Friday, April 24, 2015

தமிழும் சமஸ்கிருதமும் என் இரு கண்கள்


தமிழும் சமஸ்கிருதமும் என் இரு கண்கள் part 1
    
 தமிழ் மொழியில் உள்ள பலருக்கும் தெரியாத, கருத்தாழமிக்க பாடல்களை குறித்து ஒரு கட்டுரை எழுதினால் என்ன என்று யோசித்தேன். ஆனால் அதை விட சமஸ்கிருதத்தை குறித்து எழுதுவதே இப்போதைக்கு காலத்தின் கட்டாயமாக உணர்ந்தேன். அதற்கு முன் தமழ் மற்றும் சமஸ்க்ருதத்தின் பினைப்பு, மற்றும் அதை பிரிப்பதற்கான சூழ்ச்சியை குறித்துப் பார்ப்போம்.

சமஸ்கிருதத்தை இன்று நம்மில் இருந்து பிரித்தெடுக்க பெரும் சூழ்ச்சி நடைபெறுகிறது. தமிழனுக்கு சமஸ்கிருதம் என்பது ஏதோ ஒரு அன்னிய மொழி என்பது போலும், அது ஒரு தமிழை அழிக்க தோன்றிய மொழி என்றும் பல தேச விரோத கும்பல்களால் மிக செம்மையாக திட்டமிடப்பட்டு பரப்ப படுகிறது.

எதற்காக அவர்கள் சமஸ்கிருதத்தை அழிக்க முற்பட வேண்டும் ? அதை அவ்வாறு செய்து என்ன சாதித்து விடப் போகிறார்கள் என்ற கேள்வி எழலாம் ?

ஒரு மொழி என்பது வெறும் தொடர்பு படுத்தும் ஊடகமல்ல. அது ஒரு தேசத்தின், ஒரு சமூகத்தின் ஜீவன். ஒரு நாகரீகத்தின் ஆதாரம். நம் சனாதன தர்மத்தின் மேன்மைகள் பலவும் சமஸ்க்ருதத்தில் கொட்டிக் கிடக்கின்றன. உலகில் இன்றைய அளவும் எல்லா மொழிகளிலும் எழுதப்பட்டுள்ள‌ புத்தகங்களை எண்ண முடிந்தால் சமஸ்கிருத புத்தகங்களே அதிகமாய் இருக்கும். சொல்லப்போனால் சமஸ்க்ருதத்தில் இப்போது அதிக அளவில் புத்தகங்கள் எழுதப் படுவது இல்லை. ஆனால் நம் முன்னோர்கள், சமஸ்க்ருதத்தில் கோடிக் கணக்கான புத்தகங்களை எழுதி குவித்துள்ளார்கள். அதைப் போல தமிழின் தொன்மையும், செம்மையும் நாம் தமிழர்களுக்கு சொல்ல தேவையில்லை.

ஆக சனாதன தர்மத்தின் மிகத் தொன்மையான‌ சமய நூல்கள் பல்லாயிரக்கணக்கில் இடம் பெற்றுள்ளது இரு மொழிகளில் மட்டுமே என்பது என் கருத்து. ஒன்று சமஸ்க்ருதம் மற்றது தமிழ். நம் பாரதத்தின் சமய நூல்களின் ஆதாரமாய் இந்த இரு மொழி நூல்களும் உள்ளன. மற்ற மொழிகளில் பல சமய நூல்கள் இருப்பினும் அவை அத்தனை தொன்மையானது என்று சொல்ல இயலாது.

இந்த இரு மொழிகள்தான் நம் சனாதன தர்மத்தின் ஆதாரமாய் உள்ளது. இந்த இரு மொழிகளையும் ஒன்றோடொன்று மோதவிட்டால் யாருக்கு லாபம் ? யாருக்கு நஷ்டம் ?

இருமொழிகளுக்கும் நஷ்டம் இல்லை, ஒவ்வொரு உண்மையான இந்தியனுக்கும் நஷ்டம். ஏனேனில் இரு மொழிகளுமே பின்னிப் பினைந்தது ? இரு கண்களுக்கு இடையில் எந்த கண் வேண்டும் என்று யாராவது கேட்டால் எவ்வளவு முட்டாள்தனம் ? தமிழில் இன்றைய அளவில் பல்லாயிரக் கணக்கான சமஸ்க்ருத சொற்களை நாம் பார்க்கலாம். சில சொற்கள் உண்மையில் எந்த மொழியின் வேர் சொல் என்று கண்டுப்பிடிப்பதே கடிணமாக இருக்கிறது. இரண்டு மொழிகளுக்குமே ஒன்றுதான் ஆதாரம், அது சமயம். சமயத்தில் இருந்து இந்த இரண்டு மொழிகளையுமே பிரித்தால், இம்மொழிகளில் ஜீவன் போய்விடும்.

ஆனால் இன்று என்ன நடக்கிறது. மிக நுட்பமாக திட்டமிட்டு, தமிழ் என்பதை சமஸ்க்ருதத்திற்கு எதிரியாக சித்தரிப்பதில் கிட்டத்தட்ட வெற்றி பெற்று வருகிறார்கள் சதிகாரர்கள். வெள்ளையனால் தொடங்கப்பட்ட அச்சூழ்ச்சியை இன்று வெள்ளையனின் வேர்களை பிடித்துக் கொண்டவர்களும், கொள்ளையனின் கொள்கையை சார்ந்தவர்களும் மிக அதிகமாக செய்கிறார்கள். இந்த இனையில்லா இரு பெரும் மொழிகளை பிரித்து விட்டால் தாங்கள் தம் அந்நிய சித்தாந்தங்களை சிரமமில்லாமல் செய்து விட முடியும் என்று நினைக்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில், தமிழை மெல்ல ஹிந்து சமயத்தில் இருந்து நகர்த்தி, அது ஒரு தனி கலாச்சாரம் என்றும், ஏனைய இந்திய கலாச்சாரத்தில் இருந்து அது மாறுபட்டது என்பது போன்றும் ஒரு நிஜமில்லாத மாயையை கிட்டத்தட்ட உருவாக்கி விட்டார்கள்.

எனக்கு தெரிந்து பண்டைய பாரத வ‌ரலாற்றில் மொழியின் பெயரில் எந்த போரும் நடந்ததில்லை. சனாதன தர்மமே பாரதத்தின் ஆதாரமாய் இருந்தது. நம் நாடு மொழியை சார்ந்து இருக்கவில்லை, தர்மத்தை சார்ந்தே இருந்தது. சனாதன தர்மத்தை எடுத்து செல்லும் ஊடகங்களாகவே மொழிகள் இருந்தன, அப்படி செய்கின்ற காரணத்தால் மேலும் செம்மை அடைந்தன.

ஆனால் "ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்" என்கிற பெயரில் தொடங்கிய சில போலி நாத்திக கும்பல்கள், தமிழின் ஆதாரமான சமயத்தை அதிலிருந்து பிடுங்க திட்டமிட்டு, கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளாய் பல சூழ்ச்சிகளை செய்துள்ளனர். வெள்ளைர்களின் இரத்தமும், கொள்ளையர்களின் இரத்தமும் பாயும் சில கோடாரிகள் இதற்கு உடந்தையாக உள்ளனர்.

தமிழ் என்பதை தனியான ஒரு கலாச்சாரமாக சித்தரிப்பதால், மக்களை தேசியத்திலிருந்து பிரித்து அவர்களை பரம்பரை பரம்பரையாக ஆள முடியும் என்பது அரசியல் நரிகளின் சூழ்ச்சி. தமிழில் இருந்து ஹிந்து சமயத்தை அகற்றி விட்டால், தம் பாலைவன, பாவாடை சித்தாந்தங்களை அதில் உட்புகுத்தி விட முடியும் என்பது அந்நிய அடிமைகளின் சூழ்ச்சி.
இப்படி ஒரு ஹிந்து விரோத கும்பல்களின் சூழ்ச்சி வலையில், அப்பாவி தமிழ் மக்கள் சிக்கித் தவிப்பது தான் கொடுமை.


தமிழும் சமஸ்கிருதமும் என் இரு கண்கள் part 2




இரண்டு வகையான முட்டாள்களை நாம் பார்க்கலாம். முதல் வகை முட்டாள்கள் தமிழ்தான் சிறந்தது என்று நினைப்பவர்கள், "சமஸ்க்ருதம் என்பது தமிழனுக்கு அந்நிய மொழி" எனும் வெள்ளையன் விரித்த வலையில் விழுந்த, முட்டாள் உலகின் முடிசூடா மன்னார்கள். இவர்கள்
சமஸ்கிருதத்தை "ஆரிய மொழி" என்றும், தன் வேர்களுக்கு தொடர்பில்லாத ஒரு மொழி என்றும், நினைக்கின்றனர். தான் தமிழ் பேசுபவன் என்ற ஒரே காரணத்தினால், தமிழ்தான் ஆதி மொழி, சமஸ்க்ருதத்தின் தாய் மொழியே தமிழ்தான் என்று சொல்லி திரிபவர்கள்.

மற்றொரு வகை, தமிழ் என்றாலே ஏதோ தென் கோடியில் பேசப்படும் ஒரு சிறு கூட்டத்தின் மொழி. அது வாயில் நுழைவதே கடினம், அதற்கு என்ன அப்படி ஒரு சிறப்பு இருக்கப் போகிறது என்று நினைக்கும் மனநோயாளிகள். எல்லா மொழியும் சமஸ்க்ருதத்தில் இருந்து வந்தவை, ஆகையால் தமிழும் சமஸ்க்ருதத்தில் இருந்து தான் வந்தது, என்று அடிப்படை தெரியாமல், மொழி ஆய்வாளர்களில் கட்டுரைகளை படிக்காமல் அடித்து விடுபவர்கள்.

உண்மைகள் என்ன என்று நிதர்சனமாய் ஆராய்வோமானால். தமிழும் சமஸ்க்ருதமும் ஆதி மொழிகள். தனித்தனியான வேர்களை கொண்டவை. ஆனால் இவை இரண்டுமே செம்மையான மொழியாக, சிறப்பான மொழியாக மாறியதே ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டதால். இரண்டின் வளர்ச்சியுமே, ஒன்றுக்கு மற்றது தன் வளங்களை பங்கிட்டுக் கொண்டதால். இரண்டுக்குமே ஆதாரமாய் சனாதன தர்மம் திகழ்ந்ததால், இவை இரண்டும் இந்த உலகில் உள்ள மற்ற எந்த மொழியை விட சிறப்பானதாக திகழ்கின்றன.

நம் தமிழில் சொல்லாடல் அற்புதமாக இருக்கும். தமிழை வீர மொழி என்று சொல்லலாம். அதன் ஒலியே ஒரு கம்பீரத்தை பிரதிபலிக்கும். அதன் ஆழமான, பழமையான‌ இலக்கியங்கள் உலகின் எந்த தலைசிறந்த மொழியையும் வணங்கச் செய்யும். தமிழை குறித்து நாம் தமிழனுக்கே சொல்வது அழகல்ல.

சமஸ்க்ருதம் எப்படிப்பட்ட மொழி ? அதை குறித்து பார்ப்போம்.

சமஸ்க்ருதத்தின் கிளை மொழிகள் இன்று உலகெங்கும் பரவி கிடக்கிறது. சமஸ்க்ருதத்தின் வேர் சொற்கள் ஐரோப்பிய மொழிகளிலும் ஆதாரமாய் இருக்கிறது. பாநிணியின் இலக்கண கோட்பாடுகள் சம்ஸ்க்ருதத்தை ஒரு அற்புதமான, கட்டுக்கோபான மொழியாக வைக்கிறது.

சமஸ்க்ருதத்தின் இலக்கிய மேன்மையை புகழாத உலக மொழி ஆய்வாளர்களே இல்லை என்று சொல்லலாம். காளிதாஸனின் காவியங்களை படித்து விட்டு மாய்ந்து போய் எழுதிய வெளிநாட்டு அறிஞர்கள் பலர். இப்படி கூட ஒரு மொழி இருக்க முடியுமா என்று திகைத்தவர் பலர். சமஸ்க்ருதத்தை மிக நுட்பமான அமைப்பை கொண்டது என்று பலருக்கு தெரியும். ஒரு கனிப்பொறியின் இயந்திர மொழியை ஒத்த மிக நுட்பமான இலக்கண நுட்பங்களை கொண்ட மிகச் சிறந்த மொழி என்று ஜெர்மானிய விஞ்ஞானிகளும், மொழி ஆயவாளர்களும் அதை கண்டு வியந்தனர்.

சமஸ்க்ருதத்தின் ஒவ்வொரு ஒலித்துகளுக்கும் பொருள் இருக்கும். (தமிழுக்கும் இந்த தகுதி உண்டு என்பது பலருக்கு தெரியாது) சமஸ்க்ருதத்தின் ஒவ்வொரு ஒலித்துகளும் ஒரு ஆற்றலை வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். உதாரணத்திற்கு "அ" எனும் எழுத்து ஆரம்பம் இல்லாத தன்மையை, அனைத்திற்கும் ஆதாரமான தன்மையை குறிக்கும் . "இ" எனும் எழுத்து, பலம், ஆரோக்கியம் ஆகிய தன்மைகளை குறிக்கிறது. இப்படி ஒவ்வொரு எழுத்தும்/ஒலியும் ஒருவிதமான தன்மையை/ஆற்றலை குறிக்கிறது. அது போலவே இரு எழுத்துக்கள் இனையும் போது இருவேறு ஆற்றல்கள் இனைவதால், அது ஒரு ஆற்றல் கலவையை உண்டாக்குகிறது. இதை குறித்து எழுதும் முன் சிலவற்றை தெளிவு படுத்த விரும்புகிறேன்.

இறைவனே ஆற்றலின் ஆதாரம், அனைத்து வித ஆற்றலின் அடிப்படை. "ஆத்மா" என்று சொல்லப்படுவதே நுட்பமான ஆனால் எல்லையற்ற ஆற்றலைதான் குறிக்கிறது. அதனால்தான் ஆத்மாவை அழிக்க முடியாது என்கிறார்கள். இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே ஆற்றலை அடிப்படையாக கொண்டதாக‌ இருக்கிறது. இந்த உடல் அழிந்ததும் அதற்கு ஆதாரமாய் இருந்த‌ அடிப்படை ஆற்றல் வேறு உடலுக்கு செல்கிறது. பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. நம் உடலின் உள்ள ஒவ்வொரு அணுவுக்குள்ளும் ஆற்றல் வெளிப்பட்டு கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த ஆற்றலை உருவாக்க முடியுமா ? ஆற்றலை உருவாக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது. ஆத்மா என்பதை யாரும் உருவாக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது என்று அதனால்தான் சொல்கிறார்கள். ஆற்றலுக்கு ஆரம்பமும் இல்லை, அழிவும் இல்லை. நீங்கள் கேட்கலாம் ஏன் அணுவிலிருந்து ஆற்றலை உண்டாக்குகிறார்களே ? என்று. ஆனால் உண்மையில் ஆற்றல் உண்டாக்க படுவதில்லை, ஏற்கனவே வேறு உருவில் ஒடுக்கப்பட்டுள்ள‌ ஆற்றல் வெளிப்படுகிறது அவ்வளவுதான். இந்த பிரபஞ்சத்தின் மொத்த ஆற்றல் குறைவதும் இல்லை, கூடுவதும் இல்லை. அவை பலவிதமான தன்மைகளை கொண்டதாகவும், ஒன்று மற்றதாய் மாறிக் கொண்டேயும் இருக்கிறது.

சரி இதற்கும் சமஸ்க்ருதத்திற்கும் என்ன சம்பந்தம் ?

சமஸ்க்ருதத்தின் ஒவ்வொரு ஒலித்துகளும் (எழுத்துக்குள்) இந்த பலவிதமான ஆற்றல்களின் ஒரு குறிப்பிட்ட தன்மையை கொண்டதாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட ஒலியை நாம் எழுப்பும் போது அது அந்த குறிப்பிட்ட ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இப்படி பலவிதமான ஆற்றல்களின் சங்கம‌மாய் உள்ளதுதான் மந்திரங்கள் எனப்படுபவை. அதை பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போம்






தமிழும் சமஸ்க்ருதமும் என் இரு கண்கள்.PART 3


மந்திரங்கள் எனச் சொல்லப்படுபவை, இப்படி பல வகையான ஆற்றல் தன்மைகளை கொண்ட ஒலித் துகள்களின் சங்கமம் ஆகிறது. ஓம் எனும் ப்ரணவத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அது மூன்று வகையான ஒலித் துகள்களை கொண்டது. அவை அ, உ,ம் ஆகியன. அ, உ, ம என்று நாம் எழுத்துக்களாய் அதை எழுதினாலும், அவற்றை உச்சரிக்கும் முறையை
வைத்தே அவை சரியான ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. ஆகவேதான் மந்திரங்கள் எனப்படுபவை சரியான உச்சரிப்பை ஆதாரமாகக் கொண்டது. ஒரு மந்திரத்தின் ஆற்றல் சரியான முறையில் வெளிப்பட வேண்டும் என்றால் அதன் உச்சரிப்பு சரி வர அமைய வேண்டும்.

அடுத்து உச்சரிப்பை எப்படி செம்மையாக்க முடியும். அதற்குதான் குருவின் பங்கு மிகவும் முக்கியம். ஒரு நல்ல குருவால்தான் ஆற்றல் மிகுந்த மந்திர ஒலியை சரி வர உச்சரிக்க சொல்லித்தர முடியும். அதனால்தான் வேதங்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக எழுதப்படாமல் இருந்தன. சமஸ்க்ருதத்தின் சூட்சுமமான ஒலியை எந்த எழுத்தாலும் சரியாக பிரதிபலிக்க முடியாது. மிகவும் சிறிய அளவிலான மாத்திரை இடைவெளி மாறினாலே அவற்றின் அர்த்தம் மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஆகையால்தான் வேதங்கள் குரு பரம்பரை வாயிலாக மிகவும் செம்மையான முறையில் கற்றுத் தரப்படுகிறது.

வேதங்களை சுருக்கமாக ஆறு அங்கங்களாக பிரிக்கலாம். வேதத்தை அத்யயனம் செய்து அதை எப்படி உச்சரிப்பது என்பதை "ஷிக்ஷை" என்பது விளக்குகிறது. அதன் இலக்கணத்தை "வ்யாகரணம்" விளக்குகிறது. அதன் அளவு, நீளம் ஆகியவற்றை "சந்தஸ்" விளக்குகிறது, அந்த சொல்லின் ஆதாரம் மற்றும் அதன் வளர்ச்சியை "நிருக்தம்" விளக்குகிறது, அதை எந்த நேரத்தில் சொல்ல வேண்டும என்பதை "ஜ்யோதிஷ்" விளக்குகிறது. அதை எப்படி செய்ய வேண்டும் என்று "கல்பம்" விளக்குகிறது. இப்படி அற்புதமான, ஒப்பற்ற‌ கட்டமைப்பில் வேதம் அமைக்கப்பட்டுள்ளது.

சமஸ்க்ருதத்தில் பொருள் இல்லாத சொல்லே இல்லை . ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வேர்ச்சொல் அதற்கே உரிய பொருள் உண்டு. கணித சூத்திரங்கள் போல, சம்ஸ்க்ருத மொழியும் சூத்திரங்களால் ஆனது. இந்த சூத்திரங்கள் தெரிந்தாலே போதும், மொழியின் அத்தனை வார்த்தைகளையும், அவற்றின் பயன் பாடுகளையும் உபயோகப் படுத்த முடியும். ஆனால் அந்த சூத்திரங்கள் தான் எண்ணிக்கையற்று இருக்கின்றன. ஆயினும் ஒவ்வொரு படியாக கற்பது சாத்தியமே.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், இந்தியனாய் பிறந்த ஒவ்வொரு மனிதனும் சம்ஸ்க்ருதம் எனும் இந்த ஒப்பற்ற ஞான மொழியை குறித்து சிறிதாவது அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகதான். அளவற்ற, இனையற்ற பொக்கிஷங்கள் இவற்றில் கொட்டிக் கிடக்கின்றன. ஒவ்வொரு இந்தியனும் உலகை பார்த்து "பாரடா எங்கள் பாரம்பரியத்தை" என்று மார்தட்ட வேண்டும். ஆனால் நம்மில் பலரை அது ஏதோ அந்நிய மொழி என்பது போல் உருவகம் செய்து, நமக்கே அம்மொழியை அந்நிய மொழியாக்கிய பெருமை வெள்ளையர்களையும், இன்றைய திராவிட கொள்ளையர்களையும் சேரும்.

சமஸ்க்ருதம் பிராமனரின் மொழி என்று ஒரு நிலை நிறுத்தலையும், இந்த சூழ்ச்சிக்காரர்கள் செய்துவிட்டார்கள். சமஸ்க்ருதத்தின் மிக‌ச் சிறந்த கவியான காளிதாசனோ, வால்மீகியோ, வியாசரோ பிறப்பால் பிராமனக் குலத்தை சேர்ந்தவர்கள் அல்ல. காளிதாசன் இடைக்குலத்தைச் சேர்ந்தவர், வால்மீகியோ ஒரு திருடர். ஆகையால் சமஸ்க்ருதம் ஒரு சாராருக்கு மட்டும் சொந்தமானது என்ற சொல்வது பெரும் தவறு.

ஆங்கிலேயர்கள் இந்த நாட்டின் கலாச்சாரத்தை அழிப்பதற்காக ஆங்கில முறைக் கல்வியை கொண்டு வர நினைத்தார்கள். ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் மெக்காலே எந்த அளவு நமது நாட்டுக் கல்வியை மாற்ற வேண்டும் என்று திட்டமிட்டு செயல் பட்டார் என்பது நன்கு ஆவணப் படுத்தப் பட்டுள்ளது. அதன் விளைவாக நமது நாட்டு பாரம்பரியக் கல்வி முறையை கற்க ஆர்வம் குறைவு பட்டது. பல சமஸ்க்ருத பாடசாலைகள், பல்கலைகழகங்கள் அதனால் மூடப்பட்டன. கணிதம், வானவியல், மருத்துவம் என்று நமது பாரம்பரிய ஞானம் மிக ஆழமானது. அத்தகைய அறிவு மேலும் ஆழமாக அறியப் படவே இல்லை. சுமார் நாற்பது லட்சம் ஏடுகள் இன்னும் ஆய்வுக்கு ஆட்படாமலே இருக்கின்றன. இது வரை சுமார் பத்தாயிரம் போல எடுத்து படித்து பகுத்து வைத்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழர்களாகிய நாம் நம் பாரம்பரியத்தை குறித்து நிறைய ஆராய வேண்டும். "எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும், அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு" எனும் வள்ளுவனின் வாக்குக்கு இனங்க, "வடமொழி", "ஆரிய மொழி" என்று பிரிவினைவாதிகளும், அந்நிய சக்திகளும் நம்மை பிளக்க நினைப்பதை நாம் புறக்கனித்து விட்டு, உண்மையை ஆராயும் பக்குவத்தை வளர்ந்திக் கொள்ள வேண்டும். நம் தமிழ் இலக்கியங்களில் உள்ள பல மான்புகளையும் நாம் வெளிக் கொண்டுவர கடமை பட்டுள்ளோம். அதைப்போலவே நம் மற்றொரு கண்ணான‌ சமஸ்க்ருதம் எனும் ஞான மொழியையும் நாம் ஆராய்ந்து, நம் முன்னோர்களின் அறிவு செழுமையை பற்றிக் கொள்ள வேண்டும்.

"சமஸ்க்ருதம்" என்பது எளிய மொழி. சம்யக் (நன்றாக) + க்ருதம் (செய்யப்பட்டது) = சம்ஸ்க்ருதம், அதாவது நன்றாக உருவாக்கப்பட்டது என்பதே அதன் பொருள். அதை நாம் கற்போம், நம் அடுத்த தலைமுறைக்கும் அதை எடுத்துச் செல்ல நாம் ஆசைப்படுவோம்.

ப்ருஹதாரன்ய உபநிடத்தில் இருந்து ஒரு ஸ்லோகம் உங்களுக்காக‌

काममय एवायं पुरुष इति। स यथाकामो भवति तत्क्रतुर्भवति।
यत्क्रतुर्भवति तत्कर्म कुरुते। यत्कर्म कुरुते तदभिसंपद्यते॥

ஒருவன் எப்படிப்பட்டவன் என்பது, அவனின் ஆழமான ஆசைகளை பொறுத்தது,
அவனின் ஆசைகளை பொறுத்தே அவனின் லட்சியம் இருக்கிறது,
அவனின் லட்சியத்தை பொறுத்தே அவனின் செயல்கள் இருக்கின்றன.
அவனின் செயல்களை பொறுத்தே, அவனின் வாழ்க்கை இருக்கிறது

No comments:

Post a Comment