Monday, November 16, 2015

சீதா செய்த சிராத்தம் !!!

சீதா செய்த சிராத்தம் !!!
வனவாசத்தில் ஸ்ரீராமர், தன் தந்தை தசரதருக்குச் செய்ய வேண்டிய பித்ரு கடனுக்கான நாள்
வந்ததும், அதைச் செய்ய வேண்டும்” என்று நினைத்தார். நடு வனாந்தரத்தில் இருந்தார்.
“லட்சுமணா, கிராமங்களுக்குப் போய் ஏதாவது தானியங்கள் வாங்கி வா. சிராத்தத்துக்கு
உண்டான பொருள்களைச் சேகரித்து வா!” என்று கட்டளை இட்டார்.
லட்சுமணன் விரைவாகப் போனார்.
“சீதா, நானும் இங்கே ரிஷிகளின் ஆஸ்ரமத்தில் உணவுப் பண்டங்கள் ஏதேனும் இருக்கிறதா
என்று பார்த்து விட்டு வருகிறேன். அந்த தானியங்களைச் சமைத்து நம் பித்ருக்களுக்கு
உணவாகக் கொடுக்கலாம்” என்று ஸ்ரீராமரும் நகர்ந்து போனார்.
சிராத்தம் செய்ய வேண்டிய நேரம் நெருங்கியது. கணவனும் வரவில்லை. கொழுந்தனும்
வரவில்லையே என்று கவலைப்பட்டாள் சீதாபிராட்டி. சிராத்த காலம் முடியும் நேரம்
நெருங்குகையில் எழுந்தாள். மனம் குவித்தாள். சில பழங்களைச் சுட்டு மணல் மேட்டின் மீது
வைத்தாள். கையில் இருந்த சிறிது மாவைப் பிடித்துக் கெட்டியாக்கி, அருகில் இருந்த மரத்தில்
இருந்து தேன் சேகரித்து, அதைப் பிசைந்து இலையில் வைத்து, மனம் உருகி தன் மாமனாரை
வேண்டினாள்.
“இந்த வனாந்தரத்தில் உங்களுக்குக் கொடுப்பதற்கு இதைத் தவிர வேறு எதுவும் இல்லை.
தயவு செய்து வந்து எடுத்துக் கொள்ள வேண்டும். நேரே வந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அப்போது தான் என் மனம் சாந்தி அடையும்” என்று சொல்ல, அங்கு சில உருவங்கள்
தோன்றின. அந்த மாவுப் பிண்டத்தின் மீதும், பழங்கள் மீதும் தங்கள் கையை வைத்து எடுத்துக்
கொண்டது போல சுவீகரித்தன.
“நீங்களெல்லாம் யார்?” திகைப்புடன் சீதாபிராட்டி கேட்டாள்.
“நான் தசரதன். உன்னுடைய மாமனார். இவர்களெல்லாம் நம் முன்னோர்கள். இவர்களை
வணங்கி, வாழ்த்தைப் பெற்றுக் கொள். நீ தேனும் மாவும் கொடுத்தது மிகவும் சந்தோஷமாக
இருந்தது. சுட்ட பழம் சுவையாக இருந்தது. மனம் உருகியும், முழு மனதோடும், நல்ல
அழைப்போடும் நீ கொடுத்த இந்தப் பண்டங்களை நான் எடுத்துக் கொண்டேன். நீ மிகவும்
சிரத்தையாக சிராத்தம் செய்திருக்கிறாய். அன்பும், அடக்கமும் கலந்த இந்த சிரத்தை என்னைச்
சந்தோஷப்படுத்தியது” என்று வாழ்த்தினார்.
“நீங்களெல்லாம் வந்திருப்பது தெரிந்தால் என் கணவர் எவ்வளவு சந்தோஷப்படுவார்! நான்
சிராத்தம் செய்தேன், அவற்றை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள் என்று நான் சொன்னால், அவர்
என்னை நம்புவாரா?”
“நிச்சயம் நம்புவார். அதற்கு உண்டான சாட்சிகளைத் தயார் செய்து கொள்!” என்று தசரதர்
கட்டளை இட்டார்.
“பசுவே, நீ தயவு செய்து சாட்சியாக இருந்து, என் மாமனாரோடு நான் பேசியதை என்
கணவரிடம் தெரிவிக்க வேண்டும். ஏ! தாழம்பூவே, என் மாமனார் வந்திருக்கிறார். அவருக்கு
உன் அடிமடியில் தான் நான் தினைமாவு வைத்தேன். நீ சாட்சியாக இருக்க வேண்டும்.
ஏ! அக்கினியே, நீ விளக்காக இருந்து இந்த சிராத்தத்துக்கு நடுவே என் மாமனார் பேசுவதைக்
கேட்டுக் கொண்டிருந்தாய். நீ சாட்சியாக இருக்க வேண்டும்.
ஏ! பல்குணி நதியே! உன்னுடைய நீரை எடுத்து வந்துதான் இங்கு சுத்தம் செய்தேன். இந்தப்
பண்டங்களைச் சுற்றி உன் நீரால்தான் அவருக்கு நிவேதனம் செய்தேன். எனவே, நீராகிய நீயும்
எனக்குச் சாட்சியாக இருக்க வேண்டும்” என்று சொன்னாள்.
“இவர்களைச் சாட்சியாக வைத்து மறுபடியும் உங்களை வணங்குகிறேன். நீங்கள் என்
சிராத்தத்தை ஏற்றுக் கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி. நான் நலமோடு என் புருஷனோடு நீண்ட
நெடுங்காலம் இருக்க என்னை ஆசீர்வதியுங்கள்” என்று வணங்கினாள். தசரதரும், அவரின்
முன்னோர்களும் சீதாபிராட்டியை ஆசீர்வதித்தார்கள்.

No comments:

Post a Comment