Saturday, November 7, 2015

பிச்சை எடுப்பதை ஆதரிக்கலாமா?

நம் நாட்டில் ரயில் நிலையம், சாலையோர நடைமேடை, போக்குவரத்து சிக்னல்கள் முதல் கோயில்வாசல் வரை பிச்சைக்காரர்களின் அணிவகுப்பை பார்க்க முடிகிறது. ஏதும் செய்ய இயலாத நிலையில் சிலர், ஆரோக்கிய உடலுடன் சிலர் என கை நீட்டி கேட்டபடியே இருக்கின்றனர். இவர்களுக்கு பிச்சை போடாமல் சென்றால் குற்ற உணர்ச்சி நம்மைக் குத்தாதா? வாருங்கள் சத்குருவிடம் கேட்போம்! சத்குரு: “இங்கிலாந்து மாதா கோயிலைவிட்டு சாட்டிலான் என்ற ராணுவத் தளபதி வெளியே வந்தார். வாசலில் தளர்ந்துபோன வயோதிகர் ஒருவர், பிச்சை எடுக்கக் கை நீட்டினார். பிரார்த்தனைகளைச் செலுத்திவிட்டு வந்த மனநிலையில் இருந்த தளபதி, தன் அங்கிப் பையில் கைவிட்டு, கிடைத்ததை எடுத்து அவர் தொப்பியில் போட்டுவிட்டு, தன் குதிரைமீது ஏறப்போனார். பிச்சை எடுக்கும் நிலையிலும் நியாயம் தவறாத அந்த வயோதிகரைப் போன்றவர்களா இங்கே இருக்கிறார்கள்? பிச்சை எடுத்த வயோதிகர் அவரைத் துரத்திக்கொண்டு ஓடிவந்தார். ‘ஐயா, நீங்கள் வேறு ஏதோ சிந்தனையில் இருந்தீர்கள் என்று நினைக்கிறேன். தவறுதலாக மிக அதிகமான பொற்காசுகளைப் போட்டுவிட்டீர்களே?’ என்று கை நிறைய பொற்காசுகளை எடுத்துக் காட்டினார். ‘ஆம்… கவனமின்றி இவ்வளவு பெரிய தொகையைப் பிச்சையிட்டுவிட்டேன். ஆனால் உங்கள் நாணயத்திற்காக, இப்போது முழுக் கவனத்துடன் இதை வழங்குகிறேன்’ என்று மேலும் சில பொற்காசுகளை எடுத்து அந்த வயோதிகரின் தொப்பியில் போட்டார் சாட்டிலான். பிச்சை எடுக்கும் நிலையிலும் நியாயம் தவறாத அந்த வயோதிகரைப் போன்றவர்களா இங்கே இருக்கிறார்கள்? இங்கே பிச்சை எடுப்பது ஒரு தொழிலாகவே நடத்தப்படுகிறது. பிச்சை எடுக்கும் பெண் தனியாக வந்து கை நீட்டினால், நீங்கள் அலட்சியப்படுத்தக்கூடும். ஆனால் ஒரு சிறு குழந்தையை ஏந்திக்கொண்டு வந்து கேட்கும்போது, உங்கள் மனம் பதறுகிறது. இதற்காகவே வசதி இல்லாதபோதும், குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். சிலசமயம் பிச்சை எடுப்பதற்காக எங்கே இருந்தாவது ஒரு குழந்தையைத் திருடி எடுத்துவரக்கூட அவர்கள் தயங்குவது இல்லை. ஆரோக்கியமாக இருக்கும் குழந்தையைப் பார்த்தால், நீங்கள் பிச்சை கொடுக்கமாட்டீர்கள் என்று குழந்தையின் கையை காலை உடைத்துவிடும் கொடூரமானவர்களும் இருக்கிறார்கள். கண் இருக்கும் குழந்தையின் கண்ணை எடுக்கும் அவலம்கூட இந்த சமூகத்தின் திரைமறைவில் நடக்கிறது. நீங்கள் கருணை உள்ளவராக இருப்பது நல்லது. ஆனால், எந்தச் சூழ்நிலையில், யாரிடம் அதை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் பேதம் பார்த்துத்தான் ஆகவேண்டும். உங்கள் மனநிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் இதுபோன்ற இரக்கமற்றவர்களிடம் கருணை காட்டினால், ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளுக்கும் பாதிப்பு வரத்தான் செய்யும். நாளிதழில் படித்திருப்பீர்கள்; கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகிறவர்கள். தங்கள் சிறு குழந்தையைப் பகலில் பார்த்துக்கொள்ள ஒரு பெண்மணியை நியமித்திருந்தார்கள். ஒரு குறிப்பிட்ட நாளில், ஏதோ காரணமாக வழக்கத்தைவிடச் சில மணி நேரங்கள் முன்பாக வீடு திரும்பினார் அந்தக் குடும்பத் தலைவி. குழந்தையைப் பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட்ட பெண்மணி ஜாலியாக தொலைக்காட்சியை ரசித்துக்கொண்டு இருந்தாள். குழந்தையைக் காணவில்லல. பதறிப்போன தாய், அந்தப் பெண்ணை மிரட்டி விசாரித்தாள். வார நாட்களில், இவர்களுடைய குழந்தையைப் பகல் நேரத்தில் ஒரு பிச்சைக்காரிக்கு வாடகைக்கு விடுவதும், பெற்றவர்கள் திரும்பி வருவதற்கு ஒருமணி நேரம் முன்னதாகக் குழந்தையைத் திரும்பப் பெற்றுச் சுத்தம் செய்து வைத்துவிடுவதையும் அறிந்து அந்தத் தாய் துடிதுடித்துப் போனாள். மிருகங்களிடம்கூட இப்பேர்ப்பட்ட கேவலத்தைப் பார்க்கமுடியாது. இது சாத்தானின் பேய்க் குணம். மிருகங்களிடம்கூட இப்பேர்ப்பட்ட கேவலத்தைப் பார்க்கமுடியாது. இது சாத்தானின் பேய்க் குணம். கண்ணை இழந்தவர்களுக்குப் பார்வையைக் கொண்டுவர முடியுமா என்று இந்தப் பூமியில் எவ்வளவோ முயற்சிகள் நடக்கின்றன. கையையும் காலையும் இழந்தவர்களுக்குச் செயற்கை உறுப்புகளைப் பொருத்துவதற்கு மருத்துவத்தில் எத்தனையோ பிரயத்தனங்கள் செய்யப்படுகின்றன. ஆனால் ஆரோக்கியமாக இருக்கும் குழந்தையின் கையைக் காலை உடைப்பதும், கண்ணைச் செயலற்றதாக்கி பிச்சை எடுப்பதையும் ஒரு தொழிலாக நடத்தி வருபவர்கள் காலூன்ற நாம் இடம் கொடுக்கலாமா? மேக்சிமிலியன் என்ற சக்ரவர்த்தி நகர்வலம் போனார். தெருவோரம் நின்றிருந்த பிச்சைக்காரன்மீது இரக்கம்கொண்டு, சில்லறைக் காசுகளை அவனுடைய பாத்திரத்தில் போட்டார். பிச்சைக்காரன் முகத்தில் அதிருப்தி நிலவியது. ‘அரசே, நாம் எல்லோரும் ஒரே கடவுளின் குழந்தைகள் என்பதை மறக்காதீர்கள். உங்கள் சகோதரனுக்கு இன்னும் தாராளமாக நீங்கள் வழங்கலாம்’. சக்ரவர்த்தி சிரித்தார். ‘உன் மற்ற சகோதரர்கள் ஒவ்வொருவரும் நான் வழங்கிய அதே அளவு உனக்கு வழங்கினால், நீ என்னைவிட மாபெரும் செல்வந்தனாகிவிடுவாய்… கவலைப்படாமல் போய் வா!’ என்றார். ஒரு நாட்டின் சக்ரவர்த்தியே பிச்சை இடுகையில் கவனமாகத்தான் இருந்தார். உங்களுக்கு எதற்குக் குற்ற உணர்வு? உங்கள் கருணையைக்காட்ட வேறுஇடமே இல்லையா என்ன? உங்களுக்கு நிறைய வசதியும் நேரமும் இருந்தால், இப்படிப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்ள ஒரு சூழ்நிலையை உருவாக்கலாம். இயலாதா? வேறு ஒரு வழியும் இருக்கிறது. இன்னும் நம் அரசாங்கம் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைப் போதியளவில் நிறைவேற்றவில்லை. நாடெங்கும் சில தனியார் நிறுவனங்களும், பொதுத்தொண்டு நிறுவனங்களும் பொறுப்பேற்று ஓரளவு நடத்திக்கொண்டு வருகின்றன. பிச்சை எடுக்கவேண்டிய நிலையில், வறுமையில் வாடும் பலரைப் பராமரிக்கும் இதுபோன்ற பலவிதமான இல்லங்கள் இருக்கின்றன. சிக்னலில் போடும் சில்லறைகளை நோட்டுக்களாக மாற்றி, அவர்களுக்கு அனுப்பலாம். அதிலும் கவனம், உங்கள் கருணை நியாயமானவர்களுக்குத்தான் வழங்கப்படுகிறதா? அவர்களுடைய நன்மைக்குத்தான் பயன்படுகிறதா என்பதைப் பகுத்தறிவது உங்கள் பொறுப்பாகிறது. போக்குவரத்தை இடையூறு இல்லாமல் வைத்துக்கொள்ள போலீஸ்காரர் அவருடைய கடமையைச் செய்கிறார். பொறுப்பான குடிமகனாக உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். மகத்தான கலாச்சாரம் எங்களுடையது என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டு, மறுபுறம் குழந்தைகளை ஊனம் செய்யும் கேவலமான நடவடிக்கைகளைக் கவனிக்காமல் இருக்கிறோம். நம் கண் எதிரே இந்த அக்கிரமங்கள் நடக்கும்போது, தடுத்து நிறுத்த உடனடியாக நாம் எதுவும் செய்யாமல் உட்கார்ந்திருந்தால், நாம் மனிதர்களே அல்ல. குழந்தை என்பது யாரையோ சார்ந்திருக்கும் ஓர் உயிர். அப்பேர்ப்பட்ட உயிரைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தப் பார்ப்பதை அனுமதிக்கக்கூடாது. பிச்சை எடுக்கவோ, வேலைக்கு அனுப்பிச் சம்பாதிக்கவோ, ஒரு குழந்தையை மூலதனமாகப் பயன்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. பெற்றோரின் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ளவும், வசதிகளைப் பெருக்கிக்கொள்ளவும் குழந்தைகள் பயன்படுத்தப்படுவது மாபெரும் குற்றம். இதைவிட மாபெரும் கொடுமை, அறியாப் பருவத்துப் பெண் குழந்தைகள் மோசமான தொழிலில் ஈடுபடுத்தப்படுவது. ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். பூமி ஏற்கெனவே பொங்கி வழியும் ஐனத்தொகையால் மூச்சுத் திணறிக்கொண்டு இருக்கிறது. வருமானம் எப்படிப்பட்டதாக இருந்தாலும், ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் முன், அதைப் பராமரித்து வளர்க்க முடியுமா என்று பெற்றோர் பொறுப்புடன் யோசிக்க வேண்டும். அதுதான் முதல் கடமை”.

No comments:

Post a Comment