மாலை வைக்கலாமா?
காளியம்மனுக்கு சிவப்பு நிற மலர்கள் சாத்துவது சிறப்பு. செவ்வரளி மாலை சூட்டி வழிபடுவதால் செவ்வாய் தோஷம் அகலும்.

வெள்ளிக்கிழமையில் பூஜையறையில் சொல்வதற்கு எளிய பாடல்

வெள்ளிக்கிழமையில் பூஜையறையில் சொல்வதற்கு எளிய பாடல் ஏதும் இருக்கிறதா?
வீட்டில் விளக்கேற்றி விட்டு அபிராமி பட்டர் பாடிய அபிராமி அந்தாதியை மனம் உருகிப் பாடுங்கள். காப்புச் செய்யுளில் விநாயகரை வணங்கி விட்டு, அதிலுள்ள பாடல்களில் உங்களுக்குப் பிடித்தமான எளிய பாடல்களைப் பாடுங்கள். பின்வரும் இந்த ஒரு பாடல் மட்டும் கூட போதுமானது.
""தனந்தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே''

அபிராமி அந்தாதியின் சிறப்ப

அபிராமி அந்தாதியின் சிறப்பைச் சொல்லுங்கள்.
லலிதா சகஸ்ரநாமம், தேவி பாகவதம், சவுந்தர்யலஹரி போன்ற மந்திர நூல்களை அறிந்தவர் அபிராமி பட்டர். அவற்றின் சாரத்தை எல்லாம் ஒன்றாக்கி தமிழில் அபிராமி அந்தாதியைப் பட்டர் பாடிஉள்ளார். அதனால், அம்பிகையை இஷ்ட தெய்வமாகக் கொண்டிருப்பவர்களுக்கு அபிராமி அந்தாதி ஒரு வரப்பிரசாதம்.

பார்வதி என்று தேவியைக் குறிப்பிடுவது ஏன்?துர்க்கை வழிபாட்டுக்குரிய நாட்கள் எவை?

பார்வதி என்று தேவியைக் குறிப்பிடுவது ஏன்?
மலைக்கு அதிபதியாகிய பர்வதராஜனின் மகளாகப் பிறந்ததால் அம்பிகைக்கு "பார்வதி' என்று பெயர் உண்டு. மலைமகள் என்றும் சொல்வர்.

துர்க்கை வழிபாட்டுக்குரிய நாட்கள் எவை?
எல்லா நாட்களுமே வழிபாட்டுக்கு உரியவை தான். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஏற்றவை. அதிலும் ராகுகாலம் துர்க்கைக்கு மிகவும் உகந்தது.

கணவன் மனைவி ஒற்றுமைக்கு பரிகாரம்

* கணவன் மனைவி ஒற்றுமைக்கு பரிகாரம் சிவபார்வதி இருவரும் சரிபாதி இணைந்த அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு தம்பதி ஒற்றுமைக்கு சிறந்த பரிகாரம். வெள்ளிக்கிழமையில் விரதமிருந்து அம்மன் சந்நிதியில் விளக்கேற்றி வழிபாடு மேற்கொள்ளுங்கள். விரைவில் பலன் உண்டாகும்.

அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது ஏன்?

அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது ஏன்?
அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால் ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும். இதற்காக விரதம் இருந்து மாவிளக்கு தயாரிப்பர். பச்சரிசியை ஊற வைத்து, இடித்து மாவாக்கி அதில் ஏலம், சுக்கு, வெல்லம் சேர்த்து, அகல் விளக்கு போல வடித்து, நெய் சேர்த்து தீபமேற்றி அம்மன் சந்நிதியில் வைப்பர். அம்மனுக்கு பொங்கலிடும் போது மாவிளக்கும் ஏற்ற வேண்டும் என்பது வழக்கம். இந்த வழிபாடு மிகவும் பழமையானது.

சிலர் நீராடி விட்டு ஈர உடையுடன் கோயிலை வலம் வந்து வழிபடுகிறார்களே, இது சரியா?

சிலர் நீராடி விட்டு ஈர உடையுடன் கோயிலை வலம் வந்து வழிபடுகிறார்களே, இது சரியா?
இது தவறு. நன்கு துவைத்து காய்ந்த ஆடைகளை உடுத்திக் கொண்டு வழிபாடு செய்ய வேண்டும் என நமது தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பூணூல் அணிவதன் நோக்கம் என்ன?

பூணூல் அணிவதன் நோக்கம் என்ன?
வேதம் படிக்கவும், வேதநெறி நிற்பதற்கும் வழங்கப்படுகின்ற அதிகார அடையாளமே பூணூல். இது பற்றி இரு இடங்களில் திருமூலர் திருமந்திரத்தில் கூறியுள்ளார். பூணூலும், குடுமியும் வேதாந்தத்தையும், ஞானத்தையும் உணர்த்தும் அடையாளங்களாக அந்தணர்களுக்கு உரியது என "அந்தணர் ஒழுக்கம்' என்னும் பகுதியிலும், ஆறாம் தந்திரத்தில் "திருநீறு' அதிகாரத்தில், "நூலும் சிகையும் உணரார் நின் மூடர்கள்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்' எனவும் இதன் மகத்துவத்தைக் குறிப்பிடுகிறார்

விளக்கேற்றிய வேளையில் வீட்டில் தூங்கக் கூடாது என்கிறார்கள். இது குழந்தை, நோயாளி போன்றவர்களுக்கும் பொருந்துமா?

விளக்கேற்றிய வேளையில் வீட்டில் தூங்கக் கூடாது என்கிறார்கள். இது குழந்தை, நோயாளி போன்றவர்களுக்கும் பொருந்துமா?
பொதுவாக வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் இவர்கள் அனைவருமே இது போன்ற விரதம் உட்பட பல விஷயங்களில் விதிவிலக்காக கருதப்படுகிறார்கள்.

மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டாம் என்பதன் பொருள் என்ன?

 மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டாம் என்பதன் பொருள் என்ன?
மந்திரம் ஜபிக்க வேண்டாம் என்ற ஒரு வரியை மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. "மனம் செம்மைப்படும் போது' என்பதையும் கவனிக்க வேண்டும். செம்மைப்படுவது என்பது ஆசாபாசங்கள் என்னும் அழுக்குகள் நீங்கி தூய்மைஅடைவது என்று பொருள். இந்த மன அழுக்கு களைப் போக்க இன்னும் சோப்புத்தூள் விற்பனைக்கு வரவில்லை. மந்திரம் ஜபிப்பது ஒன்று தான் வழி. இப்படி அதிகமான ஜபங்கள் செய்து மனதிலுள்ள இருள் நீங்கும் போது ஏற்படுவது தான் "மனமது செம்மையாதல்' எனப்படும். அதாவது வேறு எந்த விருப்பங்களும் இல்லாமல் இறைவனுடைய திருவடிகளை அடைவது ஒன்றே போதும் என்ற நிலையை மனம் முழுமையாக அடையும் போது, விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுப்பதாகிய மந்திரங்களை(காமிய மந்திரங்களை) ஜபிக்கும் அவசியம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, செம்மையடையும் வரை மந்திரம் ஜபிக்க வேண்டும்.

முருகன் கை கூப்பி நம்மை வணங்குவது போல ஒரு படம் இருக்கிறதே. கடவுள் நம்மை வணங்குவது போல இருப்பது சரிதானா?

 முருகன் கை கூப்பி நம்மை வணங்குவது போல ஒரு படம் இருக்கிறதே. கடவுள் நம்மை வணங்குவது போல இருப்பது சரிதானா?
முருகன்சிவலிங்கத்தை வணங்குவதையே இவ்வாறு சித்தரிக்கிறார்கள். தாங்கள் நினைப்பது போல முருகன் நம்மை வணங்கவில்லை. தந்தையை வணங்க வேண்டிய ஒழுக்கத்தை நமக்கு காட்டுகிறார். திருச்செந்தூர் முருகன் பஞ்சலிங்கங்களை வழிபடுபவராக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அந்தக் கோயிலில் இதற்குரிய சித்திரமும் இருக்கிறது

தற்காலத்தில் குழந்தைகளுக்கு வீட்டுப் பெரியவர்களின் பெயர் வைத்து விட்டு, வேறொரு மாடர்ன் பெயரையும் வைத்துக் கொள்கிறார்கள். இது சரியான முறையா?

தற்காலத்தில் குழந்தைகளுக்கு வீட்டுப் பெரியவர்களின் பெயர் வைத்து விட்டு, வேறொரு மாடர்ன் பெயரையும் வைத்துக் கொள்கிறார்கள். இது சரியான முறையா?
ஒருவருக்கு எவ்வளவு பெயர்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். தவறில்லை. இறைவனுக்கு ஆயிரம் பெயர்கள் இருப்பதால் தானே சகஸ்ர நாம அர்ச்சனை செய்கிறோம். சதீசன் என்னும் சிவன் பெயரை "சதீஷ்' என்றும், ரமேசன் என்ற விஷ்ணுவின் பெயரை "ரமேஷ்' என்றும் மாடர்னாக வைத்துக் கொள்கிறார்கள். இந்தி மொழிக் கலப்பினால் தான் இப்படி பெயர் வைக்கும் வழக்கம் வந்துள்ளதே தவிர, பெரிய தவறு ஒன்றுமில்லை. ஆனால், "ஆபத்சகாயம்' என்ற இறைவனின் அற்புதமான பெயரைச் சுருக்கி "ஆபத்து' என்று கூப்பிடாமல் இருந்தால் சரி தான்.

சுப விஷயத்தில் வலக்கை, வலக்கால் இரண்டுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை இடது கை, காலுக்குக் கொடுப்பதில்லையே ஏன்?

சுப விஷயத்தில் வலக்கை, வலக்கால் இரண்டுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை இடது கை, காலுக்குக் கொடுப்பதில்லையே ஏன்?
இடது கை, கால்களைக் கட்டி விடுவதில்லையே. அவைகளும் இணைந்து செயல்பட்டால் தான் மனிதன் இயங்க முடியும். இயற்கையாகிய உலகமே வலமாகத் தான் சுழல்கிறது. எல்லா மந்திரங்களின் மூலமாகிய பிரணவம் (ஓம்) வலமாகத் தான் சுழிக்கப்படுகிறது. இந்த அடிப்படையில், வலப்பாகத்தை மங்களத்தின் சின்னமாகச் சாஸ்திரங்கள் கூறியுள்ளன. இடது கையால் செய்ய வேண்டிய வேலைகளை வலக்கையால் செய்ய ஆசைப்பட மாட்டோம் அல்லவா? இதனை இதனால், இப்படித் தான் செய்ய வேண்டும் என்ற நியதியை புறக்கணிப்பது, ஆராய்வதும் எல்லாம் வேண்டியதில்லை. அதனால் பலவித குழப்பங்களும், பிரச்னைகளுமே ஏற்படுகின்றன.

எல்லா செல்வமும் தரும் தீப வழிபாடு

தீபாவளி தினத்தன்று வீட்டில் அவசியம் விளக்குகள் ஏற்ற வேண்டும். விளக்குகள் அகிலாண்ட நாயகியின் திருவடிகள் ஆகும். விளக்கின் அடிப்பாகத்தில் பிரம்மா நிலைப் பெற்றுள்ளார். கீழ் தண்டு பாகத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு நிலை பெற்றுள்ளார். நெய், எண்ணெய் நிறைந்திருக்கும் இடம் சிவபெருமானின் திருமேனி திகழும் இடமாகும்.

விளக்கின் ஐந்து முகங்கள் விநாயகர், முருகர், ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர், இந்திரன் ஆகியோர் அலங்கரிக்கும் இடமாக கருதப்படுகிறது. ஆண்டவன் எங்கே இருந்தாலும், எந்த வடிவத்திலே இருந்தாலும், ஜோதி வடிவத்திலே நம்முடைய மனதிலே உள்ளத்திலே உறைகிறான். ஆகவே தீப வழிபாட்டின் மூலம் மனதில் உள்ள ஜோதியை வழிபடும் பலனை நாம் பெறலாம்.

மனதில் உள்ள துன்பங்கள், கஷ்டங்கள், கவலைகள் எல்லாம் நீங்க வேண்டும் என்பதற்காகத்தான் நம் முன்னோர்கள் ஜோதி வழிபாட்டையே ஆரம்பித்தார்கள். தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற மூன்று சக்திகளும் உள்ளனர். தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது. அதாவது தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது.

மனதில் உள்ள கவலைகளைப் போக்குகிறது. எனவே தீபாவளி தினத்தன்று தீபம் ஏற்றி வணங்கிப் பூஜை செய்ய வேண்டும். சாமிக்கு முன்னால் சின்னதாக அகல் விளக்கு ஏற்றி, அரைமணி நேரமாவது எரிவதற்கு எண்ணெய் விட்டு, பூப்போட்டு, தேவியை மனதில் தியானித்துப் வழிபாடுகள் செய்ய வேண்டும்.

அப்படிச் செய்பவர்களுக்கு வாழ்க்கையில் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி எல்லாவிதமான சந்தோஷங்களும், சவுக்கியங்களும் ஏற்படும். தீபம் எரிந்து முடிந்த பிறகு, பூஜைகள் எல்லாம் பூர்த்தியான பிறகு யாரும் விளக்கைப் பட்டென்று அணைப்பதோ, வாயால் ஊதி அணைப்பதோ கூடாது. மெல்ல அந்தத் திரியைப் பின்னுக்கு இழுத்து, அது எண்ணெய்க்குள் அமிழ்ந்து விடுமாறு அப்படியே விட வேண்டும்.

மற்ற வகைகளில் தீபத்தை அணைத்தால் பாவம் வந்து சேரும். தினமும் காலையிலும், மாலையிலும் - வீட்டிலும், வியாபார இடங்களிலும் விளக்கேற்றி வழிபட்டு வருபவர்களின் வறுமை அகலும். அவர்களுக்கு நிச்சயம் லட்சுமியின் அருள் கிடைக்கும். சுபகாரியங்களில் குத்துவிளக்கு ஏற்றி வைக்கிறார்கள்.

இது பித்தளை அல்லது வெள்ளி குத்து விளக்காக இருக்க வேண்டும். எவர்சில்வர் குத்துவிளக்கு ஏற்ற வேண்டாம். குத்து விளக்கின் 5 முகங்களின் காரணம் பெண்களின் அன்பு, மனஉறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை ஆகிய 5 குணங்களிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதாகும்.

இதற்காகவே பெண்களை திருமணம் ஆகி புகுந்த வீடு வந்த உடன் விளக்கேற்றச் சொல்கின்றனர். வெள்ளி அல்லது பஞ்சலோக விளக்கில் தீபம் ஏற்றினால் லட்சுமியின் கருணை கிட்டும். வெள்ளி விளக்கில் தீபம் ஏற்ற பலவீனங்கள் அகலம். பாவம் விலகும். சனீஸ்வர பாதிப்புகளிலிருந்து விடுபட கோவில்களில் இரும்பு விளக்கு ஏற்றலாம்.

ஆவணி, கார்த்திகை மாதங்களில் விசேஷ தீப அலங்காரம் செய்தால் அதிக பலன்கள் கிடைக்கும். திருநீறு, ருத்திராட்சம் அணிந்து சிவபெருமானின் பெயர்களை உச்சரித்து மாலையில் தீபங்கள் ஏற்றி வைத்தால் வறுமை நீங்கும். புதிய பருத்தி ஆடையில் மஞ்சள் தோய்த்துக் காயவைத்து அதில் திரி செய்து அம்பாளுக்குப் பஞ்சமி திதியில் விளக்கேற்றினால் பிறரால் சந்தேகிக்கப்படும் நிலை வராது.

புதிய பருத்தி ஆடையில் குங்குமத்தை தோய்த்துக் காய வைத்து அதில் திரி செய்து திரயோதசி திதியில் சிவனுக்கு தீபம் போட்டால் சுக்ரதோஷம், செவ்வாய் தோஷம் போன்ற கடுமையான தோஷங்கள் விலகும். புதிய பருத்தி ஆடையில் சந்தனத்தில் பன்னீர் கலந்து தடவி காய வைத்து திரி செய்து விளக்கேற்ற வேண்டும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் ஆரம்பித்து ஒரு வருடம் தொடர்ந்து இவ்வாறு விளக்கேற்றி வர நரம்புத் தளர்ச்சி, வெண்குஷ்டம் போன்ற நோய்களின் வேகம் தணியும். வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்றினால் தெய்வ குற்றம், பிதுர் சாபம் நீங்கும்.

பருத்தி பஞ்சுத்திரி எல்லா நன்மைகளையும் கொடுக்கும். தாமரைத் தண்டு நூல் திரி போட்டு விளக்கேற்றினால் முன்வினை பாவம் போகும். நம்மிடம் இருக்கும் செல்வம் நிலைத்து நிற்கும். வெள்ளை எருக்கம் இலைப்பட்டை திரியைப் போட்டு விளக்கேற்றினால் அதிக செல்வம் கிடைக்கும். பேய் பிடித்தவர்களுக்கு அதன் தொல்லை தீரும்.

சிகப்பு வண்ண ஆடையில் செய்த திரியைப் போட்டு விளக்கேற்றினால் செய்வினை தோஷங்கள் நீங்கும். திருமணத் தடை அகலும். மலட்டுத்தன்மை போகும். புதிய மஞ்சள் வண்ண ஆடையால் செய்த திரி போட்டு விளக்கேற்ற வியாதிகள் குணமாகும்.

அம்பாளின் அருள் கிடைக்கும். தீபத்திற்கு நெய்விட்டு ஏற்றுவது மிகமிகச் சிறப்பு. சகலவித செல்வச் சுகத்தையும், வீட்டிற்கு அமைதியையும் அது தருகிறது. விளக்கு எண்ணெய் விட்டு விளக்கேற்ற புகழ், சுகம், தாம்பத்திய சுகம் இவைகளை விருத்தி செய்கிறது.

நல்லஎண்ணெய் விட்டு விளக்கேற்ற எல்லா பீடைகளும் விலகும். மண்ணால் செய்யப்படும் அகல் விளக்கு, பஞ்சலோகம் அல்லது வெள்ளியால் செய்யப்படும் விளக்குகள் பூஜைக்கு மிகவும் சிறந்தவை.

தீபாவளி தத்துவம்

தீய குணங்களை அழித்து அறியாமை இருளினை அகற்றி நமது ஆன்மா தெளிவான ஞான ஒளி பெறுதலே தீபாவளி ஆகும். ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்ச சதுர்த்தியன்று தீபாவளி பண்டிகை தீப அலங்கார பண்டிகையாக இல்லங்கள் தோறும் மங்களகரமாக கொண்டாடப்படுகிறது.

தீபங்கள் ஏற்றப்படும்போது இருள் விலகி விடும். தீபம் விளக்கு, ஆவளி-வரிசை நம்மிடம் உள்ள காமம், கோபம், மோகம் மதம், மாச்சரியம் ஆகிய இருள்களை வரிசைப்படுத்தி இறைவனுடைய திரு நாமம் என்னும் தீபத்தினால் எரித்து ஆன்ம ஒளி பெற வேண்டும் என்பது தீபாவளி பண்டிகையின் தத்துவம் ஆகும்

குபேரனை வழிபட சிறந்த நாள்

குபேரனை நாம் வழிபட்டால் அவருடைய அருள் கடாட்சம் நமக்குக் கிடைக்கும். குபேரன் எல்லா வளங்களையும் குறைவில்லாமல் தருபவர். பணவசதி தேக ஆரோக்கிய திடகாத்திரம் பெருகிட துணை புரிதல், கல்வி வளர்வதற்கான ஆயுதங்கள், வேலை வாய்ப்பு, வியாபாரப் பெருக்கம், தொழிற்துறை முதலியவை குபேரன் நமக்கு தரும் செல்வங்களாகும்.

இவர் பிறந்த நாள் வியாழக்கிழமை கூடிய பூச நட்சத்திரம். உரிய திசை வடக்கு. பிடித்த நைவேத்தியம் ஏலம், லவங்கம், கிராம்பு, வாசனைத் திரவியங்கள் கலந்த பால், கேசரி.

வியாழக்கிழமை அமைந்த பூச நட்சத்திரத்திலோ அல்லது வியாழக்கிழமையோ அல்லது பூச நட்சத்திரத்திலோ குபேரன் படம் ஒன்றைத் தயார் செய்து அதனுள் குபேரன் எந்திரம் ஒன்றை வைத்து பிரேம் செய்து அப்படத்தை குபேரத் திசையான வடதிசை நோக்கி வைத்து 48 நாட்கள் அதற்கான நைவேத்தியங்களைப் படைத்து வழிபட்டால் செல்வச் செழிப்பு நிச்சயம் உண்டாகும்

குபேர பூஜை செய்வது எப்படி?

குபேர பூஜை செய்வது எப்படி?
முதலில் சிறிது அரிசி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த மாவினால் மேலே உள்ளது போல 9 குபேர கட்டங்களை ஒரு மரப்பலகையில் போடுங்கள். பின்னர் அந்தக் கட்டங்களுக்குள் அரிசி மாவினால் எண்களை எழுத வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள எண் மீதும், ஒரு ரூபாய் நாணயத்தைத் தெரியும் வகையில் வைக்க வேண்டும்.

பின், அந்த மரப்பலகை எதிரே லட்சுமி குபேர படத்தை வைக்கவும், நாணயத்தின் மீது மஞ்சள், குங்குமம் வைத்து, குபேர சுலோகம் சொல்ல வேண்டும். அவ்வாறு சுலோகம் சொல்லும் போது, ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு பூவை வைக்கவும், மீதமிருக்கும் பூவை குபேர படத்தின் மீது போடவும். இந்தப் பூஜையை மிகுந்த பய பக்தியுடன் செய்ய வேண்டும்.

பூஜை முடிந்த பின்னர், கட்டங்களில் உள்ள நாணயங்களை எடுத்து உங்கள் வீட்டு பீரோவிலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலோ, கல்லாப்பெட்டியிலோ வைத்துக் கொள்ள வேண்டும். இந்த குபேர பூஜையால் செல்வம் பெருகும். வறுமை அகலும்.

தீபாவளி அன்று செய்ய வேண்டிய லட்சுமி குபேர பூஜை

லட்சுமி குபேர பூஜையை, தீபாவளி அன்றோ அல்லது அதற்கு மறுநாளோ செய்ய வேண்டும். லட்சுமி குபேர பூஜை செய்தால் அளவற்ற செல்வமும், கல்வி அறிவும் கிடைக்கும். குபேரன், மிகச் சிறந்த சிவபக்தர். அமைதியான குணம் கொண்டவர். "ஏழ்மையான ஒருவன் பணக்காரனாக வேண்டு மென்றால், சாந்த குணம் தேவை.

அவன் மற்ற பணக்காரர்களைப் பார்த்து ஏங்கக் கூடாது. அதற்குப் பதிலாக, பணக்காரர்களின் பின்னணியில் எந்த அளவுக்கு உழைப்பு இருக்கிறது என்று பார்க்க வேண்டும்'' என்பதே குபேர தத்துவம். குபேரனுக்கு மொத்தம் 2 மனைவிகள்...

ஒருத்தி பெயர் சங்க நிதி, மற்றொருத்தி பெயர் பதுமநிதி. இதில், சங்கநிதியின் கையில் எப்போதும் வலம்புரிச் சங்கு இருக்கும். செல்வச் செழிப்பைக் குறிக்கும் அடையாளம்தான் வலம்புரிச்சங்கு. பதும நிதி, தன் கையில் தாமரை வைத்திருப்பாள்.

தாமரை, கல்வி அறிவைக் குறிப்பதாகும். இவர்கள் இருவரிடமும் தான், தன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் குபேரன் கொடுத்து வைத்துள்ளார். எனவே நீங்கள் குபேரனை வழிபடும் போது, சங்க நிதியையும் பதும நிதியையும் மறக்காமல் வழிபட வேண்டும்.

Tuesday, October 21, 2014

சக்தி பூஜைக்குரித்தான 64 உபசார பூஜை


து ஷஷ்டி உபசாரா (64 வகைகள்)
சக்தி பூஜைக்கு மட்டூம் உரித்தானவை, 64 வகையான உபசாராங்கள்
என ஸித்தயாமளம் ௬றுவதைக் காணலாம் 1. ஆஸனாரோபணம் (இருக்கையில் அமர்தல்) 2. ஸுகந்தி தைலாப் ப்யங்கனம் (வாஸனைத் தைலக் குளியல்)
3. மஜ்ஜனசாலா ப்ரவேசனம் (குளியலறையில் செல்லல்) 4. மஜ்ஜன மணிபீட உபவேசனம் (குளியலறையிலுள்ள மணி பீடத்தில் அமர்தல்)
5. திவ்ய ஸ்நானீயகம் (தெய்வீகக் குளியல்)
6. உத்வர்த்தன ஸ்நானம் (பூச்சுப் பூசிக் குளித்தல்) 
7. உஷ்ணோதக ஸ்நான்ம் (வெந்நீர்க் குளியல்)
8. கனக கலச ஸ்த்தித ஸகல தீர்த்தாபிஷேகம் (தங்கக் குடத்திலுள்ள எல்லாப் புண்ய தீர்த்தம் சேர்ந்த ஸ்நானம்)
9. தெளத வஸ்த்ர மார்ஜ்ஜனம் (உலர்ந்த ஆடை கொண்டு துடைத்தல்)
10. அருண துகூல பரிதானம் (செம்பட்டாடை உடுத்தல்) 
11. அருண துகூல உத்தரீயம் (செம்பட்டு மேலாடை சாற்றல்)
12. அலேபனா மண்டப ப்ரவேசனம் (அலங்காரப் பூச்சு மண்டபம் அடைதல்)
13. ஆலேபன மணி பீட உபவேசனம் (அலங்காரத்திற்குரிய மணி பீடத்தில்
அமர்தல்
14. சந்தனம்-அகரு-குங்குமம் (குங்குமப் பூ) -கற்பூரம் (பச்சைக் கற்பூரம்)-
கஸ்தூரீ-கோரோசனை-திவ்ய கந்தாதி ஸர்வ அனுபேனம் (இத்தகைய
வாஸனைப் பொருள்களைப் பூசிடல்)
15. கேசமாரப்ப்ய காலா கரு தூப-மல்லிகா-ஜாதி-சம்பகம்-அசோகம்-
சதபத்ரம்-பூகம்-குட்மலீ புந்நாகம்-யூதி ஸர்வ ருது குஸு மமாலா
பூஷணம் (கூந்தலுக்குத் தூபம் காட்டி மல்லிகை-ஜாதிப்-புஷ்பம்-சம்பகம்
அசோகம் முதலிய மலர்களைச் சூட்டி அலங்காரம் செய்தல்)
16. பூஷண மண்டப ப்ரவேசனம் (அலங்கார மண்டபம் நுழைதல்)
17. பூஷண மணி பீட உபவேசனம் (அணி செய்யக் கூடிய மணி பீடத்தில்
அமர்த்தல்)
18. நவமணி முகுடம்(நவரத்ன க்ரீடம் சார்த்தல்)
19. சந்த்ர சகலம் (பிறைச் சந்திரனைச் சூட்டல்)
20. ஸீமந்த ஸிந்தூரம் (வகிட்டில் செந்தூரப் பொடி தடவல்)
21. காலாஞ்ஜனம் (கறுமையிடல்)
22. நாஸாபரணம் (மூக்குத்தி பூட்டல்)
23. அதர யாவகம் (உதட்டுச் சாயம் பூசல்)
24. க்ரதன பூஷணம் (மணிகோத்த அணி)
25. கனக சித்ர பதக்கம் (தங்கப் பதக்கம்)
26. திலகரத்னம் (ரத்ன திலகம் சேர்த்தல்)
27. மஹா பதக்கம் (பெரிய பதக்கம்)
28. முக்தாவளி (முத்து மாலை அணிவித்தல்)
29. ஏகாவலி (ஒற்றை வடச் சங்கிலி போடல்)
30. தேவச் சந்தகம் (ஒர் அணி)
31. கேயூரயுகளம் (தோள் அணிபூட்டல்)
32. வளயாவளி (வளையல்கள் அணிவித்தல்)
33. ஹாராவளி (மாலை வரிசைகள் போடல்)
34. கர்ப்ப்பகாவளி (இடுப்புச் சங்கிலி பூட்டல்)
35. காஞ்சீதாம (ஒட்டியாணம் போடல்)
36. கடி ஸூத்ரம் (அரைஞாண் பூட்டல்)
37. சோபனாக்யாபரணம் (சோபன அணி)
38. பாதவாடகம் (கால்காப்பு போடல்)
39. ரத்னநூபுரம் (ரத்னச் சலங்கை அணிவித்தல்)
40. பாதாங்குலீயகம் (மெட்டி பூட்டல்)
41. ஏககரேபாச: (ஒரு கையில் பாசக் கயிறு)
42. அந்யகரே அங்குசம் (மற்றொரு கையில் அங்குசம்)
43. இதர கரே புண்ட்ரேக்ஷுசாப: (இன்னொரு கையில் கரும்பு வில்)
44. அபரகரே புஷ்ப பாணா: (மற்றொரு கையில் மலரம்பு)
45. ஸ்ரீமன் மாணிக்ய பாதுகே (பெருமைமிகும் மாணிக்கத் தாலான கால் ஜோடுகள் பூட்டல்)
46. ஸ்வஸமான வேசாஸ்த்ராவரண தேவதாபி:ஸஹஸிம் ஸாஸனா ரோஹணம் (தனக்கு நிகரான சுற்றுப்புறத் தேவதைகளுடன் கூட ஸிங்காதனத்தில் வீற்றிருத்தல்)
47. காமேச்வரபர்யங்க ஆரோஹணம் (காமேசனின் கட்டிலில் அமர்தல்)
48. அம்ருதாசனசஷகம் (அமுதம் பருகும் பாத்ரம் வைத்திருத்தல்)
49.ஆசமனீயகம் (நீர் உட்கொள்ளல்)
50. கற்பூர வீடிகா (பச்சைக் கற்பூர வெற்றிலை பாக்கு)
51. ஆனந்த உல்லாஸ விலாஸஹ்ராஸ: (ஆனந்தகரமான உல்லாஸப் புன்னகை பூத்தல்)
52. மங்கள ஆரார்த்திகம் (மங்கள ஆரத்தி எடுத்தல்)
53. ச்வேதச் சத்ரம் (வெண் கொற்றக் குடை பிடித்தல்)
54. சாமரயுகளம் (இரட்டைச் சாமரம் வீசல்)
55. தர்ப்பண: (கண்ணாடி காட்டிப் பார்த்தல்)
56. தாளவ்ருந்தம் (பனை விசிறி வீசல்)
57. கந்த: (சந்தனம் பூசல்)
58. புஷ்ப: (பூ சார்த்தல்)
59. தூபம் (சாம்ப்ராணி காட்டல்)
60. தீப: (நெய் விளக்கு ஏற்றிக் காட்டல்)
61. நைவேத்யம் (படையலை அமுது செய்வித்தல்)
62. புநராசமனீயம் (மறுபடி நீரருந்துதல்)
63. தாம்பூலம் (வெற்றிலை பாக்கு காட்டல்)
64. வந்தனம் (வணக்கம் செலுத்துதல்)
- இவ்வாறு சக்தி பூஜைக்குரித்தான 64 உபசார பூஜை முறைகளைப் பற்றி ஸித்தயாமள தந்த்ரம்

Monday, October 20, 2014

தீபாவளியன்று மாமிசம் உண்ணாதீர்கள்

சில வீடுகளில் மறைந்த முன்னோர்களான பிதுர்கள் வருவதாக ஒரு ஐதீகம். நரகத்தில் இடப்பட்டவர்கள் விடுதலை பெற்று வீடுகளுக்கு வருவதாக நம்பி உணவு படைப்பார்கள். இதனால் இத்திருநாளுக்கு நரக சதுர்த்தி என்ற சிறப்பு பெயரும் உண்டு.

அசைவம் வேண்டாம் உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி பாவச் செயல்களை விடுத்து தர்மசிந்தனையோடு விளங்க தீபாவளி அன்று ஆலயம் சென்று வழிபடுவதும் நல்லது. ஆனால் பலர் தீபாவளியை தவறான முறையில் கொண்டாடி தீபாவளியின் தெய்வத் தன்மையை கெடுத்து விடுகின்றனர்.

சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கூறி மது அருந்தி மாமிசம் உண்டு மகிழ்வதாக கூறி தாங்களே நரகாசுரர்களாக மாறிவிடுவது கவலைக்குரிய ஒன்றாகும். புனிதமான தீபாவளி திருநாளில் தீய பழக்கங்களை கைவிட்டு தூய உணவை சாப்பிட்டு களித்திருக்க வேண்டும்.

மது அருந்துதல் மாமிசம் உண்ணுதல், பலவித கேளிக்கைகளில் ஈடுபடுதல், அசுர குண இயல்புகளாகும். கடவுளை மறந்து வாழ்பவர்கள் பலவித துன்பங்களை அனுபவிப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டவே நரகாசுரன் வரலாறு சொல்லப்பட்டுள்ளது. எனவே தீபாவளியன்று மது மாமிசம் உண்பதை நிறுத்தி இறை பக்தியோடு வாழ வேண்டும்

கங்கா ஸ்னானம் ஆச்சா?

தீபாவளி தினத்தன்று காலை ஒருவரை ஒருவர் பார்க்கும் போது கேட்கும் முதல் கேள்வியே, "என்ன...கங்கா ஸ்னானம் ஆச்சாப'' என்பதாகத்தான் இருக்கும். அதாவது அன்று புனித கங்கையில் நீராடி தீபாவளியை கொண்டாட வேண்டும் என்பது ஐதீகமாகும்.

ஆனால் எல்லாராலும் புனித கங்கைக்கு சென்று நீராடுவது என்பது இயலாத காரியமாகும். அதனால் தான் தீபாவளி தினத்தன்று எல்லா நீர்நிலைகளிலும் கங்கை ஐக்கியமாவதாக நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்ளனர்.

அன்று வெந்நீரில் கங்கையை நினைத்து நீராடினாலே புனித கங்கையில் குளித்த புனிதமும் புண்ணியமும் கிடைத்துவிடும். தீபாவளி தினத்தன்று கங்கையாக பாவித்து நாம் நீராடுவதால் எல்லா தோஷங்களும் நீங்கும். நம் உடலிலும் மனதிலும் புத்துணர்ச்சித் தோன்றும்.

அதோடு செல்வத்தையும் செல்வாக்கையும் இந்த நீராடல் பெற்றுத்தரும். அதனால் தான் யுகங்கள் கடந்தும், தீபாவளி திருநாளில் மட்டும், கங்கா ஸ்னானம் ஆச்சா என்று கேட்கும் வழக்கம் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

கங்கையில் நீராடுவது என்பது எந்த அளவுக்கு புண்ணியம் தர வல்லது என்பதை சிவபெருமானே ஒரு சம்பவம் மூலம் பக்தர்களுக்கு உணர்த்தி இருக்கிறார். ஈசன் செய்த அந்த சம்பவம் வருமாறு:-

ஒரு தடவை விசாலாட்சி சிவபெருமானிடம் சுவாமி! இன்று நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாள். இந்த நாளில் இரண்டு புண்ணிய வான்களையாவது பார்க்க வேண்டும்'' என்றார். அதற்கு விசுவநாதர் "சரிவா'' போகலாம். நான் கங்கை நீரில் மூழ்கியவன் போல் அலறுகிறேன்.

நீ கரையிலிருந்து என்னைக் காப்பாற்றச் சொல்லி கத்த வேண்டும். அதோடு புண்ணியவான்கள்தான் என்னைக்காப்பாற்ற முடியும் என்றும் சொல்லு'' என்றார். கங்கைக்கரை, பழுத்த சுமங்கலியாய் விசாலாட்சி கரையில் நிற்கிறாள்.

பஞ்சுப் பொதிபோல் நரைத்த தலை விசாலமான விழிகள், லட்சணமான முகவசீகரம், விசுவநாதர் தளர்ந்த சிவந்த மேனியுடன் கங்கையில் மூழ்கி எழுகிறார். "என் புருஷனை யாராவது காப்பாற்றுங்கள்'' என்று குரல் கொடுக்கிறாள் அன்னை. நீர் கொள்ளாத மனிதத் தலைகள்.

சிலர் விசுவநாதர் நீரில் போராடும் பக்கமாக விரைகின்றனர். சிலர் மேலிருந்து குதித்து நீந்துகின்றனர். சிலர் நீந்தத் தெரியாதே எனத்தவிக்கின்றனர். "ஐயா! கருணை மனம் கொண்டவர்களே! புண்ணியவான்கள் தான் அவரைக் காப்பாற்ற முடியும்.

பாவிகள் அவரைத்தொட்டால் சுழலில் சிக்கிமாள்வார்கள்'' என்றாள் பார்வதி பலர் பின் வாங்கி விட்டனர். இருவர் மட்டும் முன்சென்று விசுவாதரை இழுத்து வந்தார்கள். "நீங்கள் இருவரும் பாவமே செய்த தில்லையா?'' என்று கேட்டாள் அன்னை "தாயே! நான் பாவம் செய்தேனா... இல்லையா என்று தெரியாது.

என் கண்முன் ஒரு உயிர் மரண அவஸ்தையில் தவிக்கும்போது அவரைக் காப்பாற்றும் முயற்சியில் நான் இறந்தாலும் தப்பிலை என்றிருந்தாலும் போகக்கூடிய உயிர் நல்ல காரியத்துக்கு முயற்சி செய்தோம் என்ற திருப்தியோடு சாகலாம் பாருங்கள்'' என்றான் ஒருவன்.

இரண்டாமவன், அம்மா நான் பாவியாகவே இருந்தாலும் கங்கையில் குதித்தவுடன் என் பாவம் போய் விடுகிறது. அப்படி நம்பித்தானே கோடானு கோடி பேர் இங்கு நீராட வருகிறார்கள்! புண்ணியவானாக மாற்றப்பட்ட நான் அவரைக் காப்பாற்ற தகுதி படைத்தவனாகவே நினைத்தேன்'' என்றான்.

இருவரையும் ஆசீர்வதித்துவிட்டு அங்கிருந்து அம்மையும், அப்பனும் சென்றனர். "தேவி! இப்போது சொல்! கங்கை என் தலையில் இருக்கத் தகுதி பெற்றவள்தானா?'' என்றார் சதாசிவன்.

"என்னை மன்னியுங்கள்! இரு நல்லவர்களின் சந்திப்பே என்னை மெய்சிலிர்க்கச் செய்கிறது. தினம், தினம் எத்தனை தூயவர்களின் உரையாடல்களை தீயவர்களின் குறைகளைக் கேட்டு மவுனமாக இயங்கும் கங்கை மிகப்புனிதமானவள்.

தலையில் தாங்கிக் கூத்தாடும் அளவு பெருமை பெற்றவள்'' என ஒப்புக்கொண்டாள் அன்னை. அந்த கங்கையை தீபாவளி நாளில் அதிகாலை நினைத்து தொழுது நீராடி, பாவ எண்ணங்களை களைய வேண்டும்.

செல்வம் தரும் எண்ணெய் குளியல் -----

தீபாவளியன்று கட்டாயம் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பது ஐதீகம். தலைக்கு எண்ணெய் தேய்ப்பதில் கூட சாஸ்திரங்கள் உண்டு. ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் தேய்த்து நீராடினால் மனவருத்தத்தையும், திங்கட்கிழமை உடலுக்கு புத்துணர்ச்சியையும், செவ்வாய்க்கிழமை உடல் நலக்குறைவையும், புதன்கிழமை செல்வத்தையும், வியாழக்கிழமை உடல் நலத்தையும், வெள்ளிக்கிழமை அதிக செலவையும், சனிக்கிழமை விரும்பியவற்றை அடைதலையும் அளிக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டு புதன்கிழமை தீபாவளி வருவதால் அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கும் பட்சத்தில் செல்வம் சேரும் என்பது ஐதீகமாகும். ஞாயிறு எண்ணெயுடன் புஷ்பங்களையும், செவ்வாய் சிறிது மண்ணையும், வெள்ளி கோசலத்தையும் சேர்த்துக்கொண்டு எண்ணெய் ஸ்நானம் செய்யலாம்.

மேலும் சஷ்டி, ஏகாதசி, துவாதசி, சதுர்த்தி, அஷ்டமி, பிரதமை, பவுர்ணமி, அமாவாசை ஆகிய திதிகளிலும் உத்தரம், கேட்டை, திருவோணம், திருவாதிரை ஆகிய நட்சத்திரங்களிலும் எண்ணெய் நீராடக்கூடாது என்றும் அவ்விதம் செய்ய நேரிட்டால் சிறிது நெய் கலந்து எண்ணெய் நீராடலாம் என்றும் அப்பயங்க ஸ்நானம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக அறநூல்களில் காலை 8.30 மணிக்கு முன்பும் மாலை 5.00 மணிக்கு பின்பும் எண்ணெய் தேய்த்து நீராடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தீபாவளியன்று மட்டும் அதிகாலை நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராடுவது கட்டாயமாக செய்ய வேண்டுமென்றும் அவ்விதம் செய்யாவிடில் நரகத்தைக் கொடுக்ககூடிய பாவம் சேரும் என்றும் தர்ம சாஸ்திரம் கூறுகிறது.

தவிர நரக சதுர்த்தசியன்று அதிகாலையில் சூரியன் சந்திரன் இருவரும் பெரும்பாலும் சுவாதி நட்சத்திர சாரத்தில் சஞ்சரிப்பதால் இது மிகவும் புண்ணிய தினம் என்றும், அந்நாளில் எண்ணெய்த்தேய்த்து நீராடிப் புத்தாடை அணிந்து லட்சுமி நாராயணனைப் பூஜிப்பது சிறப்பான பலனைத்தரும் என்று விஷ்ணு புராணம் தெரிவிக்கிறது.

தீபாவளியன்று எண்ணெயில் லட்சுமி தேவியும் தண்ணீரில் கங்கா தேவியும் உறைகின்றனர். இதற்கு விஷ்ணு புராணத்தில் ஒரு வரலாறும் உண்டு. நரகாசுரனுடன் பகவான் போரில் இருந்தசமயம் அரக்கர்கள் லட்சுமி தேவியைக் கவர்ந்து செல்ல முயன்றனர். உடனே தேவி பகவான் போர் முடிந்து திரும்பும் வரை எரிந்து கொண்டிருந்த ஒரு தீபத்தில் மறைந்து விட்டதாக விஷ்ணு புராணம் கூறுகிறது.

இந்தப் புண்ணிய தினத்தில் தான் பாற்கடலில் தோன்றிய திருமகளை நாராயணன் திருமணம் செய்து கொண்டார். அப்போது தேவர்களுடன் யமதர்மராஜனும் பணிந்து போற்றினார்கள். இதை கண்ட லட்சுமி, யமனிடம் இப்பண்டிகையை முறையாக கடைப் பிடிப்பவர்களது வீட்டில் என் உத்தரவு இன்றி நீ பிரவேசிக்கக்கூடாது என்று உத்தரவிட்டாள்.

லட்சுமி தேவியின் அந்த உத்தரவை யமதர்மராஜனும் ஏற்றுக்கொண்டார். இதனால் லட்சுமி தேவி மகிழ்ந்து, இன்று உன்னையும் மனிதர்கள் ஆசாரத்துடன் சோபன அட்சதைகளால் பதினான்கு தர்ப்பணம் செய்து மகிழ்விப்பார்கள் என்று வரம் அளித்தாள். இதுவே தற்போது யமதர்ப்பண தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

எண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் ஆரோக்கியத்திற்கும் ஆயுளுக்கும் பலன் கொடுக்கும். தீபாவளிக்கு முதல் நாள் இரவு நல்லெண்ணெயில் மிளகாய், மிளகு, சீரகம், இஞ்சி, மஞ்சள் தட்டிப்போட்டு காய்ச்சி தயார் செய்து கொள்ள வேண்டும். மறுநாள் அதிகாலை தலை உடல் எல்லாம் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

மிளகாய் வாயுவை அடக்கும். மிளகு, சீரகம் ஜீரணத்துக்கு உதவும் இஞ்சி பித்தத்தை தணிக்கும். மஞ்சள் குளிர்ச்சியை தரும். தலையில் எண்ணெய்யை அழுந்த தேய்த்து சீயக்காய் தேய்த்து குளிப்பது உஷ்ணத்தை நீக்கி குளிர்ச்சி தரும்.

அதிகாலை நீராட வேண்டும் என்பதால் அன்று வெந்நீரில் நீராட வேண்டும். நீரினுள் ஆல் அரசு புரசு அத்தி மாவிலங்கம் பட்டை போட்டு சுடவைத்து அந்த மருத்துவ குணம் கொண்ட நீரில் ஸ்நானம் செய்து புத்தாடை அணிந்து பூஜை அறையில் தீபம் ஏற்றி இறைவனை வழிபட வேண்டும்.


தீபாவளிக்கு தேய்த்து குளிக்க எந்த எண்ணெய் சிறந்தது?


நல்லெண்ணெய் எண்ணெய் தேய்த்து குளிப்பது மிகவும் நல்லது. தலையில் மட்டும் அல்ல உடல் முழுவதும் தேய்த்து குளிக்க வேண்டும். காதுகளில் இரண்டு சொட்டு எண்ணெய் விடுவது நல்லது. ரொம்ப முக்கியம் கடைகளில் விற்கப்படும் எண்ணெய் வேண்டாம்.

சுத்தமாக செக்கில் ஆட்டிய எண்ணெய், உபயோகிக்கவும், அவை அனைத்து இடத்திலும் கிடைக்கும். இல்லை என்றால் நீங்களே எள்ளு வாங்கி மில்லில் கொடுத்து அரைத்து வாங்கி கொள்ளலாம். பலர் ஞாயிறு விடுமுறை என்பதால் அன்று தான் குளிக்கின்றனர்.

அது தவறு. "ஞாயிற்றுகிழமை கழுதை கூட எள்ளு காட்டு பக்கம் போகாது'' என்பது பழமொழி. சனி நீராடு என்பதும் பழமொழி. நீங்கள் பிறந்த நட்சத்திரம், திதி, கிழமைகளில், குளிக்க கூடாது. குளித்தால் பலன் கொஞ்சும் குறையும் அவ்வளவுதான்.

5 மணி முதல் 7 மணி வரை எண்ணெய் தேய்த்து குளிக்க நல்ல நேரம். மதியம் 12 மணிக்கு பிறகு எண்ணெய் தேய்த்து குளித்தால் பலன் இருக்காது. உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து 15 நிமிடம் வைத்து இருந்து பிறகு குளிக்க வேண்டும். ரொம்ப நேரம் தேய்த்து வைத்திருக்க கூடாது.

எண்ணெய் தேய்த்து குளித்த பின்பு செய்ய கூடாதவை. தூங்ககூடாது. தூங்கினால் பலன் இருக்காது. இரவு வரை தூங்க கூடாது. ஏன் என்றால் உங்கள் கண்களில் இருந்து வெப்பம் வெளியேறி கொண்டிருக்கும். அப்போது தூங்கினால் உடல் பாதிக்கும்.

ஆனால் தூக்கம் வரும். உடலில் எண்ணெய் தேய்த்து வைத்திருக்கும் போது கண்ணாடி பார்க்க கூடாது. பழங்கள், மோர், தயிர், பால், ஜுஸ், ஐஸ் க்ரீம் போன்ற எந்த குளிர்ச்சி பொருட்களும் உண்ண கூடாது. ஓடி, ஆடி வேலை செய்யவோ, விளையாடவோ கூடாது. முழுக்க முழுக்க ஓய்வாக இருக்க வேண்டும். ஆனால் தூங்க கூடாது
எண்ணெய் குளியலுக்கு சிறந்த தினம்15 வருடங்களுக்கு முன்பு வரை எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது நமது கிராமங்களில் சனிக்கிழமை அன்று எண்ணெய் குளியல் நிறைய வீடுகளில் நடக்கும். இன்று அது அரிதாகி விட்டது. தீபாவளி அன்று தான் நம் வீட்டில் எண்ணெய் தேய்த்துக் குளியல் நடக்கும்.

ஆனால் அதன் முழுப்பயனும் அன்று ஒரு நாள் மட்டும் குளித்தால் நடக்குமா? நிச்சயம் நன்மை இருக்காது. ``எண்ணெய் குளியல் உடலுக்கு மட்டுமின்றி, உள்ளத்துக்கும் பல நன்மைகளைக் கொடுக்கக்கூடியது. இந்த தீபாவளி முதல் எண்ணெய் குளியலை மறுபடி உங்கள் வாழ்க்கையில் வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள்''. ``நமது சருமம் மற்றும் கூந்தலுக்கு எண்ணெய் சத்தானது அவசியம்.

இரண்டிலும் இயல்பிலேயே மிதமான கொழுப்பும் எண்ணெய் சுரப்பும் இருக்கும். அந்த இரண்டும் நம் சருமம் மற்றும் கூந்தலுக்குக் கவசம் போன்றவை. இதைத் தக்க வைத்துக்கொள்ள வெளியிலிருந்து எண்ணெய் தடவுவது, மசாஜ் செய்து குளிப்பது போன்றவை அவசியம்.

பிறந்த குழந்தைக்கு காலையில் எழுந்ததும், அதன் தாய் செய்கிற விஷயம், உச்சந்தலையில் எண்ணெய் வைப்பது. குழந்தை வளர வளர இந்தப் பழக்கம் மெல்ல மறைகிறது. இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும், தலையில் எண்ணெய் வைத்துக் கொள்வதை நாகரிகக் குறைவாக நினைக்க ஆரம்பிக்கிறார்கள் பிள்ளைகள்.

எண்ணெய் குளியலையும் தவிர்க்கிறார்கள். எண்ணெய் தேய்த்துக் குளித்தால் முகமெல்லாம் எண்ணெய் வழியும் என்பது பரவலான குற்றச்சாட்டு. சரியான முறையில் எண்ணெயைத் தேய்ப்பதும், பிறகு சரியான முறையில் குளிப்பதும் இந்தப் பிரச்சனையைத் தவிர்க்கும்.

உங்களுக்கு எந்த எண்ணெய் பிடிக்குமோ, ஒப்புக் கொள்ளுமோ அதை தலை, உடல், கை, கால் என முழுக்கத் தடவுங்கள். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு என்று நாட்கள் உள்ளன. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் செய்ய வேண்டும்.

சாஸ்திரங்கள் ஆண்கள் சனிக்கிழமைகளில் எண்ணெய் நீராடுவது உசிதம் என்கின்றன. காரணம் சனி அசதி, சோம்பேறித்தனம் நிறைந்த தமோ குணத்தின் அதிபதி. எண்ணெய் குளியல் முடிந்த பின் மனிதனின் சுறுசுறுப்பு குறைந்து அசதியும், உறக்கமும் ஏற்படும்.

விரைந்த செயல்பாடுகள், சடங்குகள், மங்கல நிகழ்ச்சிகள் சனிக்கிழமைகளில் செய்வது வழக்கமில்லை. எனவே ஓய்வை உண்டாக்கும் எண்ணெய் குளியலை சனியன்று செய்வது நல்லது. பெண்களுக்கு சனியை விட சுக்ரனின் உதவி அதிகம் தேவை.

செவ்வாயும், வெள்ளியும் பெண்களுக்கு உகந்த கிரகங்களின் நாட்கள். எனவே இந்தக் கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது
விளக்கில் முதலில் திரியைப் போட்டு பின்னர் எண்ணெய் ஊற்றக் கூடாது

 பசு நெய்-எல்லா சுகங்களும் கிடைக்கும். செல்வம் சேரும்.

* நல்லெண்ணை-எல்லாவித பீடைகளும் விலகும்.

* கடலை எண்ணெய்-இதை ஊற்றி தீபம் ஏற்றக்கூடாது.

* விளக்கு எண்ணெய்-தாம்பத்திய சுகம், புகழ் தேவதை வசியம் கிடைக்கும். பொதுவாக சுத்தமான, கலப்படமில்லாத நல்லெண்ணை ஏற்றி வீட்டில் விளக்கேற்றினாலே போதும். சிறிய வெள்ளி காமாட்சி விளக்கு வாங்கி அதில் நெய் ஊற்றி காலையிலும், மாலையிலும் ஏற்றி வைப்பது நல்லது.

ஆலயத்தில் இலுப்ப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி சிவனை வழிபட்டால் கடன்கள் தீரும். இலுப்ப எண்ணெய் கோவில்களில் மட்டும்தான் பயன்படுத்தலாம். வீட்டில் விளக்கேற்ற இலுப்பை எண்ணெய் பயன்படுத்தக்கூடாது. கணபதிக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றலாம். மகாலட்சுமிக்கு பசு நெய் ஊற்றி விளக்கேற்றலாம்.

மகாவிஷ்ணுவுக்கு நல்லெண்ணை ஊற்றி விளக்கேற்றலாம். எல்லா தேவதைகளுக்கும் நல்லெண்ணை விளக்கு ஏற்றலாம். விளக்கிற்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் கடலை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றவே கூடாது. அப்படி ஏற்றி வைத்தால் கடன்கள் பெருகும். தீயவிளைவுகள்தான் ஏற்படும்.

பசுநெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய இந்த ஐந்தும் கலந்த பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி ஐந்து முகம் ஏற்றி பஞ்சமி திதியில் தேவியை வழிபட்டால் அம்மனின் அருள் கிடைக்கும். பஞ்சதீப எண்ணெய் ஊற்றி ஐந்து முகம் ஏற்றி வடக்குப் பக்கம் பார்த்து தீபம் ஏற்றி வந்தால் எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

துன்பங்கள் நீங்கும். வரவேண்டிய பண பாக்கிகள் வந்து சேரும். ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய தினங்களில்தான் குத்துவிளக்கை விளக்கி சுத்தப்படுத்த வேண்டும். பிற நாட்களில் சுத்தப்படுத்தக் கூடாது.

குத்து விளக்கு பூஜை செய்தால் தலைவாழை இலை மீது குத்து விளக்கை வைத்து பூஜை செய்ய வேண்டும். விளக்கில் விபூதி, சந்தனம் அல்லது குங்குமம் உச்சியில் ஒரு பொட்டும் அதன் கீழ் மூன்றும், அதன் அடி கீழ் இரண்டும், அடியில் இரண்டுமாக எட்டு இடங்களில் பொட்டு இட வேண்டும்.

குத்து விளக்கின்அடிப்பாகத்திலும், நடுப்பகுதியிலும், உச்சிப் பகுதியிலும் பூச்சூட வேண்டும். விளக்கில் முதலில் திரியைப் போட்டு பின்னர் எண்ணெய் ஊற்றக் கூடாது. முதலில் எண்ணெய் ஊற்றி விட்டு பின்னர்தான் திரிபோட வேண்டும்.

தீபாவளிதிருநாளில் இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். தீபாவளி தின தீப வழிபாடு உங்கள் புகழ், செல்வம், உடல் நலத்தை மேலும் அதிகரிக்கும்

உண்மையான பக்தன்

பக்தர்கள் இருவர் பரந்தாமனை வேண்டிக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவரின் வேண்டுதலும் தினமும் தவறாது நடைபெறக் கூடியது. ஒரு முறை மகாவிஷ்ணுவிடம், ‘சுவாமி! இந்த இரு பக்தர்களின் யார் தங்களை முழுமையாக நம்புகிறார்கள்?’ என்று மகாலட்சுமி தேவிகேட்டாள்.

அதற்கு மகாவிஷ்ணு, ‘என்னிடம் வேண்ட வரும் அவர்கள் இருவரின், வேண்டுதல்களையும் கேட்டால், உனக்கே புரியும்’ என்று கூறினார். முதல் பக்தன் வேண்டத்தொடங்கினான். ‘கடவுளே! எனக்கு வரும் வருமானத்தில், மாதத்தின் பாதி நாட்களை ஓட்டிவிடுகிறேன்.

மீது பாதி நாட்களில் நான் கஷ்டப்படாமல் இருக்க நீதான் வழிகாட்ட வேண்டும்’ என்று வேண்டினான்.  இரண்டாவது பக்தன், ‘சுவாமி! எனக்குக் கிடைப்பவை எல்லாமே உன்னருளால் கிடைப்பவைதான்.

அதனைக் கொண்டு பாதி நாட்களுக்கு படி அளக்கும் நீ, மீதி நாட்களுக்கும் படி அளக்க மாட்டாயா என்ன? உன்னருள் கிட்டும் வரை நான் காத்திருப்பேன்’ என்று வேண்டினான். மகாலட்சுமிக்குப் புரிந்து போனது, கடவுள் கருணையாலேயே எல்லாம் நடப்பதாக நம்புபவனே உண்மையான பக்தன் என்பது

விநாயகப் பெருமான்--4 விதமாக அதிசய– அற்புத திருவடிவை கொண்டவர்

 விநாயகப் பெருமான்– மனித கண்கள், யானை முகம், பேழை வயிறு, தேவ அம்சம் என 4 விதமாக அதிசய– அற்புத திருவடிவை கொண்டவர். விநாயகப் பெருமான் ‘ஓம்’ என்னும் பிரணவ வடிவமாகவும், ‘கம்’ என்னும் பீஜ மந்திரமாகவும் காட்சி தருபவர்.

அருகம்புல், எருக்கம்பூ, வன்னி இலை போன்றவை விநாயகருக்கு பிடித்தமானவை. இதனைக் கொண்டு அவருக்கு அர்ச்சித்து வழிபட்டால் சகல நன்மைகளும் வந்து சேரும், கிரக பீடைகள் அகன்றோடும்.

* இதிகாசங்களிலும், ஆகம விதிகளிலும், விநாயகப் புராணத்திலும், விநாயகருக்கு 32 வடிவங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளன. அவை. பால கணபதி, தருண கணபதி, வீர கணபதி, சக்தி கணபதி, துவஜ கணபதி, சித்தி கணபதி, உச்சிஷ்ட கணபதி, ஷிப்ர கணபதி,

விக்ன கணபதி, ஹேரம்ப கணபதி, லட்சுமி கணபதி, மகா கணபதி, விஜய கணபதி, நிருத்த கணபதி, ஊர்த்துவ கணபதி, ஏகாட்சர கணபதி, வர கணபதி, திரயஷ்ர கணபதி, ஷிப்ரப் பிரசாத கணபதி, பக்தி சக்தி, ஹரித்துர கணபதி, ஏகநந்தக் கணபதி,

சிருஷ்டி கணபதி, உத்தண்டக் கணபதி, ருணமோஷன கணபதி, துண்டிக் கணபதி, துவிமுகக் கணபதி, திரிமுகக் கணபதி, சிங்க கணபதி, யோகக் கணபதி, துர்க்கா கணபதி, சங்கடஹர கணபதி.

கிருஷ்ணரை சந்தித்த உதங்கர்

மகாபாரதப் போர் முடிந்து, கிருஷ்ணர் குருஷேத்திரத்தில் இருந்து தன் ஊரான துவாரகைக்குச் செல்லக் கிளம்பினார். போகும் வழியில், ஒரு மாபெரும் பாலைவனத்தைக் கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அதைக் கடந்து போய்க் கொண்டிருந்தபோது, அந்தப் பாலைவனத்திலேயே தங்கிக் கடும் தவம் செய்து கொண்டிருந்த முனிவரான உதங்கர், கிருஷ்ணரைக் கண்டார். கடவுள் உருவமான கிருஷ்ணரைக் கண்டதும், உதங்கரின் மனதில் மகிழ்ச்சி மேலிட்டது.

அவர் கிருஷ்ணரிடம் வந்து பாதபூஜை செய்து வணங்கி நின்றார். பின்னர் கிருஷ்ணரிடம், கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் நிலவி வந்த பிரச்சினையைப் பற்றிப் பேசத் தொடங்கினார். ‘கிருஷ்ணா! கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும்மான பிரச்சினையைச் சரி செய்வதற்காக நீ தூது சென்றாயே!, அது நீ நினைத்தபடி வெற்றி அடைந்ததுதானே?’ என்று கேட்டார்.

கிருஷ்ணரோ அவ்வாறு நடக்கவில்லை என்று கூறிவிட்டு, மகாபாரதப் போர் நடந்த விவரத்தையும் எடுத்துரைத்தார். இப்போது உதங்கருக்கு, கிருஷ்ணர் மேல் கோபம் வந்தது. ‘நீ! எப்படியாவது சமாதானத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டியவன். நீயே இப்படிச் செய்யலாமா?. உன் செயல் தவறானது.

ஆகையால், உனக்கு நான் சாபம் கொடுப்பதென்று முடிவு செய்துவிட்டேன்’ என்று சொல்லி, கிருஷ்ணருக்குச் சாபம் கொடுக்கத் தயாரானார். அமைதியாக உதங்கரின் பேச்சைக் கேட்ட கிருஷ்ணர், ‘உதங்கரே! துரியோதனனுக்கு நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அவனே வலிய வந்து போர் செய்யப் பாண்டவர்களைத் தூண்டினான்.

கொஞ்சமும் சமாதானத்துக்கு அவன் தயாராக இல்லாத போது, நான் வேறு என்ன செய்யமுடியும்?’ என்று அவருக்குத் தெளிவாக விளக்கினார். உதங்கருக்குக் கிருஷ்ணரின் பேச்சில் உள்ள நியாயம் புரிந்தது. ‘கிருஷ்ணா! அவசரப்பட்டுப் பேசிவிட்டேன். என்னை மன்னித்துவிடு’ என்று கிருஷ்ணரை வணங்கினார்.

கிருஷ்ணர் அவரை மன்னித்தாலும், அவர் மனதுக்குள் ஒரு எண்ணம் எழுந்தது. ‘இவ்வளவு நியாயம் பேசும் இந்த உதங்கர், அப்படி என்னதான் நியாயவாதி என்பதைக் கொஞ்சம் சோதித்துத்தான் பார்ப்போமே!’ என்று நினைத்துக் கொண்டார். உதங்கரிடம் வேண்டிய வரத்தைக் கேட்கும்படிச் சொன்னார்.

உதங்கர், ‘வரம் ஏதும் வேண்டாம்’ என்று மறுத்தபோதும், கிருஷ்ணர் வற்புறுத்தவே, உதங்கரும் வேறு வழியின்றி ஒரு வரத்தைக் கேட்டார். ‘கிருஷ்ணா! இந்தப் பாலை வனத்தில் நான் நினைக்கும்போது, எனக்குத் தண்ணீர் கிடைக்கவேண்டும்’ என்று வரம் கேட்டார். கிருஷ்ணரும், ‘அப்படியே ஆகட்டும்’ என்று வரமளித்து விட்டு, அவ்விடத்தில் இருந்து அகன்றார்.

நாட்கள் பல கடந்து விட்டன. உதங்கர் வழக்கம்போலத் தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் திடீரென்று உதங்கருக்கு மிகுதியான தாகம் எடுத்தது. ‘என்ன இது! ஒரு நாளும் இல்லாத திருநாளாக இன்று இப்படி தாகம் எடுக்கிறது. என் தவ வலிமையை கொண்டும் கூட இந்த தாகத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லையே’ என்று எண்ணினார் உதங்கர்.

மாயவன் விரித்த மாயவலையில் வீழப் போகும் உதங்கருக்கு, தாகம் அவ்வளவு எளிதில் அடங்கி விடுமா என்ன? வெகு நேராக தாகத்தை அடங்க முயற்சித்தும், அது இயலாது போன நிலையில், கிருஷ்ணர் கொடுத்த வரம் உதங்கரின் நினைவுக்கு வந்தது. உடனடியாக கிருஷ்ணரை நினைத்தபடி, ‘எனக்கு இப்போதே தண்ணீர் கிடைக்கவேண்டும்’ என்று மனதால் வேண்டிக் கொண்டார்.

சற்று நேரத்தில், அந்த வழியாக நாய்களை ஓட்டியபடி ஒருவன் வந்தான். அவனது உருவம் பார்ப்பதற்கே அருவருப்பாக இருந்தது. மாமிசத்தை கையில் வைத்து சுவைத்த படி அவர் உதங்கரை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவனிடம் இருந்த தோல் பையில் தண்ணீர் இருந்தது. உதங்கர் தாகத்தில் தவிப்பதைப் புரிந்து கொண்ட அவன், ‘உதங்கரே! என் பையில் தண்ணீர் இருக்கிறது.

இந்தாருங்கள், இதைக் குடித்து உங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினான். ‘பார்க்கவே அருவருப்பாக, தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவன் போல் இருக்கும் இவனிடம் தண்ணீர் வாங்கிக் குடிப்பதா?’ என்று நினைத்த உதங்கர், ‘எனக்கு உன் தண்ணீர் ஒன்றும் வேண்டாம். தயவுசெய்து இங்கிருந்து சென்றுவிடு’ என்று அவனை விரட்டினார்.

உடனடியாக அவன் அங்கிருந்து மறைந்து போனான். அதைக் கண்ட உதங்கர் அதிர்ச்சி அடைந்தார். அந்த அதிர்ச்சியில் இருந்து அவர் மீள்வதற்குள், அந்த இடத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்தார் கிருஷ்ணர். அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்த உதங்கரைப் பார்த்து, ‘என்ன உதங்கரே! நீர் நினைத்தபடித் தண்ணீர் கிடைத்ததா?’ என்று கேட்டார்.

உதங்கரோ, ‘கிருஷ்ணா! என்ன விளையாட்டு இது?. சண்டாளனிடம் நான் எப்படி நீர் வாங்கிக் குடிப்பது?. தர்மம் தெரிந்த உனக்கு இது தெரியாதா?’ என்று இழுத்தார். கிருஷ்ணர் சிரித்துக்கொண்டே, ‘உதங்கரே! இப்படி ஒருவனை, அவன் செய்யும் தொழிலைக் கொண்டு இழிவாகப் பார்ப்பது தவறு. உங்கள் தர்மம்தான் விசித்திரமாக இருக்கிறது.

சரி, அது போகட்டும். வந்தது யார் தெரியுமா?’ என்று கேட்க உதங்கரோ ஒன்றும் புரியாமல், தெரியாமல் திகைப்பில் விழித்துக் கொண்டிருந்தார். ‘நானே சொல்கிறேன். வந்தது இந்திரன். அவன் கையில் இருந்த தண்ணீர் அமிர்தம். உம்மைச் சோதிப்பதற்காகவே அவன் அப்படி வந்தான்.

அமிர்தம் குடித்து தேவனாக வாழ்வு பெறும் ஒரு நல்ல வாய்ப்பை நீங்கள் இன்று இழந்தீர்கள்’ என்று கிருஷ்ணர், உதங்கருக்கு விளக்கினார். தன் செய்கையை நினைத்து உதங்கர் வெட்கித் தலை குனிந்தார். ‘இருந்தாலும் பரவாயில்லை.

உங்களுக்கு நான் அளித்த வரத்தின்படி, இனி நீங்கள் தண்ணீர் வேண்டும் போதெல்லாம், இந்தப் பாலைவனத்தில் மேகங்கள் வந்து மழை பொழிந்துவிட்டுப் போகும். அவை உங்கள் பெயரால் ‘உதங்க மேகங்கள்’ என்றே அழைக்கப்படும்’ என்று உதங்கருக்கு அருள் செய்துவிட்டு அங்கிருந்து மறைந்தார், கிருஷ்ண பரமாத்மா

அற்புதம் மிகுந்த அன்னாபிஷேகம்

ஐப்பசி மாத பவுர்ணமி அன்று கோவில்களில் மூட்டைக் கணக்கில் அரிசியை வடித்து சுவாமிக்குச் சாத்தி (அன்னாபிஷேகம் செய்து), அந்த அன்னத்தை ஏழைகளுக்குக் கொடுப்பார்கள். இதே போல் வீடுகளிலும் கூட இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது உண்டு.

அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள், அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்குக் கஷ்டப்பட மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக பலருக்கு செல்வத்தில் எந்தக் குறையும் இருக்காது. ஆனாலும் உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்; ஆனால் உண்ண முடியாது. அல்லது சாப்பிட பிடிக்காது.

இதை அன்னத்வேஷம் என்பார்கள். இப்படிப்பட்டவர்கள், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, அந்த அன்னத்தை எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்ன த்வேஷம் விலகும் என்பது நிச்சயமாக உண்மை. எது கிடைத்தாலும் முதலில் இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்கிறோம் அல்லவா?

அந்த முறைப்படி ஐப்பசியில் அறுவடையான புது நெல்லைக் கொண்டு சாதமாகச் செய்து, அதை முழுமையாக சுவாமிக்கு சாத்துவது, இந்த ஐதீகத்தின் முறை என்றும் காரண காரியம் கூறப்படுகிறது. இந்த அன்னாபிஷேகத்தில் உலகளாவிய தத்துவம் ஒன்றும் உள்ளடங்கிக் கிடக்கிறது.

அதாவது சிவலிங்கத்தைப் பற்றிய உண்மையான விளக்கம், ஒரு லட்சம் ஸ்லோகங்களைக் கொண்ட சமஸ்கிருத கந்த புராணத்திலும், தமிழில் 3 ஆயிரம் பாடல்களைக் கொண்ட திருமூலரின் திருமந்திரத்திலும் கூறப்பட்டுள்ளது. அது என்ன என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதல்லவா? சிவலிங்கம் என்பது ஆகாயம்.

ஆவுடையார் என்பது பூமி. இந்த ஆகாய லிங்கத்துக்கு கடலில் இருந்து தண்ணீரை எடுத்துக் கொண்டு போய் மேகங்கள் மழையாய் பொழிந்து அபிஷேகம் செய்கின்றன. நட்சத்திரங்கள் ஆகாய லிங்கத்துக்கு மாலையாகவும், திசைகளே ஆடையாகவும் இருக்கின்றன. ‘தரை உற்ற சக்தி’ என்ற திருமந்திரப் பாடலின் விளக்கம் இது.

இந்தத் தகவலைச் சொன்ன திரு மூலருக்கும் கூட ஐப்பசி மாதம் தான் குருபூஜை வருகிறது என்பது சிறப்பு சேர்க்கும் ஒரு விஷயமாகும். அதனால்தான் போலும் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் செய்கிறோம். ஆண்டவன் என்னும் ஆகாயத்தின், ஒரே கூரையின் கீழ்தான் நாம் அனைவரும் இருக்கிறோம்.

அதனால் ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்து, அதை எந்த விதமான பேதமும் பார்க்காமல் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்பது இதன் தத்துவார்த்தமாக இருக்கிறது. ஒருவன் எவ்வளவு பெரிய, பெரிய தான– தர்மங்களைச் செய்தாலும் கூட, அவை அனைத்தும் பசி என்று வரும் ஒருவருக்குச் செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது என்பது நமது முன்னோர்களின் வாக்காகும்.

அது எவ்விதத்திலும் பொய்யில்லை என்பதே இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகமும், அதை அனைவருக்கும் கொடுக்கும் முறையும் உணர்த்துகிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஸ்படிக லிங்கத்துக்கு நித்திய அன்னாபிஷேகம் நடைபெறும்.

அதை செய்பவர்களும், தரிசிப்பவர்களும் அன்னத்துக்குக் கஷ்டப்படாமல் இருப்பது நிதர்சனமான உண்மை. அந்த ஊருக்கே ‘அன்னம்பாலிக்கும் ஊர்’ என்றே பெயர் வழங்கப்படுகிறது

தீபாவளி பற்றி 7 கதைகள்

தீபாவளி பண்டிகையின் சிறப்பினை பற்றி விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம், சேஷதர்மம் ஸ்மிருதி முக்தாபலம், நித்யான்னிகம், துலா மகாத்மியம் போன்ற நூல்கள் விரிவாகக் கூறுகின்றன. இந்த அடிப்படையில் தீபாவளி பண்டிகை ஏற்பட்ட வரலாறு பற்றி பல கதைகள் புராணங்களிலும் நடைமுறையிலும் காணப்படுகின்றன.

1. ராவணனை வதம் செய்த பின் ராமபிரான் சீதையுடன் அயோத்திக்கு திரும்பி வந்தார். அப்போது மக்கள் தீப விளக்கு ஏற்றி வரவேற்று மகிழ்ந்தார்கள் இத்தினமே தீபாவளியாக அமைந்தது என்று கூறப்படுகின்றது.

2. கபில முனிவரின் சாபம் காரணமாக சாம்பலாகிய தனது சந்ததியினர் நற்பேறடைய பகீரதன் கடுந்தவம் மேற் கொண்டான். இதன் பயனாக பூவுலகத்திற்குத் திரும்பிய ஆகாயகங்கை பரமசிவனின் திருமுடியில் தங்கியது. கங்கை வேகம்தணிந்து பூலோகத்தில் பாய்ந்த தினம் தீபாவளி எனப்பட்டது.

அதனால் தான் கங்கா ஸ்நானம் செய்வது என்ற பழக்கம் ஏற்ப்பட்டது. மேலும் சிவனிடமிருந்து கங்கை பூமிக்குப் பாய்ந்த நேரமே பிரம்ம முகூர்த்தம் என அழைக்கப்படுகிறது. இது அதிகாலை 4 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியாகும். சாம்பலாகிய பகீரதனின் சந்ததியினர் கங்கை நதியின் புனித தண்ணீர் பட்டு நற்கதியடைந்த தினமும் இதுவாகும்.

3. ஆறுமுகன் ஆறு பொறிகளிலிருந்து ஒளிப்பிழம்பாக தோன்றியவன் அவனை உடம்பிலுள்ள மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாஹதம், ஏற்றி வழிபடுவதன் புறவடிவமே தீபாவளி என கௌமார மார்க்கத்தினர் கூறி வழிபடுகின்றனர்.

4. இந்தியாவில் வங்காள மக்கள் தீபாவளியன்று காளி தேவிக்கு பூஜை செய்து வழிபடுவார்கள். அழிவுத் தொழிலை மிக உக்கிரமாக மேற் கொண்ட காளிதேவியின் தணியாத உக்கிரத்தை ஆதிசங்கரர் ஒரு தீபாவளி தினத்தன்று தான் தணித்தார்.

5. சமண சமயத்தைத் தொடங்கிய மகா வீரர் வர்த்தமானர் ஒரு தீபாவளியன்று மக்களுக்கு அருளுரை செய்து கொண்டிருக்கும் போதே முக்தி பெற்றார். அருளுரை கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அவர் இறந்ததையறிந்து தீபத்தை ஏற்றி வழிபட்டனர்.

6. இன்று அஸ்ஸாம் மாநிலத்தில் காமரூபன் என அழைக்கப்படுகின்ற பிரக்ஜோதி புரத்தை ஆண்டு வந்த பூமாதேவியின் புதல்வன் பௌமன் என்பவன் அருந்தவம் செய்து பிரமனை வழிபட்டு பெரும் வரங்களைப் பெற்றான். இதனால் தேவர்கள், முனிவர்கள் என்று எல்லோரையும் துன்புறுத்தி வந்தான்.

உலகத்தை நரக வேதனைப்படுத்திக் கொண்டிருந்தமையால் இவனுக்கு நரகாசுரன் என்ற பெயர் ஏற்பட்டது. இந்திரனும் இதர முனிவர்களும் இவனது கொடுமைகள் தாங்காது கிருஷ்ண பகவானிடம் சரணடைந்தனர். கிருஷ்ண பகவான் சத்தியபாமாவின் துணையுடன் நரகாசுரனை வதம் செய்தார்.

அப்போது நரகாசுரன் கிருஷ்ணபவானை வணங்கி நான் செய்த பாவங்களைப் பொறுத்துக் கொள்வதுடன் கொடியவனாகிய நான் இறக்கும் இத்தினத்தை மக்கள் அனைவரும் மங்களகரமான நாளான மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இத்திருநாளே பரவலாகப் பெரும்பாலான மக்களால் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.

வடநாட்டில் தீபாவளிப் பண்டிகையை மூன்று நாட்கள் கொண்டாடுவர். முதலாம் நாள் சோட்டா தீபாவளி என்று சிறிதாக கொண்டாடுவர். மறுநாள் படா தீபாவளி என்று விமரிசையாக கொண்டாடுவர். மூன்றாம் நாள் கோவர்த்தன பூஜை செய்து கண்ணனைப் பிரார்த்தனை செய்வார்கள். அன்று லட்சுமியை வழிபட்டு புதுக்கணக்கு தொடங்குவது அவர்கள் வழக்கமாகும்.

7. திருமால் மூன்று உலகங்களையும் இரண்டடியால் அளந்து மூன்றாவது அடியை மகாபலியின் தலை மீது வைத்து அவனைப் பாதாள உலகில் வாழச் செய்தார். மகாபலி ஆண்டுக்கு ஒரு தடவை மட்டுமே பூமிக்கு வந்து போக அருள் செய்யும் படியும் அந்த நாளை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும்படியும் திருமாலிடம் வரமாகப் பெற்றான்.

அந்நாளே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது. எனவே தீபாவளி கிருஷ்ணா அவதாரத்திற்கு முன்பிருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது என்பது பல புராணக் கதைகள் மூலம் தெரியவருகிறது. பிற்காலத்தில் நரகாசுரன் கதையும் தீபாவளியுடன் இணைக்கப்பட்டுள்ளது

மகாலட்சுமி நிலைத்திருக்க குடும்பத் தலைவிகள் கடைப்பிடிக்க வேண்டியவை

பிரம்ம முகூர்த்த நேரம் என்ற அதிகாலை நேரத்திலே படுக்கையை விட்டு எழ வேண்டும். அந்த நேரத்தில் தேவர்களும், பித்ருக்களும் நம் வீடு தேடி வருவார்கள். அப்போது நாம் உறங்கக் கூடாது. காலையில் எழுந்ததும் வீட்டுக் கதவைத் திறக்கும் போது மகாலட்சுமியே வருக என்று 3 முறை கூற வேண்டும்.

காலையில் 4.30லிருந்து 6.00 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். இவ்வாறு செய்வதால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். காலையிலும், மாலையில் இருட்டுவதற்கு முன்பாக வீட்டில் விளக்கேற்ற வேண்டும். மாலையில் விளக்கு ஏற்றிய உடன் வெளியே செல்லக் கூடாது.

விளக்கு வைத்த பிறகு தலைவாருதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்றவை செய்யக்கூடாது. விளக்கு வைத்த பிறகு குப்பை, கூளங்களை வெளியே வீசக்கூடாது. பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன்கொடுத்தல் கூடாது.

நெற்றியில் எப்பொழுதும் குங்குமம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்குமுன் குடும்பத் தலைவி தான் குங்குமம் இட்டுக் கொண்டு பிறகு அவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.

பால் பொங்கி வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது அதிர்ஷ்டம் மற்றும் எல்லாவித செல்வங்களையும் கொடுக்கும். வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது, புடைப்பது ஆகியவை செய்யக்கூடாது.

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். பெண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். ரவிக்கைத் துணி வைத்துக் கொடுத்தால் தட்சணையாக ஒரு ரூபாய் நாணயம் வைத்துக் கொடுக்கவும்.

பிள்ளையார் பிடிக்க குரங்காக முடிந்தது

பிள்ளையார் பிடிக்க குரங்காக முடிந்தது என்று ஒரு பழமொழி இருக்கிறது. இதன் உண்மையான பொருள் எந்தவொரு செயலையும் தொடங்கும் பொழுது விநாயகரை வழிபட்டு நாம் தொடங்க வேண்டும். கவிதை எழுதும் பொழுது கூட கணபதி காப்பு என்று எழுதுவது வழக்கம்.

காரியம் நிறைவடையும் பொழுது ஆஞ்சநேயரை வணங்கி விட்டு முடிக்க வேண்டும். ஆதியில் விநாயகனையும், அந்தமாக அனுமனையும் வழிபட வேண்டும். விநாயகருக்கு அனுமனும் இணைந்த உருவத்தை ஆதியந்தப்பிரபு என்று அழைக்கின்றோம். இதற்குரிய சன்னதி ஒருசில இடங்களில் இருக்கின்றது. வீட்டில் பட வடிவத்திலும் வைத்து வழிபாடு செய்யலாம்.

திசை பார்த்து வைக்க வேண்டிய தெய்வப்படம்

வலம்புரி விநாயகர் எனப்படும் கற்பக விநாயர் படத்தை வடக்குநோக்கி வைத்து வழிபட வேண்டும். வைத்தியநாதர் என்னும் சிவனை மேற்கு நோக்கி வைத்து வழிபட வேண்டும்.

நடராஜப்பெருமான தெற்கு நோக்கி வைத்து வழிபட வேண்டும். திசை பார்த்து வைத்து வழிபட்டால் தெய்வ கடாட்சம் உடனடியாக கிடைக்கும்.

மயில் வாகனத்தின் தத்துவம்

சரஸ்வதி தேவி வெண்பட்டு உடுத்தி, கைகளில் வீணையும், ஏட்டுச்சுவடியும் ஏந்தி கல்விக்கும், ஏனைய கலைகளுக்கும், அதிபதியாக வெண் தாமரையில் வீற்றிருக்கிறாள். இவளுக்கு ஞான சரஸ்வதி, ஆகமச் செல்வி, ஆகமசுந்தரி, ஞானச்செல்வி என்று பல பெயர்கள் உண்டு.

சரஸ்வதியை வேதங்கள் அன்னத்தின் மீது அமர்ந்திருப்பவளாகப் போற்றுகின்றன. அன்ன வாகனத்துடன் உள்ள சரஸ்வதியை அம்சவல்லி என்பர். அன்னம், அற்பழுக்கற்ற வெண்மை நிறமுடையது. அதுபோல், ஒருவர் கற்கின்ற கல்வியும் மாசு மருவற்றதாக இருக்க வேண்டும்

என்பதையும், படித்தவர்கள் வெள்ளை மனதினராக இருக்க வேண்டும் என்பதையும் குறிக்கிறது. அவளது வெள்ளைப் புடவை, அவள் அமர்ந்துள்ள வெள்ளைத் தாமரை ஆகியவையும் இதையே உணர்த்துகின்றன. தென்னகத்தில் கலைமகளை மயில் வாகனம் கொண்டவளாகப் போற்றுகின்றனர்.

மயில் தோகை விரிப்பதும், மடக்கிக் கொள்வதும் ஒருவன் கற்ற கல்வி பரந்து விரிந்ததாக இருக்க வேண்டும் என்பதையும், அவனுக்கு அடக்கம் வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது.

சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை மாலை

தெட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலையும், சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை நைவேத்யமும் முக்கியம். இதற்கு காரணம் என்ன தெரியுமா? சரஸ்வதி,தெட்சிணாமூர்த்தி இருவருமே ஞானத்தை அருள்பவர்கள்.

இருவருமே ஜபமாலை, ஏட்டுச்சுவடிகளை ஏந்தியுள்ளனர். மனத்தூய்மை, சாந்தம், மெய்ஞானம் ஆகிய உயர்குணங்களை உணர்த்தும் வகையில் ஸ்படிக மாலை, ஜடாமகுடம், சந்திரக்கலை ஆகியவற்றை இருவரும் பெற்றிருப்பதைக் காணலாம்.

கொண்டைக் கடலை உயிர் காக்கும் சத்துக்களைக் கொண்டது. ஒருவரது ஜாதகத்தில் குரு பலம் இல்லை யென்றால், அவரது உயிருக்கு பாதகம் வரலாம். எனவே, குருபார்வை வேண்டி நவக்கிரகங்களில் குருவுக்கும், குருவின் அம்சமான தெட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை மாலை படைத்து தீர்க்காயுள் கிடைக்க வேண்டுகின்றனர்.

மனித வாழ்வின் உயிர்நாடி கல்வி. அந்த கல்வியில் சிறந்து விளங்க, சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை நைவேத்யம் செய்ய வேண்டும்.

விஜயதசமி நன்னாளில் கல்வியை தொடங்குவது ஏன்?

விஜயதசமி நன்னாளில் பெரும்பாலான குழந்தைகளைப்படிக்கவைக்கும் வழக்கம் எப்படி ஏற்பட்டது? ஆதிசங்கரர், தன்னுடைய சுற்றுப்பயணத்தின்போது `மண்டனமிஸ்ரர்' என்னும் வேறு சமயத்தைப் பின்பற்றும் ஞானியுடன் விவாதம் செய்ய நேர்ந்தது.

போட்டியில் ஆதிசங்கரர் வெற்றிபெறவே, மண்டனமிஸ்ரர் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, சங்கரரின் சீடராகி அவருடனே புறப்படுகிறார். அப்போது மண்டனமிஸ்ரரின் மனைவியான சரசவாணி தன்னுடைய கணவரைப் பிரிய மனமில்லாமல் தானும் அவர்களுடன் வருவதாகக் கூறுகிறாள்.

ஆனால் ஆதிசங்கரர், பெண்களை தன் சிஷ்யைகளாக ஏற்றுக்கொள்வதில்லை என்று கூற, சரசவாணியோ தான் அவர்களுடன் கூடவே வராமல் அவர்களுக்குப்பின்னால் தொடர்ந்து வருவதாகவும், சங்கரரோ மற்ற சீடர்களோ திரும்பிப் பார்க்க வேண்டாம் எனவும், தன்னுடைய கால் கொலுசின் ஒலி கேட்பதை வைத்து, தான் வருவதை அறியலாம் என்றும் கூறுகிறாள்.

அப்படியில்லாமல் அவர்கள் திரும்பிப் பார்த்தால் அந்தக் கணமே பின் தொடருவது இல்லை என்றும் கூறவே, அதன்படியே பயணம் தொடருகிறது. சிருங்கேரி (சிருங்க கிரி) மலைக்கு வந்து சேர்ந்த சங்கரர், தன் சிஷ்யர்களுடன் மேலும் பயணத்தைத் தொடரும் முன்னால் அங்கே ஒரு கர்ப்பிணியான தவளை பிரசவித்துக் கொண்டிருக்க, அந்தத் தவளைக்கு வெயில் தாக்காதபடி ஒரு பாம்பு படம் உயர்த்தி குடை பிடிக்கும் அற்புதத்தைப் பார்க்கிறார்.

அந்தப் புனிதமான இடம் மகான் ரிஷ்யசிருங்கர் இருந்த அதே இடம் எனப் புரிந்து கொண்ட ஆதிசங்கரர் இந்த இடமே தானும் தன் சிஷ்யர்களும் தங்கியிருக்கத் தகுந்த இடம் எனத்தீர்மானத்து திரும்பிப் பார்க்கவே, சரசவாணி அந்தக் கணமே அங்கேயே சிலை வடிவாகி நின்று விடுகிறாள்.

அத்துடன் அவள் ஆதிசங்கரரிடம் அசரீரியாக, `சாரதை'யாக தான் இங்கேயே இருப்பதாகவும், இந்தத் தலத்தில் தன்னைப் பூஜித்து வருபவர்களுக்கு, தன்னுடைய அருள் பரிபூரணமாகக்கிட்டும் எனவும் கூறிகிறாள்.

அப்படி சிருங்கேரியில் `சாரதை' குடிகொண்டநாள் `விஜயதசமி' எனவும், அன்று அவளைப் பூஜித்து குழந்தைகளைப் படிக்கவைக்க ஆரம்பித்தாலோ, கல்வி கற்கும் மாணவர்கள் அன்றைய தினத்தில் கொஞ்சமாவது படித்தாலோ சாரதையின் அருள் பரிபூரணமாகக்கிட்டும் என்பது ஐதீகம் ஆகியது

லட்சுமியின் கர்வம்

நவராத்திரி 9 நாட்களில் முதல் 3 நாட்கள் துர்க்கை அம்சத்திலும் அடுத்த 3 நாட்கள் லட்சுமி அம்சத்திலும் கடைசி 3 நாட்கள் சரஸ்வதி அம்சத்திலும் விழா நடப்பது உங்களுக்குத் தெரிந்தது தான். முதலில் லட்சுமி அவதாரத்தை தெரிந்து கொள்ளுங்கள்...

மகா விஷ்ணுவின் மனைவி லட்சுமி. அவள் அஷ்ட ஐஸ்வரி யங்களுக்கும் அதி தேவதை. எனவே அவள் அமரர், அசுரர், நரர் உள்பட எல்லோராலும் போற்றப்படுகிறாள். ஆனால்- இந்தப் பேறும் மகிமையும் அவளை - ஸ்ரீமந் நாராயணனின் வராக அவதாரத்திற்குப் பிறகு கர்வம் கொள்ள வைத்தது. ஒரு வரையும் மதிக்காமல் எல்லோரையும் அலட்சியமாக நடத்தத் தொடங்கினாள்.

மகாவிஷ்ணு அவளின் போக்கைக் கவனித்தார். அவளை நல்வழிப்படுத்த ஒரு சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார். அப்படி ஒரு சந்தர்ப்பமும் விரைவில் வந்தது. அதாவது - பிருகு முனிவர் வைகுண்டத்திற்கு வந்ததும், திருமாலை தன் காலால் எட்டி உதைத்தார். இது கண்டு லட்சுமி குமுறினாள்.

ஒரு மானிடன் தன் மணாளனை மிதிப்பதா என்று வருந்தினாள். அவள் திருமாலிடம், "பிருகு உங்களைக் காலால் உதைத்தான்! நீங்களோ, அவனை வாரி அணைத்துக் கொண்டீர்கள். அப்போது எனக்கு எவ்வளவு அவமானமாக இருந்தது தெரியுமா? என் உள்ளத்தை ஏன் நீங்கள் எண்ணிப் பார்க்கவில்லை? என்றாள்.

அதற்கு மகாவிஷ்ணு, அதுபற்றி நான் கவலைப்படவில்லை. மேலும் எனக்கு இல்லாத அவமானம் உனக்கில்லை. அதனால் அதை நீ எதையும் பொருட்படுத்தாதே, போகட்டும் விட்டு விடு என்றார். லட்சுமி விடவில்லை? "நான் உங்கள் வலது மார்பில் எப்போதும் இருப்பவள்.

பிருகு முனிவர் உங்கள் மார்பில் உதைத்தது என்னை உதைத்தது போலத்தானே? என்றாள். "அதற்கு நான் என்ன செய்யட்டும்?'' என்றார் விஷ்ணு. "என்ன செய்வதா? மாற்றானின் முன், மனைவிக்கு மதிப்பு தராததங்களுடன் இனியும் நான் வாழ விரும்பவில்லை. பிரிந்திருக்கவே விரும்புகிறேன் என்றாள் லட்சுமி.

இதையடுத்து விஷ்ணு அவளை சமரசம் செய்தார். லட்சுமி, பிருகு நம் குழந்தை. அவன் உதைத்ததை நாம் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படியே எடுத்துக் கொண்டாலும் பெரியோர் அதைப் பொறுப்பது கடன் என்றார். இந்த பதிலால் லட்சுமி மன ஆறுதல் கொள்ளவில்லை. மாறாக, விஷ்ணுவை சபித்தாள்.

எப்படி தெரியுமா? எனக்கு ஏற்பட்ட அவமானத்திற்குக் காரணமாகிய நீங்கள் பூவுலகில் சித்தப் பிரமை கொண்டு, துன்பங்கள் பல அனுபவித்து அவமானப் படக்கடவது என்றாள். மேலும் அவளது கோபம் பிருகுவின் மீது திரும்பியது. "பிருகே! செல்வத்திற்கு அதி தேவதை நான். என்னை உதைத்த தரித்திரர்களாய்த் திரியக் கடவது என்று சபித்து விட்டாள்.

அத்துடனாவது அவள் கோபம் தணிந்ததா? அதுதான் இல்லை. வைகுண்டத்தை விட்டு வெளியேறினள். நேராக கரவீரபுரத்தை அடைந்தாள். அங்குள்ள சுவர்ணமுகி நதிக்கரை ஓரம் தனித்து வாழ்ந்து வந்தாள். லட்சுமியின் பிரிவும், சாபமும் மகாவிஷ்ணுவுக்குத் தேவையாக இருந்தது. காரணம்- அவர் கடவுளாக இருந்தாலும் கடமை ஆற்ற வேண்டியிருந்தது.

கலியுகத்தினால் உலக நியதிகள் தடுமாறிப் போயிருந்த நிலையில் - லட்சுமி பூலோகத்தில் பிரவேசித்தாள். அப்போது மகாவிஷ்ணு சற்று பயப்பட்டார். லட்சுமி அவசரப்பட்டு, தனது பொன்னும் மணியுமான ஐஸ்வர்யங்களை எல்லாம், அவளைப் போற்றும் அறிவிலிகளுக்குக் கொடுத்து, அவர்களை மேலும் பஞ்சமா பாதகர்களாக ஆக்கி விடுவாளோ என்று எண்ணினார்.

அவர், லட்சுமியின் செயல்பாடுகளை தடுப்பதற்காக பூலோகத்திற்கு வந்தார். அதனால் ஸ்ரீநிவாசன் என்று பெயர் பெற்றார். அவர் வேங்கட மலைக்கு வந்து புற்றில் வாசம் செய்தார். அப்போது பிரம்மனும், சிவனும் கரவீர புரத்தில் லட்சுமியின் முன்பாகத் தோன்றினார்கள். லட்சுமி வைகுண்டத்திற்குத் திரும்பினால் ஸ்ரீமந்நாராயணன் சித்த பிரமை நீங்கித் தெளிவடைவார் என்றார்கள்.

லட்சுமி அதற்கு உடன்படவில்லை. பிடிவாதம் பிடித்தாள். அப்போது சிவன் லட்சுமியிடம், "பூலோக நியதிப்படி ஹரிக்கு ஆகாரம் அளிக்க நானும் பிரம்மாவும் கன்றும், பசுவும் ஆகிறோம். நீ எங்களை சோழ மன்னனுக்கு அளித்து விடு. ஏனென்றால், வேங்கட மலை சோழ மன்னனின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார். அதைத் தொடர்ந்து பிரம்மா சொன்னார்.

"இந்த நிகழ்ச்சியின் மூலம் விஷ்ணு யார் என்பதை பூலோகம் உணரும்'' என்றார். அதன்படி லட்சுமி, சோழ அரசனுக்குப் பசுவையும், கன்றையும் விற்று விட்டு, பழையபடி கரவீரபுரம் திரும்பினாள். நாட்கள் கடந்தன. லட்சுமியோ மனம் மாறவில்லை. இதனால், ஸ்ரீநிவாசன் மனம் மாறி பத்மாவதியை மறுமணம் செய்து கொண்டார்.

அவர் லட்சுமியை அறவே மறந்து விட்டார். எனினும், பத்மாவதி சும்மா இருக்கவில்லை. "நான் அக்காவைப் பார்ககவில்லை. எப்படியாவது அவளை அழைத்து வாருங்கள். உங்கள் இருவருக்கும் பணிவிடை செய்து வாழ்கிறேன்'' என்றாள். பத்மாவதி இப்படித் தொடர்ந்து நச்சரித்து வந்ததால், விஷ்ணுவால் அதைப் பொறுக்க முடியவில்லை.

எனவே பத்மாவதியை போலித் தாயான வகுளமாலிகா தேவியிடம் விட்டு விட்டு, கரவீரபுரம் சேர்ந்தார். இதற்கிடையே பெருமாள் பத்மாவதியை 2-ம் திருமணம் செய்து கொண்ட தகவலை அறிந்தாள் லட்சுமி. கோபத்துடன் அவள் பாதாள லோகத்தில் உள்ள கபில மகரிஷி ஆசிரமத்திற்குச் சென்று இருந்தாள்.

ஸ்ரீநிவாசன் லட்சுமியின் சாபத்தால் பாதிக்கப்பட்டார். என்றாலும் லட்சுமியைத் தேடி அலைந்தார். காடு, மலைப்பிரதேசம் எங்கும் சுற்றி அலைந்தார். முனிவர்களை விசாரித்தார். ரிஷிகளைக் கேட்டார். யாருக்கும் விவரம் தெரியவில்லை. தனது முயற்சி பயன் எதுவும் தாரததால் அவர் இறுதியில் சுகாபுரியில் உள்ள சுவணர்முகி நதிக்கு அடுத்துள்ள குளம் ஓரத்தில் அமர்ந்தார்.

அந்த குளத்திலுள்ள தாமரை அவரைக் கவர்ந்தது. அங்கேயே அமர்ந்து கொண்டு லட்சுமியின் நினைவாகவே இருந்தர். இது கபில மகரிஷிக்குத் தெரிந்தது. அவர் உடனே லட்சுமியைக் கூப்பிட்டுச் சொன்னார். லட்சுமி இது உனக்கே சரியாகப் படுகிறதா? நியாயமா? சொல். பதி விரதா தர்மத்திற்கு இது ஒருபோதும் ஒவ்வாது.

நீ இப்போது என்னதான் அந்த நாராயணனை மனதில் நிறுத்தித் தொழுதாலும் பயன் உண்டா? நீ அனைத்தும் அறிந்தவள். உணர்ந்தவள். நீ செய்வது சரியா?'' என்றார். லட்சுமி உடனே, பிருகு முனிவர் வந்து திருமாலின் மார்பில் உதைத்ததையும் திருமால் பிருகுவின் காலைத் தொட்டு வருடியதையும் கூறி வருந்தினாள்.

பிறகு அவள் சொன்னாள்: "பிற புருஷன் பாதம்என் மீது பட்டதால் பதிவிரதா தர்மத்திற்கு நான் விதி விலக்கானேன்'' என்றாள். கபில முனி இடைமறித்தார்.

"பிருகு என்பவன், நரன் அதாவது மனிதன். அவன் உன் தகுதிக்குப் பரபுருஷன் - வேற்று மனிதன் - அல்ல, குழந்தை. அவன் ஏன் அப்படி நடந்து கொண்டான் என்றால் ஆண்டவள் வடிவில் விஷ்ணு ரூபமே சத்வ குணச்சின்னம் என்பதை நிரூபிப்பதற்காத்தான். மேலும், அவன் சர்வம் ஒடுங்குவதற்கு அதே நாராயணன் அப்படிப் பணிந்து கொடுத்தார்.

ஆனால் நீ இதை உணராமல் பதறி விட்டாய். நான் உன்னை ஒன்று கேட்கிறேன். கணவன், "தவறில்லை, தர்ம நெறிதான்'' என்று வலியுறுத்தும் போது, நீ அதை மறுக்க என்ன உரிமை இருக்கிறது? மனைவி கணவனுடன் இணைந்து போக வேண்டியதுதானே அழகு. இந்தக் கடமைகளை மறந்து போனது உனக்கே அழகாக இருக்கிறதா? என்றார்.

லட்சுமி தன் தவறை உணர்ந்தாள். ஸ்ரீநிவாசனுக்கு அவசரப்பட்டு சாபம் கொடுத்து விட்டதை எண்ணி வருந்தினாள். முனிவரிடம் "உண்மை உணர்ந்தேன் மகரிஷியே. இனி நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டாள். "வேறென்ன? பரந்தாமன் மார்பில் மீண்டும் அடைக்கலம் அடைய வேண்டியதுதான் உன் கடமை'' என்றார்.

"ஆனால் அதில் இப்போது ஒரு பிரச்சினை கபில தேவா'' என்றாள். என்ன பிரச்சினை? என்று கபிலமுனிவர் கேட்டார். அதற்கு லட்சுமி "என்னவர் இப்போது புதுத் திருமணமானவர். அப்படி இருக்க, நான் எப்படி அவர் மார்பை அடைந்து இருப்பேன். அது அவரது ஏகாந்தத்திற்கு தடையல்லவா? என்றாள்.

அம்மா, நீ கேட்பது விளையாட்டுத்தனமாக இருக்கிறது. நீ எந்த அவதாரத்தில் அவர் மார்பை விட்டுப் அகன்றிருக்கிறாய்? அவரது எந்த ஒரு அவதாரத்திலும் அகலவில்லையே! கிருஷ்ணா அவதாரத்தில் அவர் பதினாயிரம் கோபிகைகளுடன் விருப்பம்போல் இருக்கும் போது நீ அதே மார்பில்தானே இருந்தாய்? என்றார், மகரிஷி.

கபில மகரிஷியே. என் தவறுகளை நான் உணர்ந்து விட்டேன் என்றாள் லட்சுமி. பின்னர், லட்சுமி தன் அம்சத்தை அங்கு பிரதிஷ்டை செய்து விட்டு, சாயா லட்சுமியாகப் பூலோகத்தில் ஸ்ரீநிவாசன் முன்பு இருந்த குளத்தில் எழுந்தருளினாள். பிறகு அவள் ஸ்ரீநிவாசன் காலில் விழுந்து நமஸ்கரித்து அவர் மார்பில் சேர்ந்தாள்.

அவள் கர்வம் ஒடுங்கியதைக் கண்டு ஸ்ரீநிவாசன் மனம் பூரித்தார். தேவ கணங்கள் ஆர்ப்பரித்தன. பிறகு லட்சுமி `பத்மாவதி' தன் அம்சம் என்பதை உணர்ந்தாள். கர்வம் ஒடுங்கி, தாமரையில் எழுந்தருளியதால் அலர்மேலு மங்கையாய்ப் பெயர் பூண்டாள். லட்சுமி தாமரையில் எழுந்தருளிய அந்த இடம் இப்போது அலர்மேல் மங்காபுரம் - திருச்சானூர் என வழங்கப்படுகிறது *

எழுத்துக்கள் அனைத்தின் வடிவமாக சரஸ்வதி திகழ்கிறாள்

தமிழ் எழுத்துக்கள் அனைத்தின் வடிவமாக சரஸ்வதி திகழ்கிறாள். சர்வ வர்ணாத்மிகே என்பதற்கு அனைத்து எழுத்துக்களின் வடிவமாக இருப்பவள் என்று பொருள்.

ஜெபம் செய்யும்போது அங்கன்யாசம், கரன்யாசம் முதலியன செய்வார்கள். அப்போது அந்தந்த மந்திர தேவதைகளுக்கு அந்தந்த எழுத்து அங்கங்களாக உள்ளனவென்று பொருள்.

அட்சர தேவதைகள் அனைத்தும் வட இந்தியாவில் உள்ள அம்பாஜி என்னுமிடத்தில் தனித்தனி வடிவம் தாங்கி காட்சியளிக்கின்றன.

சரஸ்வதி தேவியின் மூச்சிலிருந்து வேதங்கள் தோன்றின


சரஸ்வதி தேவியின் மூச்சிலிருந்து வேதங்கள் தோன்றின என்று சொல்வார்கள். அத்தேவியின் தொண்டையிலிருந்து `மீமாம்சை' தோன்றியது. நாக்கிலிருந்து அறுபத்து நான்கு (64) கலைகளும் தோன்றின.

அவளது தோளிலிருந்து காமக்கலை உருவாயிற்று. உறுப்புகளிலிருந்து தந்திர சாஸ்திரங்கள் தோன்றின. இவ்வாறு சரஸ்வதியிடமிருந்து தோன்றியவைகளை பிரமாண்ட புராணம் விரிந்துரைக்கின்றது.

எட்டு சரஸ்வதிகள்

நவதுர்க்கை, அஷ்ட லட்சுமிகள் போல சரஸ்வதி அவதாரங்களில் எட்டு சரஸ்வதிகள் உள்ளனர். அம்பிகையின் ஆயிரம் திருநாமங்களை அவளுடைய கொலு மண்டப அரங்கத் தில் எடுத்துப் பாடியவர்களே எட்டு சரஸ்வதிகள் தான்!

ஸ்ரீசக்ரத்தின் எட்டா வது சுற்றாகிய எட்டுக் கோணமுள்ள சர்வரோக ஹர சக்ரத்தில் இந்த 8 சரஸ்வதிகளும் இருப்பார்கள். குளிர்ச்சியான, வெண்ணிறமுள்ள இனிய தோற்றத்துடன் விளங்குவார்கள். இந்த 8 சரஸ்வதிகளை `ரகஸ்ய யோகினிகள்' என்றும் சிறப்பித்துக் கூறுவார்கள்.

பக்தர்களுக்கு சிறந்த பேச்சாற்றலை அருளும் பணியை தேவி இவர்களிடம் அளித்திருக்கிறாள்.இவர்களின் அருளை பெற்றால் ஞானமும், பேச்சாற்றலும் அடையலாம். இவர்களின் அருள் கிடைத்து விட்டால், பராசக்தியின் பேரருளும் எளிதில் கிட்டும்.

சரஸ்வதி பத்திரம்

எந்த ஒன்றை படித்தாலும் அதை மன ஒருமைப்பாட்டுடன் படிப்பது நல்லது. மனதை அலைபாயாமல் செய்வதற்கு தியானமும், ஜெபமும் உதவி செய்யும். `சரஸ்வதி பத்திரம்' என்ற ஒரு இலை இருக்கிறது.

இது விநாயருக்கு பூஜை செய்யும்போது (21 வகையான இலைகளில் ஒன்று) சேர்ப்பது வழக்கம். இந்த பத்திரம் நினைவாற்றலை வளர்க்கும் சக்தி கொண்டது.

வல்லாரை இலையே சரஸ்வதி பத்திரம் என்று கூறப்படுகின்ற இலை. இதை உண்பதால் நிறைய நினைவாற்றல் அதிகரிப்பதோடு மருத்துவப் பலன்களும் கிடைக்கும்.

சரஸ்வதி பூஜையின் மகிமை

அன்னை ஆதிபராசக்தி துர்க்கையாக வடிவெடுத்து மகிஷன் என்ற எருமை முகம் கொண்ட அசுரனின் கர்வத்தை ஒடுக்கி அவனை அழித்தாள். இதனால் அன்னையை அனைவரும் புகழ்ந்தனர். பராசக்தியும் மனம் மகிழ்ந்து சாமரன், உதக்கிரன், தாம்ரன், அந்தகன், பாஷ்கலன், சுராளன் ஆகிய அசுரர்களை அழித்தார்.

இதையடுத்து தேவர்கள் தங்களுக்கு எப்போது ஆபத்து வந்தாலும் நீயே இருந்து பாதுகாக்க வேண்டும் என்று துர்க்கையிடம் வேண்டிக் கொண்டனர். அப்போது அவர்கள் பல துதிப்பாடல்களைப் பாடினர். இந்த பாடல்களை எந்த உலகத்தில் இருப்பவர் பாடினாலும் அவர்களுக்குச் சகல நலன்களையும் சொல்லாற்றலையும் உடல் நலத்தையும் கொடுத்தருள வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டனர்.

அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கித் தோன்றிய வடிவமே மகா சரஸ்வதி அம்சமாகும். கலைமகளாம் சரஸ்வதி சந்திரனைப் போன்ற ஒளியை உடையவள். எட்டு வகை கருவிகளைக் கொண்டிருப்பவள். வெள்ளை நிறமுடையவள்.

தாமரைப்பூவில் காட்சியளிப்பவள், சத்திய லோகத்தில் பிரம்மனுடன் சேர்ந்து வேத நாதமாக்த் திகழ்பவள். நமது நாட்டில் நதியாக ஓடுகின்றாள். சரஸ்வதி நதிஎன்பது நாம் தேசப்படத்தில் காணமுடியாத நதியாகும். இந்த நதி பற்றி வேதங்களில் கூறப்பட்டுள்ளது.

சரஸ்வதி என்ற சொல்லுக்கு தண்ணீர் என்று பொருள் உண்டு. இந்த நதியின் கரையில் வேதகாலத்தில் பல யாகங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. தான் ஓடிவரும் இடங்களிலெல்லாம் பல நிலைகளை ஏற்படுத்தித் தந்திருப்பதால் இந்த நதிக்கு சரஸ்வதி என்ற பெயர் ஏற்பட்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படைப்புக் கடவுளான பிரம்மா ஐந்து முகங்கள் கொண்டிருந்தார். இதன் காரணமாக அவர், தான் தான் முதல் கடவுள் என்ற கர்வம் கொண்டிருந்தார். பிரம்மனின் இந்த ஆணவத்தைக் கண்ட சிவபெருமான் அவரது ஒரு தலையை தம் சுண்டுவிரலால் கிள்ளி எறிந்தார்.

இதனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நெருப்புக் கோளமாக மாறியது. இதை ஏந்திச்சென்று கடலில் சேர்க்கும்படி தேவர்கள் சரஸ்வதியிடம் கேட்டனர். சிவபெருமான் பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட சரஸ்வதியில் நீராட முயன்றார்.

ஆனால் தனது கணவரான பிரம்மா தலையை கொய்தவரின் பிரம்மஹத்தி தோஷத்தை சுமக்க விரும்பாத சரஸ்வதி சிவபெருமானுக்கு பயந்து பூமிக்கு அடியில் சென்று மறைந்ததாகக் கூறப்படுகிறது. சரஸ்வதி நதி பூமிக்கு அடியில் சென்றதற்கு இது தான் காரணமாம்.

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளின் சங்கமமான திரிவேணியில் பக்தர்கள் புனித நீராடுகின்றனர். இந்த இடத்தில் தான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா (மகாமகம்) நடக்கிறது. கங்கையும், யமுனையும் கண்முன்னே சங்கமம் ஆவதைப் பார்க்க முடிகிறது.

ஆனால் சரஸ்வதி மட்டும் பூமிக்குள்ளேயே அமைதியாக ஓடிவந்து இந்த நதிகளுடன் கலந்து விடுவதால் சரஸ்வதி சங்கமம் ஆவதை மட்டும் நம்மால் காணமுடிவதில்லை. கங்கைக்கரையில் சிவ ஆலயங்களும், யமுனைக்கரையில் விஷ்ணு ஆலயங்களும் இருக்கின்றன. சரஸ்வதி நதி பற்றி புராணங்களில் மட்டுமே கூறப்படுவதால் பூமியில் பிரம்மாவின் ஆலயம் பற்றி எந்த தகவலும் இல்லை

வரலட்சுமி நோன்பு இருப்பதால் கிடைக்கும் பலன்கள்

திருமணமானதும் வரும் முதல் வரலட்சுமி நோன்பில் பூஜை செய்தால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதை வளர்த்து கல்விச்சாலைக்கு அனுப்ப நல்ல கல்வி அறிவு கிடைக்கும். திருமணம் கைகூடும்.

நல்ல வேலை அமையும் வெளிநாட்டு தொடர்பு வெற்றி தரும். வெளிநாடு சென்று வரும் வாய்ப்பும் அமையும். தொழிற்சாலைகள் லாபம் தரும். வியாபாரம் அதிகரிக்கும். நோய் அகலும் பலருக்கு வீடு கட்டும் யோகம் அமையும்.

வீட்டை திருத்தி விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் அமையும். பதவிகள் கிட்டும். வம்பு வழக்குகள் அகலும். குடும்பத்தார் அனைவருக்கும் மகிழ்ச்சி கூடும். வருடம் முழுவதும் செல்வம் வீட்டில் குவியும்.

அஷ்டலட்சுமி தரும் ஆற்றல்கள்

1. கஜலட்சுமி

ஒரு நாட்டின் ஆளும் பொறுப்பையே அளிப்பவள் கஜலட்சுமி. தற்கால சூழல்படி முதல்-அமைச்சர், பிரதமர் போன்றும் மற்றும் உயர் பதவி போன்றும் கஜலட்சுமியை வழிபடு வோருக்கு கிட்டும்.

2. ஆதி லட்சுமி மகாவிஷ்ணுவின் இடப்பாகத்திலிருந்து தோன்றியவர் ஆதிலட்சுமி. இவளுக்கு இரண்டே கரங்கள் உள்ளன. உலகத்தின் சகல உயிர்களின் இயக்கத்துக்கான சக்தியை அளிப்பவள் இவள். எந்தக் காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் ஆதிலட்சுமியை தொழுது விட்டு தொடங்கினால் எந்த காரியமும் நிச்சயம் முழு வெற்றியையும் அளிக்கும். எதிர்பார்த்ததைவிடச் சிறந்த பலனும் கிடைக்கும்.

3. சந்தானலட்சுமி

பொருள் செல்வத்தைவிட நன்மக்கட் செல்வமே வாழ்க்கையில் மானுடர்க்கு சரியான பாதுகாப்பு ஆகும். சந்தான லட்சுமியை தொழுது வழிபடுவதன் மூலம் நன்மக்கட் பேற்றினை அடைய முடியும்.

4. தனலட்சுமி

பொருட்செல்வம் வாழ்க்கையில் இன்றியமையாததாக இருக்கிறது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது சான்றோர் மொழியல்லவா? குற்றமற்ற நல்வழியில் நம் தேவைகேற்ப பொருட் செல்வ வளம்பெற தனலட்சுமியை துதித்து வழிபட வேண்டும்.

5. தானிய லட்சுமி

மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு பொருட்செல்வம் அவசியந்தான், என்றாலும் பொன்னையும் பொருளையும் உண்டு வாழ்ந்து விட முடியுமா? வாழ்க்கைக்கு உணவு தானே முக்கியம். உணவுக்கு ஆதாரமாக இருப்பது தானிய மல்லவா! தானியம் வாழ்க்கையில் குறைவர கிடைத்துக் கொண்டேயிருக்க தானியலட்சுமியை வழிபட வேண்டும்.

6. விஜயலட்சுமி

வாழ்க்கையில் மனிதனுடைய வெற்றிகளுக்கெல்லாம் ஆதாரமாக நிற்பவள் விஜயலட்சுமி. பெறக்கூடிய வெற்றி சிறயதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் விஜயலட்சுமியின் அருட்கண் பார்வை இருந்தாலொழிய வெற்றி சாத்தியம் இல்லை.

தோல்வியற்ற வெற்றியை வாழ்நாள் முழுவதும் பெற விரும்பும் ஒவ்வொருவரும் விஜயலட்சுமியை துதித்து வழிபட்ட பின்னரே எந்த முயற்சியையும் தொடங்க வேண்டும். விஜயலட்சுமியை அலட்சியம் செய்து தொடங்கப்பெறும் எந்த முயற்சியிலும் வெற்றியே கிட்டாது என உணர வேண்டும்.

7. வீரலட்சுமி

ஒரு மனிதனிடம் செல்வச் செழிப்பும் சுகபோகச் சூழலும் அமைந்திருந்தாலும் அவன் துணிச்சலும், வீரமும் அற்ற கோழையாக இருப்பின் பிற எந்த செல்வத்தாலும் அவனுக்கு பயன்கிட்டாது. ஆகவே, ஒரு மனிதன் எந்த நிலையில் இருந்தாலும் மன உறுதியையும், துணிச்சலையும் வீரத்தையும் பெற்ற வீரலட்சுமியை அன்றாடம் தவறாது வழிபட வேண்டும்.

8. மகாலட்சுமி

மகாலட்சுமியை வழிபட எல்லா செல்வங்களும், ஆற்றல்களும் ஒன்று சேர்ந்து நமக்கு கிடைக்கும்.

ஹோமம் செய்வதால் கிடைக்கம் பலன்

உத்திராடம், உத்திரட்டாதி, உத்திரம்-இந்த நட்சத்திரங்களில் ஸ்ரீமகாலட்சுமியை ஆவாகானம் செய்து ஆயிரம் நந்தியாவட்டை மலர்களால் ஹோமம் செய்து ஐஸ்வர்யம் நிலையாய் இருக்கும் பௌர்ணமியில் பால், தேன் நெய், பழத்தை தோய்த்து ஹோமம் செய்ய அரசனாவான்.

பஞ்சமி திதியிலும், வெள்ளிக்கிழமையிலும் வாசனை புஷ்பத்தால் ஹோமம் செய்ய ஒரு வருடத்திற்குள் அனைத்து சம்பத்துக்களையும் அடைந்து செல்வந்தனாவான்

கல்வியறிவு வளர கலைமகள் வழிபாடு

கல்விச்செல்வத்தை அடைய, அறிவும், ஆற்றலும் பெறக் கலைமகளின் அருள் வேண்டும். தனிக்கோயில்கள் இல்லை எனவே கலைமகளை நம் வீட்டிலே நாமே பூஜை செய்து வழிபடலாம். முதற் பூஜையை எந்த மாதத்திலும், எந்த நாளிலும், எந்தக்கிழமையிலும் தொடங்கலாம்.

ஆனால் அன்று பௌர்ணமியாக மட்டும் இருக்க வேண்டும். கலைமகளுக்குப் பூஜை செய்யும் போது அலை மகளுக்கும் சேர்த்து வழிபாடு செய்ய வேண்டும். மலர்களுள் வெண்தாமரை, செந்தாமரை, மல்லிகை, முல்லை, இருவாட்சி, சம்பங்கி, மருக்கொழுந்து,வெட்டிவேர், மற்றும் வாசனைத் திரவியங்கள், சந்தனம் முதலியவற்றையும் இளநீர்,மாதுளம் பழம்,

கொய்யா, கரும்பு, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, கற்பூரம், ஊதுவத்தி முதலியனவற்றையும் சேகரிக்கவேண்டும். நிவேதனப் பொருள்களாக க்கல்கண்டு, பால்பாயசம், வெண்கடலைக் சுண்டல், இனிப்புச் சுவையுள்ள பலகாரங்கள் ஆகியவற்றைக் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

பூஜைப் பொருள்களில் ஐம்முக விளக்கும் கலசதத்திற்காக இரு தட்டுகள், இரு செம்புகள், இரு தேங்காய்கள்,நெல் பச்சஅரிசி ஆகியவையும் புதிதாக வாங்கப்பட்ட பேனா பென்சில், சில நோட்டுப்புத்தகங்கள், சிலேட்டுகள் ஆகியவையும் இடம் பெற வேண்டும்.

வீட்டின் அறையில் நடுப்பகுதியில் கிழக்கு முகமாக பீடம் அமைக்க வேண்டும். அதில் சதுரமாக நெல்லை பரப்ப வேண்டும். அதன் மீது இரு தட்டுகளில் பச்ச அரிசியை பரப்ப வேண்டும். அதில் கலசங்களை வைக்க வேண்டும்.

முதல் கலசத்தின் கீழ்ச்சுற்றில் வெண்தாமரை இதழ்களையும், இரண்டாவது கலசத்தின் கீழ்ச்சுற்றில் செந்தாமரை இதழ்களையும் அமைக்க வேண்டும். கலசத்திற்கும் தேங்காய்க்கும் மஞ்சள், குங்குமத்திலகம் இடவேண்டும். அவற்றைமலர்ச்சரங்களால் அலங்கரித்து வைக்க வேண்டும். மஞ்சள் தூளிலோ, பசும் சாணியிலோ பிடித்த விநாயகரை அறுகம்புல் ஆசனத்தில் அமர்த்த வேண்டும்.

அதற்குத் திலகமிட்டு மலரிட வேண்டும். ஐம்முக விளக்கை இரு கலசத்தின் நடுவே வைத்து, திலகமிட்டு மலர்ச்சரம் சுற்றி வைக்க வேண்டும். விளக்குகளுக்கு நெய் ஊற்றி ஏற்றிய பின் விநாயகர் பூஜை செய்ய வேண்டும். பின்பு ஸ்தோத்திரங்களைச் சொல்லி கற்பூர தூப தீப ஆராதனை முடித்து விநாயகரை வணங்க வேண்டும்.

பௌர்ணமி உதயமாகும் போது கலசங்களுக்குக்கற்பூர தீபம் காட்ட வேண்டும். அடுத்து கலைமகள் அலைமகள் ஸ்தோத்திரங்களை உரத்து எல்லாரும் சேர்ந்து சொல்ல வேண்டும். ஸ்தோத்திரங்கள் சொல்லி முடித்து கற்பூர தூப தீப நிவேதனம் காட்ட வேண்டும்.

எல்லாரும் வீழ்ந்துவணங்க வேண்டும். சிறுவர் சிறுமியர்க்குப் பேனா, பென்சில, சிலேட், நோட்டுப்புத்தகம் ஆகியவற்றைத் தானமாகவும், மற்ற பிரசாதப் பொருள்களையும் தர வேண்டும், அதற்குப் பிறகே பிரசாதங்களைத் பயன்படுத்த வேண்டும்.

சரஸ்வதி தேவிக்கும் எட்டு வடிவங்கள் உண்டு

அஷ்டலட்சுமிக்கு எட்டு வடிவங்கள் இருப்பது போல் சரஸ்வதி தேவிக்கும் எட்டு வடிவங்கள் உண்டு. அவை முறையே.

1. வசிநி-எங்கும் நீக்கமற நிறைந்து வசிப்பவள்.

2. காமேஸ்வரி-ஆசைகளுக்கு ஆதாரமாக இருப்பவள்.

3. மேதினி-மேதாவிலாசத்தோடு இருப்பவள்.

4.விமலா-தூய்மையானவள்.

5. அருணா-சூரியனுக்குப் பிரகாசம் கொடுப்பவள்.

6. ஜயிநீ-வெற்றியைத் தருபவள்.

7.ஸர்வேஸ்வரி-எல்லோருக்கும் தலைவியாக இருப்பவள்.

8. கௌலிநீ-வேண்டியதைத் தருபவள்.

சரஸ்வதி தேவியின் உருவ தத்துவம்

சரஸ்வதி வைரத்தின் அழகாக இருப்பவள். அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். ஞான சக்தி. குறைந்த கல்வி கற்றவர்களில் சிலர் மேதையாக இருந்திருக்கின்றனர். பள்ளிக்கே செல்லாத சிலர் நாட்டைக்கூட ஆண்டிருக்கின்றனர்.

கையெழுத்துகூடப் போடத் தெரியாத சிலர் லட்சக்கணக்கான பணத்தை முதலீடு செய்து பெரும் வர்த்தக நிர்வாகியாக இருந்திருக்கின்றனர். இதற்கெல்லாம் கலைமகளின் கருணையே காரணம் எனலாம். சரஸ்வதியின் இரு கைகளிலும் புத்தகமும் ஸ்படிக மணி மாலையும் இருக்கின்றன.

கூடவே வீணையும் இருக்கிறது. வெள்ளைத் தாமரையில் அமர்ந்து வெண்ணிற உடையும் அணிந்துள்ளாள். கல்வி கற்பதற்குத் தூய்மையான மனம் வேண்டும் என்பதைத்தான் வெள்ளைத் தாமரையும் வெள்ளை உடையும் குறிக்கின்றன.

சரஸ்வதியின் நான்கு கைகளும் மனிதனுடைய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவற்றைக் குறிக்கிறது. சரஸ்வதியைப் பூஜிக்கிற பக்தன் தேடுவது ஆத்ம ஞானம். தன்னடக்கம், ஆழ்ந்த கல்வி, சிந்திக்கும் ஆற்றல், தியானம் ஆகியவை இருந்தால் "நான்' என்ற அகங்காரம் அழிந்துவிடுகிறது.

ஆத்ம ஞானம் பிறக்கிறது. அதுவே மோட்சம் என்று கூறப்படுகிறது. அதை அடைய வேண்டுமென்றால் நவராத்திரியில் கடைசி மூன்று நாட்கள் கலைவாணியை மனமாரத் துதிக்க வேண்டும். சரஸ்வதியின் பிரசாதத்தைப் பெற வேண்டும்.

நவராத்திரியில் சரஸ்வதி தேவியும் மற்ற இரு தேவிகளும் அவரவர் கணவன்மார்களைப் பூஜித்து முழு வலிமையையும் பெற்று அருள்பாலிக்கிறார்கள். அந்த வகையிலே சரஸ்வதிதேவி தன் கணவரான நான்முகனிடம் பூரண அருளை வேண்டிப் பிரார்த்திப்பதால் பிரம்மாவின் நாக்கில் சரஸ்வதி அமருகிறாள். ஆகவே சரஸ்வதி பூஜை செய்கிறவர்களுக்கு சரஸ்வதியின் அருட்கடாட்சம் நிறைவாகக் கிடைக்கும்
சரஸ்வதி தேவியின் உடம்பை தத்துவமயமாக கூறுவதுண்டு. சரஸ்வதியின் முகம் பிரம்ம வித்தை கொண்டது. அவள் கைகள் நான்கு வேதங்களையும், கண்கள் எண்ணையும், எழுத்தையும் உடையது.

இயல் இலக்கியங்களை மார்பும், திருவடிகள் இரண்டும் இதிகாச புராணங்களையும் குறிக்கிறது. அவள் கையில் உள்ள வீணை ஓங்கார ஸ்வரூபத்தை காட்டுகிறது. இவ்வாறு கலைவாணியின் உருவத்தை தத்துவமயமாக கூறுவர்.


ஞானம் தரும் கடவுளாக இரண்டை சொல்கிறது இந்து மதம். ஒன்று தட்சிணாமூர்த்தி, மற்றொன்று சரஸ்வதி. இந்த இருவரும் அறியாமையை நீக்குபவர்கள். கலைவாணி வெள்ளை ஆடை உடுத்தி, வெண் தாமரைப் பூவில் வீற்றிருப்பாள்.

வெண்மை தூய்மையின் அடையாளம். இந்த வெண்மையே அன்னத்தின் நிறமும் ஆகும். சில நூல்கள் அன்னத்தையும், சரஸ்வதி தேவியின் வாகனமாகக் கூறுகிறது. அன்னம் தண்ணீரையும் பாலையும் பிரிக்கும் சக்தி கொண்டது. இதிலிருந்து கெட்டவற்றை விட்டு விட்டு நல்லதையே நாட வேண்டும் என்ற உண்மை விளக்கப்படுகிறது. சரஸ்வதி தேவி தன்னை வழிபடுபவர்களுக்கு, புத்தி வடிவமாகவும், அவர்கள் பாடும் கவிதையின் கவியுருவாகவும்,

அக்கவியின் யுக்தியில் நுண்பொருளின் வடிவமாகவும் உள்ளனர். இவள் எப்போதும் வீணையும், புத்தகத்தையும் ஏந்தியபடி காட்சியளிப்பவள். சங்கீதத்தின் வடிவமாகவும் விளங்குபவள். கற்பூரம், சந்தனம், முல்லை பூ ஆம்பல், வெண் தாமரை முதலானவற்றிற்கு இணையான நிறமுடையவள்
சரஸ்வதி, ஸ்படிகம் என்னும் பளிங்கு போல் மேனியும் நான்கு கரங்களும் கொண்டு திகழ்கிறாள். வலகரத்தில் அட்ச மாலையும் முன் வலக்கரத்தில் வியாக்கியான முத்திரையும், பின் இடக்கரத்தில் வெண்தாமரையும், முன் இடக்கரத்தில் புத்தகம் ஏந்திய கோலத்தில் வீற்றிருப்பாள்.

வீணை தாங்கிய நிலையில் வியாக்கியான முத்திரையும், வெண் தாமரையும் இடம் பெறாது. அவ்விரு கரங்களால் வீணையை மீட்டிய கோலத்தில் காட்சியளிப்பாள். சற்றே நீலமோடிய தூய வெண்பட்டாடை உடுத்தி வெண்தாமரை மலரின் மீது,

கால்மேல் கால் போட்டு கல்விக்கு உரிய ஒய்யாரத்துடன் முறுவல் பூத்த முகத்துடன் வீற்றிருப்பாள். அன்னப்பறவை சரஸ்வதி தேவிக்கு உரிய வாகனமாகும். சில நேரங்களில் மயில் வாகனத்திலும் வீற்றிருப்பதுண்டு.சரஸ்வதி குருநாதர் ஹயக்ரீவர்

கல்வித் தெய்வமாகத் திகழும் சரஸ்வதிக்கு ஒரு குருநாதர் உள்ளார். அவரிடம் மாணவியாக இருந்து உபதேசம் பெற்று உலகத்துக்கு சரஸ்வதி வழிகாட்டினாள். அந்த குருநாதர் ஹயக்ரீவர். இவர் கல்விக் கடவுள் என்றழைக்கப்படுகிறார்.

இவரைப் பற்றிய வரலாறு வருமாறு:- குதிரை முகத்தை உடைய ஓர் அசுரன் இருந்தான். `ஹயம்' என்றால் குதிரை என்று பொருள். எனவே, குதிரை முகன் என்ற பொருளில் அவனை ஹயக்ரீவன் என்றனர். அவன் தன்னைப் போன்ற உருவத்துடன் உள்ள ஹயக்ரீவனால் மட்டுமே தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டுப் பெற்றிருந்தான்.

இதனால் திருமால் தானும் குதிரை முகம் உடைய ஹயக்ரீவராகத் தோன்றி அவ்வசுரனை வதைத்தார். பின்னர் உபதேச மூர்த்தியாகி அகத்தியருக்கு ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தை உபதேசித்தார். சரஸ்வதிக்கு குருநாதராகிப் பேராசானாகத் திகழ்ந்தார்.

சரஸ்வதி மந்திர மகிமை

பெண் தெய்வங்களுக்கு உரிய மந்திரங்களை, `வித்தை' என்று சொல்வார்கள். சரஸ்வதிக்கு உரிய மந்திரத்தை, `சிந்தாமணி வித்தை' என்று கூறுவர். சரஸ்வதி தேவியின் இந்த மந்திரம் அடியவர் நினைத்ததை கொடுக்கும் ஆற்றல் உடையது. ஸ்ரீஹரன் என்பவர் ஓர் அரசவைப் புலவராகத் திகழ்ந்தார்.

வேற்று நாட்டைச் சேர்ந்த ஒரு புலவர் ஸ்ரீஹரனைத் தனது திறமையால் தோல்வி அடையச் செய்து விட்டார். அதனால் மனமுடைந்த ஸ்ரீஹரன் மனம் உடைந்து இறந்தார். அவர் இறப்பதற்கு முன்னால் தன் மனைவி மாமல்லா தேவிக்கு சரஸ்வதி மந்திரமான சிந்தாமணி வித்தையை உபதேசித்தார்.

ஸ்ரீஹரன் இறந்த சமயத்தில் அவரது மகன் ஸ்ரீஹர்ஷர் குழந்தையாக இருந்தார். ஸ்ரீஹர்ஷரின் தாய், தன் மகனைப் பெரும் புலவனாக்க விரும்பினாள். குழந்தை தன் தாயின் மார்பில் பிஞ்சுக் கால்களால் உதைத்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது மாமல்லா தேவி குழந்தைக்கு, சிந்தாமணி மந்திரத்தை உபதேசித்தாள்.

குழந்தை அம்மந்திரத்தைத் தொடர்ந்து கூறியது. மந்திரங்களைச் பிணத்தின் மீது நின்று சொன்னால் விரைவில் பயன் கிட்டும் என்று வாமாசார நெறியில் கூறுவார்கள். அதனை அறிந்திருந்த மாமல்லா தேவி குழந்தை அறியாதபடி, தனது கழுத்தை அறுத்துக் கொண்டு இறந்து விட்டாள்.

குழந்தை எதுவும் தெரியாமல் தொடர்ந்து சிந்தாமணி மந்திரத்தை ஜபித்துக் கொண்டே இருந்தது. இதைத் தொடர்ந்து சரஸ்வதி தேவி ஸ்ரீஹர்ஷருக்கு காட்சி கொடுத்துக் குழந்தையை மாமேதையாக ஆக்கி விட்டாள். சித்திகளையும் கொடுத்தாள்.

அதன் பயனாக ஸ்ரீஹர்ஷரின் தாய் உயிர் பெற்று எழுந்தாள். குழந்தை சிறு வயதிலேயே பெரும் புலவராகி அரசவைக்குச் சென்றார். தந்தையை வென்ற புலவர் உள்ளிட்ட அனைவரையும் எளிதில் வென்று தலைமைப் புலவராக உயர்ந்தார்.

சரஸ்வதி எங்கே ஓடுகிறது?

பிப்லாதன் என்பவன் இந்திரனைக் கொன்று பழிதீர்க்க முடிவு செய்தான் கடுந்தவம் செய்தான். இதன் காரணமாக கொடிய தவக்கனல் உருவானது. அந்த தவக்கனலை இந்திரனையும், அவனுடைய உலகத்தையும் அழித்திட ஏவி விட்டான்.

அக்கனலைக் கண்டு இந்திரனும், பிற தேவர்களும் நடுங்கினார்கள். பிறகு அவர்கள் ஓடோடி சென்று சரஸ்வதியிடம் சரண் அடைந்தனர். தாயே! பிப்லாதன் விடுத்த தவக்கனலின் உக்கிரத்தை தணிக்கும் ஆற்றல் தங்களுக்கு மட்டுமே உண்டு. தாங்கள் நதியாகப் பெருகி தவக்கனலை கடலில் தள்ளிவிட வேண்டும் என்றனர்.

உடனே சரஸ்வதி நதியாக மாறி பூமியில் ஓட சம்மதித்தாள். ஆனால் மக்கள் கண்களில் தெரியும் வகையில் அவள் ஓட விரும்பவில்லை. ஏனெனில் பிப்லாதனின் தவக்கனலுடன் மக்களின் பாவச் சுமையையும் தாங்க இயலாது என்றாள். அப்படியே ஆகட்டும் என்றனர் தேவர்கள்.

பிப்லாதன் எழுப்பிய கனலை, சரஸ்வதி, நதியாக பெருக்கெடுத்து கரைத்தான். பிறகு கடலில் செலுத்தி உலகத்தை காத்தருளினாள். இதையடுத்து சரஸ்வதி உள்முகமாக இன்றளவும் ஓடுகிறாள் என்பது புராண வரலாறு.

அத்தகைய சரஸ்வதி ஆறு ஏறத்தாழ ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பூமியில் ஓடியிருக்க வேண்டும் என்று அண்மைக்கால ஆய்வுகள் கூறுகின்றன. வடக்கே உள்ள சிந்துசமவெளி நாகரிகம் 2500 இடங்களை உள்ளடக்கியது.

அவற்றுள் 500 இடங்கள் மட்டுமே சிந்து நதிக்கரையில் அடங்கியவை. மீதமுள்ள இரண்டாயிரம் இடங்கள் சரஸ்வதி நதிக்கரையில் அடங்கியவை என்று தற்கால ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சரஸ்வதி நதி இமயத்திலுள்ள ஸ்வர்க்கா ரோஹிணி மலைத்தொடரில் உள்ள ஹர்கீதுன் பள்ளத்தாக்கில் உற்பத்தி ஆகிறது.

பஞ்சாப், அரியானா, சவுராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களின் வழியாக சுமார் 1600 கிலோ மீட்டர் பயணித்து, பிரபாஸா பட்டணத்தில் மேற்கு அரபிக் கடலில் கலந்திருக்க வேண்டுமென்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த இருபது ஆண்டுகளாக சரஸ்வதி நதி பற்றிய ஆய்வுகள் அறிவியல் வழியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமெரிக்காவின் செயற்கைகோள் சரஸ்வதி படுகை முழுவதையும் படமெடுத்துக் கொடுத்துள்ளது. அதன் துணையுடன் மேற்கொண்ட ஆய்வுகள் சுவையான சரஸ்வதி நீரை கண்டுபிடித்து உறுதி செய்துள்ளன.

சரஸ்வதி நதி பாய்ந்த குஜராத் பகுதியில் பூகம்பம் தோன்றிய ஓர் பகுதியில் மிகவும் ஆழமான இடத்திலிருந்து நீர் வெளிப்பட்டது. அவ்வாறே ராஜஸ்தான் பாலைவனப் பகுதியில் ஆழ்குழாய் அமைத்து ஆய்வுகள் செய்தனர்.

அங்கு பூமிக்கு அடியில் இருந்து கிடைத்த நீரும், குஜராத் பூகம்பப் பகுதியில் கிடைத்த நீரும் அறிவியல் பூர்வமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. அவை சுமார் எட்டாயிரம் ஆண்டுகள் தொண்மையான, தூய, சுவையான சரஸ்வதி நதியின் நீரே என்று உறுதி செய்துள்ளனர்.

பூமியின் அமைப்பில் இயற்கையாகத் தோன்றிய மாறுதல்களால் சரஸ்வதி நதி பூமிக்கடியில் மறைத்துள்ளது என்பது இப்போது உறுதியாகி விட்டது. `பொக்ரான்' என்ற இடத்தில் அணுகுண்டு வெடித்து சோதனைகள் நடத்தப்பட்டன. அப்பகுதியில் சரஸ்வதி நதிப்படுகையில் உள்ளது.

அணுசக்தி சோதனைகளுக்கு பிறகு பூமிக்கு அடியில் இருந்த நீரை வெளியே கொண்டு வந்து சோதித்தனர். அங்கிருந்த சரஸ்வதி ஆற்றுநீர் அணுசக்தியில் சிறிதும் பாதிக்கப்படாமல் இருந்தது விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை அளித்தது. இதுதொடர்பாக மேலும் ஆய்வுகள் தொடர்கின்றன.

இதுவரை பூமிக்கு அடியில் உள்முகமாக இருக்கும் சரஸ்வதி ஆறு விரைவில் தொழில் நுட்பத்தால் மீண்டும் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துர்க்கை அம்மனை ராகு காலத்தில்தான் வழிபடவேண்டும்

துர்க்கை அம்மனுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமையாகும் மங்கள வாரமான செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3-00 மணி முதல் 4-30 மணி வரை உள்ள ராகுகாலத்தில் துர்க்கை அம்மனை பூசை செய்து வழிப்பட்டால்-அன்னையின் அருள் நிச்சயம் பக்தர்களுக்குக்கிடைக்கும்.

ராகு கிரகத்தின் அதிபதியான துர்க்கை அம்மனை ராகு காலத்தில்தான் வழிபடவேண்டும். குறிப்பாக திருமணம் நடைபெறாமல் கால தாமதமாகி வரும் கன்னிப்பெண்கள் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் 13 வாரங்கள் பூஜை செய்து வந்தால் கண்டிப்பாக அந்தக்கன்னிக்கு மனம்போல் மணமகன் வாய்த்து திருமணம் சிறப்பாக நடக்கும்.

பிள்ளைபேறு இல்லாமல் மன அமைதியற்ற ஆண்களும் அன்னை துர்க்கா தேவியை செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் பூஜித்து வந்தால் அன்னையின் அருட்காடசத்தினால் அவரது மனைவி கருத்தரிப்பாள். இதனால் பிள்ளை பேறு உண்டாகி சந்தோஷமடைவாள்.

பெண்கள்-துர்க்கை பூஜித்து வந்தால் மஞ்சள் குங்குமம் நிலைத்து நிற்கும். குழந்தைச் செல்வம் கிடைக்கும். வாழ்வில் சந்தோஷம் கிடைக்கும். ஆண்கள்-துர்க்கையை வழிப்பட்டு வந்தால் மனைவி மக்களுடன் சந்தோஷமாக வாழ்வார்கள். வியாபாரம் விருத்தியாகும்.

செய்யும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் செல்வ வளம் பெருகும். இளம் பெண்கள்-துர்க்கையை வாரம் தவறாமல் செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலன் கிடைக்கும். நல்ல கணவன் அமைவான்.

வாலிபர்கள்-துர்க்கையைப் பூஜித்து வந்தால் அழகும்-அறிவும்-பொருந்திய மனைவி வாய்ப்பாள். அதனால் குடும்பம் செல்வக் களஞ்சியமாகும். பிறக்கும் குழந்தைகளும் அறிவுள்ளவர்களாக இருப்பார்கள். இதனால் வாழ்க்கையில் மேலும் மேலும் சந்தோஷம் உண்டாகும்.

ராஜ ராஜேஸ்வரி தியானிப்பதால் கிடைக்கும் பலன்கள்:

ராஜ ராஜேஸ்வரி தியானிப்பதால் கிடைக்கும் பலன்கள்:

1. எந்த மந்திரத்தாலும் நம்மை கட்ட முடியாது.

2. எந்த மந்திரத்தாலும் நம்மை அடிமை படுத்த முடியாது.

3. ஏவல், பில்லி சூன்யங்கள் நம்மை ஒன்றும் செய்யாது.

4. விதோதிகள் தன்னால் அழிந்து விடுவர்.

5. துரோகிகள் சந்ததி இல்லாமல் ஆகி விடும்.

6. அனைவரும் போற்றி புகழக் கூடிய வசிய சக்தி உண்டாகி விடும்.

7. சித்து வேலைகள் கை கூடும்.

8. அதிர்ஷ்ட லட்சுமி நம் வீட்டிற்கு வந்து நம்முடைய வாயில் கதவை தட்டும்.

9. தோல்வி புற முதுகு காட்டி ஓடியே விடும்.

10. அரசனும் பணியக் கூடிய தகுதி நமக்கு வந்து சேரும்

நந்தனாருக்கு வழிவிட்டு நகர்ந்த நந்தி

சோழவள நாட்டைச் சேர்ந்த ஆதனூர் அருகில் விவசாய தொழிலைக் கொண்டவர்கள் வசித்து வந்தவர். அந்த குலத்தைச் சேர்ந்தவர் நந்தனார். மண்ணில் பிறந்த நாளில் இருந்து மகேஸ்வரனின் மீது அளவு கடந்த அன்பைக் கொண்டிருந்தார்.

இறை தொண்டும் ஆற்றி வந்தார். தம் குலத் தொழிலில் சிறந்து விளங்கிய நந்தனார், அதில் கிடைக்கும் வருமானத்தில், கோவில்களுக்கும் இறைவனுக்கும் வேண்டிய பொருட்களை வாங்கி வழங்கி வந்தார். இருப்பினும் அந்த காலத்தில் நந்தனாரின் குலத்தைச் சேர்ந்தவர்கள், ஆலயத்திற்குள் சென்று, இறைவனை வழிபட தகுதியற்றவர்களாக கருதப்பட்டு வந்தனர்.

இதனால் நந்தனார் ஆலயத்திற்குள் செல்லாமல் வெளியில் நின்றே இறைவனை தொழுவார், பாடுவார், ஆனந்தக் கூத்தாடுவார். ஒருமுறை திருப்புன்கூர் திருத்தலத்தில் வீற்றிருக்கும் சிவலோகநாதரைத் தரிசிக்க நந்தனார் எண்ணம் கொண்டார்.

கோவிலுக்கு தன்னால் இயன்ற திருப்பணியைச் செய்யவும் சித்தம் கொண்டார். அதன்படி திருக்கோவிலை சென்றடைந்தார். சிவலோக நாதரைக் கோவிலின் வெளியில் இருந்து தரிசிக்க முயன்ற நந்தனாருக்கு, இறைவன் எதிரில் இருந்த நந்தி தடையாக இருந்தது. அதனால் இறைவனை சரியாக நந்தனாரால் பார்க்க முடியவில்லை.

இறைவனை நினைத்து உருகினார், பக்தனின் பக்தியைக் கண்டு உள்ளம் மகிழ்ந்த சிவபெருமான் உத்தரவுப்படி, நந்தி சற்று நகர்ந்தது. இப்போது நந்தனாருக்கு இறைவனின் தரிசனம் கண்குளிரக் கிடைத்தது. சிவனின் மீது பற்று கொண்ட நந்தனாருக்கு தில்லை சென்று சிதம்பர தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆவல் எழுந்தது.

அது பல ஆண்டுகளாகியும் முடியாத நிலையில் இருந்தது. நாளைக்கு போவேன், நாளைக்கு போவேன் என்று அவர் தனக்குள்ளாகவே கூறியபடி தன்னை ஆற்றுப்படுத்திக் கொண்டு வந்தார். இதன் காரணமாகவே நந்தனாருக்கு திருநாளைப் போவார் என்ற பெயர் ஏற்பட்டது.

இந்த நிலையில் ஒரு முறை தில்லையம்பதியனை தரிசிக்கும் இறுதியான முடிவுடன் புறப்பட்டுச் சென்று, தில்லையின் எல்லையை அடைந்தார். அங்கே அந்தணர்கள் நடத்திய வேள்வியால் எழுந்த புகை மண்டபம் கோவிலை மூடியிருந்தது. அந்தக் காட்சி, கயிலாய மலையை நந்தனாருக்கு நினைவுபடுத்தியது.

ஆனந்தக் கூத்தாடி மகிழ்ந்தார். இருப்பினும், கோவிலுக்குள் சென்று வழிபட முடியாத நிலையை நினைத்து வருந்தினார். ஆலயத்தின் கதவுகள் பக்தர்களுக்காக இரவும் பகலும் திறந்திருந்தபோதிலும் சமூகத்தின் தீண்டாமை நோய் காரணமாக அவரால் உள்ளே செல்ல முடியவில்லை.

எனவே இறைவனை நினைத்து உள்ளம் உருக தன் வேதனையை கூறி மன்றாடினார். பல நாட்களாக அங்கேயே தங்கியிருந்து ஏதாவது ஒரு வாய்ப்பில் உள்ளே செல்ல முடியாதா என்று காத்திருந்தார் நந்தனார். அப்போது ஒரு நாள் அவரது கனவில் தோன்றிய ஈசன், ‘நந்தா! வருந்தாதே! எமது தரிசனம் உனக்குக் கிட்ட வழி செய்கிறேன்.

இப்பிறவி நீங்கிட அனலிடை மூழ்கி, முப்புரி நூலுடன் என்முன் சேர்வாய்’ என்று கூறி மறைந்தார். பின்னர் கோவில் பணி செய்யும் அந்தணர்களின் கனவில் தோன்றிய இறைவன், ‘என்னை வழிபட்டு மகிழும் நந்தன் திருக்குலத்திலே தோன்றியவன்தான்.

திருமதில் புறத்தே அவன் படுத்திருக்கிறான். நீவிர் அவனை அழைத்து வந்து தீயிடை மூழ்கச் செய்து, என் சன்னிதிக்கு அழைத்து வாருங்கள்’ என்று ஆணையிட்டார். மறுநாள் காலைப் பொழுது, தில்லைவாழ் அந்தணர்கள் அகமகிழ்ச்சியோடு எழுந்து பரமன் பணித்தபடி மதிலின் புறத்தே வந்தனர்.

எம்பெருமானை நினைத்து உருகும் நந்தனாரை அணுகி, ‘அம்பலத்தரசன் ஆணையை நிறைவேற்ற நாங்கள் வந்துள்ளோம். பெருமான் பணித்ததற்கு ஏற்ப நீங்கள் மூழ்கி எழுவதற்காக தீ மூட்டித்தருகிறோம். நீங்கள் நெருப்பிடை மூழ்கி எழுக’ என்று வேண்டிக் கொண்டனர்.

அவ்வாறே நெருப்பிடை மூழ்கி எழுந்த நந்தனார், பால் போன்ற மேனியும், திருவெண்ணீற்று ஒளியும், ருத்திராட்ச மாலையும், முப்புரி நூலும் விளங்கத் தூய முனிவரைப் போல் சடை முடியுடன் வெளியே வந்தார். நந்தனாரின் அருள் வடிவத்தைக் கண்டு, தில்லைவாழ் அந்தணர்கள் அகமகிழ்ந்தனர். அவரை வாழ்த்தி வணங்கினர்.

சிவ கணங்கள் வேதம் முழங்கின. நான் மறைகள் ஒலித்தன. அந்தணர் வழிகாட்ட நந்தனார் முன் சென்றார். கரங் குவித்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதிக்கொண்டே ஆடுகின்ற கூத்தபிரானின் திருமுன் நின்றார். அவர் திரும்பவே இல்லை. இறைவனுடன் ஐக்கியமாகி விட்டார்.