Monday, October 20, 2014

ஆயுத பூஜையின் போது சுண்டல் படைப்பது ஏன்?

கணவருக்கு சிறந்த பணிவிடை செய்து கற்புக்கரசியாக திகழும் அனுசுயாவை மூம்மூர்த்திகளும் ஒரு சோதனைக்கு உட்படுத்துகிறார்கள். அதாவது அவர்கள் மூவரும் முனிவர் போல் வேடம் அணிந்து அந்த பெண்மணி வீட்டுக்குச் சென்று யாசகம் கேட்கிறார்கள்.

அவர்களுக்கு உணவு போட வரும் போது அவளிடம் நாங்கள் ஆடை இன்றி உணவு அளித்தால் தான் ஏற்றுக் கொள்வோம் என்கிறார்கள். அனுசுயா தன் கற்பின் ஞானத்தால் வந்தது மும்மூர்த்திகள் என்பதை அறிந்து கொண்டாள். உடனே அவர்களுக்கு ஆடையின்றி உணவு படைக்க சம்மதிக்கிறாள்.

மும்மூர்த்திகளும் வீட்டில் இருக்க, அவள் உணவை தயாரிக்கிறாள். பின்னர் உணவு பரிமாறும் வேளையில் அவர்கள் மூவரையும் குழந்தைகளாக்கி விடுகிறாள். அந்த குழந்தைகளுக்கு அவர்கள் விருப்பம் போல் உணவு அளிக்கிறாள். பின்னர் அந்த குழந்தைகளுக்கு தொட்டில் கட்டி அதில் தூங்க வைக்கிறாள்.

இதற்கிடையே மூன்று தேவியரும் தங்கள் கணவன்மார்களை காணாது தேடுகிறார்கள். அப்போது அவர்கள் இருக்கும் இடத்தை நாரதர் கூறுகிறார். உடனே அங்கு சென்று தங்கள் கணவரை எங்கே என்று கேட்டனர். அப்போது அனுசுயா அந்த குழந்தைகளை காட்டினார்.

அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அனுசுயா மூன்று குழந்தைகளையும் தெய்வங்களாக மாற்றி அவர்கள் மனைவிமார்களிடம் அப்படைந்தாள். மூன்று தேவியருக்கும் அனுசுயா மீது கோபம். அவள் கற்புக்கு அவ்வளவு சிறப்பா என்று ஆதங்கம் கொண்டனர்.

அவளின் கற்பை வெளிக்காட்ட நாரதர் முயலுகிறார். இரும்பினால் செய்யப்பட்ட சுண்டல் கடலையை மூன்று தேவியரிடமும் கொடுத்து அதை அவிக்க சொல்கிறார். அதை அவர்கள் அவிக்கிறார்கள். ஆனால் இரும்பு சுண்டல் எப்படி வேகும்.

எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. உடனே நாரதர் அந்த சுண்டலை அனுசுயாவிடம் கொடுக்கிறார். அவள் அவிக்க முயலும் போது சுண்டல் நன்றாக வெந்து விடுகிறது. பின்னர் அவற்றை மூன்று தேவியருக்கும் கொடுக்கிறாள். அப்போதுதான் கற்பின் பெருமையை மூன்று தேவியரும் உணருகிறார்கள். அனுசுயா சுண்டல் படைத்த நாள்தான் ஆயுத பூஜை. எனவே தான் அன்று சுண்டல் படைக்கிறோம்.

No comments:

Post a Comment