Wednesday, January 13, 2016

உருவு கண்டு எள்ளாமை வேண்டும்!

உருவு கண்டு எள்ளாமை வேண்டும்!

உதங்கர் ஒரு மகரிஷி. மாபெரும் ஞானி. பாரத யுத்தத்தின்போது குருக்ஷேத்திரத்தில் பகவான் கண்ணன் விஸ்வரூபம் எடுத்ததை அறிந்து, தான் அந்தக் காட்சியைக் காணக் கொடுத்துவைக்கவில்லையே என்று வருந்தினார்.

அதையறிந்த கண்ணபிரான் அவருக்கு விஸ்வரூப தரிசனம் தந்தருள, ஆனந்த பரவசத்தில் ​மூழ்கினார் உதங்கர்.
'வேறென்ன வேண்டும்?'' என்று உதங்கரிடம் கேட்டார் கண்ணன்.

'இதைவிட வேறென்ன வேண்டும்?'' என்று மெய்சிலிர்த்தார் உதங்கர். எனினும், கண்ணன் மீண்டும் வற்புறுத்தவே, 'எனக்கு எப்போது தாகம் எடுத்தாலும், நான் வேண்டும்போது தண்ணீர் கிடைக்க வேண்டும்'' என்றார். இந்த எளிய வரத்தை உடனடியாக வழங்கினார் கண்ணன்.

நாட்கள் கடந்தன. ஒருநாள், பரந்த மணல்வெளிப் பகுதியில் பயணம் செய்துகொண்டிருந்தார் உதங்கர். அப்போது அவருக்குக் கடும் தாகம் எடுத்தது. 'கண்ணா, தாகம்’ என்று கண்களை ​மூடித் துதித்தார்.

அடுத்த நிமிடமே அவர் எதிரில் ஒரு புலையர் வந்தார். பார்க்கவே அருவருப்பாக இருந்தது அவரது தோற்றம். அவர் கையில் ஒரு குவளை இருந்தது. 'தண்ணீர் அருந்துகிறீர்களா?'' என்று கேட்டார்.

உதங்கருக்கு அவரைப் பார்க்கப் பார்க்க வெறுப்பு அதிகரித்தது. 'வேண்டாம்’ என்று மறுத்துவிட்டு, வேகமாக அங்கிருந்து நகர்ந்தார். பின்பு, 'கண்ணா, இது என்ன அநியாயம்!'' என்று குமுறினார் உதங்கர்.

கண்ணன் உடனே அங்கு காட்சி தந்து, ''எதை அநியாயம் என்கிறாய்?'' என்று கேட்டார்.
'வரம் வழங்கிவிட்டு, அதைப் பயன்படுத்த முடியாதபடி செய்யலாமா?'' என்றார் உதங்கர்.

'தாகம் எடுக்கும்போது தண்ணீர் வேண்டும் என்றீர்கள். அதற்கு ஏற்பாடு செய்தேன்.
நீங்கள்தானே அந்தத் தண்ணீரை மறுத்தீர்கள்?'' என்றார் கண்ணன்.

'சாமர்த்தியமாகப் பேசுவதாக எண்ணவேண்டாம், கண்ணா! அந்தத் தண்ணீரை ஒரு தீண்டத்தகாதவன் கையிலா கொடுத்து அனுப்பது? தண்ணீர் கொடுத்தனுப்ப உனக்கு வேறு யாருமே கிடைக்கவில்லையா?'' என்று கோபப்பட்டார் உதங்கர்.

'அடடா, நீங்கள் இதையெல்லாம் தாண்டியவர், மேம்பட்டவர் என்று நினைத்தேனே! அது தவறாகி விட்டதே!'' என்றார். உதங்கர் மௌனம் சாதித்தார்.

'உதங்கரே, உங்கள்மீது இருந்த அபிமானம் காரணமாக, உங்களுக்குத் தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீருக்குப் பதிலாக அமிர்தத்தையே வழங்கலாம் என முடிவு செய்தேன்.

இந்திரனை அழைத்து, உங்களுக்கு அமிர்தம் அளிக்கச் சொன்னேன். அவன் தயங்கினான். 'அமிர்தத்தைப் பெறக்கூடிய அளவுக்கு அவர் என்ன அத்தனை உயர்ந்தவரா?’ என்று கேட்டான்.

நீங்கள் மாபெரும் ஞானி என்று அவனிடம் உங்களுக்காகப் பரிந்துரைத்தேன். 'அப்படியானால் அதை நானே சோதித்துத் தெரிந்துகொள்கிறேன்’ என்றபடி புலையனின் உருவில் உங்களிடம் வந்தான்.

ஆனால், உருவத்தில் வேற்றுமை பாராட்டி, உயர்வு தாழ்வு எனப் பாகுபாடு பார்த்து, நீங்கள்தான் என்னை ஏமாற்றிவிட்டீர்கள்!'' என்றார் கண்ணன்.

உதங்கர் தலைகுனிந்தார். 

No comments:

Post a Comment