Monday, October 20, 2014

லட்சுமியின் கர்வம்

நவராத்திரி 9 நாட்களில் முதல் 3 நாட்கள் துர்க்கை அம்சத்திலும் அடுத்த 3 நாட்கள் லட்சுமி அம்சத்திலும் கடைசி 3 நாட்கள் சரஸ்வதி அம்சத்திலும் விழா நடப்பது உங்களுக்குத் தெரிந்தது தான். முதலில் லட்சுமி அவதாரத்தை தெரிந்து கொள்ளுங்கள்...

மகா விஷ்ணுவின் மனைவி லட்சுமி. அவள் அஷ்ட ஐஸ்வரி யங்களுக்கும் அதி தேவதை. எனவே அவள் அமரர், அசுரர், நரர் உள்பட எல்லோராலும் போற்றப்படுகிறாள். ஆனால்- இந்தப் பேறும் மகிமையும் அவளை - ஸ்ரீமந் நாராயணனின் வராக அவதாரத்திற்குப் பிறகு கர்வம் கொள்ள வைத்தது. ஒரு வரையும் மதிக்காமல் எல்லோரையும் அலட்சியமாக நடத்தத் தொடங்கினாள்.

மகாவிஷ்ணு அவளின் போக்கைக் கவனித்தார். அவளை நல்வழிப்படுத்த ஒரு சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார். அப்படி ஒரு சந்தர்ப்பமும் விரைவில் வந்தது. அதாவது - பிருகு முனிவர் வைகுண்டத்திற்கு வந்ததும், திருமாலை தன் காலால் எட்டி உதைத்தார். இது கண்டு லட்சுமி குமுறினாள்.

ஒரு மானிடன் தன் மணாளனை மிதிப்பதா என்று வருந்தினாள். அவள் திருமாலிடம், "பிருகு உங்களைக் காலால் உதைத்தான்! நீங்களோ, அவனை வாரி அணைத்துக் கொண்டீர்கள். அப்போது எனக்கு எவ்வளவு அவமானமாக இருந்தது தெரியுமா? என் உள்ளத்தை ஏன் நீங்கள் எண்ணிப் பார்க்கவில்லை? என்றாள்.

அதற்கு மகாவிஷ்ணு, அதுபற்றி நான் கவலைப்படவில்லை. மேலும் எனக்கு இல்லாத அவமானம் உனக்கில்லை. அதனால் அதை நீ எதையும் பொருட்படுத்தாதே, போகட்டும் விட்டு விடு என்றார். லட்சுமி விடவில்லை? "நான் உங்கள் வலது மார்பில் எப்போதும் இருப்பவள்.

பிருகு முனிவர் உங்கள் மார்பில் உதைத்தது என்னை உதைத்தது போலத்தானே? என்றாள். "அதற்கு நான் என்ன செய்யட்டும்?'' என்றார் விஷ்ணு. "என்ன செய்வதா? மாற்றானின் முன், மனைவிக்கு மதிப்பு தராததங்களுடன் இனியும் நான் வாழ விரும்பவில்லை. பிரிந்திருக்கவே விரும்புகிறேன் என்றாள் லட்சுமி.

இதையடுத்து விஷ்ணு அவளை சமரசம் செய்தார். லட்சுமி, பிருகு நம் குழந்தை. அவன் உதைத்ததை நாம் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படியே எடுத்துக் கொண்டாலும் பெரியோர் அதைப் பொறுப்பது கடன் என்றார். இந்த பதிலால் லட்சுமி மன ஆறுதல் கொள்ளவில்லை. மாறாக, விஷ்ணுவை சபித்தாள்.

எப்படி தெரியுமா? எனக்கு ஏற்பட்ட அவமானத்திற்குக் காரணமாகிய நீங்கள் பூவுலகில் சித்தப் பிரமை கொண்டு, துன்பங்கள் பல அனுபவித்து அவமானப் படக்கடவது என்றாள். மேலும் அவளது கோபம் பிருகுவின் மீது திரும்பியது. "பிருகே! செல்வத்திற்கு அதி தேவதை நான். என்னை உதைத்த தரித்திரர்களாய்த் திரியக் கடவது என்று சபித்து விட்டாள்.

அத்துடனாவது அவள் கோபம் தணிந்ததா? அதுதான் இல்லை. வைகுண்டத்தை விட்டு வெளியேறினள். நேராக கரவீரபுரத்தை அடைந்தாள். அங்குள்ள சுவர்ணமுகி நதிக்கரை ஓரம் தனித்து வாழ்ந்து வந்தாள். லட்சுமியின் பிரிவும், சாபமும் மகாவிஷ்ணுவுக்குத் தேவையாக இருந்தது. காரணம்- அவர் கடவுளாக இருந்தாலும் கடமை ஆற்ற வேண்டியிருந்தது.

கலியுகத்தினால் உலக நியதிகள் தடுமாறிப் போயிருந்த நிலையில் - லட்சுமி பூலோகத்தில் பிரவேசித்தாள். அப்போது மகாவிஷ்ணு சற்று பயப்பட்டார். லட்சுமி அவசரப்பட்டு, தனது பொன்னும் மணியுமான ஐஸ்வர்யங்களை எல்லாம், அவளைப் போற்றும் அறிவிலிகளுக்குக் கொடுத்து, அவர்களை மேலும் பஞ்சமா பாதகர்களாக ஆக்கி விடுவாளோ என்று எண்ணினார்.

அவர், லட்சுமியின் செயல்பாடுகளை தடுப்பதற்காக பூலோகத்திற்கு வந்தார். அதனால் ஸ்ரீநிவாசன் என்று பெயர் பெற்றார். அவர் வேங்கட மலைக்கு வந்து புற்றில் வாசம் செய்தார். அப்போது பிரம்மனும், சிவனும் கரவீர புரத்தில் லட்சுமியின் முன்பாகத் தோன்றினார்கள். லட்சுமி வைகுண்டத்திற்குத் திரும்பினால் ஸ்ரீமந்நாராயணன் சித்த பிரமை நீங்கித் தெளிவடைவார் என்றார்கள்.

லட்சுமி அதற்கு உடன்படவில்லை. பிடிவாதம் பிடித்தாள். அப்போது சிவன் லட்சுமியிடம், "பூலோக நியதிப்படி ஹரிக்கு ஆகாரம் அளிக்க நானும் பிரம்மாவும் கன்றும், பசுவும் ஆகிறோம். நீ எங்களை சோழ மன்னனுக்கு அளித்து விடு. ஏனென்றால், வேங்கட மலை சோழ மன்னனின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார். அதைத் தொடர்ந்து பிரம்மா சொன்னார்.

"இந்த நிகழ்ச்சியின் மூலம் விஷ்ணு யார் என்பதை பூலோகம் உணரும்'' என்றார். அதன்படி லட்சுமி, சோழ அரசனுக்குப் பசுவையும், கன்றையும் விற்று விட்டு, பழையபடி கரவீரபுரம் திரும்பினாள். நாட்கள் கடந்தன. லட்சுமியோ மனம் மாறவில்லை. இதனால், ஸ்ரீநிவாசன் மனம் மாறி பத்மாவதியை மறுமணம் செய்து கொண்டார்.

அவர் லட்சுமியை அறவே மறந்து விட்டார். எனினும், பத்மாவதி சும்மா இருக்கவில்லை. "நான் அக்காவைப் பார்ககவில்லை. எப்படியாவது அவளை அழைத்து வாருங்கள். உங்கள் இருவருக்கும் பணிவிடை செய்து வாழ்கிறேன்'' என்றாள். பத்மாவதி இப்படித் தொடர்ந்து நச்சரித்து வந்ததால், விஷ்ணுவால் அதைப் பொறுக்க முடியவில்லை.

எனவே பத்மாவதியை போலித் தாயான வகுளமாலிகா தேவியிடம் விட்டு விட்டு, கரவீரபுரம் சேர்ந்தார். இதற்கிடையே பெருமாள் பத்மாவதியை 2-ம் திருமணம் செய்து கொண்ட தகவலை அறிந்தாள் லட்சுமி. கோபத்துடன் அவள் பாதாள லோகத்தில் உள்ள கபில மகரிஷி ஆசிரமத்திற்குச் சென்று இருந்தாள்.

ஸ்ரீநிவாசன் லட்சுமியின் சாபத்தால் பாதிக்கப்பட்டார். என்றாலும் லட்சுமியைத் தேடி அலைந்தார். காடு, மலைப்பிரதேசம் எங்கும் சுற்றி அலைந்தார். முனிவர்களை விசாரித்தார். ரிஷிகளைக் கேட்டார். யாருக்கும் விவரம் தெரியவில்லை. தனது முயற்சி பயன் எதுவும் தாரததால் அவர் இறுதியில் சுகாபுரியில் உள்ள சுவணர்முகி நதிக்கு அடுத்துள்ள குளம் ஓரத்தில் அமர்ந்தார்.

அந்த குளத்திலுள்ள தாமரை அவரைக் கவர்ந்தது. அங்கேயே அமர்ந்து கொண்டு லட்சுமியின் நினைவாகவே இருந்தர். இது கபில மகரிஷிக்குத் தெரிந்தது. அவர் உடனே லட்சுமியைக் கூப்பிட்டுச் சொன்னார். லட்சுமி இது உனக்கே சரியாகப் படுகிறதா? நியாயமா? சொல். பதி விரதா தர்மத்திற்கு இது ஒருபோதும் ஒவ்வாது.

நீ இப்போது என்னதான் அந்த நாராயணனை மனதில் நிறுத்தித் தொழுதாலும் பயன் உண்டா? நீ அனைத்தும் அறிந்தவள். உணர்ந்தவள். நீ செய்வது சரியா?'' என்றார். லட்சுமி உடனே, பிருகு முனிவர் வந்து திருமாலின் மார்பில் உதைத்ததையும் திருமால் பிருகுவின் காலைத் தொட்டு வருடியதையும் கூறி வருந்தினாள்.

பிறகு அவள் சொன்னாள்: "பிற புருஷன் பாதம்என் மீது பட்டதால் பதிவிரதா தர்மத்திற்கு நான் விதி விலக்கானேன்'' என்றாள். கபில முனி இடைமறித்தார்.

"பிருகு என்பவன், நரன் அதாவது மனிதன். அவன் உன் தகுதிக்குப் பரபுருஷன் - வேற்று மனிதன் - அல்ல, குழந்தை. அவன் ஏன் அப்படி நடந்து கொண்டான் என்றால் ஆண்டவள் வடிவில் விஷ்ணு ரூபமே சத்வ குணச்சின்னம் என்பதை நிரூபிப்பதற்காத்தான். மேலும், அவன் சர்வம் ஒடுங்குவதற்கு அதே நாராயணன் அப்படிப் பணிந்து கொடுத்தார்.

ஆனால் நீ இதை உணராமல் பதறி விட்டாய். நான் உன்னை ஒன்று கேட்கிறேன். கணவன், "தவறில்லை, தர்ம நெறிதான்'' என்று வலியுறுத்தும் போது, நீ அதை மறுக்க என்ன உரிமை இருக்கிறது? மனைவி கணவனுடன் இணைந்து போக வேண்டியதுதானே அழகு. இந்தக் கடமைகளை மறந்து போனது உனக்கே அழகாக இருக்கிறதா? என்றார்.

லட்சுமி தன் தவறை உணர்ந்தாள். ஸ்ரீநிவாசனுக்கு அவசரப்பட்டு சாபம் கொடுத்து விட்டதை எண்ணி வருந்தினாள். முனிவரிடம் "உண்மை உணர்ந்தேன் மகரிஷியே. இனி நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டாள். "வேறென்ன? பரந்தாமன் மார்பில் மீண்டும் அடைக்கலம் அடைய வேண்டியதுதான் உன் கடமை'' என்றார்.

"ஆனால் அதில் இப்போது ஒரு பிரச்சினை கபில தேவா'' என்றாள். என்ன பிரச்சினை? என்று கபிலமுனிவர் கேட்டார். அதற்கு லட்சுமி "என்னவர் இப்போது புதுத் திருமணமானவர். அப்படி இருக்க, நான் எப்படி அவர் மார்பை அடைந்து இருப்பேன். அது அவரது ஏகாந்தத்திற்கு தடையல்லவா? என்றாள்.

அம்மா, நீ கேட்பது விளையாட்டுத்தனமாக இருக்கிறது. நீ எந்த அவதாரத்தில் அவர் மார்பை விட்டுப் அகன்றிருக்கிறாய்? அவரது எந்த ஒரு அவதாரத்திலும் அகலவில்லையே! கிருஷ்ணா அவதாரத்தில் அவர் பதினாயிரம் கோபிகைகளுடன் விருப்பம்போல் இருக்கும் போது நீ அதே மார்பில்தானே இருந்தாய்? என்றார், மகரிஷி.

கபில மகரிஷியே. என் தவறுகளை நான் உணர்ந்து விட்டேன் என்றாள் லட்சுமி. பின்னர், லட்சுமி தன் அம்சத்தை அங்கு பிரதிஷ்டை செய்து விட்டு, சாயா லட்சுமியாகப் பூலோகத்தில் ஸ்ரீநிவாசன் முன்பு இருந்த குளத்தில் எழுந்தருளினாள். பிறகு அவள் ஸ்ரீநிவாசன் காலில் விழுந்து நமஸ்கரித்து அவர் மார்பில் சேர்ந்தாள்.

அவள் கர்வம் ஒடுங்கியதைக் கண்டு ஸ்ரீநிவாசன் மனம் பூரித்தார். தேவ கணங்கள் ஆர்ப்பரித்தன. பிறகு லட்சுமி `பத்மாவதி' தன் அம்சம் என்பதை உணர்ந்தாள். கர்வம் ஒடுங்கி, தாமரையில் எழுந்தருளியதால் அலர்மேலு மங்கையாய்ப் பெயர் பூண்டாள். லட்சுமி தாமரையில் எழுந்தருளிய அந்த இடம் இப்போது அலர்மேல் மங்காபுரம் - திருச்சானூர் என வழங்கப்படுகிறது *

No comments:

Post a Comment