Saturday, November 7, 2015

கோபம் என்பது அவ்வளவு பெரிய குற்றமா?

கேள்வி என் நிறுவனத்தில் எனக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்பு வந்தது. ‘தலைமைப் பொறுப்புக்குத் தேவையான எல்லா குணங்களும் உன்னிடம் இருக்கின்றன. ஆனால், உன் முன்கோபம் எல்லாவற்றையும் பின்தள்ளிவிட்டது’ என்று சொல்லி, எனக்குத் தந்திருக்க வேண்டிய பதவி உயர்வை வேறொருவருக்குத் தந்துவிட்டனர். எனக்குத் தெரிந்து எத்தனையோ தலைவர்கள் கோபக்காரர்களாகத்தானே இருந்திருக்கிறார்கள்? கோபம் என்பது அவ்வளவு பெரிய குற்றமா? சத்குரு: சினிமாக்களில், உங்கள் அபிமானத்துக்குரிய ஹீரோ சட்டென்று எல்லாவற்றுக்கும் கோபப்பட்டுப் பொங்கி எழுவதைப் பார்த்து, கோபம் ஒரு மென்மையான சக்தி என்று எண்ணிவிட்டீர்கள். சமாதானமாகப் போகிறவர்களை இந்த உலகம் மதிக்காது என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டீர்கள். அப்படித்தானே? உங்கள் மனமே நீங்கள் விரும்பியபடி இயங்காதபோது, மற்றவர்கள் உங்கள் மனதுக்கு ஏற்ப இயங்கவில்லை என்று கோபம் கொள்வது என்ன நியாயம்? உங்களுக்குக் கோபம் எப்போது வருகிறது? நீங்கள் நினைத்தது நடக்கவில்லை என்றாலோ, மற்றவர்கள் உங்கள் எண்ணத்துக்கேற்ப நடக்கவில்லை என்றாலோதானே? நீங்கள் விரும்பியபடி மற்றவர்கள் செயல்படவில்லை என்று குறைபடுவதற்கு முன், கொஞ்ச நேரம் கண் மூடி உட்காருஙகள். உங்கள் மனதை எதன்மீதாவது சில நிமிடங்களுக்குத் தொடர்ந்து நிலைநிறுத்த முடிகிறதா என்று பாருங்கள். முடிகிறதா? உங்கள் மனம் உங்கள் விருப்பத்தை மீறி, எங்கெங்கோ அலைபாய்கிறது இல்லையா? உங்கள் மனமே நீங்கள் விரும்பியபடி இயங்காதபோது, மற்றவர்கள் உங்கள் மனதுக்கு ஏற்ப இயங்கவில்லை என்று கோபம் கொள்வது என்ன நியாயம்? பீட்சா டெலிவரி பையனின் அதிர்ஷ்டம் சங்கரன்பிள்ளை ஒரு கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். “சோம்பியிருப்பவர்களுக்கு இங்கே இடமில்லை. வெளியே துரத்தப்படுவார்கள்” என்று முதல் நாளே ஊழியர்களை மிரட்டி வைத்தார். சொன்னதைச் செயலாற்றக் காட்ட வேண்டும் என்கிற துடிப்பு அவருக்கு. கம்பெனியை மேற்பார்வையிட்டுக் கொண்டே ஒரு குறிப்பிட்ட அறைக்கு வந்தார். அங்கே மற்ற பணியாளர்கள் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட்டிருக்க, ஓர் இளைஞன் மட்டும் சுவரில் சாய்ந்து நின்றிருப்பதைக் கண்டார். “ஏய், இங்கே வா!”என்று கோபமாக அழைத்தார். பதறி வந்தான் அவன். “உன் சம்பளம் எவ்வளவு?” “ஐயாயிரம் ரூபாய், ஐயா!” “என்னுடன் வா!” விடுவிடுவென்று அவனை இழுத்துக் கொண்டு, கணக்குப் பிரிவுக்குச் சென்றார். பத்தாயிரம் ரூபாயை வாங்கி, அவனிடம் கொடுத்தார். “இந்தா இரண்டு மாதச் சம்பளம். இனி, இங்கே உனக்கு வேலை இல்லை. வெளியே போ!” அவன் பதில் சொல்ல வாயெடுத்தபோது, “ஒன்றும் பேசாதே. வெளியே போ!” என்று இரைந்தார். அவன் பயந்த உடனே வெளியேறி விட்டான். தான் மிகவும் கண்டிப்பானவன் என்பதைச் சுற்றியுள்ளவர்களுக்கு நிரூபித்துவிட்ட பெருமை, சங்கரன்பிள்ளைக்கு. ஒரு பணியாளனைக்கிட்டே கூப்பிட்டார். “இப்போது என்ன புரிந்து கொண்டாய்?” “பீட்ஸா டெலிவரி செய்ய வந்தவனுக்குக்கூட, நீங்கள் நினைத்தால் கொழுத்த டிப்ஸ் கிடைக்கும் என்று!” என்றான் அவன். கோபத்தில் இறங்கும்போது, இப்படித்தான் தாறுமாறான முடிவுகள் எடுக்க நேரிடும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமா? தன்னைப் பற்றிய பொறுப்பு ஒருவனுக்கு வந்தால்தான், மற்றவர்களுக்கும் அவன் பொறுப்பேற்று வழி நடத்த முடியும். அதற்காகக் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நான் சொன்னதாகப் புரிந்து கொள்ளாதீர்கள். உங்கள் கோபத்தை ஓரிடத்தில் கட்டுப்படுத்தினால், அது வேறெங்கோ சீறி வெடிக்கும். அலுவலகத்தில் காட்ட முடியாத கோபத்தை அப்பாவி மனைவி மீதோ, குழந்தை மீதோ காட்டக்கூடும். அங்கேயும் காட்ட முடியாமல் அடக்கி வைத்திருந்தால், பி.பி எகிறும். இதயம் வெடிக்கும். பைத்தியம் பிடிக்கும். கோபம் என்ன, உங்கள் செல்ல நாய்க்குட்டியா? கோபத்தை எதற்காகக் கட்டுப்படுத்தி, உங்கள் கூடவே வைத்திருக்க ஆசைப்படுகிறீர்கள்? அதை முதலில் விரட்டியடிங்கள். ஒரு குழுவுக்கு நீங்கள் எதனால் தலைவனாக ஏற்கப்படுகிறீர்கள்? உங்களிடம் இருக்கும் தெளிவும், தொலைநோக்கும் தங்களிடம் இல்லை என்று அவர்கள் நினைப்பதால், அவர்கள் உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்? அவர்களால் எடுக்க முடியாத முடிவுகளை நீங்கள் எடுப்பீர்கள் என்றுதானே? ஒன்றாக இணைந்திருக்கிறீர்கள். ஒன்றாகப் பணியாற்றுகிறீர்கள். ஒவ்வொரு கட்டத்திலும், மற்றவர்களையும் உங்களில் ஒருவராக நினைத்து, அவர்களுக்குத் தர வேண்டிய மரியாதையைத் தந்து, அவர்களுடைய கருத்துக்களையும் கேளுங்கள். அவர்களின் கருத்துக்கு மாறாக நீங்கள் முடிவு எடுக்க வேண்டி வந்தால், அது அவர்களின் நலனுக்காகத்தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும்படி அன்பாக எடுத்துச் சொல்லுங்கள். ஒரு பறவையை நோக்கிக் கல்லை விட்டெறிந்தால், சுற்றியுள்ள நூறு பறவைகளும் பறந்துவிடும். ஒருவரிடம் கோபத்தைக் காட்டினால்கூட, மற்ற அனைவருக்குமே உங்கள் மீதுள்ள பிடிப்பும், நம்பிக்கையும் போய்விடும். ஏதாவது தவறாகும்போது, உங்களைக் குற்றம் சாட்டிவிட்டு மற்றவர்கள் தனித்தனியே கழன்று கொள்வார்கள். யாரும் உங்களுக்குத் துணை நிற்க மாட்டார்கள். தன்னைப் பற்றிய பொறுப்பு ஒருவனுக்கு வந்தால்தான், மற்றவர்களுக்கும் அவன் பொறுப்பேற்று வழி நடத்த முடியும். அப்படியொரு கவனமாக நோக்கத்துடன் வாழ்பவர்களால்தான் சிறந்த தலைவர்களாக விளங்க முடியும்.

No comments:

Post a Comment