Thursday, July 9, 2015

குறிஞ்சிப்பூ [தமிழ்ப்பூ]

குறிஞ்சிப்பூ [தமிழ்ப்பூ]
நமக்கு அதிகம் பழகாத நெருங்காத மலர் குறிஞ்சிப்பூ. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் இந்தப் பூ பூக்கும் எனினும் இப்போதெல்லாம் இந்தப் பூ 6, 18, 36 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கின்ற பூக்களாகவும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
சங்க இலக்கியம் வெகுவாகக் கொண்டாடும் தமிழ்ப்பூ இது நீலக் குறிஞ்சி என்று அழைக்கப்படும் இந்தப் பூ வெளிர் ஊதா நிறம் கொண்டு கொத்துக் கொத்தாக ஒரே சமயத்தில் பூக்கும். சங்க காலத்தில் தமிழர்களது நிலங்கள் இயற்கையோடு மக்கள் வாழும் முறைகளின் அடிப்படையில் நான்காகப் பிரிக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றுதான் குறிஞ்சி. மலையும் மலைசார்ந்த பகுதிகளையும் குறிஞ்சி என்று பெயரிட்டார்கள்.
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாமாங்க வருடமும் மகாமகக் குளியலும் விசேஷம் தானே? குறிஞ்சிப்பூ என்றதும் நமக்கு ஊட்டியும் கொடைக்கானலும் தான் நினைவுக்கு வரும். உடுமலையருகே மறையூர் மலைப்பகுதிகள் மூணாறு பகுதியில் ராஜமலைப் பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தமிழ் நாடு கேரளா எல்லைப்பகுதிகளில் அஞ்சு நாடு என்றழைக்கப்படும் காந்தலூர் மறையூர் கீழாந்தூர் வட்டாவட கொட்டா கொம்பு ஆகிய இடங்களிலும் குறிஞ்சிமலர் பூத்துக் குலுங்குவதுண்டு. இதிலுள்ள தேன் விசேஷம். இதன் வாசனை அதைவிட விசேஷம் தமிழ்க் கடவுளான முருகப்பெருமானுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் பிரத்யேகப்பூ. கொடைக்கானலில் எழுந்தருளியுள்ள குறிஞ்சி ஆண்டவர் கோயிலும் விசேஷம்தான்.
1936 ம் ஆண்டு இந்து மதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஐரோப்பிய பெண் இந்து ஒருவரை திருமணம் செய்து கொண்டு தமிழ்க் கடவுளான முருகப்பெருமானுக்கு இந்தக் கோயிலைக் கட்டியதாகத் தெரிகிறது. அவரது பெயர் லீலாவதி ராமனாதன். இக்கோயிலில் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமானின் பெயர் குறிஞ்சீஸ்வரன். இவனுக்கு குறிஞ்சி மலர்களிலிலிருந்து எடுக்கப்பட்ட தேனிலேயே மிகச் சிறந்த தேனால்தான் அபிஷேகம் நடக்குமாம். சங்கத் தமிழ் இலக்கியம் குறிஞ்சிப்பூவை பல பெயரிட்டு அழைக்கிறது. நீலக் குறிஞ்சி, கல் குறிஞ்சி, செறு குறிஞ்சி,நெடுங்குறிஞ்சி இடக் குறிஞ்சி என்றும், வெள்ளைப்பூக்களைப் பூக்கும் கருத்தண்டை கொண்ட குறிஞ்சியை கருங்காற் குறிஞ்சி என்றும் போற்றுகின்றன.
இது சமீபத்தில் இலங்கையில் ஒட்டன்புல் நிலத்தில் [நுவரேலியா பகுதியாம்] 2013 ம் ஆண்டு நவம்பர் மாதம் குறிஞ்சி பூத்ததை பார்த்து ரசித்து சிலர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் 2006 ம் வருடம் மலைப்பகுதிகளில் பல் இடங்களில் பல வகைப்பட்ட குறிஞ்சி மலர்கள் பூத்துக்குலுங்கியதாக அறிய முடிகிறது.
இந்த மலர்களைப் பறித்து சூடிக்கொள்ளவோ ஆண்டவனுக்கு அர்ப்பணிக்கவோ செய்வதைவிட கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து கண்ணாரக் கண்டு மனம் நிறையவே விரும்புகிறது. இந்தப் பூவுக்கு மட்டுமே இந்தப் பெருமை. இதனை ‘ ஸ்ட்ரோபிலான்தஸ்குந்தியானா” என்றழைக்கின்றனர்.
நீலகிரி வாசியான காக்பர்ன் என்பவர்தான் அப்பகுதிகளில் குறிஞ்சி மலர் பூத்த வருடங்களின் விவரங்களைத் தொகுத்துள்ளார். இவருடைய தாத்தா தோடர்களிடமிருந்தும் கோதே இனத்தவரிடமிருந்தும் இந்தப் பூக்கள் பற்றி பேசிப் பேசி விஷயம் சேகரித்து தந்து டைரியில் எழுதி வைத்திருந்தாராம். 1857 ம் ஆண்டில் captain Beddome என்பவர் இந்தப் பூவை முறைப்படி ஆவணப்படுத்தி பெயர் சூட்டியதாகவும் தெரிகிறது. இந்தத் தமிழ் பூவுக்காக நமது அரசாங்கம் தபால் தலை வெளியிட்டுள்ளது.
குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கும்போது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கின்றது. குருபகவான் சிம்மத்தில் சஞ்சரிக்கும்போது மாசிமக விழா நடைபெறுகிறது. நம் வாழ் நாளில் ஒரு முறையாவது குறிஞ்சி மலர் பறித்து குறிஞ்சி ஆண்டவரின் பாதங்களில் சமர்ப்பிக்கும் பாக்கியம் கிடைத்தற்கரியது.
தொகுப்பு

No comments:

Post a Comment