Monday, March 28, 2016

கீதை சொல்லும் பாதை!

கீதை சொல்லும் பாதை!
ஒரு ஊரில் வயதான முதியவர் ஒருவர் தன் பேரனுடன் வசித்து வந்தார். தினமும் அதிகாலையில் எழுந்து, சமையலறை மேஜை அருகில் அமர்ந்து, பகவத் கீதை படிப்பது அவர் வழக்கம். அனைத்து விஷயங்களிலும் அவரைப் பின்பற்ற நினைத்த பேரனும், கீதை படிக்க முற்பட்டான். ஒருநாள் தாத்தாவிடம், நானும் உங்களைப்போல் தினமும் பகவத் கீதை படிக்கிறேன். ஆனால், எனக்கு அதன் அர்த்தம் விளங்கவில்லை; புரிந்த கொஞ்சமும், புத்தகத்தை மூடி வைத்ததும் மறந்துவிடுகிறது. இப்படி அதைப் படிப்பதால், எனக்கு என்ன ிரயோஜனம்? என்று கேட்டான். அடுப்பில் கரியைப் போட்டுக்கொண்டிருந்த தாத்தா, அமைதியாக அந்தக் கரிக் கூடையைச் சிறுவனிடம் கொடுத்து, நதிக்குப் போய் இந்தக் கூடையில் நீர் கொண்டு வா என்றார். பேரனும் கூடையுடன் ஆற்றுக்கு ஓடினான். ஆனால், மூங்கில் கூடையில் தண்ணீர் தங்குமா என்ன? அவன் வீடு திரும்புவதற்குள் தண்ணீர் முழுவதும் ஒழுகிவிட்டது. தாத்தா சிரித்துக்கொண்டே, நீ இன்னும் வேகமாக வர வேண்டும் என்று சொல்லி, மறுபடியும் அவனைத் தண்ணீர் எடுத்து வர அனுப்பினார்.
இந்த முறை சிறுவன் வேகமாக ஓடி வந்தான்; ஆனாலும், வீடு சேர்வதற்குள் கூடை காலியாகிவிட்டது. கூடையில் தண்ணீர் கொண்டு வருவது சாத்தியம் இல்லை என்று புரிந்துகொண்ட சிறுவன், வாளி ஒன்றைக் கையில் எடுத்தான். ஆனால் தாத்தாவோ, எனக்கு வாளியில் நீர் வேண்டாம். கூடையில்தான் வேண்டும். நீ இன்னும் தீவிரமாக முயற்சி செய் என்று அவனை மறுபடியும் ஆற்றுக்கு அனுப்பினார். அந்த முறையும் அவனால் தண்ணீர் கொண்டுவர முடியவில்லை. போங்க தாத்தா, இது பயனற்ற வீண் வேலை! என்றான், மூச்சு வாங்கியபடி. அவனைப் பார்த்து புன்னகைத்த தாத்தா, நீ இதைப் பயனற்றது என்கிறாய். ஆனால், கூடையைப் பார், தெரியும் என்றார். பையன் கூடையைப் பார்த்தான். முதல் தடவையாக அது முற்றிலும் வேறாக மாறியிருப்பதைக் கண்டான். பழைய, கரி படிந்த கூடை, இப்போது உள்ளும் புறமும் சுத்தமாகிப் புத்தம் புதியது போல் காணப்பட்டது! தாத்தா சொன்னார்: குழந்தாய்! கீதை படிக்கும்போது இதுதான் நமக்கும் நேர்கிறது. உனக்கு அர்த்தம் புரியாமல் இருக்கலாம்; நினைவில் நிற்காமல் போகலாம். ஆனால், நீ உள்ளும் புறமும் தூய்மையடைந்து முற்றிலும் புதிய மனிதனாகிவிடுவாய்! இது கீதாச்சார்யனான கிருஷ்ண பரமாத்மா, நம் வாழ்வில் நிகழ்த்தும் அற்புதம்!


No comments:

Post a Comment