Saturday, November 14, 2015

தீக்‌ஷை

தீக்‌ஷை
உலகில் எத்தனையோ உறவு முறைகள் உண்டு. உங்கள் ஆசைகளையும் கனவுகளை நிறைவேற்றும் உறவு முறைகள், உங்கள் கடமைகளையும் உரிமைகளையும் உணர்த்தும் உறவு முறைகள் என பல்வேறு உறவு முறைகள் இருந்தாலும் இவற்றிற்கு அப்பாற்பட்டு ஓர் உறவு நிலை உண்டு.
அது குரு சிஷ்ய உறவு என்பதாகும். உண்மையில் குரு சிஷ்ய இணைவு என்பது உறவு முறை என்று கூறக்கூடாது. இது உறவு முறை அல்ல உயிர் முறை. தன் உயிரின் மூலம் எங்கே இருக்கிறது என அறிய வழிகாட்டும் ஒருவர் குரு. அப்படி பார்த்தால் இது உயிர் முறை தானே? உங்கள் வாழ்க்கையில் இருக்கும் உறவு முறைகள் எதோ ஒரு சுய நலத்தின் அடிப்படையில் இயங்கும். சுய நலத்தின் சதவிகிதம் வேறுபடுமே தவிர தன்னலமற்ற உறவு இருக்கவே முடியாது. ஆனால் குரு என்பவர் தன்னலமற்ற கருணையை என்றும் பொழிபவராக இருக்கிறார்.
தற்காலத்தில் குரு சிஷ்ய உறவு முறை மற்றும் குருவின் தன்மை ஆகியவை கேலிக்கு உண்டான விஷயமாகிவிட்டது. சுயநல சிஷ்யர்கள் சுயநலமிக்க போலி ஆன்மீகவாதிகளை நாடி செல்லுவதால் இன்னிலை ஏற்படுகிறது. தங்கள் வாழ்க்கையின் சின்ன பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள ஆன்மீகவாதியை நாடும் இவர்கள் பிறகு இவர்களை குரு என நினைத்துக் கொள்ளுகிறார்கள்.
குரு தன்மை என்பதை பற்றிய போதிய அறிவில்லாததால் பார்ப்பவர்களை எல்லாம் குரு என்பார்கள் சிலர். பள்ளியில் கற்றுக்கொடுத்தவர்கள் ஆசிரியர்கள், அவர்களை கூட குரு என அழைப்பார்கள். குரு வேண்டுமானால் ஆசிரியராக இருக்கலாம். ஆசிரியர்கள் என்றும் குருவாகிவிட முடியாது.
என்ன குழப்பமாக இருக்கிறதா? ஆசிரியர் உங்கள் அறிவை வளர்ப்பவர். குரு உங்களின் உயிரை வளர்ப்பவர். உங்களின் உள்ளே ஒளியை வழங்கி அறியாமையை போக்குபவர். ஆச்சாரியன் என்ற வார்த்தை ஆசிரியரை குறிக்கும். மஹாபாரதத்தில் அர்ச்சுனனின் பாத்திரத்தை உணர்ந்தால் இக்கருத்தை புரிந்துகொள்ளலாம். வில்வித்தை கற்றுக்கொடுத்த துரோணாச்சாரியார் அர்ச்சுனனுக்கு ஆச்சாரியார், ஞானத்தை வழங்கிய ஸ்ரீகிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு குரு.
உங்களின் உலகப்பார்வையை மாற்றி உயிர்ப்பிக்கச் செய்பவர் குரு. இந்த உயிர்ப்பிக்கும் தன்மைக்கு தீக்‌ஷை என பெயர். வடமொழி சொல்லான தீக்‌ஷா என்ற வார்த்தை தமிழில் தீக்‌ஷை/ தீச்சை / தீட்டை என பல வழிகளில் அழைக்கப்படுகிறது.
குரு அனைவருக்கும் தீட்ஷை அளிப்பதில்லை. ஒரு ஆன்மா ஆன்மீக உயர் நிலை காண தயார் நிலையில் இருப்பதை கண்டு அதற்கு மட்டுமே குருவால் தீட்ஷை வழங்க முடியும். தீட்ஷை என்றால் என்ன என பலருக்கு தெரியாததால் பல்வேறு போலிகள் தீட்சை கொடுக்கிறேன் என ஏமாற்றுகிறார்கள்.

No comments:

Post a Comment