Sunday, April 26, 2015

ஸ்ரீகிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

ஸ்ரீகிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
க.ஸுந்தர ராமமூர்த்தி
தீபாவளி என்றதுமே நரகாசுர வதம்தான் ஞாபகத்துக்கு வரும். நரகாசுரனுடன் போரிடப் புறப்பட்டவர் ஸ்ரீகிருஷ்ணராக இருந்த போதிலும், அவனை வதம் செய்தது பூமாதேவியின் அவதாரமான சத்யபாமாதான். தன் தாயாரான பூமாதேவி கையால்தான் தன் முடிவு நிகழ வேண்டுமென்பது அவன் பெற்ற வரம். இதில் ஓர் ஆழ்ந்த உண்மையும் பொதிந்துள்ளது. நரகத்துக்கு வழிகோலும் பாபச்செயல்கள் யாவற்றுக்கும் பலனானது அவற்றை ஒருவன் செய்யும் பூமியில்தான் அனுபவிக்க வேண்டுமென்பது விதி. அதேபோல புண்ணியகர்மாக்களுக்கான பலனையும் பூமியில்தான் ஒருவன் அனுபவிக்கிறான். ஆக ஸ்வர்க்கமென்றும், நரகமென்றும் தனியாக இல்லாது அவை யாவும் ஒருவன் தன் செயல்களால் இந்த பூமியிலேயே தான் உண்டுபண்ணிக் கொள்வதுதான். அவற்றை அனுபவிப்பதற்குத்தான் அத்தனை ஜன்மாக்கள். அவற்றிலிருந்து மீள, அஞ்ஞானமென்னும் கொடிய நரகத்திலிருந்து தப்ப, ஒரு குரு என்றதும் நம் கண்முன் தோன்றுவது ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியின் உருவம். ஆனால் அவரோ வாய்திறவாது ஞாலத்தின் ஞானமெல்லாம் ஸனகாதி முனிவர்களுக்கு தன் மௌனத்தினாலேயே உணர்த்தியவர். அவர் வாய்திறந்து உபதேசித்ததால் எவரைப் போல் இருப்பார் எனச் சிந்திக்கும்போது கீதாசார்யரான ஸ்ரீகிருஷ்ணர் போலிருப்பார் எனத் தோன்றுகிறது.
பாரத யுத்தத்துக்கு முன் மாயையினால் சூழப்பட்ட அர்ஜுனனை வியாஜமாகக் கொண்டு பின் வரப்போகும் சந்ததியருக்கு ஜகத்குருவாக நின்ற ஸ்ரீகிருஷ்ணர் நீண்டதோர் உபதேசம் செய்தார். எப்படிப் பார்த்தாலும் அவ்வாறு கூற சில மணித் துளிகளாயினும் ஆகியிருக்கும். அந்த சமயத்தில் மற்றவர் என்ன செய்து கொண்டிருந்தனர்? அவர்களை அப்போது போரிடாது தடுத்தது எது? என்னும் ஐயமெழலாம். அதற்கும் கீதையிலேயே “தாங்கள் யார்?” என அர்ஜுனன் கேட்க “நான்தான் காலன்” என்றார், பரந்தாமன். அங்கு அவர் அழிப்பவராக மட்டும் ‘காலன்’ என்னும் பதத்தை உபயோகிக்காது, காலத்தைக் கட்டுப்படுத்தும் ‘காலஸ்வரூபி’யாகவும் தன்னை வெளிப்படுத்தி, “இன்று உன் விஷயத்தில் மட்டுமே இந்தக் காலத்துகள்கள் செலவிடப்பட்டன; மற்றவர்களைப் பொறுத்தவரை காலம் செல்லாது நிலையாக நின்றது, அவர்கள் உணராத வண்ணம்” எனக் குறிப்பால் உணர்த்துகிறார். அந்த விஷயத்தில் அவர் மஹாகாலராக இங்கு விளங்குகிறார்.
லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அன்னையைக் கூறும்போது யோகினீ தேவதைகளும், வாக்தேவதைகளும், “ஸ்ருஷ்டி கர்த்ரீ ப்ரஹ்மரூபா, கோப்த்ரீ கோவிந்த ரூபிணீ” என்று வர்ணிக்கிறார்கள். ஸ்ரீலலிதாம்பிகையை விஷ்ணுவுடன் ஒப்பிடுவதற்கு எவ்வளவோ பெயர்கள் இருந்த போதிலும் ஏன் அவர்கள், “கோவிந்த ரூபிணீ” எனக் கூறவேண்டும்? ஸ்ரீகிருஷ்ணனுடைய பெயரல்லவா அது! சகல லோகத்தையும் ரக்ஷிப்பவனுக்கு ‘கோவிந்தன்’ (மாட்டிடையன்) என்று ஏன் பெயர் தரவேண்டும்? தகுந்த காரணம் இல்லாது வாக்குக்கே தேவதைகளான அவர்கள் அப்படி வர்ணிப்பார்களா?
நேபாளத்தில் சிவனுக்கு பசுபதிநாதர் என்று பெயர். இந்த அநேக கோடி பிரஹ்மாண்டங்களில் உள்ள எல்லா ஜீவராசிகளும் பசுக்கள்தான். அவன் ஒருவன்தான் பதியும், நாதனுமாவான்; பசுபதிநாதன். சுயமாக சிந்திக்கவோ, இயங்கவோ திறன் இல்லாத எதுவுமே பசுதான். அவற்றை நடத்திச் செல்பவன், அவற்றின் சிந்தனைகளையும், செயல்களையும் செல்லவேண்டிய பாதைகளையும் நிர்ணயிப்பவன் பசுபதியாவான்.
ப்ராதஹ்ஸ்மரணத்தில் (விடியற்காலையில் நினைவு கூறும் பிரார்த்தனை) ஒரு ஸ்லோகம் உண்டு; அதன் பொருள், நமக்கு எது தர்மம், எது அதர்மம் என்று தெரிந்தாலும், அதைச் செய்யவோ விட்டு விடவோ சுதந்திரமில்லாத நிலையில், ஆறு அறிவிருந்தும் பயனின்றி பசுவாக, தன்னை நடத்திச் செல்ல பதி ஒருவனின் துணையை நாடுகிறது பக்தனின் உள்ளம். “தர்மத்தை சூழ்நிலை காரணமாக விடுவதாலோ, அதர்மத்தை அதே சூழ்நிலை காரணமாக செய்யவேண்டி இருப்பதாலோ, என்னை வந்தடையும் பாபமனைத்தும், பிறவிச்சுழலில் மேலும் மேலும் என்னை மூழ்கடிக்கின்றன. என் மனமென்னும் தேர்த்தட்டிலமர்ந்து என் இந்திரியங்களென்னும் அடக்க முடியாத முரட்டுக் குதிரைகளைச் செலுத்தி என் செயல்களை வழிநடத்தும் தேரோட்டியான ஹேதேவி, அவை (பாபங்கள்) அனைத்தும் உன்னையே சேரும். என்னையல்ல” எனச் சரணாகதியடைகிறது அவன் உள்ளம். இங்கும் தேரோட்டி என்னும் பொருளில் ‘ஹ்ருஷீகேஸி’ என தேவியை நாராயணியாகத் துதிக்கிறோம்.
குருவாயூருக்கும், சோட்டானிக்கராவுக்கும் சென்றவர்களின் அனுபவத்தில் இந்த நாராயண-நாராயணி ஐக்கிய பாவத்தை உணர்ந்திருப்பார்கள். சிவனுக்கு சக்தியுடன் சேர்ந்த நிலையில் பூர்ணத்துவம் கிடைக்கிறது. அந்த நிலையில் நாராயணியுடன் சேர்ந்து அர்த்தநாரீஸ்வரராகவும் (உமையொரு பாகராகவும்) நாராயணனுடன் சேர்ந்து சங்கரநாராயணராகவும் சிவனைக் காண்பது நம் மரபு. இந்த நிலையில் சிவனை பூர்ண சாக்தர்களாக உள்ளவர்களும், பூர்ண வைஷ்ணவர்களாக உள்ளவர்களும் கூட வணங்குகிறார்கள். சிவன் சகல ஜீவராசிகளுக்கும், சகல ஜகத்துக்கும் கூட குருவாக அமர்ந்த நிலை ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி என்னும் நிலை என்றால், சகல யோகினீ வாக்தேவதைகளை வ்யாஜமாகக் கொண்டு யோக குருவாக ஜகன்மாதா விளங்குவது சாரதை என்னும் உருவில். இதே போல கோவிந்தரும் குருவாக விளங்கிய நிலைகள் பல உண்டு.
பெரியவர்கள் மிகச் சிறந்ததாக நிர்ணயிக்கப்பட்டவற்றுக்குத்தான் ‘பகவத்’ சப்தத்தை உபயோகிப்பார்கள். அவ்வாறே கோபிகைகள்,விதுரர், அக்ரூரர் முதலான பலருக்கும் பல நிலைகளில் ஸ்ரீகிருஷ்ணர் உபதேசித்திருந்த போதிலும், அர்ஜுனனுக்கு உபதேசித்ததைத்தான் ‘பகவத்கீதை’ எனக் கூறுகிறோம். சாதாரண நிலையில் சாந்தமான சூழ்நிலையில், மனத்திற்கு இதமான நிலையில் உபதேசிப்பது சகஜமான உபதேசம். ஆனால் அர்ஜுனனுக்கு கீதை உபதேசிக்கப்பட்ட நிலை பதற்றமும், பரபரப்பும் நிறைந்த, “யார் வாழ்வார்; யார் சாவார்” என விளங்காத போர்க்களச் சூழ்நிலை.
“தான் வாழ, தன் உடன் பிறந்தோர் வாழ, தன் உறவினர்களையும், தான் தெய்வமாக வணங்கும் பெரியவர்களையும், தன் நண்பர்களாக நேற்று வரை இருந்து, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தனக்கு எதிரணியில் நிற்போரையும் கொல்லலாமா என்ற தர்ம-அதர்ம விசாரத்தில் பரம பாகவதனான அர்ஜுனன், தனக்கு யுத்தத்தில் வெற்றி நிச்சயம் என்ற பரிபூர்ண நம்பிக்கை இருந்தும் கூட, பரம வீரனான பார்த்தன், கிறங்கி நிற்கும் சூழ்நிலை. அந்த நிலையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவனை வ்யாஜமாகக் கொண்டு உலகத்துக்கு எக்காலத்திலும் பயன்படுமாறு உபதேசித்தது ‘பகவத் கீதை’
நம் உடலிலிருக்கும் ஐந்து இந்திரியங்களும் பஞ்ச பாண்டவர்கள். நம் ஆன்மா அவர்களின் சக்தியான திரௌபதி. இந்த இந்திரியங்களை மயக்கி உலகியலென்னும் சூதாட்டத்திலாழ்த்தி தோற்கடித்து கடைசியில் ஆன்மாவையே அடகுவைக்கும் நிலையிலாழ்ந்ததும் நூறாசைகளும் கௌரவர்கள். இந்திரியங்களான பாண்டவர்களும், நல்வழி காட்டவேண்டிய, பாபங்களினின்றும், ஆசைவலைகளினின்றும் காப்பாற்ற வேண்டிய கடமையைக்கொண்ட அறிவான பீஷ்மர், துரோணர் முதலியவர்களும் தன்னைக் காத்திடாத நிலையில் பரிதவித்து பரந்தாமனின் பாதகமலங்களில் சரணடைகிறாள் திரௌபதி என்னும் ஆன்மா. பரந்தாமன் ஒருவனின் துணை இருந்தால் நூறாசையையும் இந்திரியங்கள் அழித்திட முடியும் என்பதே பாரதம் என்னும் காவியம். இதன்சாரமே ‘பகவத் கீதை’
இதை உபதேசித்த ஆசார்யன், இந்த ‘ஜகத்குரு’ எப்படிப்பட்டவர்? ஸமவர்த்தோ, நிவ்ருத்தாத்மா, துர்ஜயோ, துரதிக்ரமஹ; துர்லபோ, துர்கமோ, துர்கோ, துராவாஸோ, துராரிஹா” என விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தினால் புகழப்படுபவர். மிகக் கடுமையானவர். எளிதில் அடைய முடியாதவர். கடுந்தவத்தாலும், அசைக்க முடியாத பக்தி ஒன்றாலுமே அடையக் கூடியவர். இக்காரணத்தாலேயே அபாத்ரர்களாக உள்ளவர்களால் அடையமுடியாத ஓர் உத்தம குருவாகத் திகழ்பவர். அப்படி கடுமையான பக்தியுடன் ஒரு சிஷ்யன் இந்தக் குருவை அடைந்தான் என்றால், இந்தக் குரு அந்தச் சிஷ்யனுக்காக என்ன செய்கிறார்? அந்தச் சிஷ்யனின் சித்த சமாதியில் இருந்து கொண்டு அவனுக்கு எதிரான கெட்ட சக்திகளையெல்லாம் அழிக்கிறார். இந்தச் சமயத்தில் இதே போல யோகினீ வாக்தேவதைகள் தேவியை “துர்லபா, துர்கமா, துர்கா, துக்கஹந்த்ரீ, ஸுகப்ரதா” என இதே அர்த்தத்தில் “எளிதில் அடைய முடியாதவள், அடைந்து விட்டால் அவன் துன்பங்களையெல்லாம் போக்கி சுகத்தைக் கொடுப்பவள்” என லலிதா ஸஹஸ்ரநாமத்தில் கூறியிருப்பதை நினைவுகொள்ள வேண்டும். இருவருமே குரு தத்வத்திற்கு இலக்கணமாகத் திகழ்கிறார்கள்.
லோக குருவாக சிவன் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியாகத் திகழ்ந்தபோது தன் மௌனத்தால் ஸனகாதி முனிவர்களின் சந்தேகங்களையெல்லாம் போக்கியதுடன், நடராஜ ஸ்வரூபத்தில் நடன ஆரம்பத்திலேயே தன் கையிலிருக்கும் உடுக்கையின் ஒலியினால் பாணினி, பதஞ்சலி, பரதர், நாரதர் முதலானவர்களுக்கு முறையே வியாகரணம், யோகம், நாட்டியம், சங்கீதம் முதலிய சாஸ்திரங்களின் அடிப்படை சூத்ரங்களை ஞான உபதேசமாக அளித்தார். அவருடைய கால் இந்த ஞானத்தை அடையத் தடையாக இருக்கக் கூடிய அபஸ்மாரத்தை (ஞாபக மறதியை) அழுத்தியதால், தன் சிஷ்யர்களுக்கு பூர்ணஞானப் பிராப்தியை அருளினார்.
குருக்ஷேத்ர யுத்தம் என்றோ முடிந்துவிட்டதொரு யுத்தமல்ல. தொடர்ந்து ஒவ்வொரு வினாடியும், அனுதினமும், அனவரதமும் நடக்கும் ஒரு மனப்போராட்டம். அதற்கு மனிதனின் மனத்தில் அவ்வப்போது எழக்கூடிய பல்வேறு ஐயங்களுக்கும், பல்வேறு துறைகளில் உள்ளோருக்கும், எக்காலத்திலும், எந்த நிலையிலும் பொருந்துமாறு உள்ள, மனத்தெளிவைக் கொடுக்கக் கூடிய தனித்தன்மை பொருந்திய ஒரே உபதேசம் பகவத் கீதை. இதில்தான் நாம் லலிதா ஸஹஸ்ரநாமத்தில் கண்ட, ப்ராதஹ்ஸ்மரணத்தில் கண்ட, ‘கோவிந்த’, ஹ்ருஷீகேஸ’ சப்தங்களுக்கான முழுமையான பொருளைக் காண்கிறோம்.
“நீ இப்போது சண்டையிட்டுக் கொல்லவில்லை என்றாலும் என்னால் நிர்ணயிக்கப்பட்ட முறையில், அழியவேண்டிய, அழியப்போகும் உடல்கள்தான் இவை. நீ ஒரு கருவி மட்டுமே. உன் உருவில் இருந்து நான்தான் இவர்களை அழிக்கிறேன். நான் இந்தத் தேருக்கு மட்டும் சாரதியில்லை. உன் மனத்துக்கும் நான்தான் சாரதி. உன் மனமென்னும் தேர்த்தட்டில் அமர்ந்து உன் இந்திரியங்களென்னும் குதிரைகளை நான்தான் செலுத்துகிறேன். ஆகவே ஹ்ருஷீகேஸனாகிய என்னிடம் தர்ம-அதர்மங்களை நிர்ணயிக்கும் பொறுப்பை விடு. என்னை முழுவதுமாக சரணடை. அதனால் வரப்போவதாக நீ நினைக்கும் பாப புண்ணியங்களை எனக்கு அர்ப்பணம் செய். நான் ஏற்றுக் கொள்கிறேன். அவற்றிலிருந்து உன்னை விடுவிக்கிறேன்.” என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.
“ஆத்மாவுக்குப் பிறப்பும் இல்லை; இறப்பும் இல்லை. அது பரமாத்மாவான என்னிடமிருந்து பிரிவது போல் தோற்றமளித்து, என் பாகமாகவே, பிம்பமாகவே, வெவ்வேறு ஜீவராசிகளின் உடலுக்குள்ளும் இருந்து செயல்பட்டு, இறுதியில் எனக்குள்ளேயே லயமடையும் என்பது பிரதிபிம்பம். இதைக் காற்று அலைக்கழிப்பதில்லை. தீ சுடுவதில்லை; நீர் நனைப்பதில்லை. சுகமோ, துக்கமோ இதை பாதிப்பதில்லை. இது நித்யமான ஆனந்த நிலையில் இருப்பது. இதுதான் நான். இந்த என்னை அழிக்காதவரை எதை அழித்துவிடப் போவதாக நினைத்து நீ கவலைப்படுகிறாய்? எதை “நான் அழிக்கிறேன், அல்லது அழியாமல் விட்டு வைக்கிறேன்” என்று அகந்தை கொள்கிறாய்? உண்மையில் காப்பவனும் அழிப்பவனும் பரம்பொருளாகிய நானே. உன் செயலில் எதுவும் இல்லை. நீ சுயமாக இயங்க இயலாத பசு. நான்தான் உன்னை மேய்த்துச் செல்லும் கோவிந்தன். உனக்கு யஜமானனான, உன் செயல்களையும், அவற்றை நிறைவேற்றும் காலத்தையும் நிர்ணயிக்கும் அதிகாரியான பசுபதி” எனக் கூறி அர்ஜுனனின் அகந்தையை நீக்கி அருள்புரிந்தார் அச்சுதன்.
இந்த நிலையில் மட்டுமன்றி பல்வேறு நிலைகளிலும் தன் யோக நிலையை, தன் எஜமான நிலையை நிரூபித்தார் ஸ்ரீகிருஷ்ணர். நாரதருக்கு தன் யோகீஸ்வர நிலையை, ஒவ்வொரு கோபியுடனும் அவள் விரும்பும் நிலையில் ஒரே சமயத்தில் கோகுலத்தின் எல்லா வீடுகளிலும் இருந்து, அதே சமயத்தில் தான் எதிலும் பற்றின்றி நித்ய பிரம்மசாரியாக தாமரை இலை மீதுள்ள தண்ணீர்த் திவலையினைப் போல விளங்குபவராகவும் காட்சியளித்து நிரூபித்தார் பரந்தாமன். தன் சித்தபுருஷ நிலையைச் சத்யபாமாவின் அகந்தையை அடக்க அவள் அரண்மனையிலுள்ள எவ்வளவோ விலையுயர்ந்த எடை மிகுந்த வஸ்துகளுக்கும் சமமாகாத தன் எடை, மிகுந்த பக்தியுடன் ருக்மிணி தராசுத் தட்டில் வைத்த ஒரு துளசிதளத்துக்கு ஈடாவதைக் காட்டி நிரூபித்தார். பிரம்மனுக்கு தன் பரமாத்ம ஸ்வரூபத்தைக் காட்டியருளும் நிலையில், தானே அவரால் மறைத்து வைக்கப்பட்ட ஒவ்வொரு மாடாகவும், கன்றாகவும், மாட்டிடைச் சிறுவனாகவும் மாறி, இந்தச் சராசரத்தில் உள்ள எல்லாமே தான்தான் என விளக்கியருளினார் ஜகந்நாதர். இவ்வாறே யசோதை முதற்கொண்டு பீஷ்மர் வரை பலருக்கும் பல சந்தர்ப்பங்களில் உலகிலுள்ள சகல ஜீவராசிகளும் தன் உருவேயன்றி வேறில்லை என விஸ்வரூப தர்சனமளித்து அருள்புரிந்தார். யோகீஸ்வரகுருவான இந்த லோகேஸ்வரர்.
பாரதயுத்தம் முடிந்த தருவாயில் தான் தேர்த்தட்டில் அமர்ந்திருந்தது தேர்ப்பாகனாக மட்டுமன்றி பார்த்தனை ரக்ஷிக்கவும், அவனைக் குறித்து விடப்பட்ட சக்திவாய்ந்த லக்ஷக்கணக்கான அஸ்திரங்களிடமிருந்து அவனைக் காக்கும் பொருட்டும்தான் என்பதை நிரூபித்தார் பரந்தாமன். அவனை “நீ முதலில் தேரிலிருந்து இறங்கி எட்டப் போய் நில்” என ஆணையிட்டார். மீதி தேர்ப்பாகர்கள் தாங்கள் இறங்கித் தேரில் அமர்ந்திருக்கும் மஹாரதர்களுக்கு மாலையிட்டு “ஜய விஜயீ பவ” என வாழ்த்திப் பணியும்போது, ஸ்ரீகிருஷ்ணர் மட்டும் தன்னை அவ்வாறு இறங்கி வாழ்த்தாது, கௌரவிக்காது, முதலில் இறங்கி எட்டப்போகச் சொல்கிறாரே என அர்ஜுனன் மயங்கினான். ‘பகவத் கீதை’யை, பரந்தாமன் வாய்மொழியாகவே கேட்கும் பேறு பெற்ற பார்த்தனுக்கே இந்த கதி. இருந்தும் கிருஷ்ணரின் ஆணைக்கு அடிபணிந்தே பழக்கமானதால் தேரிலிருந்து இறங்கி எட்ட விலகி நின்றான். ஸ்ரீகிருஷ்ணரும் தேரிலிருந்து குதித்து மின்னலென அவனருகே வர, அனுமனும் தேர்க்கொடியினின்றும் அகல, மறு வினாடி தேர் எரிந்து சாம்பலாகியது. தேருக்கு எஜமான் தான்தான் என்னும் அர்ஜுனனின் க்ஷணநேர அகந்தையும் கூடவே அழிந்தது. எஜமானன் ஸ்ரீகிருஷ்ணனே அன்றி அர்ஜுனனாகிய தான் இல்லை என்னும் உண்மை புரிகிறது. தன்னால் கீதை உபதேசிக்கப்பட்ட சிஷ்யனான அர்ஜுனனை மீண்டுமொரு முறை காத்தருளினார் ஸ்ரீகிருஷ்ணர். “அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுசஹ” என்பதற்கு பூர்ண அர்த்தத்தை அறிந்தான் அர்ஜுனன். ஒரு குருவானவர் எவ்வாறு எந்த நிலையிலும் சிஷ்யனை அவன் தவறுக்கெல்லாம் முழுப் பொறுப்பையும், தான் ஏற்றுக்கொண்டு காப்பாற்றுகிறாரோ, அப்படி அர்ஜுனனை ரக்ஷித்தார் கீதாசார்யனான நாராயணர்.
இதே காரணத்தால்தான் குருஸ்வரூபிணியான ஜகன்மாதாவைப் புகழும் யோகினீ, வாக்தேவதைகள் “எளிதில் நெருங்க முடியாத, பக்தி ஒன்றாலேயே வசியம் செய்யப்படக்கூடிய குருவாக விளங்கும் அவள் தன்னைச் சரணடைந்து விட்ட சிஷ்யனான பக்தனை அவனுடைய துராசாரங்களையெல்லாம் போக்கி, அவனிடம் உள்ள தோஷங்களையெல்லாம் விலக்கியருளினாள். அவளிடமிருந்து அந்த சிஷ்யன் தன் எந்தச் செயலையும் மறைத்துவிட முடியாது; ஏனெனில் அவள் எல்லாம் அறிந்தவள்; கருணைக்கடல். தன் சிஷ்யனான பக்தனுக்கு சமமாகவோ, அவனைவிட அதிகத்திறன் படைத்தவர்களாக எவருமே இல்லாது காப்பாள்” என லலிதா ஸஹஸ்ரநாமத்தில் இந்த நாராயணியைப் புகழ்கிறார்கள்.
அன்பர்களே! அனுதினமும் அதே அர்ஜுனனின் நிலையில், எளிய சிஷ்யனான பக்தனின் நிலையில், தர்ம-அதர்ம மாயையின் சுழலில் சிக்கி மனம் அலைக்கழிக்கப்படும் நாம், பாஞ்சாலியின் நிலையில் தீயசக்திகளின் கையில் சிக்கி மானபங்கமுறும் ஆபத்தில் இருக்கும் நாம், விதுரர், பீஷ்மர் முதலானவர்களின் நிலையில் சகல நீதிகளும் அறிந்திருந்த போதிலும், அதை மற்றவர்கள் செவிமடுக்க மறுக்கும், அவர்களை நீதிவழியில் செலுத்த முடியாத, அவர்கள் செய்யும் அக்ரமங்களுக்கும், அநீதிச் செயல்களுக்கும் மௌன சாட்சிகளாக இருக்கவேண்டிய அவலத்தில் சிக்கி நரக வேதனையை அனுபவிக்கும் நாம், ஒவ்வொரு செயலையும் அதன் பலனையும் அந்த ஜகத்குருவான பரந்தாமன் ஸ்ரீகிருஷ்ணனுடைய கோவிந்த ஸ்வரூபத்தின், பசுபதி ஸ்வரூபத்தின், ஹ்ருஷீகேஸ ஸ்வரூபத்தின், குருஸ்வரூபிணியான ஜகதாம்பிகை சாரதையின் ஸ்வரூபத்தின் பாதகமலங்களில் அர்ப்பணித்து தஞ்சமடைந்து, நிம்மதியாக கங்காஸ்நானம் செய்வோமாக. அஞ்ஞானமென்னும் இருள் நீக்கி ஞான ஒளி தீபங்களின் வரிசையில் மிளிர்வோமாக.

No comments:

Post a Comment