Monday, June 1, 2015

ஸ்ரீ துருவ சரித்திரம்

ஸ்ரீ துருவ சரித்திரம்
====================
இயற்கை மனித அறிவுக்கு எட்டாதது.அதை அறிந்து கொள்ள அவன் செய்யும் முயற்சிகள் வரவேற்க தக்கது. தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தம் மெய் வருத்த கூலி தரும் என்ற வள்ளுவரின் வாக்கு போல என்னை கவர்ந்ததெதுவுமில்லை. இயற்கையுடன் தொடர்புடையது இரண்டு விஷயங்கள்-ஒன்று மெய்ஞானம். இன்னொன்று விஞ்ஞானம். இவை ஒரே விஷயத்தை தேடினாலும் வழிகள் வேறாகும்.இரண்டையும் கலக்க கூடாது. எனினும் இயற்கை அல்லது ப்ரம்மம் எனும் மஹா சக்திக்கு உட்பட்டே இவை இயங்கும்.
எத்தனையோ நட்சத்திரங்கள் வானில் மின்னினாலும் அவற்றில் துருவ நட்சத்ரம் சிறப்பானது. கடல் பிரயாணங்கள் இதன்றி சாத்தியம் ஆகியே இருக்காது. துருவ நட்சத்திரம் ஒரு இளவரசனே என்பது ஆன்மீகம்.இல்லை அது எரிந்து கொண்டிருக்கும் ஒரு பெரிய சூரியன் என்பது அறிவியல்.
இங்கே பல விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் பகுத்தறிவுவாதிகளும் இருக்கின்றனர்.
ஆன்மீகத்தை விஞ்ஞானத்தில் தேட நினைக்கும் மனம், முற்றிலும் நோய்க்கு உட்பட்டது. வீட்டில் ஒரு ட்யூப் லைட்டுக்கு ஸ்டார்ட்டர் மாட்ட தெரியாமல் இருப்பவர்கள் கூட கடவுள் நம்பிக்கையை கட்டம் கட்டி பார்ப்பது வழக்கமாகி விட்டது. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்/ஹ ஹா, ஏன் தெரியுமா? .கலசத்துக்குள் நவதான்யங்கள்/ மற்றும் அவை இடி தாங்கிகள்// கர்ப்ப கிரஹத்தில் மின் காந்த அலைகள் பரவி நமக்குள் போகின்றன இப்படியெல்லாம் இன்னும் பதிவுகள் வந்த வண்ணம்.
இயற்பியலின் முக்கியமான விதிகளில் ஒன்று ஒரு பொருள் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருக்க முடியாது என்பதாகும்.பொருள் என்பது பருபொருள். இது டி ப்ராக் லீயின் காலத்திலேயே முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அவர் பருப்பொருட்கள் அலைத்தன்மை உடையவை என்று நிறுவினார். ஐன்ஸ்டீனோ நாலாவது பரிமாணம் என்பது நேரம் என்று நிறுவினார். இவை இரண்டும் அத்வைத சித்தாந்தத்தை மறைமுகமாக நிறுவும்.ஒளியின் வேகத்தில் ஒருவர் பயணம் செய்தால், அங்கே நேரம் சுருங்கி விடும்.இந்த தத்துவம் ஸ்ரீ பாகவதத்திலும் தேவி மாஹாத்மியத்திலும் சொல்லப்பட்டுள்ளது.குழந்தையானந்த ஸ்வாமிகள் மூன்று இடங்களில் சமாதியானார்.
ரேவதி நட்சத்திரத்தின் நாலாவது பாதம் கண்டாந்தம். இதில் பிறந்த ஒரு பெரும் தவ சீலரின் மகன் மகா பாவங்களை செய்தபடி வளர்ந்தான்.முனிவருக்கு வருத்தம். எப்பேற்பட்ட தபஸ்வி நான்.தவமிருந்து பெற்ற பிள்ளை இப்படி இருக்கிறானே என்று.அவரை தேவி மாஹாத்மியம் பாராயணம் செய்ய சொல்கின்றனர். பாராயணம் செய்ததில் மகன் திருந்தி விடுகிறான்.முனிவர் விடவில்லை.ஏன் இப்படி ஆனது என்று தேடும்பொழுது, ரேவதி நாலாம் பாதத்தின் விசேஷம் அது என்ற விடை கிடைக்கவும், சினமடைந்த முனிவர் அந்த நட்சத்திரத்தை பூமியில் விழ சாபம் தருகிறார்.
விழுந்த நட்சத்திரம் ஒரு பெண்குழந்தையாகி இன்னொரு முனிவரால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கபடுகிறது. அந்த குழந்தையின் பெயர் ரேவதி. வயது வந்ததும், ரேவதியுடன் ப்ரம்மலோகம் செல்கின்றார் முனிவர்,ரேவதிக்கு வரன் யார் என்று பார்த்து வர.அங்கே சில காலம் ஆகி விட பூமிக்கு திரும்ப நினைக்கிறார். அப்போது ப்ரம்மன் சொல்வது"நீங்கள் வந்து சில நாட்களே இங்கு ஆனாலும் பூமியில் யுகமே மாறி விட்டது.துவாபர யுகம் முடியும் சமயம் ஆதிசேஷன் அங்கே பல ராமராக ஸ்ரீ மன் நாராயணர் கிருஷ்ணராக அவதாரம் செய்வார்கள்.இவளை நீ பல ராமருக்கு மணம் செய்து வை"
ஆக ஆன்மீகத்தில் விஞ்ஞானம் பொதிந்து கிடக்கிறது. விஞ்ஞானத்தில் ஆன்மீகம் இல்லை.
இருட்டான இடமாக இருப்பினும் அங்கே தொலைத்ததை விளக்கேற்றி தேட வேண்டுமே தவிர கொஞ்சம் தள்ளி போய் வேளிச்சமான இடத்தில் தேடுவது விழலுக்கு இறைக்கும் வாட்டரே!
துருவ சரித்திரம்
===============
விஷ்ணு பரமான ஸ்துதிகளை படிக்கவும் கேட்கவுமான ஸ்ரீ சுந்தர் கிடாம்பி அவர்களின் லிங்க் இந்த பதிவில் இணைக்க பட்டுள்ளது.
//என் ஸ்மரணை உனக்கு சதா சர்வ காலமும் இருந்து கொண்டே இருக்கும். நீ இருபத்தாறாயிரம் ஆண்டுகள் ஆட்சி புரிந்து முடிவில் என்னையே வந்தடைவாய்//
துருவன் ஸ்வாயம்புவ மனுவின் பேரன்.
நாம் இறைவனை துதிக்க வழி முறைகள் பிரதானம் இல்லை. வர்ணம் ஒரு தடையில்லை. துதிக்கும் ஆர்வம் வரும் பொது வழி முறைகள் நமக்கு உபதேசம் ஆகும்.துதிக்க தெரியாத துருவனின் பக்திக்கு மெச்சிய பகவான் அவனை அனுக்ரஹித்த கதை இது.
ஸ்வாயம்புவ மனுவின் குமாரன் உத்தானபாதன். அவருக்கு சுநீதி, சுருசி என்ற இரு மனைவிகள். சுநீதியின் மகன் துருவன். சுருசியின் மகன் உத்தமன். அரசனுக்கு சுநீதியிடம் பாராமுகம்; சுருசியிடமோ அடக்க முடியாத பற்று. ஒருநாள் துருவன் ஓடிவந்து தந்தையின் மடியில் அமர முயற்சித்த போது அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள் சுருசி. அரசரின் மடிமீது அமர நீ எனக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வேண்டும். அந்தப் பாக்கியம் இல்லாத நீ இங்கிருந்து ஓடிவிடு. அழுதுகொண்டே துருவன் தனது தாயிடம் சென்று நடந்ததைக் கூறினான். மகனே, எனது துரதிர்ஷ்டம் உன்னையும் பாதித்துள்ளது. வருந்தாதே, மனிதர்களின் மடியில் அமர்வதில் என்ன பெருமை உள்ளது துருவா? நீ பகவானின் குழந்தை. அவரது மடியில் அமர முயற்சி செய். அவரைப் பார்க்கத் தவம் செய். தாயின் அறிவுரைப்படி, ஐந்தே வயதான துருவன் வனம் சென்றான். அங்கே நாரதர் அவனுக்குக் காட்சி தந்தார். துருவா! தந்தையின் அன்பைவிட மேலான அன்பு ஸ்ரீமந் நாராயணனிடம் கொள்ளும் அன்புதான். அஷ்டாக்ஷரம் உபதேசம் செய்து இந்த மந்திரத்தைப் பக்தியுடன் ஜபித்து வா என்று கூறினார். ஸ்னானம் மற்றும் பிராணாயாம்ம் செய்து உன்னை சுத்தகரித்து கொண்டு நாராயணின் ஸ்வரூபத்தை த்யானம் செய்ய வேண்டும்.
சுவாமி, நான் தன்யனானேன். அடியேன் எங்கு சென்று தவம் செய்வது என்று நாரதரிடம் துருவன் வினவினான். குழந்தாய், யமுனா நதி தீரத்தில் உள்ள மதுவனத்திற்குச் சென்று தவம் செய். உனக்கு ஸ்ரீமந் நாராயணனின் பரிபூரணமான அருள் கிடைக்கும். துருவன் ஒரு மரத்தடியில் அமர்ந்து, ஏகாக்ர சிந்தையுடன் ஓம் நமோ நாராயணாய எனும் மந்திரத்தை ஜபித்துக் கொண்டு தவம் செய்தான்.
சில நாட்கள் கழித்து அரசன் உத்தானபாதன், தான் செய்துவிட்ட தவறுக்காக வருந்தினான். ஐயோ, என்னவொரு மூடத்தனமான காரியம் செய்துவிட்டேன். ஆவலுடன் வந்த என் குமாரனைக் கட்டித் தழுவாமல் மனைவிக்குப் பயந்து ஒரு கோழையாகி விட்டேனே! குழந்தையின் மனம் என்ன பாடுபட்டதோ! அப்போது அவன் முன் நாரதர் தோன்றினார். வர வேண்டும் மகரிஷியே! தங்களை வணங்குகிறேன் என்று அரசன் வரவேற்றான். அரசே! உன் மகன் துருவன் மதுவனத்தில் தேவர்களும் அஞ்சும்படியான கடும் தவமியற்றுகிறான் என்பது உமக்குத் தெரியுமா? என்ன! ஐந்து வயது பாலகனா வனத்தில் தனியாகத் தவம் செய்கிறான்? என்ன கொடுமை! நான் இப்போதே சென்று அவனை அழைத்து வருகிறேன் என்றான். அரசே! வருந்தாதே; துருவன் உனது மடியையும்விட மிக மேலான பதவியை அடையப் போகிறான். அவன் பகவானால் ரட்சிக்கப்படுவதால் நீ கவலைப்படாதே என்று நாரதர் கூறினார். இருந்தாலும் அவன் சின்னஞ்சிறு பாலகன், அவனால் கடும் தவத்தைத் தாங்க முடியுமா? என்று மன்னன் வருத்தமடைந்தான். நிச்சயமாக முடியும் அரசே, அவன் மிகுந்த ஈடுபாட்டுடன் தவம் செய்கிறான் என்று கூறிவிட்டு நாரதர் அங்கிருந்து சென்று விட்டார். காட்டில் தவம் செய்த துருவன் ஒரு மாதம் கனிகளை உண்டான்; பிறகு ஒரு மாதம் கிழங்குகளை உண்டான்; அதன் பிறகு வெறும் இலைச்சருகுகளை உண்டான்; இறுதியில் காற்றை மட்டும் சுவாசித்துக் கடும் தவம் இயற்றினான்.
துருவனது தவத்தினால் பூவுலகு மட்டுமல்ல, தேவருலகும் தவித்தது. தேவர்கள் ஸ்ரீமந் நாராயணனிடம் சென்று முறையிட்டார்கள்.
பகவானே! துருவனின் தவம் எங்களை அக்னியாக எரிக்கிறது. தாங்கள் அவனுக்கு அருள் புரிய வேண்டும் சுவாமி என்றனர்.
வருந்தாதீர்கள் தேவர்களே! துருவன் எம்மைத் தனது இதயத்தில் சிறைப்படுத்திவிட்டான். யாம் சென்று அவனுக்கு அருள் புரியும் காலம் வந்துவிட்டது.
ஆழ்ந்த தவத்தில் இருந்த துருவனுக்கு பகவான் ஸ்ரீவிஷ்ணு காட்சியளித்தார். துருவன் சிறுவனானதால், பகவானைத் துதிக்கக்கூட அவனுக்குத் தெரியவில்லை. அதனால் பகவான் தமது பாஞ்சஜன்யம் என்ற சங்கினால் அவனது கன்னத்தை வருடினார்.
உடனே அவன் பகவானை துதித்தான். அது துருவ ஸ்துதி என்ற புகழ் பெற்ற ஸ்துதியாகும்.
சுந்தர் கிடாம்பி அவர்களின் பிசிரற்ற குரலில் ஸ்ரீ துருவ ஸ்துதியை கேளுங்கள்- இவருடைய மற்ற ஸ்துதிகளையும் நீங்கள் கேட்கலாம். வேதாந்த தேசிகரின் மீதான அடைக்கல பத்து ஒரு அற்புதமான பதிவாகும்
துருவ ஸ்துதி ஸத் சங்கத்தில் எனக்கு ஈடுபாட்டை கொடு என்று துதிக்கும் ஸ்லோகம் இது.
.
மகிழ்ந்த பகவான் துருவனை அனுக்ரஹம் செய்தார்- குழந்தாய்! ராஜ்யத்தை விரும்பித் தவமியற்றினாய். ஆகையால் நீண்ட காலம் சகல சவுபாக்கியங்களுடன் ஆட்சியை நடத்தி வா. பிறகு அனைத்திற்கும் மேலானதும் நிலையானதுமான துருவ நட்சத்திரமாக என்றென்றும் ஒளிர்வாய். ஸப்த ரிஷிகளும், அக்னியும், தர்மனும், கஸ்யபரும், சுக்ரனும் உன்னை சுற்றி வருவார்கள். என் ஸ்மரணை உனக்கு சதா சர்வ காலமும் இருந்து கொண்டே இருக்கும். நீ இருபத்தாறாயிரம் ஆண்டுகள் ஆட்சி புரிந்து முடிவில் என்னையே வந்தடைவாய் .
பகவானே! தங்களால் அனுக்ரஹிக்கப்பட்டேன். எனது தாய் தந்தையருக்கும் மோக்ஷமளித்து அருள் புரியுங்கள் என்றான்.
பகவான் அவ்வாறே அருளி மறைந்தார். துருவன் நாடு திரும்பினான். அரசன் உத்தானபாதன் உரிய காலத்தில் துருவனுக்குப் பட்டம் கட்டிவிட்டு, வானப்பிரஸ்தம் சென்றார். காட்டிற்கு வேட்டையாடச் சென்ற துருவனின் தம்பி உத்தமன் ஒரு யக்ஷனால் கொல்லப்பட்டான். அவனைத் தேடிச் சென்ற அவனது தாய் சுருசி காட்டுத்தீக்கு இரையானாள். இதை அறிந்த துருவன் யக்ஷர்களின் மீது போர் தொடுத்தான். பாட்டனார் மனு கூறியதால், போரை நிறுத்திய துருவனிடம், யக்ஷர் தலைவனான குபேரன்... துருவா! போரை நிறுத்து. உனக்கு வேண்டும் வரம் அளிக்கிறேன். யக்ஷர் தலைவனே! பகவானிடம் திடமான பக்தியைக் கொடுங்கள். பக்தி செய்வதில் எனக்குச் சலிப்பே வரக்கூடாது. நல்லது! அப்படியேயாகுக. துருவன் 36,000 ஆண்டுகள் அரசு புரிந்த பின் பகவானுக்கு மிக நெருங்கியவர்களான சுநந்த, நந்தர்கள் திவ்ய விமானத்துடன் துருவனை வைகுந்தத்திற்கு அழைத்துச் செல்ல வந்தனர். ஐயனே! என் தாயையும் என்னுடன் அழைத்துச் செல்ல அனுமதி வேண்டுகிறேன். மாமன்னரே, சற்று விமானத்தைப் பாருங்கள். தங்களது தாயார் முன்னரே அதில் அமர்ந்து உள்ளார். பகவானுக்குத் தங்கள் உள்ளக்கிடக்கை தெரியாதா? ஆஹா, என்னவொரு பேறு பெற்றோம் என்று அதிசயித்தான் துருவன். அந்த துருவனே இன்றும் துருவ நட்சத்திரமாக விளங்குகிறான்

No comments:

Post a Comment