Wednesday, January 13, 2016

கைகேயி கொடியவளா?

கைகேயி கொடியவளா?

தசரத சக்கரவர்த்தியின் மூன்று மனைவியரில் இளையவள்
கைகேயி. அசுரன் சம்பாசுரனுக்கும் தசரதருக்கும்
இடையில் போர் நடந்த தருணத்தில்,
தசரத மன்னரின் தேருக்குச் சாரதியாக இருந்து உதவினாள் கைகேயி.

தேரின் அச்சு முறிந்த நிலையில்,
தனது விரலையே அச்சாணியாகக் கொடுத்து,
தன்னுயிரைப் பணயம் வைத்து, தசரதனின்
உயிரைக் காத்தாள். இதில் மகிழ்ந்த தசரதன்,
இரண்டு வரங்களை அவளுக்கு அளித்தான்.

கணவனுக்குச் செய்த சேவை தனது
கடமையே என்று உணர்ந்ததால், ‘வரங்கள்
இப்போது வேண்டாம். பிறகு தேவைப்பட்டால் கேட்கிறேன்’
என்று கூறினாள்.

அத்தனை குணவதியான கைகேயி, பிறகு ஏன்,
தன் மகன் பரதனுக்கு அயோத்தியின்
சக்கரவர்த்தியாக முடிசூட்ட வேண்டும்? ஸ்ரீராமன் எதற்காகக் கானகம் செல்ல வேண்டும்
என வரங்கள் கேட்டாள்.

ஒரு முறை, வேட்டைக்குச் சென்ற
தசரதர், சிறுவன் சிரவணகுமாரனை யானையென்று
தவறுதலாக நினைத்து அம்பெய்திக் கொன்றார். சிரவணனது பெற்றோர், "எங்களைப் போலவே புத்திரனைப் பிரிந்து,
அந்தச் சோகத்தில் நீ உயிர் துறப்பாய்"
எனச் சாபமிட்டு உயிர் துறந்தனர்.

இதைகைகேயி, இதன் உண்மைகளை ஆராய்ந்து
அறிய விரும்பி, ஆஸ்தான ஜோதிடர்களிடம் தசரதர்
மற்றும் நான்கு பிள்ளைகளின் ஜாதகங்களைக்
கொடுத்து விளக்கம் கேட்டாள்.

"அப்போதைய கிரக அமைப்பின்படி, அயோத்தி
சிம்மாசனத்தில் யார் அமர்ந்தாலும்… அவர்,
சில நாட்களில் மரணிக்க நேரும்.

புத்திரனைப்பிரிந்து என்று சொல்லிச் சாபம்
இட்டதால், புத்திரன் தந்தையை விட்டு நெடுந்தொலைவு
சென்றுவிட்டால், மகன் உயிர் பிழைப்பான்.
தந்தை மட்டுமே உயிர் துறக்க
நேரும்" என்று விளக்கம் அளித்தனர்.

மனைவியின் கடமையைவிட, தாய்மையின் அன்பே தலை தூக்கி
நிற்க, யோசித்த கைகேயி, ” என்
மகன் பரதன் அயோத்திக்கு மன்னனாக
வேண்டும், ஸ்ரீராமன் தசரதரைப் பிரிந்து வனவாசம் செல்ல வேண்டும்”
என வரங்களைக் கேட்டாள்.

தசரதரின் உயிரையும் காப்பாற்ற வேண்டும், ஸ்ரீராமர் நலமுடன் இருந்து, அவரது
அவதார நோக்கமும் நிறைவேற வேண்டும் என்பதற்காக,
தான் பெற்ற மகனான பரதனது
உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை எனத் துணிந்து தியாகம்
செய்தாள் அன்னை கைகேயி!

கைகேயியை ஊரும் உலகமும் நிந்தித்தது.
பெற்ற மகன் பரதனே தாயின்
தியாகம் தெரியாது அவளை வெறுத்தான். இருந்தும்,
ஸ்ரீராமருக்கும் ஆரண்ய முனிவர்களுக்கும் தேவர்களுக்கும்,
அன்புத் தாய் கைகேயி செய்த
தியாகம் தெரியும்.

இப்போது சிந்தியுங்கள்… கைகேயி கொடியவளா?

 
 

No comments:

Post a Comment