Sunday, April 26, 2015

படகு நின்ற இடத்திலேயே நிற்கிறது

படகு நின்ற இடத்திலேயே நிற்கிறது
சுகி.சிவம்
நம்மைவிட வயதில் மூத்தவர்களை, உயர்ந்த நிலையில் இருக்கும் மேலானவர்களை நாம் பேர் சொல்லி அழைத்தால் நம்மை என்ன நினைப்பார்கள்? நம் பண்பாட்டையும் படிப்பையும் யாராவது பாராட்டுவார்களா? இவ்வளவு ஏன்? என் அம்மாவையோ அப்பாவையோ அவர்கள் பேர் சொல்லி நான் கூப்பிட்டால் என்னைத் தவறாக நினைப்பீர்களா? இல்லையா? கண்டிப்பாக நினைப்பீர்கள்.
ஆனால் சர்வ லோகத்துக்கும் மாதாவாக விளங்கும் பராசக்தியை அவளுடைய ஆயிரம் பேர் சொல்லி நாம் அழைப்பதும் அவள் அதில் மகிழ்ச்சி அடைவதும் ஆச்சர்யமாக இல்லையா? பெற்ற தாயையே பெயர் சொல்லி அழைப்பது பண்பாடு இல்லை என்கிற போது சகல உயிர்களின் தாயாரைப் பெயர் சொல்லி அழைப்பது மட்டும் எப்படி சரியாக இருக்கமுடியும்?
நடந்த ஒரு சம்பவம் சொல்லுகிறேன். ஒரு கோவில் திருவிழா. பெருங்கூட்டம். ஆறு வயதுப் பையன் ஒருவன் அந்தத் திருவிழாக் கூட்டத்தில் காணாமல்போய் விட்டான். காவல்துறையினர் ஒலி பெருக்கி மூலம் இதை அறிவித்துவிட்டு அந்த ஆறு வயதுப் பையனை மைக் முன் நிறுத்தி “உன் அம்மாவைக் கூப்பிடு... அழாதே” என்று உற்சாகப்படுத்தினர். அந்தப் பையன் சத்தமாக “சரோஜா.. சரோஜா.. நான் இங்க இருக்கேன் சரோஜா! இங்க வா” என்று அலறினான். சரோஜா என்று அவன் கூப்பிட்டதும் கூட்டத்தில் பலர் திகைத்துப் போனோம். ஆனால் ஐந்தே நிமிடத்தில் அவன் தாய் அலறி அடித்துக் கொண்டுவந்து மகனை மீட்டுக் கொண்டாள்.
தாயோடு கூட வந்த அவள் பெரியம்மா “என்னடி! பிள்ளை வளர்த்திருக்கே? சரோஜா சரோஜான்னு இவன் என்னமோ உனக்குப் பெயர் வைச்ச மாதிரி கூப்பிடறான். பட்டுன்னு அவன் வாயில இரண்டு போடு” என்றாள். பயல் சூடாக “உளறாதே பாட்டி! நான் அம்மா அம்மான்னுதான் முதல்ல எல்லாம் அழுதேன். நிறையப் பெண்கள் திருப்பித் திரும்பிப் பார்த்தா. அம்மான்னா எல்லா அம்மாவும் தான் திரும்பிப் பார்ப்பான்னு தோன்றியது, சரோஜா சரோஜான்னு அம்மா பெயரைச் சொல்லிக் கத்தினேன். அதனால்தான் சட்டுன்னு அம்மா வந்தா” என்றான்.
ஒருகணம் எனக்குள் ஒரு பூ பூத்தது. சர்வலோக ஜனனி ஆகிய அம்பிகையின் கவனத்தைச் சட்டென்று பிள்ளை ஈர்க்க சவுகர்யமான வழி சகஸ்ர நாமத்தை, அதாவது பெயரைச் சொல்லிக் கூப்பிடுவதுதான் என்று எனக்குப் புரியத் தொடங்கியது. அதனால் தான் லலிதா சகஸ்ரநாமம் உருவானதோ என்னவோ யார் கண்டார்கள்.
நாமத்தை ஒரு முறை சொன்னால் போதாதா? அதென்ன ஆயிரம் முறை அவள் நாமம் சொல்வது என்று கூட ஓர் ஐயம் தோன்றலாம். அதிக பட்சம் என்பதை ஆயிரம் என்று சொல்வது நம் பழக்கம். மேடையில் பேசும்போது “இதை ஆயிரம் கோவில்ல வேண்டும் என்றாலும் சத்தியம் செய்யத் தயார்” என்று ஒரு வசனம் சிலர் பேச்சில் வரும். எனவே ஆயிரம் என்பது தான் நம் சிந்தனையில் அதிகபட்ச எண்ணிக்கை என்று பொருளாகிறது.
அதுசரி. ஒரே ஒரு நாமத்தைச் சொன்னால் அம்பிகை அருள் செய்ய மாட்டாளா? அவள் என்ன கல் நெஞ்சுக்காரியா என்ன? எதற்கு ஆயிரம் நாமம் சொல்லவேண்டும்? விடை தரவா? வெகு சுலபம். ஆயிரம் முறை சொன்னால்தான் ஒரு தடவையாவது நம் மனம் நிஜமாகவே அதில் ஒன்றுகிறது. இல்லையென்றால் ஒரே முறையில் நமக்கு அந்த ஆழமான தொடர்பு, லயிப்பு, வந்துவிடுவதில்லை. அதனால் ஆயிரம் நாமத்தைச் சொல்லும்போது ஏதாவது ஒன்றில் ஆன்மாவும் நாமாவும் ஐக்கியமாகிவிடும் என்றே நினைக்கிறேன்.
ஆயிரம், கோடி என்கிற அளவில் அணுமின் நிலையத்தில் எத்தனை யூனிட் மின்சக்தி உற்பத்தியானாலும் நம் வீட்டில் உள்ள பல்பு எரிய வேண்டும் என்றால் அந்த மின்சக்திக்கும் இந்த பல்புக்கும் இடையில் ஏதோ ஒரு சின்ன தொடர்பு (திusமீ சிணீக்ஷீக்ஷீவீமீக்ஷீ) வேண்டி இருக்கிறது. அந்த இணைப்புதான் பகவன் நாமா. கோடி கோடி யூனிட்டாக வெளிப்படும் பராசக்திக்கும் நம் ஜீவசக்திக்கும் இடையே உள்ள சின்ன தொடர்பு அவள் நாமங்கள்.
ஆனால் பராசக்தியின் நாமங்களை நாள்தோறும் பாராயணம் செய்கிற பலர், ஏதோ பெண்கள் கல்லூரியில் வருகைப் பேரேட்டில் பெயர் கூப்பிடுகிற பேராசிரியர் மாதிரி லொட லொட என்று பட்டியலை ஒப்புவிக்கும் போது என்னால் சந்தோஷப் படமுடியவில்லை. காரணம் ஒவ்வொரு நாமத்திலும் ஜீவசக்தியும் பராசக்தியும் பின்னிப் பிணையும் அற்பத அனுபவம் நடந்தால் தான் அனுபூதி சாத்தியம். அதனால்தான் அபிராமி அந்தாதி அருளிய அபிராமபட்டர் தம் பாடலில் “கண்ணியது உன்புகழ். கற்பது உன் நாமம். கசிந்து பக்தி பண்ணியது உன் இரு பதாம் புயத்தில்” என்று பாடினார். கடகடவென்று படிப்பது உன் நாமம் என்று அவர் சொல்லவில்லை. கற்பது.. கற்பது.. ஆழமாகத் தோண்டுவது கல்லுவது.. கற்பது.. ஒவ்வொரு நாமத்தையும் துருவித்துருவி இணைத்து உட்புகுந்தால் ஜீவசக்தியும் சிவசக்தியும் ஐக்கியமாக முடியும். இல்லை என்றால் கோடி முறை லலிதா சகஸ்ரநாமம் சொன்ன டேப்ரிகார்டரும் சி.டி பிளேயரும் மோட்சம் போயிருக்குமே! அவையெல்லாம் ரிப்பேர் ஆகி குப்பைத்தொட்டிக்குப் போனதுதான் மிச்சம். எப்படி சில குழந்தைகள் தங்களுக்குப் பிரியமான தின்பண்டத்தைப் பார்த்ததும் கண்கள் விரிய இதழ்கள் மலர வாயமுது வழிந்தோட சிரித்தபடி ரசித்தபடி உண்டு அனுபவிக்கிறதோ அப்படி ஓர் உண்மை பக்தன் ஸ்ரீலலிதையின் சகஸ்ர நாமத்தில் ஒவ்வொரு நாமத்தையும் அனுபவிக்கிறான்.
சரி.. ஒரு நாமத்தைச் சுவைப்போம். நம் சின்ன வயது முதல், நம் அம்மா நமக்கு என்ன நன்மை செய்கிறாள்? குழந்தையாக இருந்தபோது நம் முட்டாள் தனத்தால் நாம் ஏற்படுத்திக்கொண்ட அல்லது நமக்கு நேர்ந்த ஏகப்பட்ட துன்பங்களிலிருந்து நம்மை மீட்டெடுக்கிறாள். சர்வலோக மாதாவாகிய அம்பிகையும் நாம் பல்வேறு சிக்கல்களில் சிக்கிக்கொண்டு வேதனைப்படும் போது துக்கப்படும்போது ஒவ்வொரு சிக்கலிலிருந்தும் நம்மைப் பிரித்தெடுத்து துயரங்களிலிருந்து காப்பாற்றுகிறாள். இதைத்தான் மாணிக்க வாசகர் “பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை” என்று திருவெம்பாவையில் சொல்கிறார். பேதித்து-துக்கம் துயரத்திற்குக் காரணமான கட்டுகளிலிருந்து பிரித்தெடுத்து-பேதபடுத்தி-காப்பாற்றுகிறாளாம் அம்பிகை.
இந்த அனுபவத்தை உணர்த்தும் அழகான திருநாமம் பந்த மோசினி என்பது. பந்தங்களை அதாவது கட்டுகளை, மோசம் செய்து அழித்தெடுத்து காப்பாற்றுபவள் பராசக்தி. இந்த நாமம் உயிர்களின் பந்தங்களை (கட்டுகளை) அறுத்துக் காப்பாற்றும் ரட்சகத் தன்மை உடையது. வெகு சூட்சுமமானது. ரசமானதும்கூட.
நம் கஷ்டங்கள், துயரங்களுக்கு எப்போதும் பிறர் அல்லது புற உலகில் ஏற்பட்ட சூழல் தான் காரணம் என்று நாம் கருதுகிறோம். தம் சகல வேதனைகளுக்கும் தம் கணவரே காரணம் என்று புலம்பும் மத்திய வயதுப் பெண்களையும், தம் வேதனைகளுக்கு மனைவியே காரணம் என்று சதா முறையீடு செய்யும் எல்லா வயது ஆண்களையும் நான் பார்த்திருக்கிறேன். வெளிப்படையாகப் பார்த்தால் அவர்கள் சொல்வது சரி என்றுதான் தோன்றும். ஆனால் ஆழமான உண்மை புரிந்தால் தான் அவரோ இவரோ காரணமல்லர், இருவருக்குள்ளும் ஏற்பட்டுள்ள பந்தமே காரணம். மூச்சுத் திணறும் அளவு இருவரும் ஒருவரை ஒருவர் கட்டுகளால் சிக்கவைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டிருந்தால் என்ன செய்வது?
யாரோ ஒருவர் எக்குத்தப்பாகக் கரண்டில் கைவைத்து விட்டால் ஷாக் அடித்து அலறுகிறார். ஓடிப்போய் அவரைத் தொட்டுக் காப்பாற்ற நினைத்து ஒருவர் பிடித்து இழுத்தால் இவருக்கும் கரண்ட் ஷாக் அடிக்கும். மாறாக காப்பாற்ற நினைத்த நபர் மெயின் போர்டு சுவிட்சை அணைத்தால் கரண்ட்டுக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் உள்ள தொடர்பு அறுந்து அவர் தப்ப முடியும். அல்லது காப்பாற்ற நினைப்பவர் மின்சாரம் பாயாத கையுறை அணிந்திருந்தால் தன் காலை, கட்டை மீது வைத்து பூமியுடன் தொடர்பற்றவராக ஆக்கிக் கொண்டு பாதிக்கப் பட்டவரைப் பிடித்து இழுத்தாலும் ஆபத்தில்லை. அவரை மின்சாரம் தாக்காது.
மின்சாரம் ஆபத்தானதுதான். ஆனால் நேரடித் தொடர்பு இல்லாதவரை ஆபத்தில்லை. எனவே தொடர்புதான் மிகமிக ஆபத்தானது. தொடர்பு வலுப்பட வலுப்பட ஆபத்தின் ஆழம் அதிகமாகிறது. சுட்ட இரும்பில் கனலும் நெருப்பு பட்டால் சுடும். தொட்டால் கூடுதலாகச் சுடும். அழுத்திப் பிடித்தால் அவ்வளவுதான், கை வெந்தே போய்விடும். பந்தம்..அதாவது தொடர்பு.. கட்டு.. அழுந்த அழுந்த துக்கம் அதிகமாகும். மக்கள் பந்தத்தின் நெருக்கத்தையும் அழுத்தத்தையும் அதிகமாக்கிக் கொண்டு வாழ்க்கை வலிக்கிறது என்றால் வலிக்காதா என்ன?
பந்தம் என்பது பிறரோடு கட்டப்பட்டுள்ள கட்டு மட்டும் அன்று. உடலோடு ஆத்மாவைக் கட்டி இருக்கும் கட்டுகூட பந்தம்தான். அது இறுக இறுகத் துன்பமோ துன்பம். ரமணருக்கும் இராமகிருஷ்ணருக்கும் உடம்பில் நோயிருந்தபோதும் துன்பம் இல்லை. காரணம் அவர்களுக்கும் உடம்புக்கும் இடையே இருந்த தொலைவு அப்படி! இப்படி ஆத்மாவை உடம்பிலிருந்து பிரித்துணர முடியாதவர்கள் வாழ்வில் கஷ்டப்பட்டே ஆக வேண்டும்.
ஃபரீத் என்கிற ஞானியிடம் ஒருவர் கேட்டார் “இயேசுவைச் சிலுவையில் அறைந்து கைகால்களில் ஆணி அடித்த போதும் அவர் ‘இறைவா! இவர்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும்’ என்றாராமே! இது எப்படி சாத்தியம்? வலியும் வேதனையும் பாடாய்ப் படுத்தும்போது இது நிஜமாகவே சாத்தியமா? மன்சூர் என்கிற சூஃபிஞானி கை கால்களை வெட்டிக் கொடுமைப் படுத்தப்பட்ட போதும் “இறைவா! இன்று என் ரத்தத்தால் உனக்குத் தொழுகை செய்கிறேன் என்று சிரித்தபடி சொன்னாராமே! இதெல்லாம் நடக்கிற காரியமா?” என்று கோபமாகக் கேட்டார்.
ஃபரீத் கலகலவென்று சிரித்துவிட்டு தம் அருகில் இருந்த தேங்காயைக் கொடுத்து “இதை, ஓடு தனியாக, உள்ளிருக்கும் பருப்பு தனியாக (கொப்பரை), முழுமையாக வரும்படி உடைத்துத் தரமுடியுமா?” என்று கேட்டார். அந்தக் காயைக் குலுக்கித் தட்டிப் பார்த்த அன்பர் “ம்ஹூம் இது இளசு. அப்படி வராது. வேண்டுமானால் நன்கு முற்றிய காய் இருந்தால் தாருங்கள். அதில் ஓடு பருப்புடன் ஒட்டாமல் இருக்கும். உடைத்தால் தனியாக வரும். இந்த இளங்காயில் பருப்பு ஓட்டோடு ஒட்டி இருப்பதால் ஓட்டை உடைக்கும் போதே பருப்பும் உடைபடும்.” என்றார். ஃபரீத் சிரித்தபடி “இதுதான் உன் முந்தைய கேள்விக்கான பதில். இயேசு, மன்சூர் போன்றவர்கள் உலர்ந்த தேங்காய். உடலுக்கு என்ன வேதனை ஏற்படுத்தினாலும் உள்ளிருக்கும் ஆத்மாவுக்கு எந்த உபத்திரவமும் கிடையாது. நமக்கோ உடலால் அடிபட்டால் ஆத்மா வரை வலிக்கிறது” என்றார்.
மாணிக்கவாசகர் வைகை ஆற்றின் சுடுமணலில் வதைக்கப்பட்டார். திருநாவுக்கரசர் கல்லில் கட்டி கடலில் எறியப்பட்டார். அந்த ஆத்ம ஞானிகள் அசரவில்லையே! பிரகலாதன் உடம்பை, பிஞ்சு மேனியை இரணியன் என்னபாடு படுத்தினான்? ஆனால் உடலுக்கும் ஆத்மாவுக்கும் இடையே இருந்த தொடர்பைத் துண்டித்துக் கொண்டதால் அவன் துக்கப்படவில்லை. பந்தங்களைக் கட்டறுத்தவர்கள் துக்கப்பட மாட்டார்கள். இப்படி பந்தத்தை மோசம் செய்பவள் பராசக்தி. எனவே அவள் பந்த மோசினி.
ஆண்ட்ரு கார்னகி என்பவர் அமெரிக்காவின் மிகப் பெரும் கோடீஸ்வரர்களில் தலையாயவராக இருந்தார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதவந்த எழுத்தாளர் கார்னகியின் சொத்துகளின் விவரமறிந்து மலைத்துப் போனார். கார்னகி மரணப் படுக்கையில் இருந்தபோது “நீங்கள் திருப்தியாக விடைபெறுவீர்கள் என நினைக்கிறேன். எவை எவையெல்லாம் மனிதனால் அடைய முடியாதவையோ அவை அனைத்தையும் அடைந்தவர் நீங்கள்.” என்று எழுத்தாளர் ஆறுதலாகச் சொன்னார்.
ஆண்ட்ரு கார்னகி கோபத்துடன் “வாயைமூடு. உளறாதே. பத்தாயிரம் கோடிக்கு மேல் இன்னும் வரவேண்டியுள்ளது. அவை எனக்கு வந்திருக்க வேண்டியவை. அந்த அளவு நான் உழைத்திருக்கிறேன். அவற்றையும் சேர்த்துவிட்டுத்தான் நான் செத்திருக்க வேண்டும். அதற்கு முன் சாவது எனக்கு வேதனை தருகிறது.” என்றார். எவ்வளவு பெரும் மூடன் இவன்? பொருட்பற்று என்னும் பணத்துடன் ஆன பந்தம் இவ்வளவு பெற்றும் இவனைத் துக்கத்திலேயே அல்லவா வைத்திருக்கிறது. இன்று பலரும் இப்படித்தான் இருக்கிறார்கள்.
பொருட்பற்று, மனைவி மக்கள் மீதான பற்று, தன் மீது தான் கொண்டுள்ள பற்று என்று பற்று ஆழமாகி ஆழமாகி துக்கம் கூடுகிறது. இதை அருணகிரிநாதர்,
‘சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
விந்தாடவி என்றுவிடப் பெறுவேன்’ என்றும்
‘அகம் மாடு ஐ மடந்தையர் என்று அயருஞ்
சகமாயை யுள்” என்றும்
கந்தர் அனுபூதியில் பாடுகிறார்.
பல கோவில்களில் சுவாமிக்குக் கற்பூரம் காட்டும் பொழுது கூட பலர் சுவாமியைக் கவனிக்காது பர்ஸைத் துழவியபடி தட்டில் ரூபாயைப் போடுவதா, சில்லறை ஏதாவது உள்ளே இருக்காதா என்று என்னபாடு படுகிறார்கள் பாருங்கள். பற்று மனிதனை என்ன பாடு படுத்துகிறது? எனக்கு சந்யாஸிகளைப் பார்த்தால் கொஞ்சம் பொறாமையாக இருக்கும். கோவிலுக்குப் போனால் அவர்கள் எவ்வளவு நிம்மதியாக சுவாமி கும்பிட முடிகிறது பாருங்கள். நம்மால் அப்படி முடிகிறதா? சுவாமி கும்பிட என்று சொல்லிக் கொண்டு கோவிலுக்குப் போனாலும் மனைவிக்கு யாராலாவது எதாவது சங்கடம் வந்துவிடுமோ என்றும், பிள்ளைகள் பேரக் குழந்தைகள் கூட்டத்தில் காணாமல் போய் விடுவார்களோ என்றும் அவர்கள் மீதே மாறி மாறிக் கண் வைத்துக் கொண்டு... ம் என்னத்தை... சாமி கும்பிடுவது போங்கள். சந்யாஸிகளைப் பாருங்கள். எந்தக் கவலையும் இல்லாமல் என்ன நிம்மதியாகக் கடவுளோடு ஒன்றிப் போகிறார்கள். எல்லாம் இந்த பந்த மோசினியின் பார்வைதான் காரணம். துன்பங்களுக்கும் ஆத்மாவுக்கும் இடையில் உள்ள தொடர்பை அறுத்து விட்டாள். பிறகென்ன வாழ்க்கை ஒரு ஞானோத்சவம் ஆகிவிட்டது.
லௌகீகமான உதாரணம் ஒன்று சொல்வதுண்டு. வயதான கணவர் ஈஸி சேரில் சாய்ந்தபடி பொழுது போகாமல் பத்திரிகை படிக்கும்போது அதில் கடைசி பக்கத்தில் உள்ள றிக்ஷீவீஸீtமீபீ ணீஸீபீ றிuதீறீவீsலீமீபீ தீஹ் என்று போட்டிருப்பது வரை படித்துக் கொண்டிருந்தார். பத்திரிகை அத்தனை சுவாரஸ்யம் என்றில்லை. மனைவியிடமிருந்து தப்புவதற்கு அது ஒரு தற்காப்புக் கலை. ஆனால் அவர் திருமதியோ பக்கத்திலேயே கீழே உட்கார்ந்தபடி அடுத்த வீட்டுக்காரர் தம் வீட்டில் குப்பைகளை எறிவது தொடங்கி அவர் மீது ஆயிரம் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக்கொண்டே இருந்தார். மனுஷன் மசியவே இல்லை. யாரோ யாரையோ பற்றி ஏதோ என்னவோ சொல்லுகிறார்கள் என்று அலட்சியமாக இருந்தார். பொறுமை இழந்த மனைவி “ஆமாம். உங்களை மதிச்சு சொன்னேன் பாருங்கள். நீங்களும் அந்த ஆள் மாதிரிதான். மகா முரடர்” என்றார். அடுத்த நிமிஷம் ஈஸிசேரிலிருந்து துள்ளயெழுந்தார் கணவர். பிரளயம், சுனாமி வந்தே விட்டது. நாற்பத்தைந்து நிமிஷம் அடுத்த ஆளைப் பற்றிக் குறை சொன்னபோது வராத கோபம் அரைக் கணத்தில் வந்ததே ஏன்? ஒரு ஒரு சின்ன லிங்க் தொடர்பு நீங்களும் அந்த ஆள் மாதிரிதான் என்ற அந்த வரி. பந்தப் படுத்தாதவரை பாதிப்பு இல்லை. பந்தப் படுத்தியதும் துக்கம் வந்துவிட்டது.
சரி. பந்தம் துக்கம் தருகிறது. பந்த நீக்கம் ஆனந்தம் அளிக்கிறது. அம்பிகை எப்படி பந்தத்திலிருந்து தளைகளிலிருந்து ஆன்மாவை விடுவிக்கிறாள்? அஞ்ஞானம் பந்தப்படுத்துகிறது. ஞானம் விடுதலை யளிக்கிறது. உயிர்களின் அஞ்ஞானத்தை நீக்கி அம்பிகை ஞானமளிக்கிறாள். இது பக்தர்களின் அனுபவம். அம்பிகையே மகாமாயை.. மகமாயி.. தான் யார் என்பதை உயிர்களுக்கு உணர்த்தி மாயையிலிருந்து ஞானத்தை நோக்கி ஜீவ யாத்திரை நிகழ்த்த அவள் வழிவிடுகிறாள். இது தத்துவ தரிசனம். குழந்தை கேட்டவற்றைத் தாய் தந்து, அவை கிடைத்தமையால் அவற்றை அனுபவித்து விளையாடி ஓர் எல்லையில் சீ என்று குழந்தை தூக்கி எறிந்து விடும். அதுபோல நாம் கேட்டவை அனைத்தையும் தந்து ஓர் எல்லையில் அருசி பிறந்து பந்தங்களிலிருந்து விலகி பரமாத்வை நாம் அடைய, போகம் கொடுத்து பின்னர் போகம் கெடுத்து ஆள்கிறாள் ஆளுடைநாயகி. எனவே அவள் பந்த மோசினி.
அது மட்டுமல்ல. குண்டலினி என்கிற ஜீவசக்தியே அம்பிகை. அது உடம்பில் சுழியிட்டு ஒடுங்கி இருப்பதால்தான் உடம்பு எல்லாவற்றையும் அனுபவிக்க முடிகிறது. அந்தக் குண்டலினி மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை என்கிற ஆறு சக்கரங்களிலும் புகுந்து புறப்படும்போது உயிர் விதவிதமான அனுபவம் பெறுகிறது. முடிவில் சகஸ்ராரம் எனப்படும் உச்சிக்குச் சென்றதும் உடம்பு நானல்ல என்கிற விவேகம் ஆத்மாவிற்குப் பிறக்கிறது. அதுவரை உடம்போடு பந்தப்பட்டிருந்த ஆன்மா உடம்பு நானல்ல என்கிற பந்தத்தை விடுவதால் சாத்தியமாகிறது. அப்படியானால் குண்டலினியாக சகஸ்ராரம் செல்லும் அவள் பந்தமோசினி என்பது சரிதானே!
வாழ்வில் கிலேசங்கள் எனப்படும் துக்கங்கள் எவை என்று ஆராய்ந்த பதஞ்சலி யோக சூத்ரம் அவித்யா (விழிப்புணர்வின்மை) அஸ்மிதா (தன் உணர்வு) ராக் (விருப்பு) துவேஷ் (வெறுப்பு) அபிநிவேஷ் (வாழ்தலுக்கான இச்சை) என்று ஐந்து வகையான துக்கங்களை வகைப்படுத்துகிறது. துக்கங்களிலிருந்து மீளும் வழி சொல்லும்போது அபிநிவேஷில் தொடங்கி பின் முகமாக ஒன்றை மற்றொன்றில் ஒடுக்க வேண்டும் என்கிறது. அவித்தையில் எல்லாம் ஒடுங்கும். எனவே சகல துக்கங்களுக்கும் காரணம் அவித்யா. அதனை நீக்கும் சக்தி ஸ்ரீவித்யா. எனவே அவித்யாவை அழிக்கும் ஸ்ரீவித்யாவை பந்தமோசினி என்கிறது லலிதா சகஸ்ரநாமம் எனவே அதைக் கவனமாகக் கற்க வேண்டாமா?
குடிமயக்கத்தில் இருந்த நான்குபேர் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் நதிக்கரை வந்து அங்கிருந்த படகுத் துறைக்கு வந்தனர். அங்கு நின்று கொண்டிருந்த படகொன்றில் ஏறி ஆவேசமாகத் துடுப்புகளை நீரில் வீசி, அப்படியும் இப்படியுமாகத் துடுப்பு போட்டுச் செலுத்தினர். இரவில் அப்படியே உறங்கியும் விட்டனர். காலை கண் விழித்தபோது நெடுந்தூரம் வந்திருப்போம் என்று நினைத்து சுற்று முற்றும் பார்த்தால் படகு புறப்பட்ட இடத்திலேயே இருந்தது. காரணம் படகு நதிக் கரையில் இருந்த தூணில் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தது. கட்டை அவிழ்க்காமல் என்ன முயன்று என்ன பயன்? பயணம் சாத்தியமில்லை. பந்தம் அறுபடாமல் பலர் ஜபம், தவம், த்யானம் செய்வதும் இதே கதைதான். படகு நின்ற இடத்திலேயே அல்லவா நிற்கிறது?

No comments:

Post a Comment